-கி.வா.ஜகந்நாதன்
மற்ற புலவர்களோடு பழகியபோது அவரவர்கள் தாம் தாம் சென்று கண்டு பாடிய செல்வர்களைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். பல காலம் முயன்ற பின்பு மனங்கனிந்த கல் நெஞ்சக்காரர்கள் சிலரைப் பற்றிக் கேள்வியுற்றார். புலவர்கள் தம்மை வானளாவப் புகழ அதனால் மகிழ்ச்சி பெற்று ஓரளவு பரிசில் வழங்கும் தன்னலத்தினர் சிலரைப் பற்றியும் கேள்வியுற்றார். புலவர்களுக்கு அளித்தால் ஊரார் புகழ்வர் என்ற எண்ணத்தால் சில புலவர்களுக்குப் பொருள் வழங்கி அதனைத் தாமே யாவருக்கும் ஆரவாரத்தோடு எடுத்துச் சொல்லும் அகங்கார மூர்த்திகள் சிலரைப் பற்றி அறிந்தார். பாடலின் நயத்தைப் பாராமல் தம் பெயரைப் பாட்டில் அமைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து பரிசளிக்கும் சிலரைப் பற்றியும் அறிந்தார். அத்தகைய செல்வர்களிடம் போவதைவிட வறுமையால் வாடுவதே நன்று என்று எண்ணினார் பெருஞ்சித்திரனார்.

7. புலவரின் வள்ளன்மை
முன் காலத்தில் வாழ்ந்திருந்த வள்ளல்களில் மிகச் சிறப்புப் பெற்றவர்கள் ஏழுபேர். புலவர்கள் அந்த எழுவரையும் தனியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்கு முன் புராண காலத்தில் இருந்தவர்களான பதினான்கு பேர்களைத் தனித் தனி ஏழு ஏழு பேர்களாகக் கூட்டித் தலை ஏழு வள்ளல்கள் என்றும், இடை ஏழு வள்ளல்கள் என்றும் சொல்லும் வழக்கம் பிற்காலத்தில் உண்டாயிற்று. அதனால் முன் சொன்ன ஏழு வள்ளல்களைக் கடை எழு வள்ளல்கள் என்றும் சொல்வதுண்டு. அந்த ஏழு வள்ளல்களாவார்: பாரி, வல்வில் ஓரி, மலையமான் திருமுடிக்காரி, அதிய மான் நெடுமான் அஞ்சி, பேகன், ஆய், நள்ளி என்போர். இவர்களை ஒன்றாகச் சேர்த்து சிறுபாணாற்றுப்ப் படை என்ற நூலும், புறநானூற்றில் உள்ள 158-ஆம் பாட்டும் சொல்கின்றன.
இந்த ஏழு வள்ளல்களின் காலத்துக்குப் பிறகும் பல மன்னர்களும் சிற்றரசர்களும் பிறரும் கொடையிலே சிறந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குள்ளே தலைமை வனென்று புலவர்கள் பாடும் புகழைப் பெற்றவன் ‘குமணன்’ என்னும் மன்னன். புலவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கும் வள்ளன்மை உடையவன் அவன். அதனால் அவன் பெயர் புலவர்களின் செய்யுட்களாகிய அணி கலத்தில் பதிக்கப் பெற்ற வைரம்போல ஒளிர்கிறது. முதிரம் என்ற மலையைச் சார்ந்த நாட்டை ஆண்டு வந்தவன் அம் மன்னன்.
குமணனைப் பாடிய புலவர்களில் பெருஞ்சித்திரனார் என்பவர் ஒருவர். அவர் சித்திரத் தொழிலில் வல்லவராதலால் அந்தப் பெயரைப் பெற்றார் போலும். அவர் வறுமையால் வாடி நின்றார். பிறரிடம் சென்று தமக்கு வேண்டிய வற்றை இரந்து பெற அவர் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. அவருக்குக் கல்யாணம் ஆயிற்று. அவருடைய குடும்பம் பெரிதாகவே, பெற்றதைக் கொண்டு வாழ அவரால் வில்லை. வறுமை வர வர மிகுதியாக அவரை நெருக்கியது. தமிழ்ப் புலமை மிக்கவரானாலும் யாரிடமேனும் சென்று அவரைப் பாடி எனக்குப் பொருள் வேண்டும் என்று கேட்க அவர் நா வளையாது போல் இருந்தது.
அவருடைய மனைவி சிறந்த அறிவுடையவள். கணவனுடைய வருவாய்க்குத் தக்க வண்ணம் செலவு செய்பவள். தன்னோடு பழகும் மகளிரைத் தன்வசமாக்கும் நற்குணமும் இனிய மொழியும் படைத்தவள். கிடைத்ததை வைத்துக் கொண்டு இல்லறத்தை நடத்தி வந்தாள். அவளுடைய அன்பிலே ஈடுபட்டவர்கள், அவ்வீட்டின் வறிய நிலையை உணர்ந்து தங்களால் இயன்ற உதவியைப் புரிந்து வந்தார்கள். அவள் அவற்றைப் பெறுவதற்கு உடம்படவில்லை. அன்புடையவர்களோ எப்படியேனும் உதவி புரிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்கள். ஆகவே, “இந்தப் பொருள்களை நாங்கள் தானமாகக் கொடுக்கவில்லை. எப் உன்னால் திருப்பிக் கொடுக்க முடிகிறதோ, அப்பொழுது கொடுத்தால் நாங்கள் வாங்கிக் கொள்கிறோம். நீ இரந்து பெற்று வாழ்வதாக எண்ணாதே. இத்தனை நாளைக்குள் கொடுத்துவிட வேண்டும் என்ற கணக்கும் வேண்டாம்” என்றார்கள்.
“நான் திருப்பிக் கொடுக்க முடியாமலே போய்விட்டால்?” என்று கேட்டாள் புலவர் மனைவி. “அதனால் எங்களுக்கு ஒரு குறைவும் வந்துவிடாது. இவற்றை மீட்டும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு இல்லை. நீயோ சும்மா வாங்கிக் கொள்ள மாட்டாயென்பது எங்களுக்குத் தெரியும். ஆகவே கடனாக வாங்கிக் கொள்வாருக்குக் கொடுப்பது போலக் கொடுக்கிறோம். உனக்கு வசதி உண்டாகும்போது திருப்பிப் பெற்றுக் கொள்கிறோம். எப்போதுமே இந்த வறுமை இராது. உன் கணவர் பெரும் புலவர். அவருடைய பெருமை இன்னும் தக்கவண்ணம் மற்றவர்களுக்குப் புலனாகவில்லை. நாளைக்கே சிறந்த வள்ளல் ஒருவனுடைய நட்பு அவருக்குக் கிடைக்குமானால் பிறகு இந்த வீட்டில் திருமகள் நடனமாடுவாள். இந்த வாசல் ஆனை கட்டும் வாசலாகிவிடும். அப்படி ஒருகாலம் வரத்தான் போகிறது. ஆகையால் இவற்றை வாங்கிக்கொள். உனக்குப் பொருள் கிடைக் கும்போது ஓர் இம்மியும் குறையாமல் நாங்கள் திருப்பி வாங்கிக் கொள்வோம்.”
அந்த ஏழைப் புலவரின் இல்லத்துக்கும் விருந்தினர் வந்துவிடுவார்கள். அக்காலங்களில் முகங் கோணாமல் அவர்களை உபசரித்து விருந்துணவு உண்ணச் செய்து அனுப்புவதில் சிறிதும் குறைவின்றி ஈடுபடுவாள் புலவர் மனைவி. வேண்டிய பண்டங்களை அண்டை அயலோர் தந்து விடுவார்கள்.
விருந்தினர்கள் விடைபெற்றுச் சென்ற பிறகு புலவர் தமக்கு உண்டான ஐயத்தைப் போக்கிக் கொள்ள முற்படுவார். தம் மனைவியை அழைத்து, “விருந்தினர்களுக்கு மிக இனிய விருந்தை அளித்தாயே! அதற்கு வேண்டிய பண்டங்கள் உனக்கு எப்படிக் கிடைத்தன?” என்று கேட்பார்.
“பிறகு தந்துவிடுவதாகப் பிறரிடம் வாங்கினேன்” என்பாள் அவர் மனைவி. எப்பொழுது கொடுப்பது, எப்படிக் கொடுப்பது என்பவற்றைப் பற்றி அவர் கேட்க மாட்டார்.
வறிய நிலையில் இருந்தாலும் அவர் வீட்டுக்கு அடிக்கடி உறவினர்கள் வந்து கொண்டு தான் இருந்தார்கள். அவருடைய மனைவியின் சுற்றத்தாரில் மிக ஏழையாக இருந்த யாரேனும் அங்கே வந்து சில நாட்கள் தங்கியிருந்து செல்வார்கள்.
இப்படி வறுமையிலும் செம்மையாக வாழும் வாழ்க்கையை புலவர் மனைவி தெரிந்து கொண்டிருந்தாள்.
பெருஞ்சித்திரனார் தம் இல்வாழ்க்கை யென்னும் வண்டி இந்த வறிய நிலையிலே நெடு நாள் ஓட இயலாது என்பதை உணரலானார். எப்படியேனும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற நினைப்பு எழுந்தது. கண்ட கண்ட பேரிடம் போய் பஞ்சத்துக்குப் பிள்ளையை விற்பவரைப் போலப் பாட்டுப் பாடிப் பல்லைக் காட்டிப் பரிசு பெற அவர் விரும்பவில்லை. மிக மிகச் சிறந் தவனும், புலவருடைய மதிப்பை நன்கு அறிந்தவனும், வரிசையறிந்து பாராட்டுபவனும், உள்ளன்பு காட்டுபவனும், தமிழ் நயந் தேர்ந்து சுவைப்பவனும், நற்குணம் உடையவனுமாகிய ஒருவனை அண்டி அவன் தருவதைப் பெற்று வாழ்வதே போதும் என்பது அவருடைய நோக்கம். ஆனால் அந்த நோக்கத்துக்கு இணங்க அமையும் வள்ளல் கிடைக்க வேண்டுமே!
மற்ற புலவர்களோடு பழகியபோது அவரவர்கள் தாம் தாம் சென்று கண்டு பாடிய செல்வர்களைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். பல காலம் முயன்ற பின்பு மனங்கனிந்த கல் நெஞ்சக்காரர்கள் சிலரைப் பற்றிக் கேள்வியுற்றார். புலவர்கள் தம்மை வானளாவப் புகழ அதனால் மகிழ்ச்சி பெற்று ஓரளவு பரிசில் வழங்கும் தன்னலத்தினர் சிலரைப் பற்றியும் கேள்வியுற்றார். புலவர்களுக்கு அளித்தால் ஊரார் புகழ்வர் என்ற எண்ணத்தால் சில புலவர்களுக்குப் பொருள் வழங்கி அதனைத் தாமே யாவருக்கும் ஆரவாரத்தோடு எடுத்துச் சொல்லும் அகங்கார மூர்த்திகள் சிலரைப் பற்றி அறிந்தார். பாடலின் நயத்தைப் பாராமல் தம் பெயரைப் பாட்டில் அமைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து பரிசளிக்கும் சிலரைப் பற்றியும் அறிந்தார். அத்தகைய செல்வர்களிடம் போவதைவிட வறுமையால் வாடுவதே நன்று என்று எண்ணினார் பெருஞ்சித்திரனார்.
கடைசியில் முதிரமலைக்குத் தலைவனாகிய குமணன் என்பவன் குணத்தாலும் கொடையாலும் புலவரைப் போற்றும் திறத்தாலும் சிறந்தவன் என்ற செய்தியை அவர் அறிந்தார். அவனிடம் சென்று வந்த புலவர் அனைவரும் அவனுடைய புகழை ஒரே மாதிரி சொல்வதைக் கேட்டார். அவனை அணுகித் தம் புலமையைக் காட்டிப் பரிசு பெறலாம் என எண்ணினார்.
முதிரத்துத் தலைவன் குமணனிடம் பெருஞ்சித்திரனார் சென்றார். முதிரமலையின் வளப்பத்தைக் கண்டார். பலாவும் மாவும் ஓங்கி வளர்ந் திருந்தன. பழங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தன. பிறகு குமணனையும் கண்டார்.
அம்மன்னன் புலவரை வாருங்கள் என்று கூறும்போதே அச்சொல்லில் அன்பு கலந்திருந்தது. அவன் அகமும் முகமும் மலர்ந்திருந்தன. புலவர் அங்கே முதல் முறையாக வந்தாரேனும் அவன் காட்டிய அன்பு பலகாலமாகப் பழகியவர் காட்டும் அன்பு போல இருந்தது. குமணன் அவரைப் போற்றி உபசரித்தான். நாவுக்கு இனிய உணவை அளித்தான். காதுக்கு இனிய அன்புரை பேசினான். மனத்துக்கு இனிய வகையில் புலவருடைய புலமைத் திறத்தை உணர்ந்து பாராட்டினான்.
பலகாலமாக யாரிடமும் சொல்லாமல் ஒதுங்கி ஒதுங்கி வாழ்ந்த புலவருக்கு இப்படி ஒரு வள்ளல் கிடைக்கவே, அவர் சொர்க்க பூமிக்கே வந்துவிட்டவரைப் போல ஆனார். அவருடைய பாடல்களைக் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தான் குமணன்.
“இவ்வளவு காலமாக உங்களை உணராமல் இருந்தது பெரிய பிழை” என்றான் அரசன்.
“இத்தனை காலம் இவ்விடத்தை அணுகாதிருந்ததற்கு என் பண்டைத் தீவினையே காரணம்” என்றார் புலவர்.
“இப்பொழுதேனும் தங்களைக் கண்டு பழகும் வாய்ப்புக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்” என்றான் அரசன்.
“என் வாழ்நாள் முழவதுமே நல்ல வள்ளலைக் காணாமல் கழியுமோ என்று அஞ்சியிருந்த எனக்கு இந்த இடத்தை மிதித்தவுடன் இவ்வளவு காலமும் வாழ்ந்திருந்ததற்குப் பயன் கிடைத்து விட்டதென்ற ஆறுதல் உண்டாயிற்று” என்றார் பெருஞ்சித்திரனார்.
“இறைவன் திருவருள் எப்பொழுது கூட்டி வைக்கிறதோ, அப்பொழுதுதானே எதுவும் நிறைவேறும்? தங்களுடைய பழக்கத்தைப் பெற்றதனால் நான் பெரும் பேறுடையவனானேன். இந்த நட்பு என்றும் வாடாமல் மேலும் மேலும் உரம் பெறும் வண்ணம் நான் நடந்துகொள்ள அவனருள் கூட்டுவிக்கும் என்றே நம்புகிறேன்” என்றான் குமண வள்ளல்.
அவனுடைய பேச்சிலே அடக்கமும் அன்பும் ததும்புவதை உணர்ந்த பெருஞ்சித்திரானார் இன்பக் கடலில் நீந்தினார். பொழுது போவதே தெரியாமல் புரவலனும் புலவரும் அளவளாவினர். சில நாட்கள் குமணனுடைய அரண்மனையில் அரச போகம் பெற்றுத் தங்கினார் புலவர். பிறகு தம் மனைவி முதலியோருடைய நினைவு வரவே, மெல்ல விடைபெற்றுக்கொண்டு புறப்பட எண்ணினார்.
அவரை அனுப்புவதற்கு குமணன் விரும்பவில்லை. இன்னும் பல நாட்கள் புலவரைத் தன்னுடன் இருக்கச் செய்ய விரும்பினான். ஆயினும் புலவருடைய மனைவி குழந்தையை ஈனும் பருவத்தில் இருக்கிறாள் என்பதைக் கேட்டு விடை கொடுத்தனுப்பினான். பல மாதங்களுக்கு ஆகும் வண்ணம் உணவுப் பண்டங்களையும் ஆடை அணிகளையும் பொன்னையும் வழங்கினான். அவற்றைச் சுமந்து சென்று புலவருடைய வீட்டிலே சேர்க்கும்படி ஆட்களையும் வண்டிகளையும் அனுப்பினான்.
“உங்களை நான் தெரிந்து கொள்ளாமல் இருந்தது தவறு என்று உங்களைக் கண்ட அன்று நினைத்தேன். இன்றோ, நான் உங்களோடு பழக நேர்ந்தது தவறு என்று நினைக்கிறேன். உங்களோடு பழகியதனால் உங்கள் புலமையை உணர்ந்தேன். உங்களோடு சில நாள் சேர்ந்து வாழும் பேறு பெற்றேன். எப்போதும் நீங்கள் என்னுடனே தங்கியிருப்பீர்கள் என்ற எண்ணம் என்னை அறியாமலே என்னுள்ளே ஒளித்திருந்தது. இப்போது அந்த எண்ணம் தவறு என்று தெரிகிறது. நீங்கள் எத்தனையோ செல்வர்களைப் பார்ப்பீர்கள். முடியுடை மன்னர்கள் உங்களை வரவேற்று உபசரிக்கக் காத்திருக்கிறார்கள். ஆகவே என்னைப் பிரிவதனால் உங்களுக்குத் துன்பமோ, குறைவோ யாதும் இல்லை. எனக்குத்தான் உங்களைப் பிரிவது மிக்க துன்பத்தை விளைவிக்கிறது. உங்களைத் தெரிந்து கொள்ளாமலே யிருந்திருந்தால் இந்தத் துன்பம் உண்டாக நியாயம் இல்லை அல்லவா? எப்படியானாலும் நீங்கள் போகத்தான் வேண்டும். உங்களைத் தடை செய்ய நான் யார்? ஆனால் ஒன்று விண்ணப்பம் செய்து கொள்கிறேன். உங்கள் திருவுள்ளத்தில் எனக்கும் ஓரிடம் கொடுக்க வேண்டும். அடிக்கடி இங்கே வந்து சில நாட்கள் தங்கிச் சென்றால் எனக்கு எவ்வளவோ இன்பம் உண்டாகும்” என்று குமணன் கூறி விடையளித்தபோது புலவர் உள்ளம் உருகியது. “வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்தார். அவர் செல்வதற்கு முன் அவர் பெற்ற பரிசிற் பொருள்கள் அவர் வீட்டுக்குச் சென்றன.
***
குமணன் அனுப்பிய பொருள்களையெல்லாம் வீடு நிரம்ப வாங்கி வைத்துக் கொண்டார் புலவர். அவருடைய மனைவி அவற்றைப் பார்த்தாள். வியப்பில் மூழ்கினாள். வாய் திறந்து பேச முடியவில்லை அவளுக்கு. உணர்ச்சியினால் ஊமையானாள்.
புலவர் ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தார். அவருக்குத் தம் மனைவி மிக்க அல்லற்பட்டுக் குடித்தனத்தை நடத்தி வந்தது தெரியும். உறவினர்களும், பழக்கமானவர்களும், விருந்தினர்களும் வீட்டுக்கு வருவதை அவர் அறிவார். பலரிடமிருந்து பண்டங்களை அவள் அவ்வப்போது கடனாக வாங்கி, வந்தவர்களை உபசரித்து அனுப்பியதும் அவருக்குத் தெரியும். அப்போதெல்லாம் அவர் மனத்துக்குள் பட்ட வேதனை அவருக்குத் தான் தெரியும். இப்போது எல்லாத் துன்பங்களும் தீர்ந்தன. வறுமைப் பேய் கால்வாங்கி ஓடிவிட்டது. தம் மனைவியை அழைத்தார். அவளிடம் மிக்க ஊக்கத்துடன் சொல்லத் தொடங்கினார்.
“இதோ பார். இவைகள் யாவும் குமண வள்ளல் தந்தவை. பழம் தொங்கும் முதிர மலைக்குத் தலைவனாகிய அவன் நல்கிய வளத்தால் நம்முடைய வறுமை இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துகொண்டது. இத்தனை செல்வம் இருக்கும்போது நமக்கு என்ன குறை? எல்லோருக்கும் மனம் கொண்ட மட்டும் வாரி வழங்குவதில்தான் உயர்ந்த இன்பம் இருக்கிறது. நான் அந்த இன்பத்தை இனிச் சுவைக்கப் போகிறேன். நீயும் இரண்டு கையாலும் கொடு. உன்னை விரும்பி வந்து உன்னிடம் அன்பு காட்டி இங்கே தங்குகின்ற மகளிர் சிலர் உண்டே; அவர்களுக்கு வேண்டியதைக் கொடு. நீயாக விரும்பிச் சென்று அன்பு பாராட்டும் மகளிர் இருப்பார்கள்; அவர்களுக்கும் நிறைய வழங்கு. உனக்கு உறவினர், அவர்களைச் சார்ந்தார் யாராயிருந்தாலும் கொடு. உன் கற்புத் திறத்தை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். பல வகையில் அது சிறந்து விளங்குவதை அறிவேன். சுற்றத்தாரும் மற்றவரும் வந்தபோது நீ நம் வறுமையை அவர்களுக்குப் புலப்படுத்தாமல் அவர்களை உபசரித்தாய். அப்பொழுதெல்லாம் பண்டங்களைத் திருப்பிக் கொடுப்பதாக அளந்து வாங்கினாயே, அந்தக் குறி எதிர்ப்பைகளையெல்லாம் ஒன்று தவறாமல் கொடுத்துவிடு. இன்னாருக்குத் தான் கொடுக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். மனங்கொண்ட மட்டும் கொடு. என்னைக் கேட்டுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணாதே. என்னைக் கேட்கவே வேண்டாம். யாருக்காவது கொடுக்க வேண்டுமென்றால் உடனே கொடுத்துவிடு; யோசித்துக்கொண்டு நிற்காதே. ‘இவ்வளவு காலமும் வறுமையில் வாழ்ந்தோமே; வந்ததைப் போற்றிப் பாதுகாத்துச் சாமர்த்தியமாக வாழலாம்’ என்று எண்ணாதே. இந்த வளத்தைத் தந்த வள்ளல் இருக்கிறான்; என்ன கேட்டாலும் கொடுப்பான். கேளாமலே வேண்டியதை அறிந்து கொடுப்பான். ஆகையால் எல்லோர்க்கும் கொடு. நானும் கொடுக்கிறேன். நீயும் கொடு. இந்த வீட்டுக்கு நீதானே தலைவி? ஆதலால் நீ தாராளமாகக் கொடு. உன்னைத் தடுப்பவர் யார்?”
இவ்வாறு புலவர் சொன்னதைக் கேட்ட அவர் மனைவி என்ன சொல்வாள்! முன்னே சில மகளிர் வருங்காலத்தைப் பற்றிச் சொல்லியவை அவள் நினைவுக்கு வந்தன, அவள் கண்களில் இன்பத்திவலைகள் எழுந்தன. புலவர் தம் கூற்றைப் பாடலாகவும் அமைத்தார். மறுமுறை குமணனிடம் சென்ற போது, “இங்கே பெற்ற வளத்தை நான் என்ன செய்தேன் தெரியுமா? எல்லோருக்கும் கொடுத்தேன். என் மனைவியிடமும் சொல்லி எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னேன்” என்று சொல்லிப் பாட்டைச் சொன்னார்.
நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்
பல்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யாழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி; மனைகிழ வோயே!
பழம்தூங்கும் முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் நல்கிய வளனே.
விளக்கம்: இந்த வீட்டுக்குத் தலைவியே, பலவகைப் பழங்கள் மரங்களில் பழுத்துத் தொங்கும் முதிர மலைக்கு உரியவனும் செம்மையான வேலையுடையவனுமாகிய குமணன் வழங்கிய இச் செல்வத்தை, நின்னை விரும்பித் தங்கும் பெண்களுக்கும், நீயாக விரும்பி அழைத்து வந்து வைத்துக்கொண்டிருக்கும் மகளிருக்கும், பலவகையில் மாட்சிமைப் பட்ட கற்பை உடைய உன் சுற்றத்தார் முதலியவர்களுக்கும், நம் சுற்றத்தின் கடும் பசி தீரும்பொருட்டு உனக்கு நெடுங்காலமாகக் கடன் கொடுத்தவர்களுக்கும், இன்னோருக்கு என்று யோசிக்காமல், என்னோடு சொல்லி ஆலோசனை செய்யாமல், இனிச் சாமர்த்தியமாக இவற்றைப் பாதுகாத்து வாழ்வோம் என்றெண்ணாமல், (நான் கொடுக்கிறேன்); நீயும் எல்லோருக்கும் கொடுப்பாயாக.
அருஞ்சொற்பொருள்: நயந்து – விரும்பி. உறைநர் – தங்குவோர். பன்மாண் – பல மாட்சியையுடைய. கிளை – சுற்றத்தார். கடும்பு – சுற்றம். யாழ: அசை நிலை. குறி எதிர்ப்பை – அளவு குறித்து வாங்கிப் பின் கொடுக்கும் பண்டம்; ‘குறி எதிர்ப்பையாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது’ என்று பரிமேலழகர் (குறள் – 221) எழுதுவார். நல்கியோர் – வழங்கியவர்கள். சூழாது – ஆராயாமல். வல்லாங்கு – சாமர்த்தியமாக. கொடுமதி – கொடு. மனைகிழவோயே – வீட்டுக்குத் தலைவியே. தூங்கும் – தொங்கும். கிழவன் – உரியவன். திருந்து வேல் – இலக்கணங்கள் அமைந்த வேல். வளன் – செல்வம்.
பன்மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும் என்பதற்கு, ‘பல குணங்களும் மாட்சிமைப்பட்ட கற்பினையுடைய நினது சுற்றத்து மூத்த மகளிர்க்கும்’ என உரை எழுதினார் பழைய உரையாசிரியர். ‘நீயும் என்ற உம்மை, யானும் கொடுப்பேன்; நீயும் கொடு என எச்ச உம்மை யாய் நின்றது’ என்பது அவர் எழுதிய விசேட உரை.
இதைக் கேட்ட குமணன் செல்வத்தை இயல்பாகப் படைத்த தன் வண்மையைக் காட்டிலும், புலவருடைய வள்ளன்மை சிறந்தது என்று உணர்ந்து, வியந்து பாராட்டுவதுதானே இயல்பு?
இது பாடாண் திணையில் ‘பரிசில்’ என்னும் துறை. புலவர் தாம் பெற்ற பரிசிலைப் பற்றிச் சொல்வதனால் இத் துறையாயிற்று. இது புறநானூற்றில் 163-ஆவது பாட்டு.
(நிறைவு)
$$$