அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 6

-கி.வா.ஜகந்நாதன்

‘யானைக்குத் தழையுணவைக் கொடுக்கிறோம். அது அதை உடனே உண்ணாமல் தன் கொம்பினிடையிலே வைத்துக் கொள்கிறது.  “அடடா, இதை இது உண்ண வேண்டுமென்றல்லவா கொடுத்தோம்? இது இங்கே துக் கொண்டு விட்டதே” என்று கவலைப் படலாமோ! யானை எப்படியும் அதை உண்டே விடும். யானை தன் கோட்டிடையே வைத்த கவளத்தைப் போன்றது, அதியமான் நமக்குத் தரப்போகும் பரிசில்; அது நம் கையிலே இருப்பது போன்றதுதான். அது கிடைக்காமற் போகாது. இதை அனுபவத்தில் நாம் நன்றாக உணர்ந்திருக்கிறோமே அப்படியிருந்தும் நீ ஐயுறலாமோ! ..’

6. கோட்டிடை வைத்த கவளம்

சேரநாட்டில் முடியுடையரசன் ஆண்டு கொண்டிருந்தாலும் அந்நாட்டின் ஒரு பகுதியைத் தன்னதாக்கி ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழே மிகுதியாகப் பரவியிருந்தது. சேர அரசனுக்கு இந்தச் சிற்றரசனிடத்தில் உள்ளூரக் காழ்ப்பு இருந்தது. அதியமான் சேரர் குலத்தில் உதித்தவன். ஆகவே அவன் சேரர்களுக்குரிய பனை மாலையையே அணிந்திருந்தான்.

சேர அரசன் வஞ்சிமா நகரில் இருந்தான். அதிகமான் தகடூரில் இருந்தான். தர்மபுரி என்று இன்று வழங்கும் ஊரே அக்காலத்தில் தகடூர் என்ற பெயரை உடையதாக விளங்கியது. தர்மபுரிக்கு அருகில்  ‘அதிகமான் கோட்டை’ என்ற பெயருள்ள இடம் ஒன்று இன்றும் இருக்கிறது.

தகடூர் பேரரசன் ஒருவனுடைய இராசதானி, நகரம் போலவே சிறப்பாக இருக்கும். அதிகமான் தமிழ் நயம் தேர்வதில் சிறந்தவன். எந்தக் காலத்திலும் புலவர்களின் கூட்டத்தின் இடையே இருந்து, அவர்களுடைய புலமையை வியந்தும் பாராட்டியும் மகிழ்பவன். புலவர்களைப் பலநாள் வைத்திருந்து உபசரித்துப் பரிசில் வழங்குவதே அவனுடைய நித்தியத் தொழில் என்று சொல்லி விடலாம்.

புலவர்களுக்கு வரிசை அறிந்து பரிசில் தரும் வண்மை அவன்பால் இருந்ததனால் அப் புலவர் பாடும் புகழை அவன் காணியாக்கிக் கொண்டான். அதனால் நாடு முழுவதும் அவனுடைய வள்ளன்மையைப் பற்றிய செய்திகள் பரவின. சேரநாடு முழுவதும் பரவி, சேர அரசன் காதையும் எட்டியது. அது மட்டுமா? சோழ பாண்டிய நாடுகளிலும் அவற்றிற்கு அப்பாலும் அவன் புகழ் பரவியது.  ‘ஒரு சிற்றரசனுக்கு இத்தனை புகழா!’ என்று பேரரசர்கள் அழுக்காறடைந்தார்கள். கடையெழு வள்ளல்கள் என்று புலவர்கள் ஏழு பேரைத் தேர்ந்தெடுத்துத் தம்முடைய பாடல்களிலே பாராட்டியிருக்கிறார்கள். அதியமான் அவ்வெழுவரில் ஒருவன்.

***

அதியமானுடைய இயல்புகளில் ஈடுபட்டு வியந்த புலவர்களில் ஔவையார் ஒருவர். தகடூருக்கு அவர் எப்போது வந்தாலும் அதியமானுடைய பெருமைக்கு அடையாளமான ஒரு நிகழ்ச்சியை அவர் அறிந்து பாராட்டுவார். ஒருமுறை ஔவையார் வந்திருந்தார். நாலைந்து நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அதியமான் செய்யும் உபசாரத்தைப் பெற்றால் மாதக் கணக்காக, ஆண்டுக்கணக்காக அங்கேயே இருந்து விடலாமென்று தோன்றும்.

ஔவையார் தங்கியிருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் புலவரும் பாணரும் விறலியரும் கூத்தரும் வந்து வந்து அதியமானிடம் பரிசு பெற்றுச் சென்றார்கள். அவனுடைய ஈகைத் திறத்தை ஔவையார் கண்டு களித்தார்.

ஒரு புலவர் முதல் நாள் வந்து பரிசு பெற்றுச் சென்றார். மறுநாளும் அவர் வந்தார். அவரைக் கண்டதும் அரண்மனையில் இருந்தவர்களில் ஒருவர்  “நேற்றுத்தானே வந்தீர்கள்?” என்று கேட்டார். புலவர்  “ஆம்” என்றார். அதியமானிடம் அவர் சென்றார்.  “நேற்று வந்து பரிசில் பெற்றுச் சென்றவர்” என்று யாரோ சொன்னது அதியமான் காதில் விழுந்தது.

“இருந்தால் என்ன? நேற்றும் உணவு கொண்டோம். அது போதுமென்று நிற்கிறோமா? இன்றும் உணவு கொள்கிறோம். ஒரே நாளில் இரண்டு மூன்று தடவை உணவு கொள்கிறோமே, அது தவறா? ஒவ்வொரு நாளும் நாம் ஒருவருக்குப் பரிசில் தருவது எப்படித் தவறாகும்? ஒரு நாள் வந்தவர் மீட்டும் வந்தால் நம்மிடத்தில் அவருக்குள்ள ஆழ்ந்த அன்பைத்தானே அது காட்டும்?” என்று சொல்லி அன்றும் அப் புலவருக்குப் பரிசில் வழங்கினான் அதியமான். மூன்றாவது நாளும் அந்தப் புலவர் வந்தார். மறுபடியும் அவருக்குப் பரிசில் கிடைத்தது. ஔவையார் இதைக் கண்டார். கொடுக்கச் சலியாக் குணக்குன்றாக நிற்கும் அதியமானுடைய வண்மையை நினைந்து நினைந்து உருகினார்.

நான்காவது நாளும் அந்தப் புலவர் வந்தார். ஆனால் இந்த முறை வேறு பல புலவர்களையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். ஒரே கூட்டம். புலவர் பல நாள் வந்து செல்வதைப் பொறாமல் குறைகூறியவர் இப்பொழுது இந்தக் கூட்டத்தைக் கண்டு பிரமித்துப் போய் விட்டார். ” “என்ன அநியாயமாக இருக்கிறது? கரும்பு யென்று வேரோடு பிடுங்கலாமா? ஊரிலுள்ள இரவலர்களையெல்லாம் இந்த மனிதர் கூட்டிக்கொண்டு வந்து விட்டாரே!”  என்று முணுமுணுத்தார்.

அதியமான் என்ன செய்தான்? புலவர் கூட்டத்தைக் கண்டவுடன் அவனுக்கு அளவற்ற ஊக்கம் உண்டாகிவிட்டது. முதல் நாளில் அந்தப் புலவருக்கு எவ்வளவு அன்போடு உபசாரம் செய்தானோ அதே அன்போடு எல்லோருக்கும் உபசாரம் செய்யத் தொடங்கினான். பல நாட்களாகப் பாராதிருந்த நெருங்கிய உறவினரை அன்புடன் வரவேற்று உபசரித்துப் பழகுவதுபோலப் பழகினான். புலவர்களுடைய புலமைத் திறத்தை அறிந்து பாராட்டினான், அந்தக் கூட்டத்தில் புலமை நிரம்பாதவர்களும் இருந்தார்கள். அவர்களுக்கும் இன்சொல் சொல்லி ஊக்கமூட்டினான்.

இந்தக் காட்சியையும் ஔவையார் கண்டார். புலவர்களுக்கு காமதேனுவைப் போலவும் கற்பகத்தைப் போலவும் அதியமான் விளங்குவதைக் கண்டு ஆனந்தங் கொண்டார்.  ‘வெவ்வேறு மக்களுக்கு அடுத்தடுத்து ஈவதென்றாலே எல்லாச் செல்வர்களுக்கும் இயலாத காரியம். கொடையிலே சிறந்தவனென்று பெயர் பெற்ற கண்ணன்கூட ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில்தான் தானம் செய்வான். இவனோ எந்த நேரத்திலும் புலவர்களை வரவேற்று உபசரிக்கிறான். ஒருவரே பல நாள் வந்தாலும் மீட்டும் மீட்டும் பாராட்டிப் பரிசில் தருகிறான். தனியாக வந்தாலும் பலரோடு வந்தாலும் சிறிதும் வேறுபாடின்றி அன்பு காட்டுகின்றான். அகமும் முகமும் மலர்ந்து பரிசில் தருகிறான். முதல் முதல் எத்தனை ஆர்வமும் அன்பும் காட்டுகிறானோ அதே ஆர்வத்தையும் அன்பையும் எப்போதும் காட்டுகிறான். இப்படி வேறு யாரும் உலகில் இருப்பதாகத் தெரியவில்லையே! இவன் தெய்வப் பிறவி’ என்று ஔவையார் அதியமானுடைய இயல்பை நினைத்து வியந்தார். அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றார்.

***

பின் ஒரு முறை ஔவையார் தகடூருக்கு வந்தார். அப்பொழுது அதியமான் அரசியல் பற்றிய செயல்களில் ஈடுபட்டிருந்தான். சேர அரசன் தன்னைக் கருவறுக்க எண்ணியிருக்கிறானென்ற செய்தியை அவன் அறிந்தான். தகடூரை முற்றுகையிடவும் கூடும் என்று ஒற்றர்கள் வந்து சொன்னார்கள். ஆதலின் தன் படை வலியையும் மாற்றானுடைய படை வலியையும் தனக்குத் துணைவராக வருவாருடைய படை வலியையும் ஆராய்வது இன்றியமையாததாகி விட்டது. அமைச்சர்களுடன் ஆராய்ந்தான். சேர அரசன் முடியுடைய பேரரசன். அவனுடைய படை மிகப் பெரிய படை. அதியமானோ சிற்றரசன். அவனிடத்தில் சேரமான் படையை எதிர்த்து வெல்லும் அளவுக்கு படை இல்லை. புதிய கூலிப் படையைச் சேர்க்கலாம் என்றால், பெரும் பொருள் வேண்டுமே! பொழுது விடிந்தால் புலவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்களுக்குக் கணக்கில்லாமல் பரிசில் வழங்கி வரும் அவனிடம் அதிகப் பொருள் எப்படி இருக்கும்?

இந்த நிலையில் என்ன என்ன செய்ய வேண்டும் என்ற ஆராய்ச்சியில் அதியமானும் அவன் அமைச்சர்களும் ஈடுபட்டிருந்தார்கள். அரண்மனையில் உள்ள அதிகாரிகள் யாவரும் எப்போதும்போல் முகமலர்ச்சியுடன் இருக்கவில்லை. யோசனையில் ஆழ்ந்தவர்களைப் போலவே யாவரும் காணப்பட்டனர்.

ஔவையார் அங்கே இருந்த அமைதியைப் பார்த்தார்.  ‘நாம் சரியான காலத்தில் வரவில்லை. இப்போது அதியமானைப் பார்ப்பது அரிது போலும்!’ என்று எண்ணினார்.

அதியமானுக்கு ஔவையார் வந்திருப்பது தெரிந்தது. உடனே அவரைப் பார்த்து புடன் பேசினான். அந்தப் பேச்சிலே எத்தகைய வேறுபாடும் இல்லை. “இன்னும் சில நாட்கள் இங்கே தங்கிச் செல்லலாம் அல்லவா?” என்று ஔவையாரைக் கேட்டான்.  “மாட்டேன்” என்று சொல்ல வாய் வருமா? அவர் ஒப்புக் கொண்டார்.

நாள் முழுவதும் புலவர்களுடன் பொழுது போக்க இயலாத நிலையில், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் அதியமான் ஔவையாரைப் பார்த்துப் பேசினான். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாட்கள் ஆயின. அதியமான் ஏதோ மிக மிக முக்கியமான ஆலோசனையில் டிருக்கிறான் என்பதை ஔவையார் உணர்ந்து கொண்டார். ஆதலின் அவனாக எப்போது விடை கொடுக்கிறானோ, அப்போது போகலாம் என்று நினைத்தார்.

பின்னும் சிலநாள் அங்கே தங்கியிருந்தார்.

 ‘நமக்குப் பரிசில் தருவதைப் பற்றி ஏதேனும் யோசித்து இப்படி நாட்களை நீட்டிக்கிறானோ?’ என்ற எண்ணம் ஒரு கணம் ஔவையாருக்குத் தோன்றியது. மறுகணமே அவ்வாறு எண்ணியதற்கு வருந்தினார்.  ‘என்ன பைத்தியக்கார எண்ணம்! ஏ நெஞ்சமே! நீயா இப்படி நினைத்தாய்? இதைக் காட்டிலும் தாழ்ந்த எண்ணம் வேறு இல்லை. அதியமானுடைய இயல்பை அறிந்தும் இப்படி நினைக்கலாமா? அட பேதை நெஞ்சே! நமக்குக் கிடைக்கும் பரிசில் எங்கே போகப் போகிறது? அவன் தரும் பரிசிலைப் பெற்றுப் பயன் அடைய வேண்டும் என்ற ஆவல் உனக்கு அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவன் தருவானோ மாட்டானோ என்று ஏங்குகிறாய். அவன் தருவதை நுகர, அருந்த, ஏமாந்த நெஞ்சமே! நீ வருந்த வேன்டாம்’.  ஔவையார் தமக்குத் தாமே நகைத்துக் கொண்டார். மறுபடியும் நெஞ்சை வேறாக வைத்துப் பேசலானார்.

‘இத்தனை நாள் பழகி அதியமானுடைய சீரிய இயல்புகளை அறிந்தும் உனக்கு இந்த எண்ணம் ஏன் வந்தது? இதற்கு முன்னாலே நாம் இவ்விடத்திலே கண்ட காட்சிகளை நினைத்துப் பார். ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, பல நாள் அடுத்தடுத்து வந்தாலும் அவன் சிறிதாவது சலித்துக் கொண்டானா? இன்னும் பலரைக் கூட்டிக் கொண்டு வந்தோமானாலும் அவன் வள்ளன்மையிலே ஏதேனும் குறைவு நேர்வதுண்டா? நினைத்துப் பார். அப்படி அடுத்தடுத்து வரும்போது அவனுடைய அன்பு மற்ற இடங்களைப் போல ஒரு நாளுக்கு ஒரு நாள் அளவிற் குறைந்தா வந்தது? முதல் நாள் எத்தனை விருப்பத்தை உடையவனாக இருந்தானோ அதே விருப்பத்தைப் பல நாள் அடுத்தடுத்துச் சென்றாலும் காட்டும் இயல் புடையவனையா இப்படி நினைத்தாய்!

‘அவனுக்கு என்ன குறைவு? அழகான அணிகலங்களை அணிந்த யானைகளும் வேக செல்லும் தேர்களையும் உடையவனல்லவா அவன்? புலவர்களுக்குக் கொடுக்க இயலாத வறுமையா வந்துவிட்டது? அதியமான் பரிசில் நிச்சயம் நமக்குக் கிடைக்கும். அது இன்று கிடைக்கிறதோ, நாளைக் கிடைக்கிறதோ, அதைப் பற்றிக் கவலை இல்லை. அந்தக் காலம் நீட்டித்தாலும் டாலும் பரிசில் கிடைப்பது மாத்திரம் உறுதி. வேறு ஒருவருடைய கையில் உள்ள பரிசில் அது, நமக்கு எப்படி எப்போது வரும் என்ற எண்ணமே வேண்டாம். நம் கையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்ளலாம்.

‘யானைக்குத் தழையுணவைக் கொடுக்கிறோம். அது அதை உடனே உண்ணாமல் தன் கொம்பினிடையிலே வைத்துக் கொள்கிறது.  “அடடா, இதை இது உண்ண வேண்டுமென்றல்லவா கொடுத்தோம்? இது இங்கே துக் கொண்டு விட்டதே” என்று கவலைப் படலாமோ! யானை எப்படியும் அதை உண்டே விடும். யானை தன் கோட்டிடையே வைத்த கவளத்தைப் போன்றது, அதியமான் நமக்குத் தரப்போகும் பரிசில்; அது நம் கையிலே இருப்பது போன்றதுதான். அது கிடைக்காமற் போகாது. இதை அனுபவத்தில் நாம் நன்றாக உணர்ந்திருக்கிறோமே அப்படியிருந்தும் நீ ஐயுறலாமோ!  இத்தகைய சிறந்த ஈகையையுடைய அதியமானை நாம் வாழ்த்த வேண்டும். கிடைக்குமோ, கிடைக்காதோ என்று நீ வருந்த வேண்டியதில்லை. அவன் ஏதோ முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான். அதில் வெற்றி பெறுவானாக என்று நாம் வாழ்த்த வேண்டும். அவன் முயற்சி வாழட்டும் என்று வாழ்த்துவோம் ‘.

இப்படியெல்லாம் நெஞ்சோடு பேசிய பேச்சைப் பிறகு ஔவையார் ஒரு பாட்டாக உருவாக்கினார்.

ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்;
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ!
அணிபூண் அணிந்த யானை, இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும், யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவே; பொய்ஆ காதே;
அருந்தே மாந்த நெஞ்சம்,
வருந்த வேண்டா; வாழ்கவன் தாளே!


விளக்கம்: ஒருநாள் செல்வோம் இல்லை; இரண்டு நாட்கள் செல்வோம் இல்லை; பல நாட்கள் அடுத்தடுத்துப் பல மக்களோடு சென்றாலும் முதல் நாள் நம்மிடம் காட்டிய விருப்பத்தோடே இருப்பான்; அணிதற்குரிய நெற்றிப் பட்டம் கிம்புரி முதலிய பூண்களை அணிந்த யானையையும், ஓடும் தேரையும் உடைய அதியமான் தரும் பரிசிலானது, அதனைப் பெறுவதற்கு அமையும் காலம் நீண்டாலும், நீளாவிட்டாலும், யானை உண்ணும் பொருட்டுத் தன் கொம்பினிடையே வைத்த கவளத்தைப்போல, நம் கையிலே இருப்பதுதான்; அது நமக்குக் கிடைப்பது தவறாது. அவன் தரும் பரிசிலை நுகர ஏமாந்து நிற்கும் நெஞ்சமே, பரிசில் கிடைக்குமோ கிடைக்காதோ என்று நீ வருந்த வேண்டாம்; அவன் முயற்சி வாழட்டும்.

அருஞ்சொற்பொருள்: செல்லலம் – போகோம். பயின்று – அடுத்தடுத்துப் பழகி. தலைநாள் – முதல் நாள். மாது, ஓ: அசை நிலைகள். பூண் – ஆப ரணம். இயலுதல் – இயங்குதல், ஓடுதல். கோடு – கொம்பு. கையகத்தது – கைக்கு அகப்பட்டது. அருந்த ஏமாந்த என்றது செய்யுள் விகாரத்தால் அருந்தேமாந்த என வந்தது. நெஞ்சம்: விளி. வாழ்க அவன் என்பது வாழ்கவன் என விகாரமாயிற்று. தாள் – முயற்சி. அவன் அடி வாழ்க என்று வாழ்த்தியதாகவும் கொள்ளலாம்.

அதியமானை மறுநாள் கண்ட ஔவையார் இந்தப் பாடலைச் சொன்னார். குறிப்பறியும் திறம்பூண்ட அவன் உடனே இந்தப் பெரும் புலமைப் பிராட்டியாருக்குரிய பரிசிலை வழங்கி விடை கொடுத்தனுப்பினான். இது பாடாண் திணையில்  ‘பரிசில்கடா நிலை’ என்னும் துறையைச் சார்ந்தது. பரிசில் கொடுக்க வேண்டும் என்று குறிப்பாகக் கேட்கும் பொருளை உடையதாதலால் இத்துறை அப் பெயர் பெற்றது. இது புறநானூற்றில் 101 – ஆவது பாட்டு.

(தொடர்கிறது)

$$$

One thought on “அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 6

Leave a comment