அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 5

-கி.வா.ஜகந்நாதன்

“தமிழுக்கு எங்கே போனாலும் மதிப்பு உண்டு என்பது உண்மைதான். ஆனாலும் அப்படி மதிப்பிட்டு உபசரிப்பதிலும் தரம் இருக்கிறதே! புலவர்களின் தகுதியை அறிந்து அதற்கு ஏற்பப் பேணும் இயல்பு உயர்ந்தது என்று யாவரும் சொல்கிறார்கள். உபகாரிகளிலும் வேறுபாடு இருக்கிறது. பரிசில் தருவதனால் எல்லாப் புரவலர்களும் ஒரே மாதிரி இருப்பவர்கள் என்று கொள்ளக் கூடாது. அவர்களிடத்திலும் தகுதியினால் வேறுபாடு உண்டு; வரிசை உண்டு.”

5. மறப்பது எப்படி?

சோழ நாட்டில் உள்ள ஆவூர் என்ற ஊரிலே பிறந்தவர் மூலங்கிழார் என்னும் புலவர். அவர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவராதலின் அவருக்கு அப்பெயர் வந்தது என்று தோன்றுகிறது. அக்காலத்தில் கிள்ளிவளவன் என்னும் அரசன் சோழ நாட்டை ஆண்டு வந்தான். புலவர்களைப் பாராட்டி உபசாரம் செய்து பரிசில் வழங்குவதில் அவன் சிறந்தவன். ஆதலின் அடிக்கடி புலவர்கள் அவனை நாடிச் சென்று தங்கள் புலமைத் திறத்தைக் காட்டிப் பரிசில் பெற்றுச் செல்வார்கள். அந்தப் புலவர் கூட்டத்திலே ஆவூர் மூலங் கிழாரும் ஒருவர். பல புலவர்கள் வந்தாலும் அவரவர் தகுதியை அறிந்து பாராட்டி மரியாதை பண்ணும் இயல்பு கிள்ளிவளவனிடம் இருந்தது. இப்படித் தரம் அறிந்து பரிசில் தருவதை  ‘வரிசையறிதல்’ என்று பழம் புலவர்கள் சொல்வார்கள். கல்லையும் இரும்பையும் தங்கத்தையும் ஒரேமாதிரி எண்ணாமல் வெவ்வேறாக அறிந்து பயன்படுத்திக் கொள்வது போல, வெவ்வேறு புலவர்களை அவரவர்கள் புலமை வகையை அறிந்து அவர்களுடைய தகுதிக்கு ஏற்பப் பாராட்டிப் பரிசில் வழங்குவதை உயர்வாகக் கொண்டாடுவார்கள் புலவர்கள்.

கிள்ளிவளவன் வரிசையறிவதில் வல்லவனாதலின் சிறந்த புலவர்கள் பலர் அவனை நாடி வந்தனர். வளவனுடைய பெருமதிப்புக்குரிய புலவர்களுக்குள் ஆவூர் மூலங்கிழாரும் ஒருவர். அவரைப் போன்ற பெரும் புலவர்களோடு இடைவிடாது பழக வேண்டும் என்ற ஆர்வம் கிள்ளிவளவனிடம் இருந்தது.

தொடர்ந்து பல நாட்களாக ஆவூர் மூலங்கிழார் கிள்ளிவளவனைப் போய்ப் பார்க்கவில்லை. வேறு வேலை இருந்தமைதான் அதற்குக் காரணம். அதோடு வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டியும் இருந்தது. அவரை நெடு நாட்களாகக் காணாமையினால் கிள்ளிவளவனுக்குத் துன்பம் உண்டாயிற்று. அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தான்.

புலவர்கள் எந்த இடத்துக்குச் சென்றாலும் சிறப்பைப் பெற்ற காலம் அது. சோழ நாட்டிலே பிறந்த புலவராக இருந்தாலும் சேர பாண்டிய நாடுகளுக்குச் சென்று அங்கே பல காலம் தங்கி அங்குள்ள மன்னர்களாலும் செல்வர்களாலும் சிறப்புப் பெறுவதுண்டு. ஒரு நாட்டிலே பிறந்தார் வேற்று நாட்டுக்குச் சென்று வாழ்வதும் உண்டு. மன்னர்களுக்குள் போர் நிகழ்ந்தால் ஒரு நாட்டிலுள்ள குடிமக்கள் மற்றொரு நாட்டுக்குப் போவது இயலாது. ஆயினும் புலவர்கள் மாத்திரம் தம் மனம் போல எங்கே வேண்டுமானாலும் போகலாம். ஒரு நாட்டிலே பிறந்தவராயினும் புலவர்கள் எல்லா நாட்டுக்கும் உரியவரென்றும், அவர்களால் தீங்கு நேராதென்றும் மக்கள் நம்பி வந்தனர். புலவர்களுடைய ஒழுக்கம், அறிவு இரண்டும் மக்களுடைய பாராட்டுக்கு உரியனவாகச் சிறந்து விளங்கின.

மூலங்கிழார் வராததனால், அவர் பாண்டி நாட்டுக்கோ சேர நாட்டுக்கோ சென்று அங்குள்ளவர்களின் உபசாரத்தில் இன்புற்றிருப்பார் என்று சோழ மன்னன் எண்ணினான். புலவர்களிடம்,  “அவரைக் கண்டீர்களா?” என்று விசாரித்தான். அவனுக்குப் புலவரிடம் இருந்த பேரன்பே அப்படி ஆவலோடு விசாரிப்பதற்குக் காரணமாக இருந்தது.

கிள்ளிவளவன் தம்மைப் பற்றி அடிக்கடி விசாரிக்கிறான் என்ற செய்தி மூலங்கிழார் காதுக்கு எட்டியது. அவனைப் பார்க்கக் கூடாது என்றா அவர் இருந்தார்? பல ஊர்களுக்குச் சென்று வந்த இளைப்பினால் சில காலம் எங்கும் போக வேண்டாம் என்று தம் ஊரில் தங்கியிருந்தார்; அவ்வளவுதான். கிள்ளிவளவன் அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தோடு இருப்பதை உணர்ந்தவுடன் அவர் உறையூரை நோக்கிப் புறப்பட்டார்.

***

உறையூரை அடைந்து சோழனது அவைக்களத்தைப் புலவர் அணுகினார். பல நாட்களாகப் பசித்திருந்தவன் உணவைக் கண்டது போல வளவனுக்கு இன்பம் உண்டாயிற்று. இருக்கையினின்று எழுந்து வந்து புலவரை வரவேற்றான். தக்க ஆசனத்தில் இருக்கச் செய்து ஷேமலாபங்களை விசாரித்தான்.

“தமிழ் நாடு மிக விரிந்தது. புலவர்களுக்கு யாதும் ஊர்; யாவரும் உறவினர். தங்களைப் போன்ற பெரிய கவிஞர்களுக்குச் சென்ற சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டு. எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அன்று வந்த விருந்தினரைப்போல மிக்க அன்புடன் பாராட்டிப் போற்றுவார்கள். தங்கள் சோழ நாட்டையும் என்னையும் இவ்வளவு காலமாக மறந்து போனீர்களே! அவ்வாறு எம்மை அடியோடு மறக்கச் செய்யும்படியாகத் தங்களை வழிபட்டுப் போற்றிய நாடு எதுவென்று நான் தெரிந்து கொள்ளலாமா? இவ்வளவு காலம் எங்கே தங்கியிருந்தீர்கள்?” என்று கேட்டான் அரசன்.

“தமிழுக்கு எங்கே போனாலும் மதிப்பு உண்டு என்பது உண்மைதான். ஆனாலும் அப்படி மதிப்பிட்டு உபசரிப்பதிலும் தரம் இருக்கிறதே! புலவர்களின் தகுதியை அறிந்து அதற்கு ஏற்பப் பேணும் இயல்பு உயர்ந்தது என்று யாவரும் சொல்கிறார்கள். உபகாரிகளிலும் வேறுபாடு இருக்கிறது. பரிசில் தருவதனால் எல்லாப் புரவலர்களும் ஒரே மாதிரி இருப்பவர்கள் என்று கொள்ளக் கூடாது. அவர்களிடத்திலும் தகுதியினால் வேறுபாடு உண்டு; வரிசை உண்டு.”

“தங்கள் சென்ற நாடுகளில் இந்த நாட்டில் உள்ளவர்களைவிடத் தகுதியால் உயர்ந்த புரவலர்களைத் தாங்கள் பார்த்திருப்பீர்களென்றே தோற்றுகிறது. அதனால்தான் எங்களையெல்லாம் அடியோடு மறந்து விட்டீர்களோ!” என்று வளவன் கேட்டான்.

புலவர்: அப்படி நான் சொல்லவில்லையே! புரவலர் புலவர்களின் வரிசையறிந்து உதவுவது போலவே, புலவர்களும் புரவலர்களின் தரத்தை அறிந்து போற்றுவார்கள். ஒளியைத் தருகின்ற பொருள்கள் பல உண்டு. கதிரவன் ஒளியைத் தருகிறான். சந்திரனும் இரவில் ஒளியைத் தருகிறான். விளக்குகள் இருளைப் போக்குகின்றன. மக்கள் எல்லாவற்றாலும் பயனை அடைகிறார்கள். ஆனாலும் அவற்றின் தரத்தை அவர்கள் உணர்ந்தே பயன் கொள்கிறார்கள். விளக்கை ஏற்றும் போது அது கதிரவனைவிடச் சிறந்ததென்றோ, கதிரவனுக்குச் சமானமானதென்றோ நினைப்பதில்லை.

வளவன்: ஆனால் கதிரவன் இல்லாதபோது தானே விளக்கை ஏற்றுகிறார்கள்?

புலவர்: கதிரவன் உள்ளபோதும் விளையாட்டுக்காகவும் மங்கல காரியங்களுக்காகவும் விளக்கை ஏற்றுவது உண்டு. அதனால் அவர்களுக்குக் கதிரவனிடத்தில் உள்ள மதிப்புப் போய்விட்டதென்றோ, கதிரவனை அவர்கள் மறந்து விட்டார்களென்றோ சொல்லலாமா?

வளவன்: தாங்கள் உலகம் போற்றும் பெரும் புலவர். தங்களோடு எதிர் நின்று வாதிட நான் யார்? தங்களைக் காணாமல் என் உள்ளம் மிகமிக வருந்தியது. தாங்கள் வேற்று நாட்டுக்குச் சென்று அங்கே பெற்ற உபசாரத்தால் என்னை மறந்து விட்டீர்களோ என்று நினைத்தேன். தாங்கள் என்னை மறந்தாலும் நான் தங்களை மறப்பதில்லை

புலவர்: மறப்பதா! மன்னர்பிரானுடைய உயர்ந்த ஆற்றலையும் புலவரைப் போற்றும் திறத்தையும் தமிழுலகம் முழுதும் அறிந்து பாராட்டுகிறதே! இங்கே பழகிய பிறகு மற்ற இடங்களிலே தங்கும் ஆசை வருமா? புலவர் என்றால் பல இடங்களுக்குப் போய் வரவேண்டி இருக்கலாம். ஆனாலும் அவர்களுடைய உள்ளம் வரிசை அறிந்து பாராட்டும் கிள்ளிவளவரிடந்தான் இருக்கும்.

மன்னர் ஏறே! இந்த நாட்டுக்குரிய படை மிகச் சிறந்தது. விரிவான படையும் அதற்கு ஏற்றவிறலுடைய மன்னரும் இந்தச் சோழ நாட்டுக்குக் கிடைத்திருக்கிறதை யார் அறிய மாட்டார்கள்? படைகளுக்கு முன்னாலே யானைகள் வரிசையாகச் செல்வதைப் பார்த்தாலே பகைவனுக்கு நடுக்கம் கண்டுவிடுமே. யானைகளின்மேல் இருக்கும் பல நிறங்களை உடைய கொடிகள் ஓங்கி உயர்ந்து அசையும். மலை போன்ற யானையின்மேல் அவை அசைவது வானத்தை மாசு மறுவின்றித் துடைக்கும் வேலையை அவை மேற்கொண்டிருக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றும்.

இத்தகைய படைபலத்தைக் கொண்டு என்ன காரியந்தான் செய்யக் கூடாது? மன்னர்பிரானுடைய கோபம் எங்கே பாய்கிறதோ அவ்விடம் அடியோடு அழிந்து போய்விடும்; எல்லாம் பற்றி எரிந்து பாழாகிவிடும். அப்படி இன்றி விருப்பத்துடன் பார்க்கும் பார்வை எங்கே படுகிறதோ அந்த இடம் பொன் விளையும் பூமியாக மாறும். தீப்பார்வை ஏரியைக் கொளுத்த, நயந்த பார்வை பொன் பூப்பச் செய்யும் விறலும் கருணையும் உடைய மன்னர்பிரான் பெருமையைத் தமிழுலகம் முழுதும் உணர்ந்திருக்கின்றது.

நல்ல வெயில் வீசும்போது அந்த வெயிலை மாற்றி நிலாவாக்க வேண்டும் என்று விரும்பினாலும், வெண் திங்கள் நிலாவை வீசும்போது வெயில் வேண்டுமென்று நினைத்தாலும் வேண்டியதை வேண்டியபடியே விளைக்கும் ஆற்றல் மன்னர் பெருமானுக்கு உண்டு. இதையும் பரிசிலர் நன்றாக உணர்வார்கள். அவர்களுக்குச் சொர்க்கபூமி என்றாலும் அதனிடத்தில் மதிப்பு இல்லை. வியாபாரியிடம் பணத்தைக் கொடுத்தால் பண்டம் கிடைக்கிறது. ஒரு வீட்டை உடையவனிடம் குடிக்கூலி கொடுத்தால் அந்தக் கூலி உள்ளவரையில் அந்த வீட்டில் வாழலாம். தேவலோகம் என்பது குடிக்கூலி கொடுத்து வாழும் இடந்தானே? மிகவும் இனிய போகத்தை உடையது, பொன் மயமான கற்பகப் பூங்காவை உடையது என்று சொல்லும் அவ்வுலகத்தில் உள்ளவர்கள் தாம் செய்த நல்வினைக்கு ஈடாக அங்கே வாழ்கிறார்கள். நல்வினை தீர்ந்தால் சொர்க்க போகமும் போய்விடும். அது ஒரு பெருமையா? அங்கே எதையாவது யாருக்காவது கொடுத்து உவக்க முடியுமா? ஈவோரும் ஏற்போரும் இல்லாத நாடு அல்லவா? உடையவர் ஈந்து உவக்கும் இன்பமும், இல்லாதவர் நல்ல உபகாரிகளிடம் இரந்து பொருள் பெரும் இன்பமும் இல்லாத அந்த நாட்டில் பரிசிலர் போய் என்ன செய்ய முடியும்? அருமையான தமிழ்ப் பாட்டை அங்கே போய்ச் சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள்? கேட்டாலும் பரிசில் தருவார்களா? ஒன்றும் இல்லை. ஆகவே அந்த நாட்டில் வாழும் வாழ்வு நாமாகச் செயல் செய்யும் சுதந்தரம் இல்லாத வாழ்வு. கொடுக்கும் கையையும் வாங்கும் கையையும் கட்டிப் போட்டிருக்கிற நாடு. செயல் அற்றுப்போன நாடு. அதைப் பரிசிலர்கள் விரும்புவதில்லை.

இப்படித் தேவருலகத்தையும் விரும்பாத பரிசிலர் சோழநாட்டை விரும்புகிறார்கள். எப்போதும் இந்த நாட்டை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாடு சோறுடைய சோழ நாடாதலின் சொர்க்க போகம் இங்கே இருக்கிறது. அதற்குமேல், விண்ணாட்டில் இல்லாத ஈகை இங்கே இருக்கிறது. இவ்வளவுக்கும் மூல காரணமாக மன்னர்பிரான் இருந்து நாட்டு வளத்தையும் வரிசையரிந்து ஈயும் ஈகையையும் வளர்த்து வருவதனால், பகைவர் நாட்டிலே வாழ்ந்தால் கூடப் பரிசிலர்களெல்லாம் இந்த நாட்டையே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்க, மன்னர்பிரானுடைய குடை நிழலிலே பிறந்து அந்த நிழலிலே வளர்ந்து வரும் எங்களைப் பற்றிச் சொல்லவேண்டுமா, என்ன? எங்கே போனால்தான் என்ன? மற்ற இடங்களுக்குப் போகும்போதுதான் இந்த நாட்டின் பெருமையையும் மன்னர் பிரானுடைய அருமையையும் நன்றாக உணர்ந்து, பின்னும் அதிகமாக நினைந்து வாழ்த்தத் தோன்றுகிறது.

புலவர் ஒருவாறு சொல்லி நிறுத்தினார். அருகில் இருந்தவர்கள் கேட்டு வியந்தார்கள்.  “மன்னர்பிரானுடைய இயல்பை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம். ஆனால் மூலங்கிழார் அதை எடுத்துச் சொல்லும் பொழுது அழகாக இருக்கிறது. எங்கள் உள்ளம் குளிர்கிறது” என்றார் அங்கிருந்த அமைச்சர்களில் ஒருவர்.  “மன்னர்பிரான் கேட்ட கேள்விக்கு விடை கூறும் வாயிலாகப் பேசும் பேச்சிலே இத்தனை அழகு இருக்குமானால், இப்புலவர் பிரான் இதையே கவிதையாக வழங்கினால் எப்படி இருக்கும்!” என்றார் மற்றோர் அமைச்சர்.

இயல்பாகவே ஊக்கம் மிகுதியாக இருந்த ஆவூர் மூலங்கிழாருக்கு இந்த வார்த்தை கவிதை பாடும் உணர்ச்சியைக் கிண்டிவிட்டது. உடனே அவரிடமிருந்து மலர்ந்தது ஒரு பாட்டு.

வரைபுரையும் மழகளிற்றின்மிசை
வான்துடைக்கும் வகையபோல
விரவுஉரவின கொடிநுடங்கும்
வியன்றானை விறல்வேந்தே!

நீ, உடன்றுநோக்கும்வாய் எரிதவழ
நீ, நயந்துநோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்திங்களுள் வெயில்வேண்டினும்

வேண்டியது விளைக்கும் ஆற்றலை; ஆகலின்
நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த
எம்அளவு எவனோ? மற்றே; இன்னிலைப்
பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்


செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவது அண்மையின் கையறவு உடைத்துஎன,
ஆண்டுச்செய் நுகர்ச்சி ஈண்டுங் கூடலின்

நின்நாடு உள்ளுவர் பரிசிலர்,
ஒன்னார் தேஎத்தும் நின்உடைத்து எனவே.


விளக்கம்: மலையைப் போன்ற இளைய ஆண் யானைகளின் மேல் வானத்தை மாசு மறுவறத் துடைக்கும் வேலையை உடையவைபோல, பல நிறங்கள் விரவிய கொடிகள் அசையும் பரந்த படையையும் வெற்றிமிடுக்கையும் உடைய வேந்தனே! நீ கோபித்துப் பார்க்கும் இடம் தீப் பரவ, நீ விரும்பிப் பார்க்கும் இடம் பொன் விளங்க, சிவந்த சூரியனிடத்திலே நிலவு வேண்டுமென்று விரும்பினாலும், வெள்ளிய திங்களிடத்தில் வெயில் உண்டாக வேண்டுமென்று விரும்பினாலும் நீ வேண்டிய பொருளை வேண்டியபடி உண்டாக்கும் வலிமையை உடையாய்; ஆதலின் நினது குடைநிழற் பட்ட இடத்திலே பிறந்து அந்த நிழலிலே வளரும் எம்முடைய நினைவின் அளவு (கிடக்கட்டும்; அதைத் தனியே எடுத்துச் சொல்ல வேண்டுமா) என்ன? இனிய நிலையையும் பொற்பூவையுடைய கற்பகச் சோலை யையும் உடைய நல்ல நாடாகிய சொர்க்கபூமியில் உள்ள வர்களும் தாம் பெறும் இன்பத்தைத் தாம் செய்த நல்வினையின் சார்பினாலே பெறுவதல்லது, செல்வம் உடையவர் ஈதலும் செல்வம் இல்லாதவர் இரத்தலுமாகியவை செய்யக் கடவதாகிய இடம் அது அன்று; ஆதலின் அது செயலிழந்து நிற்கும் வருத்தத்தை உடையதென்று எண்ணி, அங்கே நுகரும் இன்ப நுகர்ச்சி இங்கும் கிடைப்பதனால் நின்னுடைய சோழநாட்டை நினைப்பார்கள் பரிசில் பெரும் புலவர்கள், பகைவர் தேசத்தில் இருந்தாலும், இந்த நாடு உன்னை உடையதாக இருக்கின்றது என்று கருத்தினால்.

‘வேந்தே, கூடலின், பரிசிலர் நின்னுடைத்தென
நின்னாடு உள்ளுவர்; எம் அளவு எவனோ’  – என்று கூட்டிப்
பொருள்கொள்ள வேண்டும்.

அருஞ்சொற்பொருள்: வரை-  மலை. புரையும்- ஒக்கும். மழ- இளமை. வகைய-  வகுத்த வேலை. விரவு உரு- கலந்த நிறம். நுடங்கும்-அசை யும். வியல் தானை- விரிவாங்க படை. விறல்- வெற்றி மிடுக்கு. உடன்று- சினந்து. வாய்- இடம். நயந்து- விரும்பி எவனோ- என்னவோ. மற்று, ஏ: அசை நிலைகள். இன்நிலை- இனிய நிலை. பொன் என்பது மற்றச் சொற்களோடு சேரும்போது பொலன் என்று செய்யுளில் ஆகும். கா- சோலை. மருங்கின்- சார்பினால். அல்லதை: ஐ, சாரியை. கடவது- முடியும் தன்மையை உடையது. அண்மையின்- அல்லாமையால். கையறவு-செயலற்று நிற்கும் நிலை. நுகர்ச்சி- இன்ப அநு பாவம். கூடலின்- கிடைப்பதனால். உள்ளுவர்- நினைப்பார். பரிசிலர்- பரிசில் பெறுவோர்; இங்கே புலவர். ஒன்னார்- பகைவர். தேஎம்- தேசம். நின்உடைத்து- நின்னை உடையது. நின்னுடைத்து என்றாலும் சோழ நாட்டில் நீ இருந்து சிறப்புச் செய்கிறாயென்ற பொருளிலே சொன்னதாகக் கொள்ள வேண்டும்.

***

கவிஞர் பாடிய பாட்டை யாவரும் கேட்டு மகிழ்ந்தனர். இது அரசனைப் பாராட்டும் பொருளையுடையது. ஆதலால்  ‘பாடான் திணை’ என்ற புறத்திணையைச் சார்ந்தது. அரசனுடைய நல்லியல்புகளை எடுத்து மொழிந்தமையால்  ‘இயல் மொழி’ என்ற துறையில் அமைந்தது.  ‘அவன்  “எம்உள்ளீர் எந்நாட்டீர்” என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது’ என்பது இப்பாட்டுக்குரிய பழங்குறிப்பு.

தமிழ்நாட்டில் வாழ்ந்த மன்னர்களும் செல்வர்களும் தாம் பெற்ற பொருளைப் பிறருக்கு ஈந்து இன்புற்றார்கள். குறிப்பறிந்து கொடுத்தார்கள். ஈவதால் வரும் புகழோடு வாழாத வாழ்வு சிறந்ததன்று என்பது அவர்கள் கொள்கை. பரிசிலர்கள் அத்தகைய புரவலர்கள் பால் சென்று இரத்தலை இழிவாகவே கருதுவதில்லை. தம்மிடத்தில் உள்ளதைச் சிறிதும் மறைக்காமல் கொடுக்கும் இயல்புடையவர் களிடத்தில் சென்று யாசிப்பதும், ஈவதைப் போன்ற சிறப்புடையது என்று எண்ணினார்கள்.

இரத்தலும் ஈதலே போலும், கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு

-என்பது வள்ளுவர் வாய்மொழி.

ஈகை இல்லாத நாடு சிறந்த நாடு அன்று என்று எண்ணிய புலவர்கள் விண்ணுலகத்தையும் விரும்புவதில்லை என்று ஆவூர் மூலங்கிழார் கூறுகிறார்.

அறஞ்செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர்
நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக்கு
இறைவ னாகிய பெருவிறல் வேந்தே.

-என்று இந்திரனைப் பார்த்து ஆபுத்திரன் கூறி தேவலோகத்தைக் குறிப்பாக இகழ்ந்ததாக மணிமேகலையில் ஒரு செய்தி வருகிறது.

ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து
வாழ்வாரே வன்க னவர்.

-என்பது ஒரு பழம் பாட்டு.

இவை ஈகையின் சிறப்பை நேர்முகமாக அன்றிக் குறிப்பாகச் சொல்கின்றன.

மூலங்கிழார் கிள்ளிவளவனுடைய வீரத்தையும் பேராற்றலையும் ஈகையையும் அவன் புலவர் கலைப் பாராட்டு அன்பையும் நாட்டை வளப்படுத்தும் திறமையையும் இந்தப் பாட்டிலே புலப்படுத்தியிருக்கிறார். இது புறநானூற்றில் உள்ள 38 – ஆவது பாட்டு.

(தொடர்கிறது)

$$$

One thought on “அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 5

Leave a comment