-கி.வா.ஜகந்நாதன்
சேரமான் நடத்தும் செங்கோலாட்சி நாடறிந்தது. புலவர் நாவறிந்தது. தரும தேவதை அவன் நாட்டில் தங்கி நாலுகாலாலும் நின்று நடைபோடுகிறது. அவனுடைய நாடு அறமம் வளரும் கோயில். அவ்வறம் யாதோர் இடையூறும் இன்றி இனிதே தங்கும்படி செங்கோல் செலுத்தும் பேராளன் சேரமான். அறம் துஞ்சும் செங்கோலை உடைய அவனுடைய நாட்டில் வாழும் குடிமக்களுக்குக் குறை ஏது? பசி இல்லை; பிணி இல்லை; பகையும் இல்லை.

4. சேரமான் புகழ்
அரசன் திருவோலக்கத்தில் வீற்றிருந்தான். புலவர்கள் பலர் அவையில் நிரம்பியிருந்தனர். தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் புலவர்கள் ஈடுபட்டிருந்தனர். அரசனும் அவர்களோடு ஒருவனைப்போல மிக நுட்பமான பொருள்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தான். புலவர் கூட்டத்தில் ஒருவராக குறுங்கோழியூர் கிழார் வீற்றிருந்தார். அவருடைய ஊர் குறுங்கோழியூர். அதனால் அவரைக் குறுங்கோழியூர் கிழார் என்று வழங்கினர். அவருடைய இயற்பெயரை யாரும் வழங்குவது இல்லை. அதனால் அவருடைய சொந்தப் பெயர் இன்னதென்றே தெரியவில்லை.
அவையில் வீற்றிருந்த புலவர்கள் மிக்க மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தனர். குறுங்கோழியூர் கிழாருக்கோ மகிழ்ச்சியோடு வியப்பும் மிகுதியாயிற்று. ‘வாழ்நாள் முழுவதும் தமிழே பயின்று உலகியலையே தெரிந்து கொள்ளாமல் வாழும் நமக்குத் தமிழில் ஊற்றம் இருப்பது இயற்கை. அரசியலில் ஈடுபட்டு எத்தனையோ சிக்கல்களில் அறிவைச் செலுத்தி ஆட்சியை நடத்தும் இப் பெருமானுக்கு இவ்வளவு தமிழறிவு இருப்பது வியப்பிலும் வியப்பு!’ என்று அவர் வியப்பில் ஆழ்ந்தார்.
சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற நீண்ட பெயரை உடையவன் அந்த அரசன். சேரர் குலத்தில் வந்தவன். முடியுடை மூவேந்தரில் ஒருவன். அவனுடைய கண்கள் சிறியனவாக இருந்தன. யானைக்குக் கண்கள் சிறியனவாகவே இருக்கின்றன. அதனால் அந்த யானையின் பெருமை குறைந்து விடுமா? அவன் கண்களின் சிறுமையையும் அவனுடைய பெருமையையும் ஒருங்கே எண்ணியவர்கள் அவனை யானைக்கட் சேய் என்று சொல்லலானார்கள். அந்த அரசன் இப்போது அரசவையில் வீற்றிருந்து புலவருடன் அளவளாவிக் கொண்டிருந்தான்.
புலவர் கூட்டம் கலைந்தது. குறுங்கோழியூர் கிழாருக்கு உண்டான வியப்பு அவர் உள்ளத்தே நிலை பெற்றது.
***
மற்றொரு நாள் பாணரும் விறலியரும் சேர்ந்து தம்முடைய இசைத் திறமையையும் ஆடல் திறமையையும் அரசவையில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களுடைய கலைகளில் நுட்பமான பகுதிகளை அறிந்து சுவைத்துக் கொண்டிருந்தான் அரசன். பாட்டும் கூத்தும் முடிந்த பிறகு அந்த நுட்பங்களை எடுத்துக் கூறிப் பாராட்டினான். பாணரும் விறலியரும் அரசனுடைய கலையறிவை உணர்ந்து மகிழ்ந்தனர். கலையுணர்ச்சியில்லாதவர் வானளாவப் புகழ்ந்தாலும் கலைஞர்களுடைய உள்ளம் குளிர்வதில்லை. கலை நுட்பம் தெரிந்தவர்கள் தலையை அசைப்பது ஒன்றே அவர்களுக்கு மிக்க ஊக்கத்தை உண்டாக்கும். அப்படி இருக்க, கலை நுட்பம் அறிந்து பாராட்டிப் பரிசிலும் வழங்கும் மன்னனிடம் அவர்களுக்கு அளவற்ற மதிப்பு உண்டாவது இயற்கைதானே?
பாணர்கள் மன்னனிடம் விடைபெற்றுச் சென்றபோது தம்முள்ளே அவனைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். “நம் அரசப் பிரானுடைய பேரறிவை என்னவென்று சொல்வது! பல காலம் இசையைப் பயின்று அறிய வேண்டிய நுட்பங்களை எளிதில் உணர்ந்து பாராட்டுகின்றாரே!” என்று ஆச்சரியப் பட்டார்கள். அவர்கள் பேசிய பேச்சு குறுங்கோழியூர் கிழார் காதில் விழுந்தது. ‘தமிழ் இலக்கிய இலக்கணங்களில் இவர் தேர்ந்த அறிவுடையவர் என்று அறிந்தோம். இசையிலும் கூத்திலுங் கூட இவருடைய அறிவு ஆழ்ந்து சிறந்து நிற்கும் போல் இருக்கிறதே!’ என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தார்.
***
பின் ஒருநாள் அமைச்சர்களோடு புலவர் பேசிக் கொண்டிருந்தார். அமைச்சர்கள் அரசனுடைய கூரிய அறிவைப் பாராட்டினார்கள். “எத்தனையோ சிக்கலான சந்தர்ப்பங்களில் தெளிவு புலப்படாமல் நாங்கள் திண்டாடுவோம். அப்போது நம்முடைய மன்னர் பிரான் திடீரென்று ஒரு வழியைக் கூறுவார். அந்த உபாயத்தால் நிச்சயம் காரியம் கைகூடிவிடும். நாங்கள் யாவரும் சேர்ந்து மண்டையை உடைத்துக் கொண்டும் புலப்படாத வழியை அவர் சொல்லிவிடுவார். அவருடைய அறிவின் ஆற்றல் அளவிட முடியாதது” என்று சொன்னார்கள். இதையும் காது குளிரக் கேட்பார் புலவர். ‘ இப்பேரரசருடைய அறிவுக்கு நம்மால் எல்லைகோல முடியாது போலிருக்கிறது. எந்தத் துறையிலே புகுந்தாலும் சிறந்து நிற்கும் ஆற்றல் அவ்வறிவுக்கு இருக்கிறது’ என்று முடிவு கட்டினார்.
***
குடிமக்கள் பலர் ஏதோ ஒரு சிற்றூரில் ஒரு விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். புதிய ஆடைகளை அணிந்து அணிகளைப் புனைந்து உவகைக் கடலில் மூழ்கியிருந்தனர். குறுங்கோழியூர் கிழார் அந்த ஊருக்கு அப்போது போயிருந்தார். அந்த ஊரில் உள்ளவர்கள் அவருக்குப் பழக்கமானவர்களே. திருவிழாவிலே ஈடுபட்டுக் கொண்டானடிக்கும் கூட்டத்தினரில் சிலரைக் கண்ட போது அவருக்கு வியப்பு ஏற்பட்டது. சென்றமுறை அந்த ஊருக்கு வந்திருந்தபோது அந்த மக்களைக் கண்டிருக்கிறார். இளம் பருவத்தையுடைய அவர்கள் தாய்தந்தையரை இழந்து வறுமையில் வாடியிருந்தனர். இப்போதோ புத்தாடையும் அணிகலனும் பூண்டுவிளங்கினர்.
“இவ்வளவு விரைவில் இவர்கள் வறுமை நீங்கியதற்குக் காரணம் என்ன?” என்று புலவர் தம் நண்பர்களைக் கேட்டார்.
“சேரமானுடைய அன்பு தான் காரணம்” என்றனர் நண்பர்கள். “சேரமானுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?” என்று புலவர் கேட்டார்.
“சில நாட்களுக்கு முன் அரசர் பிரான் இவ்வூருக்கு வந்திருந்தனர். இந்த இளைஞர்களைக் கண்டார். நல்ல குடியில் வந்தவர்களாக இருந்தும் இப்போது வறுமையால் வாடுகிறார்களென்பதை அறிந்து உடனே இவர்களுடைய வறுமையைப் போக்க முற்பட்டார். நிலமும் பொருளும் வழங்கினார். அவருடைய ஈர நெஞ்சத்தின் பெருமையை அன்று நாங்கள் உணர்ந்து கொண்டோம்” என்று நண்பர்கள் கூறினர்.
‘ஈர நெஞ்சம்’ என்ற சொற்கள் குறுங்கோழியூர் கிழாரின் காதையும் கருத்தையும் குளிர வைத்தன. ‘அறிவுடையவர் அரசர், அவர் அறிவுக்கு அளவில்லை என்று எண்ணினோம். அது போற்றுதற்குரியது தான். அறிவாற்றல் ஒருவனுக்குப் பெருமையையும் ஊதியத்தையும் அளிப்பது. ஆனால் அறிவு மாத்திரம் போதாது. அதோடு அன்பும் வேண்டும். அறிவாகிய ஒளி மாத்திரம் இருந்தால் அதனால் வெப்பமே ஏற்படும். தீயின் ஒளியோடு வெப்பமும் இருப்பது போல அறிவொளி ஒருவருக்கு விளக்கந்தந்தாலும் பிறருக்குத் துன்பத்தை விளைவிக்கவும் கூடும். ஆகவே தண்மையும் ஒளியும் கலந்த திங்களைப் போல அன்பும் அறிவும் கலந்திருந்தால் உலகத்துக்கே அவரால் இன்பம் உண்டாகும். நம்முடைய அரசர் பெருமானுக்கு அறிவும் ஈரமும் ஒருங்கே இருக்கின்றன. அதனால்தான் அவருடைய ஆட்சியிலே யாவரும் இன்புற்று வாழ்கின்றனர்’ என்று புலவர் எண்ணமிடலானார். அவர் கண்ட காட்சிகளும் கேட்ட செய்திகளும் இத்தகைய விமரிசனத்துக்கு அடிப்படையாக இருந்தன.
***
ஒருநாள் சேரமான் தலைநகரமாகிய வஞ்சிக்குச் சென்றிருந்தார். காணார், கேளார், கால் முடப் பட்டோர், பிணியாளர் ஆகியவர்களைப் பாதுகாக்கும் ஆதுலர் சாலைக்குப் போனார். அறம் கொழுந்து விடும் அவ்விடத்திற்கு அவர் போன பொழுது அவர் கண்ட காட்சி அவரைப் பிரமிக்கும்படி செய்து விட்டது. அரசனே அங்கே வந்து ஒவ்வொருவரையும் தனித் தனியே விசாரித்துக் கொண்டிருந்தான். தாய் தன் குழந்தைகளிடம் அன்போடு பேசும் நிலையைப் புலவர் எண்ணி ஒப்பிட்டுப் பார்த்தார். முன்னே அரசன் ஈர நெஞ்சத்தின் பெருமையை உணர்ந்து பாராட்டியவர்களின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. இப்போது புலவரே நேரில் அரசனது ஈர நெஞ்சத்தின் இயல்பைக் கண்டார். ‘கல்விக்குத்தான் அளவில்லை என்று எண்ணினோம். இவருடைய ஈர அன்புக்கும் எல்லை இல்லை போலும்!’ என்று அறிந்து விம்மிதம் அடைந்தார்.
***
“நேற்று வரையில் இந்தக் குடும்பத்தினர் பகையரசனுக்கு உளவாளிகளாக இருந்தார்கள். இது யாவருக்கும் தெரியும். ஆனாலும் இவர்கள் குற்றத்தை மறந்து பழையபடியே இவர்களுக்கு உரிய பொருளை உதவும்படி அரசர் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய பெருந்தன்மையை இந்தப் பாவிகள் உணர்வார்களா?” என்றார் அதிகாரி ஒருவர்.
“உணர்ந்ததாகக் காட்டாவிட்டாலும் இவர்கள் நெஞ்சு அறியும். வேறு ஓர் அரசராக இருந்தால் இவர்கள் குடும்பத்தையே பூண்டோடு அழித்திருப்பார். நம் அரசரோ, என்ன இருந்தாலும் நெடுங்காலமாக இந்த நாட்டிலே வாழும் குலத்தில் பிறந்தவர்களென்ற தாட்சண்யத்தால் இவர்கள் குற்றத்தைப் பொறுத்து அருள்செய்தார்” என்றார் மற்றோர் அதிகாரி.
“நம்முடைய அரசருடைய கருணைக்கு எல்லையே இல்லை. அந்தச் சிற்றரசன் தன் அளவை மறந்து சேர நாட்டுக் குடிமக்களுக்குத் துன்பத்தை விளைவித்தான். அவனைக் காலில் தளையிட்டுக் கொண்டு வந்து நிறுத்தினார் சேனாபதி. நம்முடைய மன்னர் அந்தச் செயலைக் கண்டு மகிழவில்லை. உடனே காலில் உள்ள தலையைத் தறிக்கச் சொன்னார். அரச குலத்தில் பிறந்தவர் அறியாமையால் தவறு செய்தாலும், நாம் அந்தக் குலத்தின் மதிப்பை உணர்ந்து நடக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். இந்தக் கருணையை நினைக்கும் போதெல்லாம் எனக்கு உள்ளம் உருகுகிறது” – இது ஒருவர் பேச்சு.
‘கான கண்ணோட்டம்’ என்று புலவர்கள் சொல்வார்கள். கண் இருந்தும் கண்ணோட்டம் இல்லாவிட்டால் பயனில்லை என்று சான்றோர்கள் கூறுவதைக் கேட்டதில்லையா? இப்படி ஒருவர் பேசினார்.
இந்தப் பேச்சையெல்லாம் அருகிலே இருந்து கேட்டார் குறுங்கோழியூர் கிழார். அரசனிடம் உள்ள குணங்கள் இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ என்று ஆச்சரியப்பட்டார். ‘உலகத்தில் அளக்க முடியாத பொருள்கள் என்று எதை எதையோ சொல்கிறார்கள். கடலின் ஆழத்தை அளவிட முடியாது என்கிறார்கள். விசாலமான நிலப் பரப்பை அளவு காண இயலாது என்கிறார்கள். காற்று அடிக்கிற திசையின் நீளத்தையும் எல்லை கண்டு அளந்து சொல்ல முடியாதாம். எல்லாவற்றையும் தனக்குள்ளே அடக்கிக் கொண்டிருக்கிற ஆகாயத்துக்கும் அளவில்லை. இப்படி அளவிடப்படாத கடலும் ஞாலமும் திசையும் ஆகாயமும் ஆகிய நான்கு பொருளோடும் ஒருசேர வைத்து எண்ணுவதற் குரியவை நம்முடைய மன்னர்பிரானுடைய அறிவும் ஈரமும் கண்ணோட்டமும்’ என்று அவர் சிந்தனை விரிந்தது. மறுபடியும் அதில் ஒரு சுழிப்பு ஏற்பட்டது. ‘ஒருங்கு வைத்து எண்ணுவதா? விசாலமான முந்நீரின் ஆழத்தையும் அளந்தறிவார் இருக்கலாம். வியன் ஞாலத்து அகலத்தையும் ஏதேனும் உபாயத் தால் அளவு காண்பதும் இயலும். வளி வழங்கு திசையையும் ஒருகால் அளத்தல் கூடும். ஒரு வடிவும் இன்றி வறிதே நிலைபெற்ற ஆகாயத் தையும் யாரேனும் தெய்வத் தன்மையுடையார் அளந்தறிந்து சொல்லலாம். ஆனால் நம்முடைய வேந்தருடைய அறிவையும், ஈரத்தையும், பெருங் கண்ணோட்டத்தையும் அளந்தறிவது இயலாத காரியம்’ என்ற தீர்மானத்துக்கு வந்தார்.
***
…குறுங்கோழியூர்கிழார் தம் அரசனுடைய இயல்புகளை அறிந்து வியந்தார். அந்த வியப்பு அவர் உள்ளத்தே நின்றது; அது கவியாக வெளிப்படும் காலத்தை எதிர்நோக்கி நின்றது.
அதற்குள் அந்த உணர்ச்சிக்குப் பின்னும் வளமூட்டும் செய்திகளைப் புலவர் அறிந்து கொண்டார். நல்ல ஆட்சியில்லாத நாட்டில் பகைவர்களால் குடிமக்களுக்கு நேரும் துன்பங்கள் பல. கொடுங்கோலாட்சியானால் மன்னனாலே விளையும் அல்லல்களே பலவாக இருக்கும். கடும்புலி வாழும் காட்டிலேனும் ஒளிந்து வாழலாம். கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில் அம்மன்னனது கொடுங்கோன்மைக்குத் தப்பி வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் தீயிலே நிற்பவரைப் போல அல்லற்பட்டு வாழ வேண்டியிருக்கும்.
அத்தகைய கொடுமையைச் சேர நாட்டுக் குடிகள் கனவிலும் அறியார். பகையின்மையினால் அயலாருடைய கொடுமை அந்நாட்டினருக்கு இல்லை. மன்னன் ஈரம் உள்ளவனாதலின் அவனால் கொடுமை உண்டாக ஏது இல்லை. ஆகவே வெம்மையை உணராதவர்கள் சேர நாட்டு மக்கள். யாரும் அவர்களைத் தெறுவதில்லை. ஆயினும் இரண்டு வெம்மை அந்த நாட்டில் உண்டு. அந்த இரண்டு வெம்மையினாலும் குடிமக்களுக்கு நன்மையே உண்டாயின. சோற்றைச் சமைக்கும் நெருப்பு வெம்மை உடையது; தெறலை உடையது, சூரியனது கதிர்கள் வெம்மையை உடையன. இந்த இரண்டு வெம்மையும் உயிர்கள் வாழ இன்றியமையாதன. ஆதலின் உள்ளங் குளிர்ந்து ஏற்றுக் கொள்வதற்கு உரியன. அவை அந்த நாட்டில் இருக்கின்றன.
சேரமானுடைய நாட்டிலே பிறராலே தெறப்படும் செயல் இல்லை. சோற்றை உண்டாக்கும் தீயின் தெறலும், செஞ்ஞாயிற்றின் தெறலும் அல்லாமல் பிறிது தெறலைக் குடிமக்கள் அறியார். அவனுடைய குடை நிழலில் தண்மை பெற்றுக் குறைவிலா நிறைவுடன் அவர்கள் வாழ்கிறார்கள்..
அந்த நாட்டுக் குடிமக்களுக்கு வில் என்று ஓர் ஆயுதம் இருப்பதே தெரியாது. பகைவர்கள் யாரும் இல்லாமையால் போரும் இல்லை. போர் இருந்தால்தானே வில்லுக்கும் அம்புக்கும் வேலையுண்டு? பழைய வில்லும் அம்பும் எந்தக் கொட்டிலிலே தூங்குகின்றனவோ! அமைதியான இன்ப வாழ்வு வாழும் நாட்டில் வில்லுக்கு வேலை இல்லை அல்லவா? ஆனால் வேறு ஒரு வில்லை அவர்கள் அறிவார்கள். அதனைக் கண்டு களிப்பார்கள். அது எந்த வில் தெரியுமா? வண்ண அழகு காட்டிவானத்தில் தோன்றும் இந்திர வில்லாகிய திரு வில். மேகமூட்டம் போட்டிருக்கும்போது இனி மழை வரும் என்ற நம்பிக்கையை ஊட்டி, அழகு காட்டி இலகும் அந்த வானவில் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது அல்லவா? அந்தத் திருவில்லையன்றிக் கொலை வில்லைச் சேரமான் நாட்டுக் குடிமக்கள் அறிய மாட்டார்கள்.
வில் கிடக்கட்டும்; வாள், கேடயம் முதலிய வேறு படைகள் பல உண்டே; அவற்றில் ஏதேனும் அவர்களுக்குத் தெரியுமா? அவற்றையும் அவர்கள் அறிய மாட்டார்கள். பிறரைத் துன்புறுத்தவோ கொலை புரியவோ முயல்பவர்களுக்கல்லவா அவை வேண்டும்? இங்கே யாவரும் அன்பிலே இணைந்து வாழும்போது படைக்கலத்துக்கு வேலை ஏது? படையை நினைப்பதற்கே வாய்ப்பு இல்லை.
ஆனாலும் ஒரு படை அவர்களுக்குத் தெரியும். அதை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் வாழ்கிறார்கள். அதுதான் உழுபடையாகிய கலப்பை. அந்த உழுபடை தான் அவர்களுக்கு உணவைத் தருவது. நாஞ்சிலாகிய கலப்பைதான் அவர்கள் அறியும் படை; கைக்கொண்ட படை; போற்றிப் பாதுகாக்கும் படை. நாஞ்சில் அல்லது வேறு படையை அவர்கள் அறியார்.
***
அரசர்கள் பிறர் நாடுகளை வௌவி அவற்றால் வரும் பயன்களை நுகர்பவர்கள். அதனால் ‘பிறர் மண்ணை உண்ணுபவர்கள்’ என்று அவர்களைச் சொல்வார்கள். ‘பூபுக்’ என்று வடமொழியில் ஒருதொடர் மன்னர்களுக்கு வழங்கும். ‘மண்ணை உண்போர்’ என்பது அதன் பொருள். சேரமான் தன்னுடைய பேராற்றலால் பகைவரை ஒடுக்கினான். மிக்க திறமையை உடைய வீரர்கள் பலரோடு பகைவர்கள் வந்தாலும் அந்த வயவர்களை மாய்த்துப் பகைவரைத் தேய்த்து அவர்கள் நாட்டைத் தனதாக்கிக் கொள்ளும் பெருவீரம் படைத்தவன் அவன். பிறர் மண் உண்ணும் செம்மல் சேரமான். ஆனால் அவன் நாட்டை யாரும் கைப்பற்ற இயலாது. அவன் மண்ணை யாரும் உண்ண முடியாது. பகைவர் உண்ணுதற்கு அரிய பெருமையை உடைய மண் அது. ஆனால் அந்த மண்ணை உண்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பகை வேந்தர்கள் அல்ல; வீரர்கள் அல்ல; ஆடவர்களே அல்ல; பெண்கள். ஆம், சேரநாட்டில் வாழும் பெண்களே அந்த மண்ணை உண்பார்கள். எல்லாப் பெண்களும் அல்ல; கருவுற்ற பெண்கள் மயற்கை யுடையவர்களாய் மண்ணை உண்ணுவார்கள்; வேட்டு உண்ணுவார்கள். வயவுற்ற மகளிர் வேட்டு உண்பதல்லாமல் பகைவர் உண்ணாத மண் சேரநாட்டு மண்.
இவற்றையெல்லாம் புலவர் கவிதையுள்ளத்தோடு நினைத்துப் பார்த்தார். அவன் நாட்டில் வாழ்பவர்கள் அறியாதவற்றையும் அறிந்தவற்றையும் அடுக்கிப் பார்த்தார். அவர்கள் பிறரால் உண்டாகும் தெறலை அறியார்; ஆனால் சோறுண்டாக்கும் தீயின் தெறலும் செஞ் ஞாயிற்றுத் தெறலும் அவர்களுக்குத் தெரியும். கொலை வில்லை அறியார்; திருவில்லை அறிவார். பிறர் உண்ணா மண் அரசனது மண்; ஆனால் அதை வயவுறு மகளிர் உண்பார்கள். எத்தனை அமைதியான நாடு! இன்ப வளமுடைய நாடு!
***
இப்படிக் கவிதைக்கு ஏற்ற பொருள்களை அவர் உள்ளம் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டே வந்தது. மேலும் அவருடைய எண்ணம் விரிந்தது. அரசனுக்கு வாய்த்த பண்புகளையும் திறமையையும் கருவிகளையும் எண்ணி எண்ணி இன்புற்றார். பகைவர்கள் அணுகுதற்கு அரிய மதிலையுடையவன் சேரமான். அந்த அரண் கட்டுக் காவலை உடையது. பலபல வீரர்கள் அந்த அரணில் இருந்தார்கள். அங்கே உள்ள அம்பு வகைகளுக்குக் கணக்கில்லை. அவ்வளவு இருந்தும் அவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. அந்த அம்புகள் அங்கே வேலையற்றிருக்கின்றன; அம்பு துஞ்சும் கடி அரண் அவனுடைய கோட்டை.
சேரமான் நடத்தும் செங்கோலாட்சி நாடறிந்தது. புலவர் நாவறிந்தது. தரும தேவதை அவன் நாட்டில் தங்கி நாலுகாலாலும் நின்று நடைபோடுகிறது. அவனுடைய நாடு அறமம் வளரும் கோயில். அவ்வறம் யாதோர் இடையூறும் இன்றி இனிதே தங்கும்படி செங்கோல் செலுத்தும் பேராளன் சேரமான். அறம் துஞ்சும் செங்கோலை உடைய அவனுடைய நாட்டில் வாழும் குடிமக்களுக்குக் குறை ஏது? பசி இல்லை; பிணி இல்லை; பகையும் இல்லை.
ஒரு நாட்டில் வளம் குறைந்தால் அங்கே உள்ள குடிமக்கள் வேற்று நாட்டுக்குப் போய் விடுவார்கள். அதற்குமுன் அங்குள்ள பறவைகள் வேற்று நாட்டுக்குப் போய்விடும். புதிய புள் வந்தாலும் பழைய புள் போனாலும் ஒரு நாட்டுக்குத் தீமை உண்டாகும் என்று அக்காலத்தில் எண்ணினார்கள். அந்த இரண்டும் தீய நிமித்தங்கள். மற்ற நாடுகளில் இவை நிகழ்ந்தால், ‘இனி என்ன ஏதம் வருமோ?’ என்று அந்நாட்டில் உள்ளார் அஞ்சுவார்கள். ஆனால் சேரமானுடைய நாட்டிலுள்ளார் எவ்வகையிலும் நிரம்பினவர்கள் ஆதலின் இத்தகைய தீய நிமித்தங்களுக்கு அஞ்ச மாட்டார்கள். கரையிலுள்ள மரத்தைப் பற்றிக் கொண்டவனுக்கு ஆற்று நீர் எவ்வளவு வேகமாக ஓடினால்தான் என்ன? புதிய புள் வரினும் பழம் புள் போனாலும் அவற்றைக் கண்டு இந்த நாட்டார் அஞ்சுவதில்லை; நடுங்குவதில்லை. அவ்வளவு சிறந்த வளப்பம் நிறைந்திருந்தது அந்த நாட்டில். என்ன பஞ்சம் வந்தாலும் குடிமக்கள் துன்புறாமல் இருப்பதற்கு ஏற்ற பொருள்களைச் சேரமன்னன் சேமித்து வைத்திருந்தான். ஆகவே தீய சகுனம் கண்டு நடுங்க வேண்டியதில்லையே!
இவ்வாறு நாட்டு மக்களுக்கு வேண்டியவற்றை முன்கூட்டியே நினைந்து சேமித்து வைத்துப் பாதுகாக்கும் மன்னனைத் தாயென்று சொல்லலாமா? தெய்வமென்று சொல்லலாமா? இன்னும் உயர்வாகக்கூடச் சொல்லலாம். அவனைப் போன்ற மன்னனை உலகம் முன்பும் அறிந்தது இல்லை; பின்னும் அறியப் போவதில்லை. அவனிடத்தில் குடிமக்களுக்கு அன்பு மிகுதியாக இருந்ததென்று சொல்லவும் வேண்டுமா? ஒரு விதத்தில் அவன் அவர்களுக்குத் தாயைப் போல இருந்தான். மற்றொரு விதத்தில் குடிமக்கள் அவனுக்குத் தாயைப் போல இருந்தார்கள்.
தாய் தன் குழந்தையிடத்தில் காட்டும் அன்பு மிகமிக உயர்ந்தது. அதன் நலத்துக்கு வேண்டிய பொருள்களைத் தேடிக் கொணர்ந்து வழங்குவாள். எவ்வளவு பாதுகாத்து வந்தாலும் தன் அருமைக் குழந்தைக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்று அஞ்சிக் கொண்டே இருப்பாள். அந்தக் குழந்தையை அலங்காரம் செய்து அழகு காண்பாள்; அடுத்த கணத்திலே, “ஐயோ! என் கண்ணே பட்டுவிடப் போகிறதே!” என்று விரலை மடக்கித் தரையில் நெரித்துத் திருஷ்டி கழிப்பாள். வீதியில் போனால் வண்டி ஏறிவிடுமோ என்று அஞ்சுவாள். அன்பு அதிகமாக அதிகமாகத் தன் குழந்தை சௌக்கியமாக வளர வேண்டுமே என்று கணந்தோறும் அஞ்சிக் கொண்டே இருப்பாள். இங்கே குடிமக்கள் தாய் நிலையில் இருந்தார்கள். கிடைப்பதற்கரிய மன்னன் தமக்குக் கிடைத்திருக்கிறான் என்ற மகிழ்ச்சி மீதூர்ந்தாலும், அவனுக்கு எந்த விதமான இடையூறும் நேராமல் இருக்க வேண்டுமே என்ற கவலை யோடிருந்தார்கள். அவன் மிக மிகச் சிறப்புடையவனாக இருந்ததலினால் மன்னுயிர் யாவும் இவ்வாறு அஞ்சின.
இதையும் நினைத்துப் பார்த்தார் புலவர். தாம் கண்டது, கேட்டது, நினைத்தது எல்லாவற்றையும் பிணைத்துக் கவிதையாக விழைந்தார். அவனையே முன்னிலைப் படுத்திச் சொல்லும் முறையில் பாவைத் தொடுத்தார். கடலின் ஆழத்தையும், ஞாலத்தின் அகலத்தையும், திசையின் நீளத்தையும், ஆகாயத்தின் பரப்பையும் அளந்தறிந்தாலும் அளந்தறிய முடியாத அவனுடைய அறிவையும் ஈரத்தையும் கண்ணோட்டத்தையும் பாராட்டினார். அவன் நாட்டில் வாழ்வோர் தீயின் தெறலையும் செஞ்ஞாயிற்றின் தெறலையும் அன்றிப் பிரிது தெறலையறியாத நிலையையும், திருவில் அல்லது கொலை வில்லையும் நாஞ்சில் அல்லது பிற படையையும் அறியாத தன்மையும் சிறப்பித்தார். பகைவர் மண்ணை அவன் உண்டாலும் மயற்கையுற்ற மகளிர் உண்பதை யன்றிப் பகைவர் உண்ணாத மண்ணைப் புகழ்ந்தார். அம்பு துஞ்சும் கடியரணையும், அறம் துஞ்சும் செங்கோலையும், குடிமக்கள் தீய நிமித்தம் கண்டாலும் நடுங்காமல் உள்ள பாதுகாப்பையும் எடுத்துரைத்தார். ‘நீ இப்படி இருத்தலினால்தான் மன்னுயிரெல்லாம் நினக்கு எந்தச் சமயத்தில் என்ன நேரமோ என்று அஞ்சுகின்றன’ என்று பாடலை நிறைவேற்றினார்.
கவிதை முழு உருவம் பெற்றது. அவருக்கே அதைப் பாடியமையால் பெருமிதம் உண்டாயிற்று. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை நாடிச் சென்றார். தம் கவியைப் பாடினார். அவையில் இருந்த புலவர்கள் யாவரும் ஒவ்வோரடியையும் கேட்டு இன்பத்தில் ஆழ்ந்தனர். ஒவ்வொரு சொல்லையும் சுவைத்தனர்.
புலவர் பரிசு பெற்றார் என்று சொல்லவும் வேண்டுமா? அவர் பாடிய பாடல் வருமாறு:
இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும், என்றாங்கு
அவைஅளந்து அறியினும் அளத்தற்கு அரியை
அறிவும் ஈரமும் பெருங்கண் ணோட்டமும்;
சோறுபடுக்கும் தீயொடு
செஞ்ஞாயிற்றுத் தெறல்அல்லது
பிறிதுதெறல் அறியார்நின் நிழல்வாழ் வோரே;
திருவில் அல்லது கொலைவில் அறியார்;
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறன்அறி வயவரொடு தெவ்வர் தேயஅப்
பிறர்மண் உண்ணும் செம்மல், நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டுஉணின் அல்லது
பகைவர் உண்ணா அருமண் ணினையே;
அம்புதுஞ்சும் கடிஅரணால்
அறம்துஞ்சும் செங்கோலையே;
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை;
அனையை ஆகல் மாறே,
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே.
விளக்கம்: பெரிய கடலினது ஆழமும், அகன்ற நிலத்தினது அகலமும், காற்று வீசுகின்ற திசைகளும், உருவமின்றி நிலைபெற்ற ஆகாயமும் என்று சொல்லப் பெறும் அவற்றை அளந்து அறிந்தாலும், அறிவும் அன்பும் பெரிய கண்ணோட்டமும் அளப்பதற்கு அரியை நீ; சோற்றை உண்டாக்கும் தீயின் வெம்மையும் சிவந்த கதிரவனுடைய வெம்மையும் அல்லாமல் வேறு வெம்மையை நின் குடைநிழலில் வாழும் குடிமக்கள் அறியார்; அழகிய வானவில்லையன்றி வேறு கொலைத் தொழிற்குரிய வில்லை அறியார்; கலப்பையையன்றி வேறு ஆயுதத்தை அறியார்; போரிடும் வகைகளை யெல்லாம் அறிந்த வீரர்களோடு பகைவர் அழியப் பிறருடைய நிலத்தை உண்ணும் பெருமையை உடையவனே, நின் நாட்டில் உள்ள கருவுற்ற மயற்கையுள்ள மகளிர் விரும்பி உண்ணுவதையன்றிப் பகைவர் உண்ண மாட்டாத அரிய மண்ணை உடையாய்; அம்புகள் செயலொழிந்து தங்கும் காவலையுடைய அரணையும், அறம் கவலையின்றித் தங்குதற்குக் காரணமான செங்கோலையும் உடையாய்; புதிய பறவைகள் வந்தாலும் பழைய பறவைகள் போனாலும் நடுங்குவதையறியாத இன்பமான பாதுகாப்பைச் செய்பவன் நீ; அத்தகைய பெருமைகளை உடையவனாக இருக்கும் காரணத்தால் நின்னாட்டிலுள்ள உயிர்க் கூட்டமெல்லாம் நினக்கு ஏதேனும் இடையூறு வருமோ என்று நின்பொருட்டு அஞ்சும்.
அருஞ்சொற்பொருள்: இருமுந்நீர்- கரிய கடல் என்றும் சொல்லலாம். குட்டம்- ஆழம். வியல்- அகலம். ஞாலம்- நிலம். வளி- காற்று. வறிது- உருவமின்றிச் சும்மா. நிலைஇய- நிலைபெற்ற. காயம்- ஆகாயம்; முதல் எழுத்துக் குறைந்து நின்றது; முதற் குறை. என்ற ஆங்கு அவை- என்று சொல்லப் பெறும் அவற்றை. ஈரம்- ன்பு. கண்ணோட்டம்- குறையை எண்ணாது காட்டும் அன்பு. படுக்கும்- உண்டாக்கும். தெறல் சுடுதல்; வெம்மை. பிறிது- வேறு. நின்நிழல்- நினது குடைநிழலில். திரு வில்- அழகிய இந்திர வில். நாஞ்சில்- கலப்பை. படை- போர்க்கருவி. திறன்- போர் செய்யும் வகை. வயவர்- மிக்க வீரர். தெவ்வர்- பகைவர். தேய- அழகிய. மண் உண்ணும்- நாட்டைக் கைக் கொண்டு பயன் படுத்தும். செம்மல்- பெருமையை உடையவன். வயவுறு மகளிர்- ருவுற்ற பெண்கள். வயா- நோய். வேட்டு- விரும்பி. துஞ்சும்- வேலையின்றிக் கிடக்கும். கடி- காவலையுடைய. அரணால்- கோட்டையோடு; ஆல் என்ற உருபு ஓடு என்ற பொருளில் வந்தது. அறம் துஞ்சும் – தருமம் கவலையின்றித் தங்கியிருக்கும். புள்- பறவை. விதுப் புறவு- நடுங்குதல். ஏமம்- இன்பம். காப்பினை- காவலைச் செய்வாய். அனையை- அத்தகைய இயல்புடையாய். மாறே- காரணத்தால். அஞ்சும்மே- அஞ்சுமே என்றது செய்யுள் நோக்கி விரிந்தது.
இது வாகைத் திணையில் ‘அரசவாகை’ என்னும் துறையில் அமைந்த பாட்டு. அரசன் தன் இயல்பிலே சிறந்து நிற்பதைப் பாடுவதனால் இத்துறை ஆயிற்று.
இது புறநானூற்றில் உள்ள 20-ஆவது பாட்டு.
(தொடர்கிறது)
$$$
One thought on “அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 4”