அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 3

-கி.வா.ஜகந்நாதன்

வெற்றி பெற்றுப் பகைவருடைய புறம் பெற்ற வேந்தனை எல்லோரும் பாராட்டினார்கள். கலைஞர்கள் பழுத்த மரத்தை நாடும் பறவைகளைப் போல வந்தார்கள். புலவர்கள் அழகான பாடல்களைப் பாடித் தந்தார்கள். அந்தப் பாடல்களைத் தன்னுடைய இனிய குரலால் பாடினாள் ஒரு விறலி. பகைவருடைய புறம் பெற்ற வலிமையையுடைய சேர வேந்தனது வீரத்தை இன்னிசையோடு விறலி பாடினாள். அப்படி மறம் பாடிய பாடினி, பாட்டு மகள், ஒரு பரிசு பெற்றாள். பெண்களுக்கு எதைக் கொடுத்தால் உள்ளம் மகிழும் என்பதை நன்கு அறிந்தவர்கள் மன்னர்கள். விறலியர் பாடினால் அவார்களுக்குச் சிறந்த பொன்னணிகளை வழங்குவது அக்கால வழக்கம். இந்த விறலியும் பொன்னிழையைப் பெற்றாள்.

3. பெற்ற பரிசில்

பழந்தமிழ் நாட்டில் ஆட்சி புரிந்த மன்னர்களில் தலைமை பெற்றவர்கள் சேர சோழ பாண்டியர்களாகிய மூவர். அந்த மூவரும் வேறு எந்த மன்னர்களுக்கும் இல்லாத சிறப்பை உடையவர்கள். முடியை அணியும் உரிமை அவர்களுக்குத்தான் உண்டு. மற்ற மன்னர்கள் முடி அணிவதில்லை. அதனால் சேர சோழ பாண்டியர்களை முடியுடை மூவேந்தர் என்று சொல்வார்கள்.

அவர்கள் வீரத்தாலும்ம் ஈகையாலும் புகழ் பெற்றவர்கள். புலவர்களைப் போற்றி, அவர்களுக்கு வேண்டிய பரிசில்களை வழங்கி, அவர்கள் பாராட்டிப் பாடும் பாடல்களைப் பெற்றவர்கள். புலவர் பாடும் புகழ் இல்லாதவர்கள் மக்களால் இகழப் பெற்றனர். சில மன்னர்கள் தாமே புலமை மிக்கவர்களாகவும் இருந்தனர். பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற சேரனும், பாண்டியன் நெடுஞ்செழியனும், கிள்ளிவளவனும் போன்ற முடியுடை வேந்தர்கள் புலவர்களாகவும் விளங்கினர். அவர்கள் பாடிய பாடல்கள் பழந்தமிழ்த் தொகை நூல்களில் இருக்கின்றன.

சேரமான் பாலை பாடிய பெருங் கடுங்கோ என்னும் அரசன் பாலைத்திணையைப் பாடுவதில் வ‌ல்ல‌வ‌ன். அத‌னால்தான் ‘பாலை பாடிய‌’ என்ற‌ அடை அவ‌ன் பெய‌ரோடு அமைந்த‌து. அவ‌னைப் ப‌ல‌ புல‌வ‌ர்க‌ள் பாராட்டிப் பாடியிருக்கிறார்க‌ள். பேய்ம‌க‌ள் இளஎயினி என்ற‌ பெண் புல‌வ‌ர் பாடிய‌ பாட்டு ஒன்றில் அவ‌னுடைய‌ வீர‌மும் ஈகையும் ஒருங்கே புல‌ப்ப‌டுகின்ற‌ன‌.

எயினி என்ப‌து வேட்டுவ‌க் குல‌ப் பெண்ணின் பெய‌ர். இளஎயினி என்ப‌து எயினி என்பவ‌ளுடைய‌ த‌ங்கை என்ப‌தைக் குறிக்கும். எயினியை யாவ‌ரும் அறிவாராத‌லின் அவ‌ளுக்குத் த‌ங்கை என்று சுட்டிக் கூறின‌ர். எயினிக்கும் இளவெயினிக்கும் தாய், பேய் என்னும் பெய‌ரையுடைய‌ பெருமாட்டி. இன்னாருடைய‌ ம‌க‌னார் என்று ஆண் புல‌வ‌ரைக் கூறுவ‌து வ‌ழ‌க்கு; ம‌துரைக் க‌ண‌க்காய‌னார் ம‌க‌னார் ந‌க்கீர‌னார் என்று ந‌க்கீரரைக் குறிப்பார்க‌ள். அப்படியே பெண் புல‌வ‌ரைக் குறிப்பிடும்போது இன்னாருடைய‌ ம‌க‌ளார் என்று அவ‌ருடைய‌ தாயின் பெய‌ரையும் சார்த்திச் சொல்வ‌து வ‌ழ‌க்கம் போலும். சேரமான் பாலை பாடிய பெருங் கடுங்கோவைப் பாடின‌ பெண் புல‌வ‌ர் பேய் என்ப‌வ‌ளுக்கு ம‌க‌ளார்; எயினி என்பவ‌ளுக்குத் த‌ங்கையார்.

பேய் என்றும் பூத‌ம் என்றும் வ‌ரும் பெய‌ர்க‌ளை ஆணும் பெண்ணும் வைத்துக்கொள்வ‌து ப‌ழங்கால‌ வ‌ழ‌க்க‌மென்று தெரிகிற‌து. பேய‌னார், பூதனார் என்ற பெய‌ர்க‌ளைப் ப‌ழைய‌ நூல்களிலே காண‌லாம். பேயாழ்வார் பூத‌த்தாழ்வார் என‌ முத‌லாழ்வார்க‌ளில் இருவ‌ர் அப்பெய‌ர்க‌ளை உடைய‌வ‌ர்க‌ள். ஆத‌லின், பேய்ம‌க‌ள் என்ப‌து பேயென்னும் பெய‌ரையுடைய‌ த‌ந்தைக்கு ம‌க‌ள் என்றுகூட‌க் கொள்ள‌லாம். பேய்ம‌க‌ள் என்ப‌த‌ற்குத் தேவ‌ராட்டி அல்ல‌து பூசாரிச்சி என்று ஸ்ரீம‌த் ம‌காம‌கோபாத்தியாய‌ டாக்ட‌ர் ஐய‌ர‌வ‌ர்க‌ள் பொருள் எழுதியிருக்கிறார்க‌ள்.* 1 பேயாக‌ இருந்த‌ ஒருத்தி பெண்ணாக‌ வ‌டிவு கொண்டு பாடினாள் என்றும் சில‌ர் முன் கால‌த்தில் எண்ணியிருந்தார்க‌ள்.

இனி, பேய்ம‌க‌ள் இள‌எயினியின் பாட்டைப் பார்ப்போம்.

***

சேர‌மானுடைய‌ த‌லைந‌க‌ர‌ம் வ‌ஞ்சி. அத‌ன் புக‌ழ் விண்ண‌ள‌வும் ஓங்கியிருப்ப‌தாம். அந்த‌ ந‌க‌ரத்தில் நிக‌ழும் காட்சி ஒன்றை ந‌ம‌க்குக் காட்டுகிறார் புல‌வ‌ர்.

வஞ்சிமா நகரத்துச் சிறுபெண்கள் துள்ளிக் குதித்து விளையாடுகிறார்கள். மணலிலே சிறு வீடு கட்டி விளையாடுகிறார்கள். வஞ்சிமா நகருக்கு அணி செய்கின்ற பொருநை நதிக் கரையில் உள்ள மணற் பரப்பிலே சிறுசிறு பாவை போல வகுத்து அதைத் தம் குழந்தையென்று பாராட்டிச் சீராட்டுகிறார்கள். அந்தப் பேதைப் பருவப் பெண்கள் எத்தனை அழகாக இருக்கிறார்கள்! இயற்கையெழிலும் செயற்கையெழிலும் அவர்களிடம் நிரம்பியிருக்கின்றன.

மணலிலே வீடு கட்டுகிறார்கள். அதன் நடுவே பாவைபோல அமைக்கிறார்கள். அதற்கு அலங்காரம் செய்ய வேண்டாமா? ஆற்றங்கரையில் மலர் மரங்கள் பல வளர்ந்திருக்கின்றன.அந்த மரத்தின் கொம்புகளை வளைத்துப் பூவைப் பறிக்கிறார்கள். கையை நீட்டி மலரைக் கொய்யும்போது அந்த முன்னங்கையின் அழகு நன்றாகத் தெரிகிறது. அந்தப் பெண்களின் உடல் வளப்பத்தையும் தேக வளர்ச்சியும் அது காட்டுகிறது. மிக மெல்லிதாகிய உரோமம் நெருங்கிப் பார்த்தால் தெரியும்படி உள்ள கை;  திரண்ட முன்கை. அவர்கள் தம் உடம்பில் தூய பொன்னால் ஆகிய இழைகளை அணிந்திருக்கிறார்கள். எவ்விடத்தும் சென்று ஓடியாடி விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்கள் அவர்கள்; வால் இழை மடமங்கையர். அரிமயிர்த் திரள் முன்கையை நீட்டி அவர்கள் பூவைக் கொய்கிறார்கள். வரிவரியாகக் கீறிக் கோலஞ் செய்த மணலிலே அமைத்த பாவைக்காக வளைந்த கொம்புகளிலிருந்து பூவைக் கொய்து சூட்டுகிறார்கள். சிறிது நேரம் இப்படி விளையாடிய பிறகு தண்ணிய நீர் சலசலவென்று ஓடும் பொருநை நதியிலே பாய்ந்து ஆடுகிறார்கள்.

மணலிலே ஓடியாடியும் சிற்றில் இழைத்தும் பாவை வனைந்தும் அதற்குப் பூச்சூட்டியும் விளையாடிய விளையாட்டினால் பெற்ற இளைப்பானது தண்ணிய பொருநை நதியிலே ஆடுவதனால் போய்விடுகிறது.

பெண் புலவர் ஆதலின் வஞ்சிமா நகரில் உள்ள பிறருடைய செயலை நினைக்காமல் பெண்களுடைய விளையாட்டையே நினைத்தார். ஆற்றால் அழகு பெற்ற நகர், அழகு மலிந்த பெண்களால் எழில் பெற்ற நகர், உடல் வளமும் செல்வ வளமும் பெற்ற இளம் பெண்கள் கவலை ஏதும் இன்றி விளையாடி மகிழும் நகர் என்றெல்லாம் விரிவாக நினைக்கும்படி இந்தக் காட்சியைக் காட்டினார்.

இவ்வாறு மடங்கையர் பொருநைப் புனலிலே பாயும் வஞ்சிமா நகரம் விண்ணைமோதும் புகழை உடையது; வெற்றியை உடையது; விண்பொரு புகழ் விறல் வஞ்சி.

அரிமயிர்த் திரள்முன்கை
வால்இழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனல்பாயும்
விண்பொருபுகழ் விறல்வாஞ்சி.


இந்த அழகான விறல் வஞ்சிக்கு அரசன் பெருங்கடுங்கோ. அவனைப் புலவர் பலர் புகழ்ந்து பாடியிருக்கிறார்கள். வெற்றி மேம்பாடுடையவனாதலால் புலவர்கள் அவனைப் பலபடியாகப் பாடியிருக்கிறார்கள். பாடல் சான்ற விறலையுடைய அவ்வேந்தன் போர் செய்து பகைவரைப் புறங்கண்ட பெருமையைப் புலவர் சொல்கிறார்.

***

அணிமையில்தான் சேரமான் ஒரு பெரிய போரில் வெற்றி பெற்று வந்திருக்கிறான். அதை அறிந்தே பேய்மகள் இளஎயினியார் அவனைப் பாராட்டிப் பாட வந்தார். காட்டரண், நாட்டரண், மலையரண் என்று சொல்லும் அரண்களால் தம்முடைய நகரங்களைப் பகைவர் அணுகுவதற்கு அரியனவாக அமைத்திருந்தார்கள் பகைவர்கள். நாட்டுக் குடிகளுக்குப் பாதுகாப்பாக இருந்த அவை பகைவர்களுக்குத் துன்பத்தைத் தருவனவாக இருந்தன. பகைவர்கள் கண்டாலே அஞ்சி நடுங்கும் பொறிகளை அந்த அரண்களில் வைத்திருந்தார்கள். அவை கொடிய அரண்கள்; வெம்மையான அரண்கள்; வெப்புடைய அரண்கள்.

மற்ற மன்னர்கள் எல்லாம் கண்டு அஞ்சிய அந்த அரண்களையும் அவற்றினுள்ளே வாழ்ந்த பகைவர்களையும் சேரமான் கண்டு அஞ்சவில்லை. தன்னுடைய விறலைப் புலப்படுத்த அவ்வரண்கள் கருவியாக உதவும் என்ற ஊக்கத்தையே கொண்டான். ஒரு சிங்கவேறு யானைக் கூட்டத்தைக் கண்டால் எழுச்சி பெற்று அதனை அழித்துவிடுவது போலச் சேரமான் அந்த அரண்களை அழித்தான். பகைவர் பலர் புறங்காட்டி ஓடினார்கள். சேரமான் வெற்றி பெற்றான். மிக்க வலிமையையுடைய பகைவர்கள் தோல்வியுற்றார்கள்.

இந்தப் போரிலே உண்டான வெற்றியினால் பலர் பல பொருளைப் பெற்றனர். முக்கியமாக மூன்றுபேர் என்ன என்ன பெற்றார்கள் என்பதை இளவெயினியார் சொல்கிறார்.

***

சேரமான் பகைவர்களிடமிருந்து பல பொருளைப் பெற்றான். ஆனால் அவற்றைத் தனக்கென்று வைத்துக் கொள்ளவில்லை. தான் பெற்ற நாடுகளைத் தன் சேனைத் தலைவர்களுக்கும், துணைவந்த மன்னர்களுக்கும் பகிர்ந்து அளித்துவிட்டான். நாட்டின்மேல் ஆசையை மண் ஆசை என்று சொல்வார்கள். மண்ணாசை சேரமானுக்கு இல்லை. பொல்லாத மன்னர்களின் கொடுங்கோன்மையை மாற்ற வேண்டுமென்பதே அவன் ஆசை. ஆதலின் பகைவர் தோற்று ஓடியதனால் வந்த பொருளை அவன் தனக்கென்று வைத்துக் கொள்ளவில்லை.

பகைவர் விட்டு ஓடிய பொருள்களைப் பலருக்கும் வாரி வழங்கினான். ஆனால் பகைவர்பால் அவன் பெற்ற பொருள் ஒன்று உண்டு. அவர்களுடைய முதுகைப் பெற்றான். அவர்கள் தங்கள் முதுகைக் காட்டியதால் உலகத்துக் கெல்லாம் சேரமானுடைய விறலைக் காட்டினவர்களானார்கள். துப்பை (வலியை) உடைய எதிரிகள் புறத்தை மன்னன் பெற்றான். அவன் வேண்டியது அது ஒன்றுதான். வேறு யாதும் அன்று.

வெற்றி பெற்றுப் பகைவருடைய புறம் பெற்ற வேந்தனை எல்லோரும் பாராட்டினார்கள். கலைஞர்கள் பழுத்த மரத்தை நாடும் பறவைகளைப் போல வந்தார்கள். புலவர்கள் அழகான பாடல்களைப் பாடித் தந்தார்கள். அந்தப் பாடல்களைத் தன்னுடைய இனிய குரலால் பாடினாள் ஒரு விறலி. பகைவருடைய புறம் பெற்ற வலிமையையுடைய சேர வேந்தனது வீரத்தை இன்னிசையோடு விறலி பாடினாள். அப்படி மறம் பாடிய பாடினி, பாட்டு மகள், ஒரு பரிசு பெற்றாள். பெண்களுக்கு எதைக் கொடுத்தால் உள்ளம் மகிழும் என்பதை நன்கு அறிந்தவர்கள் மன்னர்கள். விறலியர் பாடினால் அவார்களுக்குச் சிறந்த பொன்னணிகளை வழங்குவது அக்கால வழக்கம். இந்த விறலியும் பொன்னிழையைப் பெற்றாள்.

எத்தகைய இழை தெரியுமா? இப்போதெல்லாம் இத்தனை பவுன் என்று நகையின் அளவைக் குறிப்பிடுகிறார்கள். முன்பெல்லாம் அதன் எடையைச் சுட்டிச் சொல்வார்கள். நிறுத்தலளவையிலே கழஞ்சு என்பது ஒன்று. இத்தனை கழஞ்சுப் பொன் என்று சொல்வார்கள். வயவேந்தனுடைய மறம் பாடிய பாடினி பெற்ற சிறப்பான இழை எத்தனை கழஞ்சு இருந்தது? புலவர் கணக்கிட்டுச் சொல்லவில்லை. ஒரு நகையைச் செய்தால் சின்னதாகவும் செய்யலாம்; பெரியதாகவும் செய்யலாம். அந்த இரண்டு வகைக்கும் எல்லையுண்டு.  ‘சங்கிலி ஒற்றைவடம் இரண்டு பவுனால் செய்யலாம்; நாலுவடம் பன்னிரண்டு பவுனால் செய்யலாம்’ என்று நகையின் குறைவான அளவையும் அதிகமான அளவையும் குறித்துப் பேசுவது இக்காலத்தும் உண்டு. தலையளவு ஒன்று உண்டல்லவா? இத்தனை கழஞ்சுக்கு மேல் போனால் இந்த நகை அழகாயிராது என்று சொல்லும் வரையறையே அந்தத் தலையளவு. இங்கே விறலிக்குக் கிடைத்த நகை எத்தனை கனமாகச் செய்யலாமோ, அத்தனை கனமாகச் செய்தது; தலையளவை உடையது; அதிகப்படியான கழஞ்சுப் பொன்னால் அமைந்தது. விழுப்பமான கழஞ்சினால் செய்த இழை, கனமான – சீருடைய இழை (சீர் – கனம்), அழகான பொன்னால் செய்த இழை அது. அதை விறலி பெற்றாள்.

விறலி யென்பவள் ஆடலாலும் பாடலாலும் பிறரை உவப்பிக்கும் கலைத் திறமை உடையவள்; பாண்சாதியிலே பிறந்தவள்; பாணனுடைய மனைவி. அவள் ஆடும்போதும் பாடும் போதும் பக்க வாத்தியம் வாசிப்பான் பாணன். தன் யாழை மீட்டி அவள் பாடும் பாட்டைத் தொடர்ந்து வாசிப்பான். பாடினி பாடும்போது அவள் குரலுக்கு ஏற்றபடி சுருதி வைத்து அவள் பாட்டோடு இழையும்படி பாடுவான். ஏழு சுரங்களுக்கும் தமிழில் தனித்தனிப் பேர் உண்டு. முதல் சுரமாகிய ஸட்ஜத்துக்குக் குரல் என்று பெயர். இயற்கையான குரல் எதுவோ அதுவே முதல் சுரமாதலின் அதற்கு ‘குரல்’ என்று பேர் வந்தது. பாணன் அவளுடைய குரல் எதுவோ அதற்கு ஏற்றபடி சுருதியைப் பொருத்திக் கூட்டிப் பாடுவான். குரலோடு புணர்ந்த சீரையுடைய கொளையில் (பாட்டில்) வல்ல பாண் மகன் அவன். அவனும் ஒரு பரிசு பெற்றான். அக்கால வழக்கப்படி அவன் பொன்னாலாகிய தாமரைப் பூவைப் பெற்றான். விளக்கமான தீயிலே உருக்கி ஆக்கப்பட்ட பொற்றாமரை அது; வெள்ளி நாரால் தொடுத்து அணிவது; ஒள்ளிய அழகிலே புரிந்த தாமரையின், வெள்ளிநாரால் கட்டப்பெறும் பூவை, இழைபெற்ற பாடினிக்குக் குரல் புணர்சீர்க் கொளையில் வல்ல பாண் மகன் பெற்றான்.

ஆக, சேரமான் பகைவர் புறம்பெற்றான்; புறம்பெற்ற மறத்தைப் பாடிய பாடினியோ இழைபெற்றாள். அந்தப் பாடினிக்குக் குரல் புணர்சீர்க் கொளையை வாசித்த பாண்மகன் பொற்றாமரையைப் பெற்றான்.

இப்படி அவரவர் பெற்றதைச் சொன்ன புலவரின் கருத்து யாது?

‘அவர்களெல்லாம் உன்னைப் பாடியும் பாட்டுக்கு யாழ் வாசித்தும் பரிசு பெற்றார்கள்’ என்று சொன்னது,  ‘நான் ஒன்றும் பெறவில்லை’ என்ற குறிப்பைப் புலப்படுத்துகிறது.  ‘எனக்கும் ஏதாவது பரிசில் தரவேண்டுமே! ஒன்றும் இல்லையா?’ என்று சொல்லாமற் சொன்னார் இளஎயினியார்.

அமிமயிர்த் திரள்முன்கை
வால்இழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனற்பாயும்
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல் வேந்தனும்மே
வெப்புடைய அரண்கடந்து
துப்புஉறுவர் புறம்பெற்றிசினே;
புறம்பெற்ற வயவேந்தன்
மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழுக்கழஞ்சில்
சீருடைய இழைபெற்றிசினே;
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே
என ஆங்கு
ஒள்அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே.


விளக்கம்: மென்மையான மயிரையுடைய திரண்ட முன் கையையும் தூய அணிகளையும் அணிந்த மடப்பத்தையுடைய பேதைப் பருவப் பெண்கள், கோடு கிழித்த மணலிலே புனைந்த பாவைக்கு வளைந்த கொம்பிலே உள்ள பூவைக் கொய்து தண்ணிய பொருநையாற்றுப் புனலிலே குதிக்கும், வானை முட்டும் புகழையும் வெற்றியையும் உடைய வஞ்சிமாநகரில் உள்ளவனாகிய, புலவர் பாடும் புகழ்ப் பாடல்கள் பல அமைந்த வெற்றி வேந்தனாகிய சேரமான், பகைவருக்கு வெம்மையையுடைய அரண்களை வென்று வலிமையையுடைய எதிரிகளின் புறத்தைப் பெற்றான்; அவ்வாறு புறத்தைப் பெற்ற வலிமையையுடைய வேந்தனுடைய வீரத்தைப் பாடின விறலியும் அழகையுடைய உயர்ந்த அளவுக் கழஞ்சுப் பொன்னாற் செய்த கனமான ஆபரணங்களைப் பெற்றாள்; அவ்வாறு ஆபரணத்தைப் பெற்ற விறலிக்குக் குரலோடு புணர்ந்த, தாள அளவையுடைய, பாட்டிலே வல்ல பாணனும் விளக்கமான தீயிலே செய்ததும் வெள்ளி நாரால் தொடுக்கப் பெறுவதுமாகிய பொற்றாமரைப் பூவைப் பெற்றான். (யான் ஏதும் பெறவில்லை).

அருஞ்சொற்பொருள்: அரி – மென்மை. இழை – நகை. மடம்- பேதைமை. மங் கையர் என்பது பருவத்தைக் குறியாமல் பொதுவாகப் பெண்களைச் சுட்டியது. வரி- கோலம் செய்யும்; கோடு கிழிக்கும். குலவு- வளைவையுடைய. சினை – கொம்பு. பொருநை- வஞ்சி நகரத்தில் ஓடும் ஆறு; பூர்ணா நதி என்பர். பொரு- மோதும். விறல்- வெற்றி. சான்ற – நிரம்பிய. வெப்பு- வெம்மை; கொடுமை. கடந்து-வென்று. துப்பு-வலிமை. உறுவர்- எதிர்வந்து போர் செய்தவர்; பகைவர். புறம்- முதுகை. பெற்றிசின்- பெற்றான், பெற்றாள். வய- வலிமை. மறம்- வீரத்தை. பாடினி- பாடுகிறவள்; விறலி. ஏர்- அழகு. விழக்கழஞ்சு- உயர்ந்த கழஞ்சுகள்; தலையளவாகிய கழஞ்சுகள். சீர்- கனம்; சிறப்புமாம். இழை- ஆபரணம். குரல் – முதல் சுரம். சீர்- தாள அளவு. சுருதி, லயம் என்னும் இரண்டையும் இசைக்குத் தாயாகவும் தந்தையாகவும் சொல்வார்கள். அந்த இரண்டும் நன்றாக அமைந்ததைப் புலவர் இங்கே குறிப்பிடுகிறார். குரல் புணர்தல் சுருதியின் அமைதியைக் காட்டுகிறது. சீர் என்பது தாளத்தைக் காட்டுகிறது. எனவே சுருதியும் லயமும் அமைந்த பாட்டு அது என்று தெரிகிறது. கொளை- பாட்டு. பாண் மகன்- பாணன்; பழங்காலத்தில் யாழை வாசிக்கும் தொழிலையுடைய சாதியிற் பிறந்தோன். என ஆங்கு: அசை நிலைகள். அழல்- நெருப்பு. புரிந்த- செய்யப் பெற்ற. அழல்புரிந்த என்றதனாலும் வெள்ளி நார் என்றதனாலும் இங்கே சொன்ன தாமரைப் பூவானது பொன்னாலாகியது என்று கொள்ள வேண்டும். பாணர்களுக்குப் பொற் பூத் தருவது பழங்கால வழக்கம்.

இந்தப் பாட்டுப் பாடாண் திணையைச் சார்ந்தது. ஒருவருடைய புகழைப் பாராட்டிக் கூறும் பலவகைத் துறைகள் அடங்கியது அத்திணை. இது அந்தத் திணையில்  ‘பரிசில் கடாநிலை’ என்னும் துறையைச் சார்ந்தது. பரிசில் வேண்டுமென்று கேட்கும் நிலை என்பது அத்துறைக்குப் பொருள்.  ‘பாடினி இழையும், பாணன் பொற் பூவும் பெற்றான். நான் ஒன்றும் பெறவில்லை’ என்பதைக் குறிப்பித்து, மறைமுகமாகத் தமக்குப் பரிசு வேண்டுமென்பதைப் புலப் படுத்தியமையின் இது பரிசில் கடாநிலை ஆயிற்று.

இந்தப் பாடலைக் கேட்ட சேரமான் இள வெயினியாருக்குப் பரிசில் பல தந்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

(தொடர்கிறது)

அடிக்குறிப்பு விளக்கம்:

*1  'பேய்ம‌க‌ள் - ‍தேவ‌ராட்டி; பூசாரிச்சி; பேயின‌து ஆவேச‌ம் உற்ற‌வ‌ள். இந்த‌ வ‌கையார் இக்கால‌த்தும் அங்க‌ங்கே உள்ளார்;  
புற‌நானூறு, பாடினோர் வ‌ர‌லாறு. புற‌நானூறு, 11, உரை.

$$$

One thought on “அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 3

Leave a comment