-கி.வா.ஜகந்நாதன்
அந்த நெடியோன் பாண்டிய குலத்தில் வந்த பெரிய மன்னர்களில் ஒருவன். ஒருகுலத்தில் பல மன்னர்கள் பிறந்திருந்தாலும், யாரேனும் சிலருடைய பெயராலே அந்தக் குலத்தைக் குறிப்பது வழக்கம். அந்தப் பெயரை உடையவர்கள் மிக்க சிறப்பைப் பெற்றவர்கள் என்பதை அவர்கள் குலம் என்று சுட்டிச் சொல்லும் வழக்கத்தினால் உணரலாம். சூரிய வம்சத்தில் பலர் உதித்தாலும் ரகு என்ற மன்னன் சிறந்தவனாக இருந்தான். அதனால் ரகுகுலம் என்ற பெயர் இராமன் பிறந்த குலத்துக்கு ஏற்பட்டது.

2. அறப்போர் -ஆ
இத்தகைய அறப்போரைச் செய்த தமிழ் நாட்டு மன்னர்களில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஒருவன். அவன் முடியுடை மூவேந்தர்களில் ஒருவராகிய பாண்டியர் குலத்தில் வந்தவன். பல யாகங்களைச் செய்வித்தவன். அவனுடைய தலைநகரில் உள்ள மதிலை அழிக்கும் ஆற்றல் எந்தப் பகையரசனுக்கும் இல்லை. அந்த மதிலிலுள்ள சிகரங்களாகிய குடுமிகள் பல காலமாக வண்ணங் கெடாமல் முதுகுடுமியாகவே இருந்தன. அவனுக்கு அமைந்த பெயரே இத்தனை சிறப்புக்களையும் தெரிவிக்கின்றது.
இவ்வளவு நீளமான பெயரை உடையவனானாலும் புலவர்கள் சுருக்கமாகக் குடுமி என்றும் அழைப்பார்கள்; பாட்டில் வைத்துப் பாடுவார்கள். அப்படிப் பாடியவர்களில் நெட்டிமையார் என்ற புலவர் ஒருவர். மிகப் பெரியவர்களையும் மிகச் சிறியவர்களையும் அவர்களுக்குரிய சொந்தப் பெயரால் அழைப்பது பெரும்பாலும் வழக்கமன்று. பெரியவர்கள் பெயரை வெளிப்படையாகச் சொல்வது மரியாதையன்று என்று பழங்காலத்தில் எண்ணினார்கள். இந்தக் காலத்தில்கூடப் பிள்ளையவர்கள், தாசில்தார் ஐயா என்று சொல்கிற வழக்கம் இருக்கிறதல்லவா? நெட்டிமையார் என்ற புலவருக்கு அவருடைய தாய் தந்தையர் வைத்த பெயர் இன்னதென்று நமக்குத் தெரியாது. அவருக்கு நீண்ட இமைகள் இருந்தமையால் அந்த அடையாளங்கொண்டு அவரைக் குறிப்பது வழக்கமாகப் போயிற்று. இப்படி உறுப்பினால் பெயர் வைத்து வழங்கும் வழக்கம் தொல்காப்பியத்திலிருந்து கூடத் தெரிகிறது. நெடுங்கழுத்துப் பரணர், பரூஉ மோவாய்ப் பதுமனார், தங்கால் முடக்கொல்லனார், முடமோசியார் என்று உறுப்புக்களைக் கொண்டு புலவர்களைச் சுட்டும் வழக்கம் தமிழ் நாட்டில் இருந்தது. இதில் ஒரு சிறப்பு உண்டு. உறுப்புக் குறையைச் சுட்டி இத்தகைய பெயர்கள் வரும் பொது, அந்தப் பெயர்கள் இழிவான பொருளைத் தரவில்லை. உறுப்பிலே குறை நேர்வது மனிதனுடைய செயல் அல்லவே. அப்படி இருக்க அதனை இழிவாகக் கருதுவது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்! தமிழர்கள் உறுப்புக் குறையை இழிவாகக் கருதவில்லை. அப்படிக் கருதியிருந்தால் உறுப்புக் குறையைச் சுட்டும் பெயர்களைப் புலவர்களுக்கு இட்டு வழங்குவார்களா? முடமோசியென்று முடப் புலவரைச் சுட்டுவதில் இழிவுக் குறிப்பிருந்தால் அதை நூலில் எழுதுமளவுக்குக் கொண்டு வருவார்களா? கரிகாலன் என்று ஒரு சக்கரவர்த்திக்குப் பெயர். அது அவனுடைய சொந்தப் பெயர் அல்ல. அவன் கால் கரிந்து போனமையால் அந்தப் பேர் வந்தது. இந்தக் காலத்தில் அப்படிப் பேரிட்டு அழைத்தால் அழைப்பவன் நாக்குக் கரிந்துவிடும். அக்காலத்தில் அதை இழிவாகக் கருதவில்லை. அந்தப் பெயரைப் பாட்டில் வைத்துப் பாடினார்கள்; மற்றவர்களுக்கும் வைத்தார்கள். இமை நீண்ட புலவரை ‘நெட்டிமையார்’ என்று வழங்கும் வழக்கமும் இந்த வகையில் சேர்ந்ததே.
நெட்டிமையார் முதுகுடுமியை வாழ்த்தப் புகுந்தார். அவனுடைய நல்லியல்பை எடுத்துக் கூறி, நீ நீண்ட நாள் வாழவேண்டுமென்று சொல்ல எண்ணினார். அவன் பல சிறந்த இயல்புடையவன். அந்த இயல்புகளுக்குள் எதை இப்போது சொல்லலாமென்று ஆராய்ந்தார். அவன் வாழ வேண்டும்; அவனால் நாடு முழுவதும் வாழ வேண்டும். புலவர், உலகத்தில் உள்ள உயிர்கள் அத்தனையும் வாழ வேண்டுமென்று நினைப்பவர். ஆனால் போர் என்று ஒன்று மற்ற நாட்டினரை வாழாமல் அடிக்கிறது. அதை நடவாமல் நிறுத்த முடியுமா? ஆனாலும் அந்தப் போரிலும் அறநெறி ஒன்றைப் பின்பற்றி, அந்த அறத்தாற்றிலே நடப்பது சிறப்பல்லவா? அந்தச் சிறப்பு முதுகுடுமியிடம் இருக்கிறது. ஆகவே அவனுடைய இயல்புகளில் அறத்தாற்றின் வழியே போர் செய்யப் புகும் கொள்கையைச் சிறப்பிக்கலாம் என்று தோற்றியது. பாட ஆரம்பித்தார்.
***
போர் செய்யப் போவதைப் பகை நாட்டில் உள்ளோருக்கு அறிவிக்கத் தலைப்பட்ட முதுகுடுமி தீங்கு செய்யத் தகாதவர்களென்று யார் யாரை நினைத்தான்? முதலில் ஆவை நினைத்தான். எந்தக் காரணத்தைக் கொண்டும் தீங்கு செய்யத் தகாதது அது. தன் கன்றை ஊட்டுவதற்கு அமைந்த பாலால் உலகையும் ஊட்டும் தன்மை உடையது. அதற்கு அடுத்தபடி தம் நலத்தைச் சிறிதளவே கருதிப் பிறர் நலத்தைப் பெரிதாகக் கருதி வாழும் அந்தணர்களை நினைத்தான். தன் கன்றுக்குச் சிறிதளவு பால் தந்து பெரிதளவு பாலைப் பிறருக்கு வழங்கும் ஆவைப் போன்றவர்கள் அவர்கள். ஆகவே ஆவை நினைத்தவுடன் ஆனின் இயல்புடைய பார்ப்பன மாக்களை நினைத்தான். அவரை அடுத்துப் பாதுகாப்புக்குரியவர்கள் மகளிர்; போர் புரிவதற்குப் பயன்படாதவர்கள். அவர்களையும் நினைத்தான்.
மற்ற மக்களிலும் சிலரைப் போரில் ஈடுபடுத்துவது தவறு. பிணியுடையவர்களைப் போரிலே புகுத்தக் கூடாது. போர்க்களத்தில் நோயுடையவர்கள் வந்தாலும் அறப்போர் முறையில் அவர்களோடு பொருதல் தகாது. பிணியின்றி இருப்பவர்களாயினும் புதல்வர் இல்லாதாரையும் போரில் அழித்தல் தவறு. புதல்வர் இருந்தால் அவர்களுடைய கால்வழி இடையறாது உலகில் நிலைபெறும். தாம் இறந்த பின்பும் பிதிரர்களை நோக்கிச் செய்யும் அருங் கடன்களை அவர்கள் புரிவார்கள். புதல்வர்கள் பொன் போன்றவர்கள். தளர்ச்சியுற்ற காலத்தில் துணையாவதோடு, இறந்த பிறகும் நன்மை தரும் கடன்களைச் செய்தலின் அவர்கள் பொருளைப் போன்றவர்கள். பின்னால் தளர்ந்த காலத்தில் உதவுவதற்காகப் பொருளைச் சேமித்து வைப்பார்கள். அதற்கு எய்ப்பில் வைப்பு என்று பெயர். புதல்வர்கள் எய்ப்பில் வைப்புப் போன்றவர்களே. அதனால்தான், ‘ தம்பொருள் எம்பதம் மக்கள்’ என்று திருவள்ளுவர் கூறினார். பொருள் என்றே பிள்ளைக்கு ஒரு பெயர் உண்டு. பொன் போன்ற புதல்வர்களைத் தென்புலத்தில் வாழும் பிதிரர்களுக்கு அருங்கடனை இறுப்பதன் பொருட்டுப் பெறாதவர்களும் போரில் விலக்குதற் குரியவர்கள்.
இவர்களெல்லாம் கேட்கும்படி, ‘எம்முடைய அம்பைக் கடிதிலே விடுவோம். நீங்கள் உங்களுக்கு அரணாக உள்ள இடங்களைத் தேடி அடையுங்கள்’ என்று முதுகுடுமி நுவலுவானாம். இது சிறந்த அறத்தாறு அல்லவா? போர் செய்யப்புகும் போதும் இந்த அறநெறியை மேற்கொள்ளும் விரதம் உடையவன் அவன்.
அறநெறியென்று சொல்லி, போர் வந்தால் கோழையாகி நிற்போரும் உண்டு. முதுகுடுமிப் பெருவழுதி அறநெறி வழி ஒழுகுபவன். போர் செய்யும் வீரமும் உடையவன்; மறக் கலையில் மாட்சி பெற்றவன்.
அவன் போர் செய்யப் புகுவானானால் அவனுடைய படையின் பெருமை அப்போதுதான் புலப்படும். படையிலே சிறப்பான பகுதியானைப் படை. யானை ஒன்று ஆனாலும் பத்து ஆளுக்கு ஒப்பானது. ‘யானையுடைய படை’ என்று சிறப்பாகச் சொல்வார்கள். யானைகள் வெறும் அலங்காரமாக வருவன அல்ல. எல்லாம் ஆண் யானைகள்; ஆண்மையிலே சிறந்த யானைகள்; பகைவரைத் துகைத்துக் கொல்லும் களிறுகள். அவற்றின் மேலே கொடிகளை நாட்டியிருப்பார்கள். யானையின் பெரும்படை முன்னே செல்லும்போது அவற்றின் மேலே ஏற்றிய கொடிகள் வானை மறைக்கும். எங்கும் நிழலைப் பரப்பும்.
இவற்றையெல்லாம் நினைத்தார் புலவர். போர் செய்யப் புகும்போதும் அறத்தாற்றை நுவலும் அவன் கொள்கையையும், அவனுடைய படைப் பெருமையையும் கூறி, ‘நீ வாழ்வாயாக!’ என்று வாழ்த்தப் புகுந்தார்.
ஆவும் ஆன்இயற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணிஉடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும்; நும்அரண் சேர்மின்என
அறத்தாறு நுவலும் பூட்கை, மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி!
முதுகுடுமிப் பெருவழுதியை எப்படி வாழ்த்துவது! அவனுக்கு மேலும் மேலும் வெற்றி உண்டாக வேண்டுமென்று வாழ்த்தலாம். எல்லா இன்ப நலங்களும் கிடைக்க வேண்டுமென்று வாழ்த்தலாம். நீடூழி வாழ வேண்டுமென்று வாழ்த்தலாம். புலவர் அவன் பல்லாண்டு வாழ வேண்டுமென்று வாழ்த்த விரும்பினார். பல ஆண்டுகள் என்பதற்கு ஓர் உவமையைச் சொல்ல நினைத்தார். வானத்தில் தோன்றும் மீன்கள் கணக்கற்றவை; அவற்றைப் பன்மைக்கு உவமையாகச் சொல்வது மரபு. மழை பெய்யும்போது உண்டாகும் மழைத் துளிகளும் பல; அவற்றையும் சொல்வதுண்டு. கடல் மணல், ஆற்று மணல் ஆகியவற்றை எண்ணி முடியாது; அவற்றையும் பன்மைக்குச் சொல்வதுண்டு. நெட்டிமையார் ஆற்று மணலைச் சொல்ல வருகிறார்.
சோழன் ஒருவனை வாழ்த்த வந்த புலவர் ஒருவர் அவனுடைய நாட்டில் உள்ள காவிரி யாற்றின் மணலைவிடப் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.
சிறக்கநின் ஆயுள்
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே.
இங்கே நெட்டிமையார் பாண்டிய மன்னனை வாழ்த்துகிறார். ஆதலின் பாண்டி நாட்டிலுள்ள ஆற்றிலிருக்கும் மணலைச் சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். முதுகுடுமிப் பெருவழுதியின் காலத்தில் பாண்டி நாட்டில் இருந்த நதிகள் வையையும் பொருநையும். நெட்டிமையார் அந்த ஆறுகளைக் குறிப்பிடவில்லை. புலவர்கள் யாரேனும் ஒரு மன்னனைப் பாடும்போது அவர்களுடைய முன்னோரின் புகழையும் இணைத்துப் பாடுவது வழக்கம். முதுகுடுமியை வாழ்த்தும்போது அவனுடைய முன்னோன் ஒருவனையும் பாராட்ட நினைந்தார் புலவர். குடுமியின் வாழ்நாள் பல்குக என்பதற்கு ஏற்ற உவமையும், அவன் முன்னோன் ஒருவனுடைய சிறப்பும் ஆகிய இரண்டையும் ஒருங்கே அமைக்கும் நயமான வாய்ப்பு இந்தப் புலவருக்குக் கிடைத்தது.
***
மிகப் பழங் காலத்தில் பாண்டிநாடு இப்போது உள்ளதைவிட அதிகப் பரப்பை உடையதாக இருந்தது. குமரித் துறைக்கும் தெற்கே பல காவதங்கள் தமிழ்நாடு விரிந்திருந்தது. அந்தப் பகுதியில் ஆறுகளும் மலைகளும் இருந்தன. குமரிமலை, குமரி ஆறு, பஃறுளியாறு என்பன அப்பகுதிகளில் இருந்தன என்று தெரிகிறது. அந்தப் பழங்காலத்தில் தெற்கே மதுரை என்ற நகர் இருந்தது. அதைப் பாண்டிய மன்னர்கள் தம்முடைய தலைநகாராகக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். அக்காலத்தில் கடல்கோள் ஒன்று நிகழ்ந்தது. தமிழ் நாட்டின் தென்முனையில் ஒரு பகுதியைக் கடல் விழுங்கியது. மதுரை மறைந்தது.
பாண்டிய மன்னர் தம் தலைநகரை வடக்கே தள்ளி வைத்துக் கொண்டார்கள். மதுரை தலைநகராக இருந்த காலத்தில் பாண்டியர்கள் அங்கே ஒரு தமிழ்ச் சங்கத்தை வைத்து வளர்த்து வந்தார்கள். அதை தலைச் சங்கம் என்று சொல்வார்கள். மதுரையைக் கடல் கொண்ட பிறகு கபாடபுரம் என்ற நகரம் பாண்டியர்களின் இராசதானியாயிற்று. அங்கும் தமிழ்ச் சங்கத்தை அவர்கள் நடத்திவந்தார்கள். அதற்கு இடைச் சங்கம் என்று பெயர்.
கபாடபுரத்திற்குத் தெற்கே உள்ள பகுதியை வேற்றரசர் சிலர் கைப்பற்றினர். கடல் கோள் நிகழ்ந்தமையால் தளர்வுற்ற பாண்டியர்களின் சோர்வு கண்டு வேற்றரசர் இவ்வாறு செய்தனர். பாண்டியன் மாகீர்த்தி என்ற அரசன் முடிசூடினான். அவன் வீரமும் புலமையும் நிரம்பியவன். தன பகைவரை வென்று அவர் பெற்றிருந்த நிலத்தையும் தன்னுடையதாக்கிக் கொள்ள வேண்டுமென்று உறுதி பூண்டான். பகைவர்மேற் படையெடுத்துச் சென்று தென்கோடி வரை போய்த் தென் கடற்கரையளவும் தன் ஆணையைச் செலுத்த வேண்டும் என்பது அவன் நினைவு.
போர்க்கோலம் பூண்டு புறப்பட்டான். புறப்பட்டபொழுது அவன் ஒரு வஞ்சினம் இயம்பினான். ‘நான் கடலளவும் சென்று, அந்தக் கடல் வடிம்பிலே நின்று என் கால்களை அந்தக் கடலின் நீராலே அலம்பிக் கொண்டாலன்றி மீளேன்!’ என்று நெடுமொழி கூறினான். படையெடுத்துச் சென்று குறும்புகளை அடக்கித் தென் கடலுக்குச் சென்றான். அங்கே கடலோரத்தில் வடிம்பு அலம்ப நின்றான். அன்று அவனுக்கும் பிற மக்களுக்கும் உண்டான மகிழ்ச்சி எல்லை காணாதபடி இருந்தது. அன்றுமுதல் அந்த மன்னனுக்கு ‘கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியன்’ என்ற பெயர் உண்டாயிற்று. பகைவர்பால் இருந்த நிலத்தை மீட்டுக் கொண்டமையால் ‘நிலந்தரு திருவிற் பாண்டியன்’ என்ற பெயரும் அவனுக்கு அமைந்தது. உருவாலும் புகழாலும் உயர்ந்து நின்றமையால் அவனை ‘நெடியோன்’ என்று புலவர் புகழ்ந்தனர். அவன் காலத்தில் பஃறுளியாறு என்ற ஆறு பாண்டி நாட்டில் ஓடியது.
அவன் காலத்தில் இடைச் சங்கத்தில் தொல்காப்பியர் ஒரு புலவராக இருந்தார். அவர் தொல்காப்பியம் என்ற அரிய இலக்கணத்தை இயற்றி நிலந்தரு திருவிற் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேற்றினார்.
அப்பாலும் ஒரு கடற்கோள் நிகழ்ந்தது. பாண்டியர்கள் பின்னும் வடக்கே வந்து ஒரு நகரை அமைத்துக் கொண்டு தம் பழம்பதியாகிய மதுரையின் பெயரையே அதற்கு இட்டு வழங்கினர். அங்கே கடைச் சங்கத்தை நிறுவி வளர்த்தனர். ‘முதுகுடுமிப் பெருவழுதி’ அந்தக் காலத்தில் வாழ்ந்தவன்.
புலவர், வடிம்பலம்ப நின்ற பாண்டியனையும் அவன் காலத்தில் பாண்டி நாட்டிலே ஓடிய பஃறுளியாற்றையும் நினைத்தார். ‘நீ பஃறுளி யாற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழ்வாயாக!’ என்று முதுகுடுமியை வாழ்த்தினார். நெடியோனாகிய வடிம்பலம்ப நின்ற பாண்டியனுடைய பஃறுளியாற்று மணலைப் போல வாழ்வாயாக என்று அந்தப் பழம் பாண்டியனையும் தொடர்பு படுத்தினார். அவன் சிறப்பையும் சிறிது சேர்த்துச் சொல்லுகிறார்.
அந்த நெடியோன் பாண்டிய குலத்தில் வந்த பெரிய மன்னர்களில் ஒருவன். ஒருகுலத்தில் பல மன்னர்கள் பிறந்திருந்தாலும், யாரேனும் சிலருடைய பெயராலே அந்தக் குலத்தைக் குறிப்பது வழக்கம். அந்தப் பெயரை உடையவர்கள் மிக்க சிறப்பைப் பெற்றவர்கள் என்பதை அவர்கள் குலம் என்று சுட்டிச் சொல்லும் வழக்கத்தினால் உணரலாம். சூரிய வம்சத்தில் பலர் உதித்தாலும் ரகு என்ற மன்னன் சிறந்தவனாக இருந்தான். அதனால் ரகுகுலம் என்ற பெயர் இராமன் பிறந்த குலத்துக்கு ஏற்பட்டது. அப்படி முதுகுடுமிப் பெருவழுதியாகிய பாண்டியனுக்கு முன்னோர்கள் பலர் இருந்தும் புலவர் வடிம்பலம்ப நின்ற பாண்டியனை நினைத்தார். பாண்டிய குலத்தினருக்குத் தலைவன் என்று அவனைச் சொல்கிறார். ‘தம் கோ’ என்று சிறப்பிக்கிறார். அந்த மன்னனுடைய வீரத்தை அவன் பெயரே காட்டும். அவன் கலைஞர்களிடத்தில் பேரன்புடையவன். புலவர், பாணர், கூத்தர் ஆகியவர்களுக்கு நிதி மிக வழங்கும் வள்ளல். செம்பொன்னையும் பசும்பொன்னையும் கூத்தருக்கு வாரி வாரி ஈயும் வண்மையுடையவன். தென்கடலைத் தனதாக்கிக்கொண்டு அந்த நன்னாளில் அங்கே பெருவிழாச் செய்தவன். முந்நீராகிய கடலின் கரையிலே வடிம்பலம்ப நின்றவன்; முந்நீர் விழ வினையுடைய நெடியோன்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தன்மைகளை உடைமையால் முந்நீர் என்ற பெயர் கடலுக்கு வந்தது. நீர் என்பது இயல்பைக் குறிக்கும் சொல். ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீர் என்ற மூன்று நீர்களும் சேர்ந்து அமைந்தமையால் அவ்வாறு பெயர் பெற்றது என்று சில உரையாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். நிலம் தோன்றுவதற்கு முன்னே தோன்றியது என்ற பொருள்பட முன்னீர் என்றும் சொல்வதுண்டு.
முதுகுடுமியை வாழ்த்துகிறார் புலவர்; ‘உங்களுடைய குலத்தில் பேரரசனாக இருந்தவனும், செம்மையான பசிய பொன்னைக் கூத்தர் களுக்கு வழங்கியவனும், கடலை அடைந்து விழா வெடுத்த முந்நீர் விழாவை உடையோனும், நெடியோனுமாகிய வடிம்பலம்ப நின்ற பாண்டியனுடைய, நல்ல நீரை உடைய பஃறுளியாற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் நீ வாழ்வாயாக!’ என்று வாழ்த்துகிறார்.
‘ஆவும் ஆன்இயற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்’ என,
அறத்தாறு நுவலும் பூட்கை, மறத்திற்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி; தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.
விளக்கம்: ‘பசுக்களும், பசுவின் இயல்புடைய அந்தணர்களும், மகளிரும், நோயுடையவர்களும், போற்றித் தென் திசையில் வாழ்பவராகிய பிதிரர்களுக்குச் செய்ய வேண்டிய அரிய கடன்களைக் கொடுக்கும் உரிமையுடைய செல்வத்தைப் போன்ற பிள்ளைகளைப் பெறாதவராகிய நீங்களும், நாம் எம் அம்பை விரைவிலே எய்யப்போகிறோம் ஆதலின், நுமக்கு ஏற்ற பாதுகாப்பான இடங்களை நாடி அடையுங்கள்’ என்று அறத்தின் நெறியை வெளிப்படையாகக் கூறும் கொள்கையையும் வீரத்தையும் உடையவனும் போர்க்களத்தில் பகைவரைக் கொல்லும் களிறுகளின் மேலே ஏற்றிய கொடிகள் ஆகாயத்தை நிழல் செய்யும் எம்முடைய அரசனுமாகிய முதுகுடுமிப் பெருவழுதியே! நீ வாழ்வாயாக; பாண்டிய குலத்து அரசனும் செம்மையான இயல்புடைய பசும்பொன்னைக் கூத்தர்களுக்கு வழங்கியவனும் கடல் விழாவை நடத்தியவனும் நெடியோனுமாகிய கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியனுடைய நல்லநீரையுடைய பஃறுளியாற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள்.
மணலினும் பல வாழிய என்று கூட்டிக் கொள்ள வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: இயல் – இயல்பு, ஆ முதலியவற்றை முன்னிலைப்படுத்திச் சொல்வதுபோல அமைந்திருப்பதால் பிணியுடையீரும் பெறாஅதீரும் என்பவை முன்னிலையாக இருக்கின்றன. பிணியுடையவர்களாகிய நீங்களும், பெறாதவர்களாகிய நீங்களும் என்று பொருள் கொள்ள வேண்டும். தென்புல வாழ்நர் – பிதிரர்; இவர் தேவ சாதியினர். அவரவர்கள் தம் முன்னோரைக் கருதி ஆற்றும் கடன்களை ஏற்று, அவற்றின் பயன்களை அம் முன்னோர் எவ்விடத்து எப்பிறவியில் இருந் தாலும் அவர்களுக்குச் சார்த்தும் செயலையுடையவர்கள். மாடாகப் பிறந்த ஆன்மாவை நோக்கி அதன் முற்பிறப்பில் தொடர்புடையார் கடன் ஆற்றினால் அதன் பயனைத் தென்புல வாழ்நராகிய பிதிர் தேவதைகள் ஏற்று, அந்த மாட்டுக்கு உரிய புல்லுணவாகவும் பிறவாகவும் கிடைக்கும்படி செய்வார்கள் என்று சாத்திரங்கள் கூறும். இறுக்கும் – அளிக்கும். கடி- விரைவில். விடுதும்-எய்வோம். அரண்- காப்பாக உள்ள இடம். சேர்மின் – அடையுங்கள். அறத்தாறு – அற நெறியிலே. பூட்கை – கொள்கை. மறம்- வீரம். மீமிசை – மேலே. நிழற்றும்- நிழல் செய்யும். கோ- அரசன். செந்நீர் என்றது கலப்பற்ற தன்மையைக் காட்டியது; பசும்பொன் என்றது பொன்னின் வகையைக் காட்டியது. பசும் பொன்- கிளிச்சிறை என்னும் பொன். வயிரியர்- கூத்தர். ஈத்த- வழங்கிய. முந்நீர் விழவு- கடல் விழா; கடல் தெய்வத்திற்கு எடுத்த விழா என்று பழைய உரையாசிரியர் எழுது கிறார்*
இச் செய்யுள் புறத்திணைகளில் ஒன்றாகிய பாடாண்திணையில் இயன்மொழி என்னும் துறையைச் சார்ந்தது. பாண்டிய மன்னனுடைய இயல்பை முன்னாலே கூறியமையால் இயன்மொழி ஆயிற்று. இது புறநானூற்றில் ஒன்பதாவது பாட்டு.
(தொடர்கிறது)
$$$
One thought on “அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 2 ஆ”