-கி.வா.ஜகந்நாதன்
பாரத தேசத்தில் பழங்காலம் முதற் கொண்டே போர் நடந்து வந்ததுண்டு. ஆனால் அந்தப் போர்களில் சில வரையறை இருந்தன. இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னமுறையில் போர் செய்ய வேண்டும் என்ற திட்டம் இருந்தது. இராமாயணப் போரில் இராமன் வெறுங் கையுடன் நின்ற இராவணனைக் கொல்லாது, ‘நாளை வா’ என்று கூறி அனுப்பியது அறச் செயல். இத்தகைய பல அறச் செயல்கள் போரிடையிலும் நிகழ்வதால் அது போரேயானாலும் அறப்போராக இருந்தது.

2. அறப்போர் – அ
உலகில் தோன்றிய உயிர்கள் எல்லாவற்றிற்கும் பொதுவாகச் சில தொழில்கள் இருக்கின்றன. உண்பது, உறங்குவது, சந்ததியை உண்டுபண்ணுவது ஆகிய செயல்கள் பறவை, விலங்கு, மக்கள் என்ற எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. உடம்போடு கூடிய உயிர்களாகிய இவற்றிற்கு உடம்பின் தொடர்புடைய செயல்களில் பல பொதுவாக இருப்பது இயல்பு.
ஆயினும் இந்தப் பொதுவான செயல்களில் ஆறு அறிவுடைய மனிதன் தன் அறிவைப் பயன்படுத்திக் கொள்கிறான். கீரைப்பாத்தியில் கீரை நன்றாக வளர்ந்திருக்கிறது. அந்தக் கீரையை மாடும் உண்ணும்; மனிதனும் உண்ணுவான். மாடு தன் நாக்கை வளைத்துச் சுருட்டிப் பாத்தியில் இருந்தபடியே கீரையை உண்டுவிடும். மனிதன் அப்படிச் செய்வதில்லை. கீரையைப் பக்குவமறிந்து பறித்துத் தண்டைக் குழம்புக்கும் கீரையை மசியலுக்கும் உபயோகப்படுத்துகிறான். கீரையைக் கீரை வடைக்கும் பயன்படுத்துகிறான். அவனுக்குள்ள அறிவை உணவு விஷயத்திலே செலுத்திச் செயல் செய்வதால் இந்த நாகரிகம் அமைகிறது. இப்படியே, களைத்தபோது கிடைத்த இடத்தில் உறங்குவது விலங்கு. மனிதனோ கட்டில் தேடி மெத்தையும் தலையணையும் தேடி உறங்குகிறான். உணவை உண்டு பசி தீர்வதும் உடம்பை மறந்து உறங்கி இளைப்புத் தீர்வதும் விலங்குக்கும் மனிதனுக்கும் பொதுவாக இருந்தாலும், உண்ணுவதற் கமைந்த உணவுப் பொருளையும், உறக்கத்துக்குத் துணையான பொருள்களையும் அழகழாக இனியவையாகக் கலைத்திறம் படைத்தனவாக அமைத்துக் கொள்ளும் அறிவு மனிதனிடம் இருக்கிறது.
மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவனுடைய அறிவு விளங்குகிறது. அவன் செய்யும் காதலில் அன்புடன் அறிவும் இருக்கிறது. அவன் மக்களை வளர்க்கும் முறையிலும் அன்போடு அறிவு விளங்குகிறது. பசுவானது தன் கன்றுக்குப் பாலூட்டுவதும் தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டுவதும் பொதுவான செய்கையே. ஆனால் தாய் அறிவுடையவளாதலின் அவள் செய்கை நாகரிகமாக இருக்கிறது.
கோபம் வந்தால் விலங்கினங்கள் தம்முள்ளே போரிடும்; ஒன்றை ஒன்று கொன்று விடும். சில சமயங்களில் ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்தை எதிர்த்துப் போரிடுவதும், ஒரு விலங்கே வேறு விலங்குக் கூட்டத்தை எதிர்த்துக் குலைப்பதும் காட்டு வாழ்க்கையில் நிகழ்கின்றன. மனிதனுக்கும் கோபம், பகை எல்லாம் உண்டு. அவற்றோடு அவனுக்கு அறிவும் இருப்பதால் அந்தத் தீய குணத்தை அடக்கப் பார்க்கிறான். அறிவிலே பழுத்தவர்கள் கோபமே இல்லாமல் வாழ்கிறார்கள். எல்லோருமே அப்படி இருந்துவிட முடியுமா?
கோபத்தை வராமலே அடக்குவது பேரறிவு. கோபம் வரும்போதும், வந்த பின்னும் அடக்குவது அதைவிடக் குறைந்த அறிவு. வந்தபின் வார்த்தையளவிலே அந்தச் சினத்தைக் காட்டி அமைவது அதைவிடக் குறைவான அறிவு. ஆனால் வார்த்தைகளுக்கும் அப்பால் சினம் செல்வதுண்டு. பிறரை அடித்தலும், கொலை செய்தலும் ஆகிய செயல்களாக அந்தக் கோபம் விளைவதும் உண்டு. அப்போது கூட மனிதனுக்கு அறிவு இருப்பதனால் தந்திரமாகவும் கருவிகளைக் கொண்டும் அந்தக் காரியங்களைச் செய்கிறான்.
ஒரு சமுதாயமே மற்றொரு சமுதாயத்தை எதிர்ப்பது உண்டு. அதைப் போர் என்று சொல்வார்கள். இந்தப் போருக்கு மூலகாரணம் தனி மனிதனுடைய விருப்பு வெறுப்பு அன்று; ஒரு சமுதாயத்தினரின் நன்மை தீமைகளை எண்ணியே போர் நிகழ்கிறது. உலகத்தில் எந்த நாடும் போர் செய்யாமல் இருந்ததில்லை. தனி மனிதனுடைய வாழ்க்கை வரலாற்றுக்கும் ஒரு நாட்டின் சரித்திரத்துக்கும் அடிப்படியான வேறுபாடு இது. மனிதன் தன்னுடைய ஆற்றலால் கல்வி, செல்வம் ஆகியவற்றை ஈட்டி உயர்கிறான். அவனுடைய ஜீவிய சரித்திரத்தில் அவன் செய்த ஆக்க வேலைகளே பெரும்பாலும் இடம் பெறுகின்றன. ஆனால் தனி மனிதர் பலர் சமுதாயமாக வாழும் நாட்டினது சரித்திரத்தைப் பார்த்தாலோ போர்ச் செயல்களே சிறப்பான பகுதிகளாக இருக்கின்றன. சரித்திரம் என்பதே போர் நிகழ்ச்சிகளின் கோவை என்றுகூட மாணாக்கர்கள் நினைத்துப் படிக்கும் அளவுக்குச் சில நாடு வரலாறுகள் அமைந்திருக்கின்றன.
போரில் ஈடுபடுபவனும் மனிதன்தான். ஆகவே அதிலும் அவன் தன் அறிவைப் பயன்படுத்திக் கொள்கிறான். பகைவர்களை எளிதிலே மாய்க்கும் படைகளைக் கண்டுபிடிக்கிறான். அவனுடைய கல்வி, செல்வம், மனித சக்தி எல்லாம் போரில் ஈடுபடுகின்றன. இதனால் போர் செய்தலையும் ஒரு கலைபோல எண்ணி அதற்குரிய கருவிகளையும் முறைகளையும் பெருக்கி வருகிறான்.
மனிதனுடைய அறிவு பகைவனை அழிக்கும் திறத்தில் ஈடுபடுகிறது; அதனால் மனித சமுதாயத்தின் போரில் சில நாகரிக முறைகள் அமைகின்றன. மனிதர்களுக்குள் கோபமே வராமல் அடக்கும் சான்றோர்களும், வந்த பிறகும் செயற்படாமல் அமையும் நல்லவர்களும் இருக்கிறார்கள். அவைகளுடைய அறிவு மனித சமுதாயம் ஒன்றனை ஒன்று அழித்துக் கொள்ளும் போரில் ஈடுபடுவதற்கு உடம்படுவதில்லை. இந்த வெறியை எப்படி அடக்கலாம் என்று எண்ணி அதற்குரிய வழி துறைகளை வகுக்கப் புகுகிறார்கள். ஒருபால் போரைத் திறம்பட நடத்திப் பகைவரை அழிக்கும் கலை வளர்ந்து வந்தாலும், ஒருபால் போரே நிகழாமல் அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற கருணையும் படர்ந்து வருகிறது. உலகில் எந்தச் சமுதாயத்திலும் கருணையுடைய சான்றோர் மிகச் சிலரே இருக்கக்கூடும். ஆதலின் போர் நிகழ்வது அதிகமாகவும், நிகழாமல் அமைவது குறைவாகவும் இருக்கின்றன. ஆயினும் அந்த நல்லோர்களுடைய அறிவும் கருணையும் போரை அறவே தடுத்து நிறுத்தாவிட்டலும், போரிலும் சில வரையறைகளைக் கடைபிடிக்கும்படி செய்தன. வீட்டில் அழுக்குப்படாமல் இருப்பது மிக நல்லது. ஆனாலும் மனிதன் அழுக்குச் செய்கிறான். வீடு முழுவதும் அழுக்கடையும்போது அதை அலம்புகிறோம். கழுவிய நீரைப் பல இடங்களிலும் பரவவிடாமல் ஓரிடத்தில் விட்டு அதற்கு எல்லை கோலிச் சாக்கடை ஆக்குகிறோம். மனித சமுதாயத்திலும் அழுக்கு முழுவதையும் தடுக்க வகையில்லாவிட்டாலும் பலவகை அழுக்குகளை வரையறைக்கு உட்படுத்தி வெளிப்படுத்தும் சாக்கடைகளைப் பெரியவர்கள் வகுத்திருக் கிறார்கள்.
இதனால்தான் போரிடுபவர்களிடையிலும் சில விதிகள் இருக்கின்றன. போர் செய்வதற்கும் சில சட்டங்கள் உலகத்து நாடுகள் பலவற்றுக்கும் பொதுவாக இருக்கின்றன. தனி மனிதன் தனி மனிதனைக் கொலை செய்யும் திறத்தில் ஒரு வரையறையும் இல்லை. அதை அறவே விலக்க வேண்டும் என்று எல்லோருமே ஒப்புக்கொண்டு விட்டார்கள். ஆகவே கொலை செய்வது குற்றமாகிவிட்டது. ஆனால் தொகுதியாகச் சேர்ந்து கொலை செய்யும் போர் குற்றமாகவில்லை. ஞானிகளுக்கும், மனிதப் பண்பை வளர்ப்பவர்களுக்கும் அது குற்றமாகவே தோன்றும். முன்னே சொன்னபடி அப்படி நினைப்பவர்கள் சிலரேயாதலால் போர் குற்றமாகவில்லை. ஆனால் போர் செய்யும்போது சில வரையறைகளை அமைத்திருப்பதால், சில முறைகள் குற்றமாக எல்லா வகையினராலும் ஒப்புக்கொள்ளபட்டிருக்கின்றன.
புலால் உண்பதே தவறுதான். ஆனாலும் எல்லாருமே புலால் உண்ணாமல் இருப்பது என்பது இன்றைய உலகில் நடக்கக்கூடியதாக இல்லை. அதனால் நல்லவர்கள் புலால் உண்பவர்களுக்கும் ஒரு தர்மத்தைச் சொல்லி வைத்தார்கள். ‘நீ பசுவின் புலாலை உண்ணாதே; அமாவாசையில் புலாலை உண்ணாதே’ என்று வரையறை செய்தார்கள். புலால் உண்ணாமல் இருப்பதைவிட இந்த வரையறையின்படி நடப்பது எளிதாக இருக்கிறது. ஆதலின் இந்த நாட்டில் புலால் உண்ணுதலாகிய அதர்மம் செய்பவர்களிடத்திலும் ஒரு தர்மம், ஒரு வரையறை இருக்கிறது.
போரில் உள்ள தர்மங்கள் அல்லது வரையறைகளும் இத்தகையனவே. போரை அறவே ஒழிக்க இயலாத நிலையில், எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எந்த முறையிலும் போரிட்டு உலகை நாசமாக்காமல் இருப்பதற்குரிய வழி துறைகளை ஆன்றோர்கள் வகுத்தார்கள். ஆதலின் போரிலும் அறப்போர் என்ற வகை உண்டாயிற்று.
மகாத்மா காந்தியடிகள் நடத்திய அறப்போர்தான் இதுகாறும் உலகம் கண்டறியாத சிறப்புடையது. அவர் செய்த போர், அழிவை எவ்வளவு குறைவாக்கலாமோ அப்படி ஆக்கிற்று. போரில் எதிர் நின்ற இரண்டு கட்சிகளில் ஒன்று உண்மையில் போரிடவே இல்லை; அந்தக் கட்சியினரின் செயலால் எதிர்க் கட்சியாகிய ஆங்கில அரசாங்கத்தாருக்கு உயிரழிவு இல்லை. அவர்கள் தேசீயக் கட்சியினருக்குச் சிறை விதித்தார்கள். இந்த அறப்போரில் எதிர்க் கட்சியினருக்குக் கூட மனிதரை மாய்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை! போர் நிகழ்ந்தது, ஆனால் உயிரழிவு இல்லை என்றால் உலகத்தில் எந்த நாட்டுச் சரித்திரத்திலும் இந்த அற்புதத்தைக் காண முடியாது. இந்த அஹிம்சா யுத்தமாகிய அறப்போரை வகுத்த சான்றோர் மகாத்மா காந்தியடிகள். அவருடைய செயல் செயற்கரியது.
பாரத தேசத்தில் பழங்காலம் முதற் கொண்டே போர் நடந்து வந்ததுண்டு. ஆனால் அந்தப் போர்களில் சில வரையறை இருந்தன. இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னமுறையில் போர் செய்ய வேண்டும் என்ற திட்டம் இருந்தது. இராமாயணப் போரில் இராமன் வெறுங் கையுடன் நின்ற இராவணனைக் கொல்லாது, ‘நாளை வா’ என்று கூறி அனுப்பியது அறச் செயல். இத்தகைய பல அறச் செயல்கள் போரிடையிலும் நிகழ்வதால் அது போரேயானாலும் அறப்போராக இருந்தது.
தமிழ் நாட்டில் நிகழ்ந்த போர்களும் அறப் போர்களே. அவற்றிற்குரிய வரையறைகளைப் புலவர்கள் அமைத்தார்கள். எவரேனும் வரையறை கடந்து போர் செய்தால் அவர்களைப் புலவர்கள் பாட மாட்டார்கள். அவர்களுடைய பழி பரவி மற்றவர்களை அஞ்சச் செய்யும். சில இடங்களில் சில கொடுஞ் செயல்கள் நிகழ்ந்ததுண்டு. ஆயினும் பெரும்பாலும் அறப்போர்களே நிகழ்ந்து வந்தன. போர் செய்யும்போது படை இல்லாதவனையும், ஒத்த படை கொள்ளாதவனையும், புறமுதுகு காட்டினவனையும், சோர்வுடையவனையும் எதிர்த்துப் பொருவது அறமன்று என்ற வரையறை இருந்தது.
‘சிறப்புடை அரசியலாவன: மடிந்த உள்ளத் தோனையும் மகப்பெறாதோனையும் மயிர் குலைந் தோனையும் அடிபிறக்கிட்டோனையும் பெண் பெயரோனையும் படையிழந்தோனையும் ஒத்த படை எடாதோனையும் பிறவும் இத்தன்மை யுடையோரையும் கொல்லாது விடுதலும், கூறிப் பொருதலும் முதலியனவாம்’ (தொல்காப்பியம் புறத்திணையியல், 10) என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார்.
போர் தொடங்கியது முதல் முடிவு வரையில் இத்தகைய அறச் செயல்கள் பல போர்க்களத்தில் நிகழ்வதைத் தொல்காப்பியத்திலும், புறப் பொருள் இலக்கணங்களை வகுக்கும் பிற நூல்களிலும் உள்ள செய்திகளால் அறியலாம்; புறநானூறு முதலியவற்றில் போரிடையே இத்தகைய அறச் செயல்களைச் செய்த வீரப் பெருமக்களின் வரலாற்றைக் குறிப்பிடும் செய்யுட்கள் பல உண்டு.
***
போர் தொடங்கப் போகிறது. ஒரு நாட்டின் அரசன் தான் பகைவனை எதிர்த்துப் போர் செய்யப் போவதைத் தன் வீரர்களுக்கு அறிவிக்கிறான்; முரசறைந்து அறிவிக்கிறான். அதுகேட்டு வீரர்களுடைய தினவெடுத்த தோள்களெல்லாம் பூரிக்கின்றன. போர் என்ற சொல்லைக் கேட்டாலே அவர்களுக்கு பயம்.
பகைவர் நாட்டில் உள்ள மக்கள் யாவரையும் அழிக்க வேண்டுமென்பது அரசனது நோக்கம் அன்று. பிறருக்குத் தீங்கு செய்யாதவர்களையும், தமக்குப் பின் குடிகாத்து ஓம்பும் மக்களைப் பெறாதவர்களையும் கொல்வது தீது. ஆதலின் பகையரசனுடைய நாட்டில் உள்ள அந்த வகையினரைப் பாதுகாக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகப் பசுக்களைக் காக்க வேண்டும். இதற்காகப் பகை நாட்டார் தெரிந்து கொள்ளும் வண்ணம் தாம் போர் செய்யப் போவதை வெளிப்படையாகத் தெரிவித்து விடுவார்கள்.
‘பசுக்களும், பசுவையொத்த அந்தணர்களும், பெண்களும், நோயாளிகளும், பிதுர் கர்மங்களைச் செய்தற்குரிய மக்களைப் பெறாதவர்களும் தங்களுக்குப் பாதுகாப்பான இடத்தைத் தேடி அடைந்து விடுங்கள். நாம் போரிடப் போகிறோம்’ என்று முரசு அறையச் செய்வார்கள். இந்தச் செய்தியைக் கேட் டவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள். இதை உணர்ந்து தமக்குரிய பாதுகாப்பைச் செய்வதற்குரிய அறிவில்லாத பசுமாடுகள் இருக்கின்றனவே, போரிடத் துணிந்த அரசன் அவற்றை வழிமடக்கித் தன் ஊருக்குக் கொண்டு வந்து பாதுகாப்பான். இது போர் முழக்கம் செய்யும்போதே நிகழும் நிகழ்ச்சி.
இப்படிப் பகைவருடைய ஆநிரையைக் கொண்டு வருவது வெட்சித்திணை யென்பதன் பாற்படும். புறப்பொருளில் முதல் திணை இது. வெட்சித் திணையே, போர் செய்தாலும் அதிலும் அன்பும் அறமும் இடம் பெறும் என்பதைக் காட்டுவதற்கு அறிகுறியாக நிற்கிறது. உலகியலில் நிகழ்ந்தாலும் நிகழா விட்டாலும் அதுவே எம்முடைய குறிக்கோள் என்று, அதை மக்கள் மறவாத வண்ணம் இலக்கண நூல் வற்புறுத்துகிறது. நூல்களில் இந்த வரையறையைக் கடைப்பிடித்துப் புலவர்கள் இலக்கிய உலகில் இதை நிகழ்த்தட்டும் என்று இலக்கண நூலார் இத்தகைய போரறங்களை- யுத்த தர்மங்களைச் சொல்லி வைத்தார்கள்.
‘இருபெரு வேந்தர் பொருவது கருதியக் கால் ஒருவர், ஒருவர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்கு செய்யத் தகாத சாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப் போதருக எனப் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினால் தாமே கொண்டுவந்து பாதுகாத்தலும் தீதெனப்படாது அறமேயாம்’ என்றும், ‘மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தற்கு மறத் துறையினும் அறமே நிகழும்’ என்றும் நச்சினார்க்கினியர் (தொல். புறத்திணை. 2, உரை) எழுதுகிறார்.
திருவள்ளுவர் மறத்துறையிலும் இத்தகைய அன்புச் செயல்கள் இருத்தலை எண்ணியே,
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.
என்று கூறினார்.
பகைகொண்ட அரசனிடத்தும் அவனைச் சார்ந்து போர் செய்யும் வீரர்களிடத்தும் சினத்தைக் காட்டும் மன்னன் மற்றவர்களிடம் அன்பு காட்டுவது மறத்திடையே தோற்றிய அறம். ஆநிரைகளைப் பகைவர் நாட்டினின்றும் மீட்டுவரும் மரபு தமிழ் நாட்டில் இலக்கிய இலக்கணங்களால் வெளியாகிறது. ‘சண்டைக்கு எடுபிடி மாடுபிடி’ என்ற பழமொழிகூட இந்த அறத்தைச் சுட்டிக் காட்டுகிறது. பழமொழியாக வழங்குமளவுக்கு இந்தச் செயல் தமிழ் நாட்டில் ஊன்றியிருக்கிறது.
பாரதத்தில் விராடபர்வத்தில் துரியோதனாதியர் விராட தேசத்து மாடுகளைக் கவர்ந்து வர, அவரெதிர் சென்று அருச்சுனன் அவற்றை மீட்டான் என்ற வரலாறு வருகிறது. தமிழ் இலக்கணத்தில் மிகப் பழமையானது தொல்காப்பியம். அதில் ஆநிரை கவரும் வெட்சிக்கு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணம் தொல்காப்பியர் புதியதாகப் படைத்தது அல்ல. அதற்கும் முன்பே இருந்த நூல்களில் உள்ளவற்றை அடியொற்றியே அந்த இலக்கணத்தை அவர் வகுத்தார், அகவே, பழங்காலத்திலேயே ஆநிரை கொள்வது தமிழ் நாட்டில் மரபாக இருக்கிறதென்று கொள்ளலாம். இந்த மரபை உணர்ந்த மன்னர்கள், பாரதப் போர் தொடங்கும் முன்னர், இந்தத் தமிழ் நாட்டு மரபு நல்லதென எண்ணித் தாமும் மேற்கொண்டார்கள் என்றே தோன்றுகிறது.
(தொடர்கிறது)
$$$
One thought on “அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 2 அ”