அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 1

-கி.வா.ஜகந்நாதன்

கொன்றைக் கண்ணியர், கொன்றை மாலையர், இடபவாகனர், இடபத் துவசர், நீலகண்டர், மாதிருக்கும் பதியர், மதி முடிக் கடவுள் ஆக விளங்கும் சிவபெருமான் சடாதாரியாக இருக்கிறார்.சடாதாரி என்ற மாத்திரத்திலே தவமுனிவர் திருக்கோலந்தான் நம் நினைவுக்கு வருகிறது. மற்ற  கடவுளரின் கோலங்களில் இத்தனை தவச் சிறப்புடைய அடையாளங்களைக் காண முடியாது. திருநீறும், தோலாடையும், சடா பாரமும் ஆகியவை தவக் கோலத்தைச் சார்ந்தவை. ஆகவே சிவபிரானை அருந்தவர் என்று சொல்வது வழக்கம்.  ‘அருந்தவ முதல்வன்’ (கலி.100:7) என்று கலித்தொகை பேசுகிறது.

1. அருந்தவத்தோன்

கடவுள் வாழ்த்துப் பாடுவதில் சிறந்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். பெருந் தேவனார் என்ற பெயர் மகாதேவனாகிய சிவபெருமானைக் குறிக்கும். சிவபெருமானைக் குறித்து அகநானூற்றில் ஒருபாடலும் புறநானூற்றில் ஒரு பாடலும் அவர் பாடியிருக்கிறார். அப்பெருமானுடைய தோற்றத்தை அவ் விரண்டு பாடல்களிலும் வருணித்திருக்கிறார். புறநானூற்றில் சிவபெருமானை அவர் பாடிய பாடல் முதற் செய்யுளாக அமைந்திருக்கிறது.

சிவபெருமான் இடபவாகனத்தில் எழுந்தருளி வருகிறார். நெடுந்தூரத்திலே வரும் போதே நாம் அன்புடன் பார்க்கிறோம். அப்போது விளக்கமாக எது தெரியும்? அவருடைய திருமுடிதான் தெரியும். நெடுந்தூரத்தில் வருபவனுடைய தலையும் முண்டாசும் தெரிவதுதான் இயற்கை. பெருந்தேவனார் நெடுந்தூரத்திலே உலாவரும் சிவபெருமானைத் தரிசித்து நமக்கும் காட்டுவாரைப் போலத் திருமுடி தொட்டு வருணிக்கத் தொடங்குகிறார்.

அதோ! அவர் திருமுடியின்மேல் அடையாள மாலை இருக்கிறது. ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய அடையாளமாக ஒவ்வொரு கண்ணி உண்டு. சிவபெருமானுடைய அடையாளப் பூ, கொன்றை. கொன்றை மலர்க் கண்ணியைச் சூடும் பிரான் அவர். அந்தக் கொன்றை மலர் கார் காலத்திலே மலர்ந்து மணம் வீசுவது. கார் காலத்தில் மலரும் நறுங்கொன்றையே எம்பெருமானுக்குரிய கண்ணி.

அவருடைய திருமார்பு எவ்வளவு அழகாக இருக்கிறது! மாணிக்கம் பதித்தாற்போன்ற செவ்வண்ண மார்பம் அல்லவா? அந்த வண்ண மார்பிலே புரளும் மாலையைச் சற்றே பார்ப்போம். அந்தத் தாரும் கொன்றைதான். தலையிற் சூடும் அடையாள மாலையாகிய கண்ணியும் கொன்றை; அழகுக்கும் இன்பத்துக்குமாக மார்பிலே அணியும் மாலையாகிய தாரும் கொன்றை.

பெருமான் ஊர்ந்து வரும் ஊர்தி இடபம்; அந்த ஏறு தூய்மையை உடையது; வெண்ணிறமானது. தர்மத்தையே ஊர்தியாக ஊர்பவன் இறைவன். தர்மம் மாசு மறுவற்றது. ஆதலின் விடையும் வெண்ணிறமாக இருக்கிறது.

சிவபிரான் கொடியை ஏந்தியிருக்கிறார். அதுவும் ஒரு அடையாளம். இன்ன கொடியை உடையவர் என்று அரசரையும் பிறரையும் குறிப்பதுண்டு. எம்பெருமானுக்குச் சிறந்த கொடியாக உதவுவதும் அந்தத் தூய வெண்மையான ஏறுதான்.

சிவபிரானுடைய மஞ்சள் நிறக் கொன்றைக் கண்ணியுந் தாரும், அவருடைய தூய வெள்ளை ஏறாகிய ஊர்தியும் கொடியும் நன்றாகத் தெரிகின்றன. இவை அவருடைய திருமேனிக்குப் புறம்பான அடையாளங்கள். அவருடைய திருமேனியைப் பார்க்க வேண்டாமா? சற்று அதைக் கவனிப்போம்.

அது என்ன, அவருடைய திருக்கழுத்தில் கன்னங்கறேலென்றிருக்கிறதே! அது கறுப்பாக இருந்தாலும் பெருமானுடைய திருக்கழுத்தில் அழகாக அமைந்திருக்கிறது. செவ்வண்ணத் திருமேனியில் இந்தக் கறுப்பு நிறம் விட்டு விளங்குகிறது. கழுத்திலே நீலமணி கட்டினால் எவ்வளவு அலங்காரமாக இருக்கும்? அப்படி அணி செய்கிறது இந்தக் கறை. அழகு செய்வது மாத்திரமா? அந்தக் கறைக்குத்தான் எத்தனை பெருமை! இறைவனை நீலகண்டன் என்று யாவரும் பாராட்டுகிறார்களே, அது அந்தக் கறையை நினைந்துதானே? தேவர்கள் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விடம் எழுந்தது. அது கண்டு அஞ்சி ஓடினார் அமரர். தமக்கு அமுதம் வந்தாலும் வராவிட்டாலும் அந்த நஞ்சினின்றும் தம் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமே என்ற அச்சம் உண்டாயிற்று. சிவபிரானிடம் ஓடிவந்து ஓலம் இட்டனர். அவர்கள் உயிருக்கு உலைவைக்க வந்த அந்தக் கரிய நஞ்சை இறைவனார் உண்டு தம் திருக்கழுத்தில் தங்கும்படி அமைத்துக்கொண்டனர். தேவர்களின் ஆருயிரைக் காத்த பெருமை அவர் திருக்கழுத்துக்கு உரியது. அது கறுத்ததனால் தேவர்கள் உயிர் பெற்று ஒளிபெற்றனர். சிவபிரான் கழுத்தில் கறை நின்றமையால் அமரர் மனைவிமார் கழுத்தில் மாங்கல்யங்கள் நின்றன. ஆகவே அந்தக் கறை தேவரைக் காத்தது. தேவர்கள் தம் கடமையைச் செய்வதனால் உலகம் இயங்கி வருகிறது. ஆதலின் உலகத்தைக் காப்பதற்கும் அந்தக் கறை காரணமாயிற்று.

இத்தனை பெருமை உள்ள நீலகண்டத்தை அன்பர்கள் புகழ்கிறார்கள். வேதத்தைப் பல காலும் ஓதும் அந்தணர்கள் அக் கறையின் சிறப்பைச் சொல்கிறார்கள். வேதத்தில் ருத்திரம் என்ற பகுதியில் சிவபிரானுடைய பெருமை சொல்லப்படுகிறது. அங்கே அவருடைய நீலகண்டத்தின் புகழையும் காணலாம். மறையை நவிலும் அந்தணர் அப்பகுதியை ஓதுவதன் வாயிலாகச் சிவபிரான் திருக்கழுத்துக் கறையைப் போற்றுகிறார்கள்.

சிவபெருமானுக்கு உயிர்களிடத்தில் உள்ள கருணையையும், எதனாலும் அவர் அழியாத பெருமையுடையார் என்ற சிறப்பையும் வெளியிடும் அடையாளமாக அக்கறையானது மிடற்றை அணி செய்து கொண்டிருக்கிறது. அந்தக் கறையை நினைக்கும்போது அதைக் கழுத்தளவில் நிற்கும்படி செய்த உமாதேவி நினைவுக்கு வருகிறாள். அப்பெருமான் நஞ்சை விழுங்கும்போது அது திருக்கழுத்தில் நிற்கும்படி இறைவி தன் கரத்தால் தடுத்து நிறுத்தினாள் என்று புராணம் கூறும்.

சிவபிரானுடைய அருளே வடிவமான அம்மை எம்பெருமானினின்றும் வேறாக இருப்பது ஒருநிலை. அப் பெருமானோடு ஒன்றுபட்டும் வேறாகியும் நிற்பது ஒரு நிலை. ஒன்றுபட்டே நிற்பது ஒரு நிலை. இந்த மூன்று நிலையில் பின் இரண்டையும் நினைவு கூர்கிறார் பெருந்தேவனார். ஒருபாதி எம்பிராட்டியும் ஒரு பாதி பெருமானுமாக இருக்கும் கோலம் மிகத் தொன்மையானது. அம்மை அப்பன் எனத் தனியே காணும்படி வேறாகத் தோற்றினாலும், இருவேறு உருவங்களாகத் தனித்தனியே நில்லாமையால் இந்த மாதிருக்கும் பாதியனாகிய கோலம் ஒன்றுபட்டும் வேறாகியும் நிற்கும் நிலையைக் காட்டுவது; பெண்ணின் திருவுருவம் ஒரு பாதியாக, ஒருதிறனாக, உள்ள கோலம் அது.

அந்த உருவமாகிய சக்தியைத் தமக்குள் அடக்கி ஒன்றாக நிற்கும் நிலையும் உண்டு. சிவமும் சக்தியும் ஒன்றுபட்டு நிற்கும் கோலம் அது. அக் கோலத்தில் சிவமே தோன்றுமன்றிச் சக்தி தோன்றுவதில்லை. சிவத்திலிருந்து சத்தி தோற்றுவாள். சத்தியிடத்திலிருந்து தத்துவங்களெல்லாம் தோற்றும். தோற்றும் முறை இது. ஒடுங்கும் முறை இதற்கு மாறானது. தத்துவங்கள் ஒன்றனுள் ஒன்று அடங்க, இறுதியில் யாவும் சக்தியுள் அடங்கும். அப்பால் அச்சக்தியும் சிவத்துள் அடங்கும். ஒடுங்கும் முறையில் சிவபிரான் தமக்குள் சக்தியை அடக்கிக் கொள்ளுதலை  பெருந்தேவனார் சொல்கிறார்.

சிவபெருமான் தம்முடைய திருமுடியிலே பிறையைச் சூடியிருக்கிறார். அது அவர் திருமுடியில் இருந்தபடியே அவருடைய நெற்றியிலே தன் ஒளியை வீசுகிறது. அதனால் அந்த நுதலுக்கு வண்ணமாக, அழகாக அமைந்திருக்கிறது. சந்திரனுக்கு இறைவனார் திருமுடிமேல் இருக்கும் சிறப்புக் கிடைத்தது. அது தேவர்களில் யாருக்கும் கிடைக்கவில்லை. தேவர், அசுரர், முனிவர் முதலாக அறிவுடைய கூட்டத் தினரைப் பதினெட்டு வகையாகப் பிரிப்பர்; பதினெட்டுக் கணம் என்று சொல்வார்கள். அந்தப் பதினெட்டுக் கணத்தினரும்,  ‘இந்தப் பிறைக்கு வந்த பாக்கியமே பாக்கியம்!’என்று அதைக் கொண்டாடுகிறார்கள்.

இவ்வாறு கொன்றைக் கண்ணியர், கொன்றை மாலையர், இடபவாகனர், இடபத் துவசர், நீலகண்டர், மாதிருக்கும் பதியர், மதி முடிக் கடவுள் ஆக விளங்கும் சிவபெருமான் சடாதாரியாக இருக்கிறார்.சடாதாரி என்ற மாத்திரத்திலே தவமுனிவர் திருக்கோலந்தான் நம் நினைவுக்கு வருகிறது. மற்ற  கடவுளரின் கோலங்களில் இத்தனை தவச் சிறப்புடைய அடையாளங்களைக் காண முடியாது. திருநீறும், தோலாடையும், சடா பாரமும் ஆகியவை தவக் கோலத்தைச் சார்ந்தவை. ஆகவே சிவபிரானை அருந்தவர் என்று சொல்வது வழக்கம்.  ‘அருந்தவ முதல்வன்’ (கலி.100:7) என்று கலித்தொகை பேசுகிறது.

தாழ்ந்த சடையினாற் சிறப்பாக விளங்கும் அருந்தவத்தினராகிய இப்பெருமான் திருமுடியில் என்றும் நீர் குறையாத கங்கை இருக்கிறது. எல்லா உயிர்க்கும் இம்மை மறுமை இன்பங்களைத் தருவது கங்கை. கங்கை சுருண்டு திரண்டு அப் பெருமான் திருமுடியில் அடங்கிக் கிடக்கிறது. நீரைச் சேமித்து வைத்த கமண்டலம் போல, கரகம் போல, அது தோன்றுகிறது. ஆதலின் அதை நீர் அறு தலை அறியாத கரகம் என்றே சொல்லி விடலாம்.

எல்லா உயிர்களுக்கும் ஏமமாக இருக்கும் நீர் சிறிதும் அறுதலை அறியாத கரகத்தை உடைய தாழ்ந்த சடையினால் பொலிவு பெற்ற அரிய தவக் கோலத்தினராகிய சிவபிரானுக்குக் கண்ணிக் கொன்றை; தாருங்கொன்றை; ஊர்தி ஏறு; கொடியும் ஏறு. அவர் கழுத்தை அணி செய்வது ஒரு கறை; அந்தக் கறையை வேதம் ஓதும் வேதியர் புகழ்கின்றனர்.அவருடைய ஒருபாதியில் பெண் உருவம் உள்ளது; அதனை அவர் தமக்குள் அடக்கி வைத்துக்கொள்வதும் உண்டு. அவர் சூடிய பிறை நுதலுக்கு வண்ணமாக உள்ளது; அதைப் பதினெட்டுக் கணத்தினரும் போற்றி வழிபடுகிறார்கள்.

இப்படி நமக்குச் சிவபெருமானைக் காட்டுகிறார் பெருந்தேவனார்.

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பில் தாரும் கொன்றை.
ஊர்தி வால்வெள் ஏறே;
சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப.
கறை, மிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே.
பெண்உரு ஒருதிறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்.
பிறை, நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே:
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீர்அறவு அறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

விளக்கம்: எல்லா உயிர்களுக்கும் இன்பந்தருவதாகிய நீர் என்றும் அறுதலை அறியாத கலசம் போன்ற கங்கையையுடைய தாழ்ந்த சடையினால் விளக்கம் பெற்ற அரிய தவத் திருக் கோலத்தையுடைய சிவபெருமானுக்குத் தலையில் அணியும் அடையாள மாலை, கார் காலத்தில் மலரும் கொன்றைப் பூ; அழகிய செந்நிறம் பெற்ற திருமார்பில் உள்ள மாலையும் கொன்றைப்பூ. அவன் ஏறும் வாகனம் தூய வெள்ளை யான விடை; சிறப்புப் பெற்ற புகழை உடைய கொடியும் அந்த விடையே என்று ஆன்றோர் கூறுவர். நஞ்சினால் உண் டான கறுப்பு அவன் திருக்கழுத்தை அழகு செய்தது; அந்தக் கறுப்பு வேதத்தை ஓதும் அந்தணர்களால் புகழவும் பெறும். பெண் உருவம் ஒருபாதி ஆயிற்று; அவ்வுருவத் தைத் தனக்குள் ஒரு காலத்தில் மறைத்தாலும் மறைப்பான். பிறை திருநெற்றிக்கு அழகாக அமைந்தது; அந்தப் பிறை பதினெட்டுக் கணத்தினரால் பாராட்டப் பெறவும் படும்.

அருஞ்சொற்பொருள்: கண்ணி- முடியில் அணியும் அடையாள மாலை. காமர்- அழகு. வண்ணம்- நிறம். தார்- மார்பில் அணியும் மாலை. ஊர்தி- வாகனம். வால்- தூய. ஏறு-  இடபம். என்ப- என்று சொல்வார்கள். கறை – கறுப்பு. மிடறு- கழுத்து. அணிந்தன்று- அணியாக அமைந்தது. ஒரு திறன்- ஒரு கூறு. ஆகின்று- ஆயிற்று. கரக்கும்- மறைப்பான். நுதல்- நெற்றி. வண்ணம்- . ஏத்தல்- துதி செய்தல். ஏமம்- இன்பம்; பாதுகாப்புமாம். அறவு- அறுதல். கரகம்- கமண்டலம் போன்று அடங்கி நிற்கும் கங்கை; ஆகுபெயர். அருந்தவத்தோன்- சிவபெருமான்.

பெருந்தேவனார் இங்கே கார்நறுங் கொன்றை என்றது போலவே அகநானூற்றிலும்,  ‘கார் விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்’ என்று பாடுகிறார். கன்னி என்பது வீரத் துக்கு அறிகுறி; போரில் அடையாளப் பூவாகக் கொள்வது. போர்ச் செயலைப் பெரும்பான்மையும் எடுத்துக் கூறும் நூல் புறநானூறு. இதன் கடவுள் வாழ்த்தில் வீரத்திற்கேற்ப கண்ணியை முதலில் நினைத்தார். தார் என்பது காதலுக்கு அறிகுறி; போகத்துக்குரியதென்று நச்சினார்க்கினியர் எழுதுவர். ஆதலின் வீரத்தைச் சொல்லும் புறப் பொருளும் காதலைச் சொல்லும் அகப்பொருளும் ஒருங்கே நினைத்த வாறாயிற்று.

சிவபெருமானுடைய தர்ம ரிஷபம் வெண்மையானது என்றும், பதினொரு ருத்திரர்களின் ஊர்திகளாகிய இடபங்கள் கரிய நிறம் உடையனவென்றும் தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூறுவர்.

வெற்றித் திறத்தைக் காட்டுவதாதலின்  ‘சிறந்த சீர்கெழு கொடி’ என்றார். இறைவன் திருக் கோலம் முதலியன அவனருளே கண்ணாகக் கண்ட பெரியோர்களால் உணர்ந்து சொல்லப் பெற்றன. அவர் கூறியதை வரன் முறையாகத் தெரிந்து பிறர் கூறுவர். தாமே நேரிற் கண்டறியாது ஆன்றோர் கூறுவன வற்றை உணர்ந்து கூறுதலின்  ‘என்ப’ என்றார். இடை எல்லாவற்றிற்கும் பொதுவாகக் கொள்ள வேண்டும்.

அணியலும் அணிதன்று என்பது அணி தலைச் செய்தது என்ற பொருளுடையது. பதினெண் கணங்களைப் பலவாறு புலவர்கள் கூறுவர். தேவர், அசுரர், முனிவர், கின் னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்யாதரர், நாகர், பூதர், வேதாளம், தாராகணம், ஆகாச வாசிகள், போக பூமியோர் என்னும் பதினெட்டு வகையினரைச் சொல்வர் புறநானூற்று உரை யாசிரியர். இவற்றிற் சிறிது வேறுபாட்டுடன் கூறுவோரும் உண்டு.

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய அருந்தவத் தோன் என்று கூட்டி, உயிர்களைக் காப்பாற்றுபவன் சிவபெருமான் என்று கொள்வதும் பொருந்தும். கரகம் என்பதற்குக் குண்டிகை என்றே பொருள் உரைப்பார் பழைய உரையாசிரியர். ‘கரகத்தாலும் சதையாலும் சிறந்த செய்தற்கரிய தவத்தை யுடையோனுக்கு’ என்பது அவர் உரை.  ‘தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு, அவ்வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளே அடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையும் என்று உரைப்பினும் அமையும்’ என்று மற்றோர் உறையும் கூறுவர்.

 ‘இப் பெரியோனை மனமொழி மெய்களால் வணங்க, அறம் முதல் நான்கும் பயக்கும் என்பது கருத்தாகக் கொள்க’ என்று கருத்துரைப்பர்.

கடவுள் வாழ்த்து என்பது புறத்துறைகளில் ஒன்றாதலால் புறத்துறைகள் அடங்கிய புறநானூற்றின் அகத்தே இது முதற் பாட்டாக அமைந்தது.

(தொடர்கிறது)

$$$

One thought on “அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 1

Leave a comment