கொன்றைக் கண்ணியர், கொன்றை மாலையர், இடபவாகனர், இடபத் துவசர், நீலகண்டர், மாதிருக்கும் பதியர், மதி முடிக் கடவுள் ஆக விளங்கும் சிவபெருமான் சடாதாரியாக இருக்கிறார்.சடாதாரி என்ற மாத்திரத்திலே தவமுனிவர் திருக்கோலந்தான் நம் நினைவுக்கு வருகிறது. மற்ற கடவுளரின் கோலங்களில் இத்தனை தவச் சிறப்புடைய அடையாளங்களைக் காண முடியாது. திருநீறும், தோலாடையும், சடா பாரமும் ஆகியவை தவக் கோலத்தைச் சார்ந்தவை. ஆகவே சிவபிரானை அருந்தவர் என்று சொல்வது வழக்கம். ‘அருந்தவ முதல்வன்’ (கலி.100:7) என்று கலித்தொகை பேசுகிறது....