அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- முகவுரை

-கி.வா.ஜகந்நாதன்

பழந்தமிழ் இலக்கியத்தின் சிறந்த நூல்களின் ஒன்றான புறநானூறில் சில பாடல்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு இனிய சொற்சித்த்ரத்தைத் தீட்டுகிறார் அமரர் கி.வா.ஜ. வாருங்கள் அந்த இனிய தமிழில் தோய்வோம்...


நன்றி:
அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)
-கி.வா.ஜகந்நாதன்
பரமசிவ நிலையம், 127, லாயிட்ஸ் ரோட், சென்னை-6
ஏ.பி.நாகராஜன், அமுத நிலையம் லிமிடெட், சென்னை-18
முதற் பதிப்பு, ஆகஸ்டு-1952
விலை ரூ. 3, பரிசுப் பதிப்பு ரூ. 5
நாஷனல் ஆர்ட் பிரஸ், சென்னை-18


***

முகவுரை

கடைச் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்ற வரிசையில் புறநானூறும், பதிற்றுப் பத்தும் புறத்துறைகள் அமைந்த பாடல்களால் ஆகியவை. அகத்தின்கண் தோன்றி, இன்னதென்று வெளியிட்டுச் சொல்ல முடியாததாகிய காதலைப் பற்றிய செய்திகளை அகம் என்று வகுத்தனர் தமிழர். அறம், பொருள், இன்பம், வீடு என்று உறுதிப் பொருள் நான்கில் இன்பம் என்பது அது. மற்ற மூன்றைப் பற்றிய செய்திகளும் புறப் பொருள் என்ற வகையில் அடங்கும். உணர்ச்சியைத் தலைமையாக உடையது அகம். செயலை எடுத்துரைப்பது புறம். புறத்தவர் களுக்கு வெளிப்படும்படியான நிகழ்ச்சிகள் நிகழ்வதனால் புறம் என்று வகுத்தார்கள்.*1

புறத்துறைகளில் பெரும்பாலும் வீரத்தைச் சார்ந்த செய்திகளும் சிறுபான்மை அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்பவர்களுடைய இயல்புகளும் சிறப்புகளும் சொல்லப் பெறுகின்றன. அகப்பொருளைச் சார்ந்த பல வகைக் காமத்தைப் பற்றிக் கூறும் திணைகள் ஏழு. அவை குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந் திணை என்பவை. இவற்றில் ஒவ்வொன்றுக்கும் பல துறைகள் உண்டு. இப்படியே புறப் பொருளிலும் திணைகளும் துறைகளும் உண்டு. அகப்பொருள் சம்பந்தமான திணைகளைப் பற்றிய இலக்கணத்தை எல்லா இலக்கண நூலாரும் ஒரே மாதிரி கூறினர். ஆனால் புறப் பொருட் பிரிவில் இரண்டு வகைக் கொள்கைகள் பழங்காலம் முதற்கொண்டு இருந்து வருகின்றன. அகத்தியம், தொல்காப்பியம் என்ற நூல்கள் புறப் பொருளுக்கு ஏழு திணைகள் கூறின. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பவை.

வெட்சித்திணை பகைவருடைய ஆநிரையை அவர் அறியாமல் கொணர்ந்து பாதுகாத்தலைச் சொல்வது. நாடு பிடிக்கும் ஆசையால் ஒரு மன்னன் மற்றொரு மன்னன்மேற் போர்க்குச் செல்லுதல் வஞ்சித்திணை. அரணை முற்றுகையிடுதலைச் சொல்வது உழிஞை. வீரச் சிறப்பு வெளிப்படும் பொருட்டு வேந்தர் பொருதல் தும்பை. அரசர் முதலியவர்களின் தொழிலைச் சிறப்பித்துச் சொல்லுதல் வாகை. நிலையாமையைப் புலப்படுத்துவது காஞ்சித் திணை. புகழ்தல் வகையாலும் வாழ்த்துதல் வகையாலும் பிறரைச் சிறப்பித்துப் பாடுவது பாடாண்திணையாகும். இவற்றுள் ஒவ்வொன்றும் பல துறைகளாக விரியும்.

தொல்காப்பியர் கூறியவற்றில் சில திணைகளை இரண்டாகப் பிரித்தும், அவர் அகத்தைச் சார்த்திவைத்த கைக்கிளை, பெருந்திணைகளையும் கூட்டியும், வேறு சிலவற்றைச் சேர்த்தும் புறப்பொருளைப் பன்னிரண்டாக வகுத்தனர் சிலர். அப்படிப் பகுத்து இலக்கணம் சொன்ன நூல்களில் பழமையானது பன்னிரு படலம். அதில் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வோர் ஆசிரியர் இயற்றினர் என்று தெரிய வருகிறது. அது இப்போது கிடைக்கவில்லை. அந்த நூலை அடியொற்றி எழுந்த மற்றோர் இலக்கண நூல் புறப்பொருள் வெண்பாமாலை. அதனை இயற்றியவர் ஐயன் ஆரிதனார் என்பவர். வீரசோழியம் என்னும் இலக்கணத்திலும் புறப்பொருளை  பன்னிரண்டு பிரிவாகவே அதன் ஆசிரியர் பிரித்து இலக்கணம் கூறுகிறார்.

புறநானூற்றில் உள்ள பாடல்களுக்குத் திணையும் துறையும் பழங்காலத்தில் வகுத்திருக்கிறார்கள். அவை புறப்பொருள் வெண்பா மாலையிற் கண்ட முறையையே தழுவியவை. ஆயினும், அவ்வாறு துறை வகுப்பது கூடாது என்பது நச்சினார்க்கினியர் கருத்து.  ‘தத்தம் புது நூல் வழிகளால் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டுமென்று அறிக’ என்று அவர் எழுதுகிறார். தொல்காப்பியப் புறத்திணை இயல் உரையில் புறநானூற்றுப் பாடல்களை மேற்கோள் காட்டும் இடங்களிலெல்லாம் அவர், இதில் உள்ளபடி சொல்லாமல் வேறு திணை துறைகளை அமைத்துக் காட்டுகிறார்.

புறப்பொருள் வெண்பா மாலையின்படி அமைந்த புறத்திணைகள் வருமாறு:

வெட்சி: பகைவர் ஆநிரையைக் கவர்தல்.
கரந்தை: பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்டல்.
வஞ்சி: பகைவர் நாட்டைக் கைப்பற்ற எண்ணிப் போர் செய்யப் புறப்பட்டுச் செல்லுதல்.
காஞ்சி: போர் செய்வதற்கு வந்த மன்னருக்கு எதிரே பகையரசர் செல்லுதல்.
நொச்சி: பகைவர் தம் மதிலை முற்றுகையிட்டபோது மதிலைக் காத்தல்.
உழிஞை: பகைவருடைய மதிலை முற்றுகையிடுதல்.
தும்பை: பகைவரோடு ஊக்கத்துடன் போர் செய்தல்.
வாகை: பகைவரை வெற்றி கொள்ளுதல்.
பாடாண் திணை: ஒருவனுடைய புகழ், வலிமை, ஈகைத் திறன் முதலியவற்றைச் சிறப்பித்தல்.
பொது இயல்: முன்னே சொன்னவற்றிற்குப் பொதுவானவையும் பிறவுமாகிய செய்திகள்.
கைக்கிளை: ஒருதலைக் காமம்.
பெருந்திணை: பொருந்தாக் காமம்.

***

இந்த முறையைச் சார்ந்த துறைகளையே புறநானூற்றுச் செய்யுட்களின்பின் பழங்காலத்திலிருந்து குறிப்பித்து வருகிறார்கள். புறத்துறைச் செய்யுட்கள் நானூறு அமைந்தமையால் புறநானூறு என்ற பெயர் வந்தது. இந்தப் பாடல்களைப் பாடியவர் ஒரு புலவர் அல்லர்; பல்வேறு காலத்தில் பல தொழிலும் பல நிலையும் உடையவர்களாய்ப் பல ஊர்களிலே வாழ்ந்தவர்கள். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய மரபில் வந்த புலவர்களின் பாடல்கள் இதில் உள்ளன. முடியுடை மன்னர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் இயற்றிய பாடல்களும் இதில் இருக்கின்றன.

மற்ற தொகை நூல்களுக்கு இல்லாத தனிச் சிறப்பைப் புறநானூறு பெற்றிருக்கிறது. இதில் உள்ள பாடல்களிற் பெரும்பாலானவை உண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சார்ந்தவை. மன்னர்களிடையே நிகழ்ந்த போர்களையும், அவர்களின் வெற்றி தோல்விகளையும், அவர்களுக்குத் துணையாக நின்றவர்களின் இயல்புகளையும், தோல்வியுற்ற மன்னர்களின் நாடு அழிந்ததையும், புரவலர்கள் புலவர்களைப் போற்றிவந்த இயல்பையும், போர் மூண்ட காலத்துப் புலவர்கள் இடைப்புக்குச் சமாதானம் உண்டாக்கியதையும், புலவர்களின் பெருமிதத்தையும், பாணர் விறலியர் கூத்தர் ஆகிய கலைவல்லுநர்கள் வள்ளன்மையுடையோரிடம் பரிசில் பெற்ற செய்தியையும், வள்ளல்களின் வண்மைச் செயல்களையும் தெரிவிக்கும் பாடல்கள் இத்தொகை நூலில் கோக்கப் பெற்றிருக்கின்றன. ஆதலின் தமிழ்நாட்டின் பழைய சரித்திரத்தை அறிவதற்கு இந்த நூல் மிகமிகச் சிறந்த துணையாக விளங்குகிறது. அகத்துறைப் பாடல்களில் சார்ந்து வகையினால் அங்கங்கே சில சில மன்னர்களையும் செல்வர்களையும் பற்றிய செய்திகள் வரும். புறநானூற்றுச் செய்யுட்களிலோ ஒவ்வொன்றும் ஒவ்வொரு சரித்திரத் தொடர்புள்ள செய்தியைத் தெரிவிக்கும். சேர சோழ பாண்டிய மரபு பற்றிய வரலாற்றுச் செய்திகளும், பாரி முதலிய வள்ளல்களின் சரிதையைப் புலப்படுத்தும் செய்தி களும் இந்த நூலினால்தான் விரிவாக அறிய முடிகின்றன.

இவற்றையன்றிப் பழங்காலத்துத் தமிழ் நாட்டின் அரசியல், தமிழ் மக்களின் வாழ்வியல், கலைநிலை, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் பொருள்களோடு தொடர்புடைய செய்திகள், அக்காலத்து மக்கள் கொண்டிருந்த எண்ணங்கள் முதலிய பலவற்றையும் இந்நூற் பாடல்கள் தெரிவிக்கின்றன. அவற்றைக் கொண்டு பண்டைத் தமிழர் நாகரிகத்தின் பல துறைகளைத் தெளிந்து உருவாக்க முடிகிறது.

***

இந்தப் புத்தகத்தில் புறநானூற்றிலுள்ள ஏழு பாடல்களுக்குரிய விளக்கத்தைக் காணலாம். பாடல்கள் நிகழ்ச்சிகளை நிலைக்களமாக உடையவை. ஆதலால் இந்த விளக்கங்கள் யாவும் கதைப் போக்கிலே அமைந்திருக்கின்றன. உண்மையில் புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களும் நானூறு சிறு கதைகளாக எழுதுவதற்குரிய கருவை உடையவை. அத்தகைய கதைகளை முன்பு என் ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் திருவடிபற்றி நிற்கும் எளியேனும் அவ்வகையில் சில கதைகள் எழுதியிருக்கிறேன்.* 2

இப் புத்தகத்தில் உள்ள முதல் கட்டுரை புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடல் பற்றியது. சிவபெருமானைப் பற்றிய செய்திகளை பெருந்தேவனார் அதில் சொல்கிறார். அப் பெருமானுடைய கொன்றைக் கண்ணியையும் கொன்றைத் தாரையும், இடப ஊர்தியையும் இடபக் கொடியையும், நீல கண்டத்தையும், மாதிருக்கும் பாதியையும், கங்கைத் திரு முடியையும், திருமுடிப் பிறையையும், தாழ்ந்த சடையையும், தவக் கோலத்தையும் காட்டுகிறார். நீலகண்டத்தின் பெருமையை மறை நவில் அந்தணர் நுவல்கின்றனர் என்றும், திருமுடிப் பிறையைப் பதினெண்கணங்களும் ஏத்துகின்றன என்றும், சிவமும் சக்தியும் ஒன்றாகி நிற்பதும் உண்டு என்றும் சொல்கிறார்.

பல்யாசகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாகிய பாண்டியனைப் பற்றிய பாடல் ஒன்றும், பாலைபாடிய பெருங் கடுங்கோ, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர அரசர்களைப் பற்றிய பாடல்கள் இரண்டும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பற்றியது ஒன்றும், அதியமான், குமணன் என்னும் குறுநில மன்னர்களைப் பற்றிய பாடல்கள் இரண்டும் இப் புத்தகத்தில் உள்ளன. ஒரு பாட்டில் கடல் வடிம்பலம்ப நின்ற பாண்டியனைப் பற்றிய செய்திகள் இடையே வருகின்றன. இவற்றைப் பாடிய புலவர்கள் நெட்டிமையார், பேய்மகள் இளஎயினி, குறுங்கோழியூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், ஔவையார், பெருஞ்சித்திரனார் என்போர். இவர்களில் இளஎயினியாரும் ஔவையாரும் பெண் மக்கள்.

அரசர்களின் வீரச் சிறப்பும் கொடைச் சிறப்பும் இந்தப் பாடல்களால் நன்கு விளங்குகின்றன. அரசர்கள் போர் செய்யப் புகுவதற்கு முன் பகைவர் நாட்டில் உள்ள ஆவினங்களுக்கும் அந்தணர், பெண்டிர், நோயாளிகள், புதல்வரைப் பெறாதோர் ஆகியவர்களுக்கும் துன்பம் இழைக்க விரும்பாமல், முரசறைந்து தாம் போர் செய்யப் போவதை அறிவித்து, அவர்களைத் தக்க பாதுகாப்புச் செய்து கொள்ளும்படி முன்கூட்டியே உணர்த்துதல் பழைய வழக்கம். போர் செய்யப் புகுந்தாலும் இத்தகைய அன்புச் செயல்களும் இருத்தலின் அக்காலப் போர் அறப்போராக இருந்தது. ‘அறத்தாறு நவலும் பூட்கை மரம்’ என்று புலவர் இதைப் பாராட்டுகிறார். பகைவர்களுடைய அரண்களை முற்றுகையிட்டு வெல்லுதலும், அவர்கள் புறங்காட்டினால் அது கண்டு மகிழுந்து போரை நிறுத்துதலும், எதிர்த்து நின்ற பகைவர் நாட்டில் தீ வைத்து எரித்தலும், நட்புடையோர் நாட்டை வளம் பெறச் செய்தலும், தம்முடைய பேராற்றலால் நினைத்த காரியத்தை நினைத்தவாறே செய்து முடித்தலும் மன்னர்களின் வலிமையையும் வீரத்தையும் புலப்படுத்தும் செயல்கள். அவர்களுடைய வீரச் சிறப்பைப் புலவர்களும் பாணரும் விறலியரும் பாடிப் பரிசில் பெற்றார்கள்.

அரசர்களின் நல்லியல்புகளும் வளவாழ்வும் பல வகையாகப் புலவர்களால் சொல்லப் பெறுகின்றன. கல்வி கேள்விகளால் நிரம்பிய அறிவும், யாரிடத்தும் அன்பும், குற்றம் செய்தாரையும் பொறுக்கும் கண்ணோட்டமும் மிகுதியாகப் பெற்ற அரசர்கள் தம் நாட்டில் என்றும் அமைதி நிலவும்படி பாதுகாத்தார்கள். அந்த ஏமக்காப்பில் குடிமக்கள் பகை, பசி, நோய் என்பவற்றை அறியாமல் வாழ்ந்தார்கள். பிறருடைய கொடுமையால் அவர்கள் துன்புறுவதில்லை. பிறரையும் அவர்கள் துன்புறுத்துவதில்லை. அரசனுடைய வீரமும் படையும் பகைவரே இல்லாமற் செய்துவிட்டமையால் போரின்றி வாழும் இன்ப அமைதி அந்த நாட்டில் இருந்தது. கொலை செய்யும் வில்லையும் வேறு படைகளையும் அந்த நாட்டு மக்கள் அறியாமல் வாழ்ந்தார்கள். அரசனுடைய செங்கோலாட்சியில் அறம் கவலையின்றி வாழ்ந்தது. தீய நிமித்தங்கள் தோன்றினாலும் அவற்றை நோக்கி அஞ்சாமல் மக்கள் வாழ்ந்தனர். இத்தகைய இன்ப வாழ்வைச் சொர்க்க போகத்தினும் சிறந்ததாக எண்ணிப் புலவர் பாராட்டினர். வேறு நாட்டில் இருப்பவர்களும் இந்த நாட்டு வாழ்க்கையை நினைத்து போற்றினர். பாடல் சான்ற வேந்தனாகிய அவனுடைய நல்லியல்புகளைக் கண்ட குடிமக்கள்,  ‘இவனுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால் என் செய்வது!’  என்று அஞ்சி யாதொரு தீங்கும் நேராமல் இருக்க வேண்டுமென்று வாழ்த்தி வந்தார்கள்.

அரசன், வளமுடைய நாடும், அம்பு முதலிய படைகளை உடைய அரணும், மலை போன்ற யானையையும், தேர்களையும், பரந்த சேனையையும், வேற்படையையும் உடையவனாக இருந்தான். அவனைப் புலவர்கள் பாடினார்கள். அரசர்கள் களிற்றின்மேலே கொடியை ஏற்றி உலா வரச் செய்தார்கள். அரசிகளின் ஈகைத் திறனை உணர்ந்து புலவர்கள் பாராட்டினார்கள். கொடையிற் சிறந்த வேந்தர்களிடம் தமக்குப் பரிசில் வேண்டுமென்று குறிப்பாகப் புலப்படுத்தினார்கள். மன்னர் சிறந்த பொன்னைக் கூத்தர்களுக்கு ஈந்தனர். மறம் பாடிய விரலியருக்குப் பொன்னணிகளையும், பாணருக்குப் பொன்னாலான தாமரைப் பூவையும் வழங்கினர். புலவர்களைப் பாராட்டி, நிரம்பிய செல்வத்தை அளித்தனர். அதைப் பெற்ற புலவர்கள் அவற்றை நெடுங்காலம் சேமித்து வைக்கவேண்டும் என்று எண்ணாமல் எல்லோருக்கும் வழங்கி இன்புற்றார்கள். தம் மனைவிமாரிடமும்,  ‘எல்லோருக்கும் விருப்பப்படி கொடுங்கள்’ என்று சொன்னார்கள்.

செல்வத்தைப் பெற்ற பயன் ஈதல் என்பதே அக்காலத் தமிழர் கொள்கை. ஆதலின் இயற்கையாகச் செல்வத்தைப் பெற்ற மன்னர் அதைப் பிறருக்கு ஈந்து களித்தனர். அவர்பால் செல்வம் பெற்ற புலவர்களும் தம்மைச் சார்ந்தோருக்கு அதைக் கொடுத்து மகிழ்ந்தார்கள். செல்வம் உள்ளவர்கள் பிறருக்கு ஈதலும் இல்லாதவர் அதனைப் பெறுதலும் இல்லாவிட்டால் அந்த நாடு விரும்பத்தக்க தன்று என்று தமிழர் எண்ணினர். வானுலகத்து வாழ்வில் அவை இன்மையால் அது சிறந்தது அன்று என்று கொண் டார்கள்.

அறம் பொருள் இன்பங்களால் சிறந்த வளப்பமான வாழ்வு வாழ்ந்த மக்களை இப்பாடல்களிலே பார்க்கிறோம். சின்னஞ் சிறு பெண்கள் பொழிலிலும் ஆற்றிலும் விளையாடினார்கள். தூய பொன்னால் அமைந்த கனமான அணிகளை அணிந்து கொண்டனர். பாவை அமைத்து அதற்குப் பூச்சூட்டி மகிழ்ந்தனர். ஆற்றங் கரையிலுள்ள பூம் பொழிலில் பூவைக் கொய்தனர். ஆற்றில் பாய்ந்து நீராடி இன்புற்றனர்.

பாணனுடைய யாழிசையும், விறலியின் ஆடலும் பாடலும், வயிரியருடைய கூத்தும், புலவர்களின் கவிகளும் தமிழ்நாட்டைக் கலைவளம் சிறந்த கருவூலமாக்கின. பசி நீங்கச் சமைத்து உண்ணும் சோறு நிறைய இருந்தது; அந்த சோற்றுக்குரிய நெல்லை விளைக்கும் உழுபடையின் வளம் சிறந்திருந்தது; உழுபவர் செயலைச் சிறப்பித்துப் பயன் உண்டாக்க உதவும் மேகம் அழகிய வானவில்லைத் தோற்றி மழை பொழிந்தது.

பெண்டிர் கற்பிலே சிறந்து நின்றனர். வறுமையிலும் செம்மையாக இல்லறத்தை நடத்தினர். ஏதேனும் பொருள் தம்பால் இல்லையானால் மற்றவர்களிடம் அளவு குறித்து அதை வாங்கிப் பிறகு அதைத் திருப்பிக் கொடுக்கும் வழக்கம் அப்போதும் இருந்தது. இதைக் குறியெதிர்ப்பை என்று கூறுவார்கள். இல்லத்தில் நிகழும் நிகழ்ச்சிகளுக்குரிய பொறுப்பை ஏற்று வந்தாள் மனைவி. அவளை ‘மனைக் கிழவோய்’ என்று ஒரு புலவர் விளிக்கிறார். கருவுற்ற மகளிர் மண்ணைக் கிள்ளி உண்டார்கள்.

தெய்வ பக்தியிலே சிறந்தவர்கள் தமிழர்கள். சிவ பெருமானைப் பற்றிய பல செய்திகளை அவர்கள் தெரிந்து கொண்டிருந்தனர். தேவர் முதலிய பதினெட்டுக் கணத்தினர் உண்டு என்று நம்பினர். பசுக்களைப் பாதுகாத்தனர். அந்தணரிடமும் பெண்டிர்களிடமும் பிணியுடையவர்களிடமும் இரக்கம் காட்டினர். பிதிரரை நோக்கிச் செய்வனவற்றைச் செய்வது புதல்வர்களின் கடமை என்று நம்பினர். கற்பகப் பூஞ்சோலையை உடையது தேவலோகம் என்றும், புண்ணி யம் செய்தவர்கள் அதன் பயனாக அவ்வுலகத்தை எய்தலாம் என்றும் எண்ணினார்கள். கடலும், நிலமும், திசைகளும் அளப்பதற்கு அரியன என்பது அவர்கள் நினைவு. புதுப் புள் வந்தாலும் பழம் புள் போனாலும் அவற்றைத் தீய நிமித்தமாகக் கொண்டனர்.

நீரின் பெருமையை ‘எல்லா உயிர்க்கும் ஏமமாகிய நீர்’ என்று புலப்படுத்துவார் ஒரு புலவர். பிறருடைய நாட்டை வென்று தன்னுடையதாகக் கொண்டு பயன்படுத்தும் மன்னனை, ‘பிறர்மண் உண்ணும் செம்மல்’ என விளிப்பர் ஒரு நல்லிசைச் சான்றோர். ஒரு வள்ளல் கொடுக்கும் கொடை நிச்சயமாகத் தமக்குக் கிடைக்கும் என்பதை, அது  ‘யானை கோட்டிடை வைத்த கவளம்’ போன்றது என்று உவமை கூறி உணர்த்துவார். ஒருவரை வாழ்த்தும்போது ஆற்று மணலினும் பலகாலம் வாழ்வாயாக என்று வாழ்த்துவது புலவர் மரபு.

***

சுவையும் நயமும் அமையப் புலவர்கள் அழகிய பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். சங்கப் பாடல்களில் சில சொற்களால் பல செய்திகளைச் சொல்லும் முறையைக் காணலாம். கொன்றை மலர் கார் காலத்திலே மலர்வது என்பதை,  ‘கார் நறுங்கொன்றை’ என்று சுருக்கமாகத் தெரிவிக்கிறார் ஒரு புலவர். புதல்வர் இம்மைக்கும் மறுமைக்கும் எய்ப்பில் வைப்பாகப் பயன்படுவர் என்பதை,  ‘பொன்போற் புதல்வர்’ என்ற தொடரால் ஒருவர் விளங்க வைக்கிறார். ஒரு மன்ன னுடைய ஆட்சி மிகச் சிறப்பாக அறநெறி வழாமல் நடைபெற்றது என்பதை,  ‘அறந்துஞ்சும் செங்கோலையே’ என்று சில சொற்களால் தெளிவுபடுத்துகிறார் குறுங்கோழியூர் கிழார். ஒரு மன்னனுடய நாட்டிலே பிறந்து அவனுடைய நல்லாட்சியிலே என்றும் இன்பவாழ்வைப் பெறும் சிறப்பை,  ‘நின்னிழற் பிறந்து நின் நிழல்வளர்ந்த எம்’  என்பதில் அழகுபடப் புனைகிறார் சான்றோர்.

தமக்கு பரிசில் வேண்டும் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க விரும்பவில்லை பேய் மகள் இளஎயினியார். அந்தக் கருத்தைக் குறிப்பாகத் தெரிவிக்கிறார். ‘அரசன் பகைவருடைய புறத்தைப் பெற்றான். மறம் பாடிய பாடினி இழையைப் பெற்றாள். பான்மகனோ பொற்றாமரை பெற்றான்’ என்று கூறி நிறுத்துகிறார்.  ‘இத்தனையும் பாடிய நான் என்ன பெறப் போகிறேன்?’ என்ற கேள்வி தானே இந்தப் பாட்டின் முடிவிலே தொனிக்கிறது?

குறுங்கோழியூர் கிழார் சேரமானுடைய நாட்டில் உள்ள அமைதியைப் புலப்படுத்த வருகிறார். அதை நயமாகச் சொல்கிறார்.  ‘நின் நாட்டில் ஒரு தெறல் இல்லை; ஆனால் வேறு தெறல் உண்டு, குடிமக்கள் ஒரு வில்லை அறியார்; ஒரு வில்லை அறிவார். படையை அறியார்; ஆனால் ஒரு படையை அறிவார். யாரும் நின் மண்ணை உண்ணார்; ஆனால் சிலர் உண்பர்’ என்று சுவை உண்டாகும்படி சொல்கிறார்.  ‘சோற்றை உண்டாக்கும் தீயின் தெறலையும், இந்திர வில்லையும், நாஞ்சிற் படையையும் அறிவார். வயவுறு மகளிர் மண்வேட்டு உண்பர்’  என்று கூறுகிறார்.  ‘தெறல், கொலைவில், படை இவற்றை அறியார்; பிறர் நின்மண்ணை உண்ணார்’ என்று சொன்னவற்றாலே அந்த நாட்டில் பகை இல்லை, போர் இல்லை என்ற செய்தியைத் தெரிவித்தார். இன்னவை உண்டு என்னும் முறையில் சொல்லும் செய்திகளால் அந்த நாட்டில் சோறு நிறைய உண்டென்றும், மேகம் மழை பொழியும் என்றும், உழுதற்றொழில் சிறக்குமென்றும், மகளிர் இன்ப வாழ்விலே சிறந்து மனை வாழ்க்கைக்கு மங்கலமாகிய நன்மக்கட் பேற்றை உடையவர்களாவார்களென்றும் புலப்படுத்தி அந்த நாட்டில் உளதாகிய வளப்பத்தையும் விளக்குகிறார்.

ஒரு மன்னனைப் பகைத்தவர் அழிதலையும், சார்ந்தவர் வாழ்தலையும்  ‘நீ உடன்று நோக்கும் வாய் எரிதவழ, நீ நயந்து நோக்கும் வாய் பொன்பூப்ப’ என்று அழகு பெறக் கூறுகிறார் ஆவூர் மூலங்கிழார். அவர் சோழனுடைய பேராற்றாலை,  ‘செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண்டிங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை’ என்று சொல்வர்.

இவ்வாறு தம் கருத்தை பல முறையில் இனிமையும் அழகும் பயப்பக் கூறும் புலவர்களின் கவித்திறமை, அறிந்தறிந்து சுவைத்துச் சுவைத்து மகிழ்வதற்குரியது.

புறநானூற்றில் முதல் 266  பாடல்களுக்கு மட்டும் பழைய உரை ஒன்று உண்டு.  அதை எழுதியவர் இன்னாரென்று தெரியவில்லை. தமிழ் நாட்டின் பழம் பெருமையையும் வரலாற்றையும் விளக்கும் இந்த அரிய நூலைத் தேடிக் கண்டுபிடித்து ஆராய்ந்து பதிப்பித்த அருஞ்செயலைச் செய்தவர்கள் என் ஆசிரியப்பிரானாகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள். புறநானூறு வெளிவந்தது முதல் இதுவரையில் அந் நூலைத் துணையாகக் கொண்டு அறிஞர்கள் எழுதி வெளியிட்ட ஆராய்ச்சி நூல்கள் பல; சரித்திர நூல்கள் பல; கதைகள் பல. இன்னும் விரிவான ஆராய்ச்சிக்கு இடம் கொடுக்கும் அரிய செய்திகள் அந்த நூலில் இருக்கின்றன. தமிழ் நாட்டின் இலக்கிய வளமும், வரலாற்றுச் செல்வமும், கவிநுகர் திறமும், பழம்பெருமை யுணர்ந்து கொள்ளும் பெருமிதமும் அந்த நூலால் எத்தனையோ படிகள் மேலோங்கி விட்டன என்பது தமிழர்கள் நன்குணர்ந்த செய்தி. இதற்கு மூலமான அருந்தொண்டைப் புரிந்த தமிழ்க் கற்பகமாகிய என் ஆசிரியப்பிரானை  தமிழ் நாடு என்றும் மறக்க இயலாது என்பது முக்காலும் உண்மை.

‘பொதியமலைப் பிறந்தமொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவோர் வாயில்
துதியறிவாய் அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே’

என்று பாரதியார் பாடிய பாட்டும் அதைத்தானே சொல்கிறது?

***

சங்கநூற் காட்சிகள் என்ற வரிசையில் இது ஐந்தாவது புத்தகம். இதற்குமுன் வந்த நான்கும் அகப்பொருளைப் பற்றியவை. இது புறப்பொருளைப் பற்றியது. ஆகவே அந்தப் புத்தகங்களில் உள்ள கட்டுரைகளின் போக்குக்கும் இதில் உள்ள விளக்கங்களின் போக்குக்குமிடையே சில வேறுபாடுகள் இருக்கக் காணலாம். செய்யுட்களின் உரைகளில் பழைய உரையாசிரியர் உரைக்கு வேறுபட்ட பகுதிகள் சில இருக்கும். சில இடங்களில் அவர் இரண்டாவதாக ஓர் உரை எழுதுகிறார். அந்த உரை சிறப்பாகத் தோன்றியதால் அதையே தழுவி விளக்கம் எழுதிய சில இடங்களும் உண்டு. இதிலே வரும் மன்னர்கள், புலவர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் தொகுத்துத் தருவதானால் மிக விரியுமாதலால், பாட்டின் விளக்கத்துக்குப் போதிய அளவில் அவற்றைக் கொடுத்திருக்கிறேன்

இதற்குமுன் வெளிவந்த புத்தகங்களை ஆதரித்துப் பாராட்டிய அன்பர்கள் இதனையும் இனி வர இருக்கும் நூல்களையும் பெற்று ஊக்குவிப்பார்கள் என்றே நம்புகிறேன். எளியேனையும் இத்தொண்டில் ஈடுபெறச் செய்த முருகன் திருவருளையும் என் ஆசிரியப்பிரான் ஆசியையும் சிந்தித்து வந்திக்கின்றேன்.

கி.வா.ஜகந்நாதன்

மயிலை

1-8-52

***

அடிக்குறிப்பு விளக்கம்:

*1 ‘இதனை (இன்பத்தை) ஒழிந்தன ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லோர்க்கும் துய்த்து உணரப்படுதலானும், இவை இவ்வாறு இருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனவேபடும்.’ -தொல்காப்பியம், அகத்திணை இயல், 1, நச்சினாக்கினியர் உரை.

*2  எல்லாம் தமிழ், புது மெருகு என்ற புத்தகங்களை காண்க.

***

உள்ளுரை

1. அருந்தவத்தோன்
2. அறப் போர் 
3. பெற்ற பரிசில் 
4. சேரமான் புகழ் 
5. மறப்பது எப்படி
6. கோட்டிடை வைத்த கவளம்
7. புலவரின் வள்ளன்மை 

$$$

One thought on “அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- முகவுரை

Leave a comment