-ஷோபனா ரவி, பி.ஆர்.மகாதேவன்
‘சங்கி’ யார் என்பது குறித்து சமூக ஊடகங்களில் தீவிரமான பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. அது ஏதோ கெட்ட வார்த்தை போல தமிழகத்தில் சிலர் ஏளனமாக எழுதுகிறார்கள். அவர்களுக்கு பதில் அளிக்கும், இரு சங்கிகளின் கவிதைகள் இவை….

1. நீ சங்கி தான்!
-ஷோபனா ரவி
உன் தெய்வங்களும் தேசமும் உனக்கு எல்லாவற்றையும் விட முக்கியமா? ஓ அப்படியானால் நீ சங்கி!
உன் தெய்வங்களை நிந்தித்தால் நீ வெளிப்படையாக எதிர்ப்பாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
நீ பிராமண வகுப்பில் பிறந்தும், இன்னும் உன்னை வளர்த்து ஆளாக்கிய மூதாதையர் மீது அபாண்டமாகப் பழி சுமத்தாமல் மரியாதையாகப் பேசிக் கொண்டிருக்கிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளின் வளத்தை ரசித்து, அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்வாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
உனக்குத் தெரிந்த ராமாயண, மஹாபாரதக் கதைகளைப் பொது இடங்களில் குறிப்பிடுகிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
ஆசாமிகளுக்காக உன் சாமியை விட்டுக் கொடுக்க மாட்டாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
பஜனை கோஷ்டியில் பாடிக்கொண்டு போகிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
கர்நாடக சங்கீதத்தை பக்தியோடு பாடுகிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
அநியாயமாகக் கைவிட்டுப் போன பழம்பெரும் கோயில்களை மீட்டெடுக்க விழைகிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
கோயில் சிலைகள் களவு போவதைக் கேள்விப்பட்டுப் பதைபதைக்கிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
தேசம் முன்னேறுவதை எண்ணி சந்தோஷம் கொள்கிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
சீனாவையும் பாகிஸ்தானையும் உயர்த்திப் பேசுவோரின் போக்கைக் கண்டிக்கிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
தேசச் செல்வத்தைக் கொள்ளையடிக்கும் கும்பலுக்கு ஜால்ரா அடிக்காமல் விலகி இருக்கிறாயா? ஓ நீ சங்கி!
சத்தியத்தையும் தர்மத்தையும் அடிநாதமாகக் கொண்டிருக்கிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
பிற மதங்களின் கொள்கைகளையும் போக்கையும் பற்றித் தெளிவாகத் தெரிந்துகொண்டு பேசுகிறாயா? ஓ அப்படியானால் நீ சங்கி!
உனக்கு நீ உண்மையாக இருந்து மனத்தில் பட்டதை வெளிப்படையாகச் சொல்கிறாயா? ஓ! அப்படியானால் நீ சங்கியே தான்!
குறிப்பு:
திருமதி ஷோபனா ரவியின் முகநூல் பதிவு இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது.
$$$
2. அவர்கள் மட்டுமா சங்கிகள்?
-பி.ஆர்.மகாதேவன்
விஸ்வ குருவாக விளங்க வேண்டிய
தேசத்தையும் தர்மத்தையும்
சுய விருப்பத்துடன் காக்கக் களம் இறங்கும்
ஸ்வயம்சேவக சங்கத்தினர் மட்டுமா சங்கிகள்?
ஆசையே அழிவுக்குக் காரணமென
அனைவருக்கும் துறவைப் போதித்து,
முன்னோர் காட்டிய மோக்ஷ வழிகளில் ஒன்றை மட்டும்
முழுவேகத்துடன் காட்டியவரின்
சங்கத்தைச் சேர்ந்தவர் எல்லாமும்தான் சங்கிகள்!
எளியோரை ஏய்க்கும் எஜமானர்களை
எதிர்த்துப் போராடும் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்
எல்லாரும் கூடத்தான் சங்கிகள்!
ஆதி மொழிகளில் ஒன்றுக்கு
அகிலம் போற்ற சங்கம் அமைத்தவர்களின்
வழி வந்தோரெல்லாமும் கூடத்தான் சங்கிகள்!
சத் சங்கங்களைச் சேர்ந்த
சங்கியாக இல்லையென்றால்தான் ஒருவர்
சங்கடப்பட வேண்டும்!
மூதேவி என்றால்தான் கோபப்பட வேண்டும்
ஸ்ரீதேவி என்று சொன்னால்
எதற்குக் கோபம் கொள்ள வேண்டும்?
ஆனால்,
பால் சோறு என்றாலும் நெய்ச் சோறு என்றாலும்
பன்றி வாய்வைத்துவிட்டால் அதன் பின்
அவை முழுக்கவுமே பாழ்தான்!
கலவரக் காலத்தில்
கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணை
கன்யாதானம் செய்வது எப்படி?
பசு மாமிசத்தை வலுக்கட்டாயமாக வாயில் திணித்து
வன்முறையாக மதம் மாற்றம் செய்யப்பட்டவரை
மீண்டும் தாய்க்குலம் சேர்ப்பது எப்படி?
உணவின் மீது குறையில்லை…
பெண் செய்த தவறில்லை…
சக உதரர் மீது தவறில்லை…
விரும்பி விழுந்தாலும்,
தள்ளிவிடப்பட்டாலும்,
சேற்றில் விழுந்த மலர்
சேவடி சேர முடியுமா?
நஞ்சு நிறை நாசகாரக் கும்பல் தீண்டிய பின்
எந்த உன்னதச் சொல்லுக்குத்தான்
உயிர் இருக்கும்? பழைய உயர்விருக்கும்?
எனவே,
நாம் இனியும் சங்கிதான் என்று
வெறுமனே வீம்புக்குச்
சொல்லிக்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.
அவமதிக்கவிடாமல்
அரணாக நின்று காத்திருக்க வேண்டும்.
அரசன்கள் மட்டுமல்ல
அவனுடைய அல்லக்கைகள் கூடக் கட்டிப்போடும்படி
நம் அஸ்வமேதக் குதிரையை
அபலையாக அலைய விட்டிருக்கக் கூடாது.
கரும்புள்ளி செம்புள்ளி குத்த விட்டிருக்கக் கூடாது
கோவேறு கழுதையாக்கி
கண்டதையெல்லாம் சுமக்க விட்டிருக்கக் கூடாது.
யாகக் குதிரையை மீட்பதென்றால்
அதன் மீது குத்தப்பட்டிருக்கும்
கரும்புள்ளி, செம்புள்ளிகளை
முதலில் துடைத்தழிக்க வேண்டும்.
பொதி மூட்டைகளையெல்லாம்
புரட்டிப் போட வேண்டும்.
***
நலங்கெடப் புழுதியில் வீசப்பட்ட சொல்லை
நல்லவிதமாக மீட்டெடுத்துவிட்டு
இசைக்க ஆரம்பிக்கலாம், இனிய ராகங்களை!
அதற்கு முன்
எந்த கந்தர்வ கானம் இசைத்தாலும்
அபஸ்வரமே.
***
எதிரி நம் காவி உடையில்
கலங்கிய சேற்றை வாரி இறைத்திருக்கிறான்.
படிந்த கறையைப் போக்கிய பின் அணிவதே
நமக்கு மரியாதை.
சேற்றை வாரி இறைத்த கும்பலை
சீர்திருத்தப் பள்ளியில் அடைத்து
வெளுத்துக் கொடுக்கச் சொல்வதே
காவிக்கு மரியாதை
***
சிறைப்பிடிக்கப்பட்ட சொல்லுக்கு
விடுதலை பெற்றுத் தருவது எப்படி?
கற்பழிக்கப்பட்ட சொல்லை
புனிதப்படுத்துவது எப்படி?
வீணையின் அறுக்கப்பட்ட தந்தியை
முடிச்சிட்டுப் பூட்ட முடியுமா?
உடைக்கப்பட்ட புல்லாங்குழலை
ஒட்டிச் சரிசெய்ய முடியுமா?
ஆதி நாட்கள் தொட்டு
நன்னீரையே வழங்கிவந்த போதிலும்
மலம் கலக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியை என்ன செய்ய?
அல்லது
வைரக் கல்லை ஒரு வடிகட்டிய முட்டாள்
கண்ணாடிக் கல் என்று சொன்னால்
வீசி எறிந்துவிட வேண்டுமா?
தெய்வத் திருமேனியை ஒரு மூடன்
கல் என்று சொன்னால்
கைவிட்டுவிட வேண்டுமா?
கள் குடியர் கூட்டம்
அபிஷேகப் பாலைப் பழிப்பதால்
அதை அருந்தாமல் இருந்து விடலாமா?
சிந்திய பாலை அள்ள முடியுமா?
சிதறிய முத்தைக் கோக்க முடியுமா?
மீட்பதா…
கைவிடுவதா?
***
மீட்பதென்றால்
முறையாக மீட்க வேண்டும்
முழுமையாக மீட்க வேண்டும்.
எந்தக் கைகள் வீணையின் நரம்புகளை அறுத்ததோ,
அந்தக் கைகளை முதலில் அறுத்து வீச வேண்டும்.
எந்த அதிகாரத்தின் மணி மகுடத்தில் இருந்து
அந்த வைரம் அகற்றப்பட்டதோ,
அந்த அரசியல் சாசனத்தில்
அதைப் பொருத்திக்காட்ட வேண்டும்
எந்தக் கோட்டையின் உச்சியில் இருந்து
அந்த த்வஜம் அறுக்கப்பட்டதோ,
அங்கு அது பறக்க விடப்பட்டாக வேண்டும்.
அதுவே ஒரே இலக்கு.
அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுவது
ஆதி தர்மத்தின் கொடிக்கு அழகல்ல.
அமர இருக்கை கொடுக்க மறுத்து
அவமதிப்பவனை வெல்வதென்றால்,
அவனுடைய அரியணையைவிட உயரமான ஆசனத்தில் அமர்ந்து
காலின் மேல் கால் போட்டுக்கொண்டு முழங்க வேண்டும்.
ஒரு தர்மம் காக்கப்படுகிறதென்றால்
வாழ்வின் உன்னத தருணங்களில் அது
வெளிப்பட வேண்டும்
களவாடப்பட்ட ஒரு திருமேனி மீட்கப் படுகிறதென்றால்
அது கருவறை புக வேண்டும்.
ஒரு தேசத்தின் சொல் மீட்கப் படுவதென்றால்
அது ராஜ பாட்டையில்,
அலங்கரிக்கப்பட்ட யானை மேல் அமரவைக்கப்பட்டு,
எக்காளங்கள் விண்ணதிர ஒலிக்க,
முரசுகள் மண்ணதிர முழங்க,
கொடி ஏந்தி,
மந்திரமாக,
ஊர்வலம் வரவைக்கப்பட வேண்டும்.
சங்கி என்ற சொல் மீட்கப்படுவதென்றால்
இந்த தேசம்
தர்மத்தைக் காக்க மேற்கொள்ளும் ஹிம்சையும்
அஹிம்சையைப் போல் அதி உயர் தர்மமே என்று
அகிலத்துக்கு வழிகாட்டும்
சங்கிஸ்தான் ஆக வேண்டும்.
$$$