குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 7

-சேக்கிழான்

இஸ்லாமிய நாடுகளிலிருந்து தப்பிவந்த அகதிகளின் மறுவாழ்வுக்காக நரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருப்பதுதான் 2019ஆம் வருடத்திய குடியுரிமை திருத்தச் சட்டம். அந்த அகதிகள் கோருவது சுயமரியாதையுடன் வாழ்வதற்கான குடியுரிமை மட்டுமே. அவர்கள் நமது பூர்வீக குடிமக்களும் கூட. அவர்களுக்கான உரிமையை அளிக்கிறது நாட்டு மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசு. அதனைத் தடுக்கவோ, குறை கூறவோ, கண்டிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை.

(பகுதி- 6)

7. காற்றில் பறக்கலாமா தலைவர்களின் உறுதிமொழி?

1947 ஜூலை 16ஆம் தேதி, தில்லியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தி கூறியது:

பாகிஸ்தானில் உள்ள ஹிந்து மக்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது அவர்களது அச்சமோ, கற்பனையான பீதியோ, அவர்கள் சொந்த வீடுகளைத் துறந்து வெளியேறுகின்றனர். அவர்கள் சொந்த நாட்டில் அந்நியர்களாகக் கருதப்பட்டு அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்குமாறு செய்யப்படுமானால் அவர்கள் அங்கு எவ்வாறு வாழ்வார்கள்? அத்தகைய சூழலில் அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி (இந்தியாவில்) புகும் மாகாணங்களில் உள்ளவர்கள் அவர்களை இருகரம் நீட்டி அரவணைத்து, அவர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பை வழங்க வேண்டும். அவர்கள் வேறு நாட்டுக்குச் சென்றுவிட்டதாக வருத்தம் கொள்ளாத வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

1947 செப். 26இல் மகாத்மா காந்தி கூறியது:

பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களும் சீக்கியர்களும் அங்கு வாழ விரும்பாவிடில், அங்கு அவர்கள் வாழத் தகுதியற்ற சூழல் நிலவுமானால், அவர்கள் எப்போது வேண்டுமாயினும் இந்தியா வரலாம். அவர்களை ஏற்க இந்தியா தயங்காது. இதில் சந்தேகமே தேவையில்லை.

1947 ஆகஸ்ட் 15இல் நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் முதல் பிரதமர் பேசிய  ‘விதியுடன் ஒரு ஒப்பந்தம்’ என்ற பேச்சிலிருந்து…

இங்கு நாம் சுதந்திரத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, அரசியல் எல்லைகள் மாறுபட்ட ஒரே காரணத்தால் நம்மிடமிருந்து துண்டிக்கப்பட்ட (ஹிந்து, சீக்கிய) சகோதர சகோதரிகளின் வேதனையை நினைவுகூர்கிறோம். அவர்கள் என்றும் நம்மவர்கள். எது நடந்தாலும் அவர்களும் நம்மவர்களே. அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுக்கும் பெரும் பொறுப்பு நமக்கு உண்டு…

1950 நவ. 15இல் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு அளித்த உறுதிமொழி:

(பாகிஸ்தானிலிருந்து வெளியேறி அகதிகளாக இந்தியா வருவோர் குறித்த) அவை உறுப்பினரின் குடியுரிமை தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அவ்வாறு வரும் மக்கள் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதியானவர்களே. இந்த விஷயத்தில் சட்டம் போதுமானதாக இல்லாவிடில் அதற்கு ஏற்றபடி சட்டத்தைத் திருத்துவது அவசியம்.

கிழக்கு வங்கத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேறு வழியில்லாத நிலையில் அவர்களது சொந்த நாட்டில் (இந்தியாவில்) அடைக்கலம் கொடுப்பதும், அவர்களைக் காப்பதும் நமது கடமை ஆகும்.

1950 ஜன. 26இல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கூறியது:

இந்த நாட்டிலிருந்து நிலப்பகுதி பிரிந்து சென்றதால் நம்மைப் பிரிந்துசென்ற மக்களுக்கு நிவாரணம் வேண்டும். அங்கு அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கு இடையே வாழ்கிறார்கள். அவர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் அவர்களை வரவேற்போம்.

1950இல் கிழக்கு வங்கத்திலிருந்து தப்பி வந்த அகதிகளை நிவாரண முகாமில் சந்தித்த அன்றைய தொழில் துறை அமைச்சர் சியாம் பிரசாத் முகர்ஜி நாடாளுமன்றத்தில் (1950, ஆக. 7) கூறியதன் ஒரு பகுதி:

……நான் அகதிகள் முகாமுக்குச் சென்றபோது என்காலில் பல அகதிகள் விழுந்து கதறினார்கள்.  “நாங்கள் செய்த பாவம் என்ன? ஹிந்துக்களாகப் பிறந்துவிட்டதால்தானே இத்தனை துயரங்களை அனுபவிக்கிறோம்? நாங்கள் மதம் மாறி இருந்தால் இத்தனை கஷ்டங்கள் நேரிட்டிருக்காது. எங்களைக் காக்க யாருமே இல்லையா?’’ என்ற அவர்களது கதறல் கண்ணீரை வரவழைக்கிறது.

எனக்குத் தெரிந்து உலக வரலாற்றில் மதம் வேறு என்ற ஒரே காரணத்துக்காக இவ்வளவு லட்சம் பேர் ஒரு நாட்டில் கொடுமைப்படுத்தப்படுவதும் கொடூரமாகக் கொல்லப்படுவதும்,  தாயகத்திலிருந்து துரத்தப்படுவதும் இங்கு (கிழக்கு பாகிஸ்தான்) மட்டும்தான் நிகழ்கிறது. அவர்களுக்கு அங்குள்ள அரசும் ஆதரவாக இல்லை. அவர்களை நாம் தானே காப்பாற்ற வேண்டும்?

இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி டாக்டர் அம்பேத்கர் கூறியது:

முஸ்லிம்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேற விரும்பினால், அவர்களுக்கு பல வழிகள் உள்ளன. அவர்கள் உலகின் எந்த முஸ்லிம் நாட்டிலும் தஞ்சம் பெற முடியும். ஆனால், ஹிந்துக்கள், சீக்கியர்கள், இந்திய புத்த மதத்தினர், ஜைனர்கள், போன்றவர்களுக்கு பாரதத்தை விட்டால் செல்வதற்கு வேறு எந்தத் தேசமும் இல்லை.

நாட்டின் முதல் துணைப் பிரதமர் வல்லபபாய் படேல் 1948இல் கூறியது:

இந்நாட்டின் விடுதலைப் போரில் பெரும் பங்களித்தவர்கள் (அண்டை நாட்டில் உள்ள) நமது நண்பர்கள். அவர்கள் திடீரென வெளிநாட்டவர் ஆகிவிட மாட்டார்கள். புவியியல் எல்லைகள் மாறலாம். ஆனால் அவர்களுடன் நமது உறவு அறுபடாது.

இவை, நம்மிடமிருந்து பிரிந்து சென்ற தேசங்களுக்கு கட்டாயமாக அடிமைகள் ஆக்கப்பட்ட நமது சகோதர மக்களுக்கு தேசத் தலைவர்கள் அளித்த உறுதிமொழிகளின் வெவ்வேறு வடிவங்கள்.

1920களில் பாரதத்திலிருந்து ஆப்கானிஸ்தானம் விலகியது. 1947இல் பாகிஸ்தான் (கிழக்கு வங்கம் சேர்த்து) பிரிந்தது. பிற்பாடு அந்த நாடு பங்களாதேஷ் ஆக இரு நாடுகள் ஆனது. இதன்மூலமாக, அரசியல்ரீதியான தேச எல்லைகள் மாறியதால் நமது சகோதர மக்கள் இந்த தேசங்களில் அபலைகளாகக் கைவிடப்பட்டார்கள். அவர்களின் துயர நிலையை வர்ணிக்கவே இயலாது. அத்தனை கொடுமைகள். அதனையும் தாங்கி அங்கு வாழ்ந்தாலும் இரண்டாம்தரக் குடிமகனாகவே நடத்தப்படும் அவலம்.

ஹிந்துக்கள் வீட்டில் இளம்பெண்களை வைத்திருக்க முடியாத அவலம். எப்போது வேண்டுமானாலும் மதவெறியர்கள் வீடு புகுந்து பெண்களைத் தூக்கிச் செல்லலாம். இதனை எதிர்த்தால் மத நிந்தனை சட்டம் பாயும். கடத்தப்பட்ட பெண்ணே, தான் விரும்பி வீட்டைவிட்டு வெளியேறியதாகச் சொல்லும் நிலை உருவாக்கப்படும். இதுபோல எத்தனையோ கொடுமைகள்!

அவற்றிலிருந்து தப்பி, சுயமரியாதையுடன் உயிர் வாழும் ஆசையுடன்,  அனைத்தையும் இழந்து தனது முன்னோர் பூமிக்கு வரும் அகதிகளை சற்றேனும் நினைந்து பாருங்கள்.

பிஜித்தீவின் கரும்புத் தோட்டங்களில் ஹிந்து ஸ்த்ரீகள் படும் அவதியைக் கேள்வியுற்று வேதனையுடன் கவிதை வடித்த மகாகவி பாரதியின் நெஞ்சம் துடித்தது, அவர்களும் நம்மவர்களே என்பதால் தான். இந்தத் துடிப்பு, இஸ்லாமிய நாடுகளிலிருந்து தப்பியோடி வரும் அகதிகளைக் காண்கையில் நமக்கு இருக்க வேண்டாமா?

இந்த அகதிகளின் மறுவாழ்வுக்காக நரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருப்பதுதான் 2019ஆம் வருடத்திய குடியுரிமை திருத்தச் சட்டம். இதனை அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்போர் சற்றே சிந்திக்க வேண்டும்.

அந்த அகதிகள் கோருவது சுயமரியாதையுடன் வாழ்வதற்கான குடியுரிமை மட்டுமே. அவர்கள் நமது பூர்வீக குடிமக்களும் கூட. அவர்களுக்கான உரிமையை அளிக்கிறது நாட்டு மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசு. அதனைத் தடுக்கவோ, குறை கூறவோ, கண்டிக்கவோ எவருக்கும் உரிமை இல்லை.

இந்தச் சிந்தனையை நாடு முழுவதும் கொண்டு செல்வோம்!

நாட்டைக் குலைக்கும் வேற்றுமை சக்திகளை முறியடிப்போம்!

அகதிகளாக வாழும் நமது சொந்த சகோதரர்கள் வாழ்வில் மேன்மையுற நாமும் நம்மால் இயன்ற வகையில் பங்களிப்போம்!

ஜெய்ஹிந்த்!

(நிறைவு)

$$$

2 thoughts on “குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 7

Leave a comment