-சேக்கிழான்
பிரிக்கப்படாத பாரதத்தில் அன்று நாடு முழுவதும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாச்சார பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. அந்த நாடு தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால், இந்தியாவில் இருந்த கோடிக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. எனவே, முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கலாம் என்றும், இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்றும் இந்திய அரசு அறிவித்தது.

5. நேரு- லியாகத் அலிகான் ஒப்பந்தம் சொல்வது என்ன?
1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகள் பாகிஸ்தானாகப் பிரிக்கப்பட்டன. அவ்வாறு பிரிக்கப்பட்டபோது மேற்கு பஞ்சாப், பலுசிஸ்தானம், சிந்து மாகாணம், கிழக்கு வங்கம் ஆகிய பகுதிகள் பாகிஸ்தான் ஆகின. பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியும் மகாத்மா காந்தியும் சம்மதம் தெரிவிக்காதபோது, இந்தப் பகுதிகளில் வாழ்ந்த லட்சக் கணக்கான ஹிந்துக்களும் சீக்கியர்களும் ‘நேரடி நடவடிக்கை’ என்ற பெயரில் முஸ்லிம் லீக் அறிவித்த கலவரங்களில் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக நாட்டுப் பிரிவினையை தேசம் வேதனையுடன் ஏற்றது.
அப்போது, பாகிஸ்தான் பகுதியில் உள்ள ஹிந்துக்கள், சீக்கியர்களை இந்தியாவுக்கும், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கும் பரஸ்பரம் மக்கள்தொகை மாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்று அன்றைய தேசிய அரசின் சட்ட அமைச்சர் டாக்டர் பீமராவ் வலியுறுத்தினார். இல்லாவிடில் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் உருவாகும் என்றும் அம்பேத்கர் எச்சரித்தார். ஆனால், அதனை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை.
இதில் வேதனை என்னவென்றால் பிரிக்கப்படாத பாரதத்தில் அன்று நாடு முழுவதும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாச்சார பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. அந்த நாடு தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால், இந்தியாவில் இருந்த கோடிக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. எனவே, முஸ்லிம்கள் இந்தியாவில் இருக்கலாம் என்றும், இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கும் என்றும் இந்திய அரசு அறிவித்தது.
அதேசமயம், பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் இந்தியா வர விரும்பினர். அவர்களது நேரடிக் கள அனுபவம் அவ்வாறு இருந்தது. ஆனால், அதற்கான ஏற்பாடுகள் இரு நாட்டு அரசுகளாலும் செய்து தரப்படவில்லை. பாகிஸ்தான் நிறுவனரும், அந்நாட்டின் முதல் தலைமை ஆளுநருமான முகமது அலி ஜின்னா, ‘சிறுபான்மையினர் பாகிஸ்தானில் அஞ்ச வேண்டியதில்லை; அவர்கள் பாகிஸ்தானிலேயே இருக்கலாம்’ என்றார். அதனை அங்குள்ள ஹிந்துக்களும் சீக்கியர்களும் நம்பி அங்கேயே வாழ முயன்றனர். அவர்களுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் பாடுபட்டுச் சேர்த்த செல்வங்கள் அங்குதான் இருந்தன.
ஆனால், மிக விரைவிலேயே முஸ்லிம் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் மீது கொடும் அடக்குமுறையை வெளிப்படுத்தினர். சிறுபான்மையினரின் சொத்துகள், நிலபுலன்கள் கைப்பற்றப்பட்டன; ஹிந்து, சீக்கியக் குடும்பங்களின் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் செல்லப்பட்டு நிக்காஹ் செய்யப்பட்டனர். இஸ்லாம் மதத்துக்கு மாறுவோர் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என்ற நிர்பந்த சூழல் உருவாக்கப்பட்டது. இதனை எதிர்த்தவர்கள் கற்பழிக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர். பல கோயில்கள் இடிக்கப்பட்டன. அங்கு வழிபாடுகள் உள்ளூர் மௌல்விகளால் தன்னிச்சையாகத் தடை செய்யப்பட்டன. இஸ்லாமிய அரசாக அறிவித்துக்கொண்ட பாகிஸ்தானின் அரசியல்வாதிகளும் அரசு நிர்வாகமும் இந்தக் கொடுமைகளைக் கண்டுகொள்ளவில்லை. இந்தக் கொடுமைகள் மேற்கு பாகிஸ்தானிலும் கிழக்கு பாகிஸ்தானிலும் வரையறையின்றி நிகழ்ந்தன.
அதன் காரணமாக, 1947 முதல் 1950க்குள் பல லட்சக் கணக்கான ஹிந்துக்களும் சீக்கியர்களும் பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து தப்பி அகதிகளாக இந்தியாவுக்குள் படையெடுத்தனர். அவர்களின் செல்வங்களை பாகிஸ்தானின் பெரும்பான்மை முஸ்லிம்கள் கையகப்படுத்திக்கொண்டனர்.
பெருகிவந்த அகதிகளின் எண்ணிக்கையால் கோபம் அடைந்த நாதுராம் கோட்சே, இதற்குக் காரணம் மகாத்மா காந்திதான் என்ற கோபத்தில் அவரை சுட்டுக் கொன்றான். இந்தியாவுக்கு வந்த அகதிகளோ எந்த ஆதரவும் இன்றி தத்தளித்தனர். தில்லியும் கொல்கத்தாவும் அகதிகளால் நிரம்பி வழிந்தன.
அப்போதுதான், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகானும் 1950 ஏப்ரல் 8-இல் தில்லியில் சந்தித்து அகதிகள் விவகாரம் குறித்து பேச்சு நடத்தினர். ஆறு நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையின் நிறைவில், இருநாடுகளும் தத்தமது நாடுகளின் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இரு நாடுகளில் இருந்தும் வெளியேற விரும்பும் அகதிகள் எந்த இடையூறும் இன்றி தங்கள் உடைமைகளை விற்க அனுமதிக்கப்பட வேண்டும்; கடத்தப்பட்ட பெண்கள் விடுவிக்கப்பட வேண்டும்; மதவெறியர்களால் சூறையாடப்பட்ட பொருட்களை மீள ஒப்படைக்க வேண்டும்; கட்டாய மதமாற்றம் அனுமதிக்கப்படக் கூடாது; சிறுபான்மையினரின் உரிமைகளை அரசுகள் பாதுகாக்க வேண்டும் –என்பது உள்ளிட்ட முக்கிய உடன்பாடுகள் இரு தரப்புக்கும் இடையில் எட்டப்பட்டன. இரு நாடுகளிலும் சிறுபான்மை ஆணையக் குழுக்கள் நிறுவப்பட்டன.
அதாவது, இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசும், பாகிஸ்தானில் உள்ள ஹிந்து, சீக்கிய மக்களின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் அரசும் இணைப் பொறுப்பு ஏற்பதாக அறிவித்தன. குறிப்பாக, இரு நாடுகளிலும் வாழும் சிறுபான்மையினர் மற்ற நாட்டில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு பரஸ்பரம் பிணையுறுதியாக இருப்பர் என்று ஏற்கப்பட்டது.
இந்த உடன்பாட்டை இந்திய அரசு எள்ளளவும் மீறவில்லை. அதனால்தான் இந்தியாவில் 1951இல் 9.8 % ஆக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2011இல் 14.2 % ஆக அதிகரித்திருக்கிறது. இன்று உலக அளவில் முஸ்லிம்கள் (சுமார் 18 கோடி) அதிக அளவில் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது.
மாறாக, பாகிஸ்தானில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாதோரின் (ஹிந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர்) எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது. மேற்கு பாகிஸ்தானில் 1947இல் 23 % ஆக இருந்த முஸ்லிம் அல்லாதாரின் எண்ணிக்கை, 1998இல் 3 % ஆகக் குறைந்துவிட்டது. அதேபோல, கிழக்கு பாகிஸ்தானில் 1947இல் 29.71 % ஆக இருந்த முஸ்லிம் அல்லாதோரின் எண்ணிக்கை இன்றைய பங்களாதேஷில் 8.25 % ஆகக் குறைந்திருக்கிறது.
நேரு- லியாகத் ஒப்பந்தத்தை இதுவரையிலும் நேர்மையாக நிறைவேற்றி வந்துள்ளது இந்திய அரசு. ஆனால், பாகிஸ்தானும், அதிலிருந்து பிரிந்து தனிநாடான பங்களாதேஷும் இந்த ஒப்பந்தத்தை மதிக்கவே இல்லை. தவிர, 1951இல் லியாகத் அலி கான் சுட்டுக் கொல்லப்பட்டார். சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பேசும் அரசியல்வாதிகள் எவரும் இந்நாடுகளில் வாழ முடியாது என்பதும் வேதனையான உண்மை.
இந்த ஒப்பந்தம் நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை உணர்ந்தே, இந்திய குடியுரிமை சட்டம் 1955இல் இயற்றப்பட்டது. அதன்படி, இந்தியாவில் 11 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் எவரும் இயல்பாக்க விதியின்கீழ், பதிவு விண்ணப்பம் அளித்து குடியுரிமை பெற வழி வகுக்கப்பட்டது.
ஆயினும், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து தொடர்ந்து வருகை தரும் அகதிகளின் நிலையை இதுவரை எந்த அரசும் இந்தியாவில் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு இப்போதுதான் இந்திய அரசின் கருணைக்கண் திறந்துள்ளது. அதனால்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அகதிகள் அனைவரும் கொண்டாடுகின்றனர்.
(தொடர்கிறது)…
$$$
3 thoughts on “குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 5”