குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 4

-சேக்கிழான்

இதுவரை ஆறுமுறை திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது இந்திய குடியுரிமை சட்டம். ஆறாவது திருத்தம் தான் மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து தப்பி வந்த அகதிகளின் நிலைக்காக வருந்தி இருக்கிறது. இதனை மதச்சார்பின்மை பேசும் சிலரால் ஏற்க முடியவில்லை. அவர்கள், இதனை சட்டப்பூர்வமானதல்ல என்றும், மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள். உண்மை என்ன?

(பகுதி-3அ)

(பகுதி-3ஆ)

4.  குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டப்பூர்வமானது

இதுவரை ஆறுமுறை திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது இந்திய குடியுரிமை சட்டம். ஆறாவது திருத்தம் தான் மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து தப்பி வந்த அகதிகளின் நிலைக்காக வருந்தி இருக்கிறது. இதனை மதச்சார்பின்மை பேசும் சிலரால் ஏற்க முடியவில்லை. அவர்கள், இதனை சட்டப்பூர்வமானதல்ல என்றும், மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும் பிரசாரம் செய்து வருகிறார்கள். உண்மை என்ன?

இதோ, (முன்னாள்) மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளிக்கிறார்…

குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 (CAA) முழுவதும் சட்டபூர்வமானது; அரசியல் சாசனப்படி சரியானது.  அரசியல் சாசனத்தின் 246வது பிரிவின் படி, சாசனத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள விவகாரங்கள் தொடர்பாக சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. அந்தப் பட்டியலில் 17வதாக இருப்பதுதான் குடியுரிமை (Citizenship) மற்றும் இயல்பாகக் குடிமகனாகும் உரிமை (Naturailsation).

அதேபோல அரசியல் சாசனத்தின் 14வது பிரிவு, சட்டத்தின் முன் குடிமக்கள் அனைவரும் சமம் என்கிறது. சமமானவர்களுக்கு சம உரிமை (Equal among Equal) என்பதே இதன் பொருள். இது நாட்டிலுள்ள குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். சமமற்றவர்களுக்கு சம உரிமையை (Equal among Unequal) அளிக்குமாறு அரசியல் சாசனம் கூறுவதில்லை. இந்த மூன்று நாடுகளிலிருந்து அகதிகளாக வந்துள்ளவர்களும் (6 சிறுபான்மை சமயத்தினர்), அந்த நாடுகளில் அவர்களைக் கொடுமைப்படுத்தியவர்களும் (பெரும்பான்மையினரான இஸ்லாமியர்கள்) சமமானவர்கள் அல்ல. இது நமது நாட்டில் குடிமக்களாக உள்ள இஸ்லாமியர்களைக் குறிக்கவில்லை. இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களை மட்டுமே இவ்வாறு சிறப்புப் பார்வையுடன் அரசு அணுகுகிறது. இவ்வாறு சிறப்புப் பிரிவில் வரலாற்றுப்பூர்வமாக அணுகவும் அரசியல் சாசனத்தின் 14வது பிரிவு அனுமதிக்கிறது. உச்ச நீதிமன்றமும் இத்தகைய சிறப்புப் பார்வையுடன் 20க்கு மேற்பட்ட தீர்ப்புகளை அளித்திருக்கிறது.

இதே கண்ணோட்டத்துடன் தான் உகாண்டாவிலிருந்து வந்த ஹிந்து அகதிகளுக்கு பிரதமர் இந்திரா காந்தியும் (1972), ஸ்ரீலங்காவிலிருந்து வந்த ஹிந்து அகதிகளுக்கு (இலங்கைத் தமிழர்கள்) அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியும் (1986) குடியுரிமை வழங்கினர்.

‘அண்டைநாடுகளில் கொடுமைகளுக்கு உள்ளாகி அங்கிருந்து தப்பிவரும் சிறுபான்மை மக்களுக்கு அரசு ஆதரவாக இருக்க வேண்டும்; அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்’ என்று 2003இல் நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பேசினார் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் மன்மோகன் சிங். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முதல்வர்கள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), தருண் கோகோய் (அஸ்ஸாம்) ஆகியோர் இதே நோக்கத்துடன் மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்களை எழுதி உள்ளனர். காங்கிரஸ் செய்தால் சரி, அதையே பாஜக செய்தால் தவறு என்று வாதிடுவது என்ன வகையான மனோபாவம்?

தேசிய மக்கள்தொகை பதிவேட்டைப் பொருத்த வரை (NPR), 2003இல் குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டபோதுதான் அதன் துவக்கம் தீர்மானிக்கப்பட்டது. இதன் உதவியுடன் (விதி- 3; துணைப்பிரிவு-4) தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுவதையும், அதன்படி தேசிய அடையாள அட்டை வழங்குவதையும் அந்த சட்டத் திருத்தம் உறுதி செய்தது. அந்தத் திருத்தத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. அது மட்டுமல்ல, 2010இல் ஐ.மு.கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோதுதான் தேசிய மக்கள்தொகை பதிவேடு முதல்முறையாகத் தயாரிக்கப்பட்டது. 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தபோது 2003 குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஒருவார்த்தை கூடப் பேசவில்லை.

அது மட்டுமல்ல, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் அடிப்படையில் ஆதார் அட்டை (Aadaar) வழங்குவதற்கான பணிகளையும் மன்மோகன் சிங் அரசுதான் முன்னெடுத்தது. அதையே நரேந்திர மோடி அரசு முழுமைப்படுத்தியது. ஆதார் அட்டைக்கு எதிரான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, அதனை அரசியல் சாசனப்படி சரியானது என்று தீர்ப்பு அளித்திருக்கிறது (2018 செப். 26).

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census), மக்கள்தொகை பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) ஆகிய நான்கும் வெவ்வேறானவை. சில குறிப்பிட்ட அம்சங்களில் மட்டும் இவை ஒன்றுடன் ஒன்று சார்ந்திருக்கின்றன.

மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, தனிநபரின் பிரத்யேக விவரங்களையோ, சொத்துகள் பற்றிய விவரங்களையோ நாட்டில் வசிப்பவர் தெரிவிக்க வேண்டியதில்லை. இதில் 30 வகையான புள்ளிவிவரங்கள் திரட்டப்படுகின்றன.

தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) என்பது இந்த நாட்டில் வாழ்பவர்கள் அனைவருக்குமானது; அவர்கள் அனைவரும் குடிமக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இது அரசின் திட்டங்களை திறம்படச் செயல்படுத்தத் தேவையான கருவியாகும். இதில் தனிநபரின்  தகவல்கள் (மதம் கேட்கப்படாது) 9 புள்ளிவிவரங்களாகக் கேட்கப்படுகின்றன. கூடுதலாக கருவிழிப் பதிவும் ரேகைப்பதிவும் புகைப்படமும் கையொப்பமும் பெறப்படுகின்றன.

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) இப்போதைக்கு அஸ்ஸாமில் மட்டும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி, அதன் வழிகாட்டலின்படி தயாரிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் தே.சி.பதிவேடு கொண்டுவர வேண்டும் என்று விதிமுறை 4-இல் கூறப்பட்டிருக்கிறது. இதற்கென விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டியதும், பதிவுத் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டியதும் அவசியம். இதுவரை இதற்கான பணிகள் துவங்கவில்லை.

மக்கள்தொகை கணக்கெடுப்பின் உதவியுடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், விரைவில் தீர்மானிக்கப்படும் விதிகளின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட இருக்கிறது. இது நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களில் குடிமக்கள் யார் என்பதை வரையறுக்கும். அதற்கு ஆதாரமாக 1955 இந்திய குடியுரிமை சட்டம் அமைந்திருக்கும்.

2019 குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA-2019) என்பது, 1950 முதல் 2014 வரை இந்தியாவுக்குள் மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து தப்பி வந்த சிறுபான்மையின (6 சமயங்களைச் சார்ந்த) அகதிகளுக்கான விசேஷ சட்டத் திருத்தம். அதற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

-என்கிறார் (முன்னாள்) மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

(தொடர்கிறது)…

$$$

3 thoughts on “குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம்- 4

Leave a comment