-சேக்கிழான்
நாடு முழுவதும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 15வது மக்கள்தொகை கனக்கெடுப்பு (2010-11) எடுக்கப்பட்டது. அப்போது சில தகவல்களையும் கூடுதலாக அரசு திரட்டியது. அதன் அடிப்படையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2010இல் உருவாக்கப்பட்டது. National Population Register- NPR என்பதே இந்தப் பதிவேடு ஆகும். அதாவது இந்தப் பதிவேடு இந்நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்களுக்கு மேலாக வசிக்கும், அடுத்த 6 மாதங்கள் வசிக்கப் போகிற மக்களின் பட்டியலாகும். 2015இல் இப்பதிவேடு புதுப்பிக்கப்பட்டது.

3. கேள்வி- பதில் வடிவில் சில தகவல்கள் (ஆ)
இந்த சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று சிலர் கூறுகிறார்களே? நீதிமன்றம் இதற்குத் தடை விதிக்க வாய்ப்புள்ளதா?
கண்டிப்பாக இல்லை. அரசியல் சாசனத்தின் ஐந்தாவது அட்டவணைப்படி, குடியுரிமைச் சட்டம் மத்திய அரசின் வரம்புக்கு உள்பட்டது. இதைத் திருத்த அரசியல் சாசனத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள 11வது ஷரத்தின்படி, மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. யாருக்கு குடியுரிமை வழங்குவது என்பது தொடர்பாக எதிர்காலத்தில் நாடாளுமன்றம் தேவைப்பட்டால் திருத்தம் செய்துகொள்ளலாம் என்றும் அரசியல் சாசனம் கூறுகிறது. அதாவது அரசியல் சாசனப்படி, பெரும்பான்மை வலிமை கொண்ட மோடி அரசு தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த மசோதாவை (Citizenship Amendment Bill- CAB) நிறைவேற்றி, சட்டமாக்கி (CAA) இருக்கிறது. இதனைத் தடை செய்ய முடியாது என்பதே ஹரீஷ் சால்வே போன்ற மூத்த சட்ட வல்லுநர்களின் கருத்து.
அடுத்த குற்றச்சாட்டு மதரீதியான பாரபட்சம் தொடர்பானது. இந்திய அரசியல் சாசனத்தில், சமத்துவத்துக்கான உரிமை அதன் 14வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி அனைவருக்கும் சம அளவிலான பாதுகாப்பு உரிமை உண்டு என்று தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாத அனைவருக்கும் இது பொருந்தும். இதனையும் குடியுரிமை திருத்தச் சட்டம் (2019) மீறவில்லை. இதில் எந்த இடத்திலும் மதப் பாகுபாட்டுக்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.
இந்த சட்டத்தினால் பயன்படுவோர் மதரீதியாக மூன்று அண்டை நாடுகளில் கொடுமையை அனுபவித்த இந்திய வம்சாவளியினர் என்பதால் வலுக்கட்டாயமாக ஓடிவந்த அகதிகள். இத்தகைய அகதிகளை வாழவைக்க வேண்டும் என்பதே உலக நியதியாகும். அதேசமயம், பொருளாதாரக் காரணங்களுக்காக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ள அகதிகளை ஏற்க இயலாது. இந்தச் சட்டம் அவர்களைக் குறித்து ஏதும் கூறாததும், உலக நடப்பின் அடிப்படையில்தான்.
குடியுரிமை திருத்தச் சட்டம், ஏற்கனவே இந்தியாவில் உள்ள குடிமக்கள் தொடர்பானது அல்ல. இது மூன்று முஸ்லிம் நாடுகளில் பாதிக்கப்பட்ட ‘சிறுபான்மை’ இந்திய வம்சாவளியினருக்கான விசேஷச் சட்டம் மட்டுமே. இதுவும் தேசிய குடிமக்கள் பதிவேடும் ஒன்றல்ல. இரண்டையும் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. தவிர, குடிமக்கள் பதிவேட்டின் மூல ஆதாரத்திலும் கூட மதம் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை.
பழங்குடியினர் மிகுந்த வடகிழக்கு மாநிலங்களில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பதற்கும், அரசியல் சாசனம் அப்பகுதிக்கு புவியியல்ரீதியாக அளித்துள்ள சிறப்பு விலக்கே காரணம். அதையும் குறைகூற முடியாது.
இந்தச் சட்டத்தை தாங்கள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று சில எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அறிவித்துள்ளனரே! அது சாத்தியமா?
நிச்சயமாக இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உள்பட்டது. அரசியல் சாசனத்தின் 245வது பிரிவின் 2வது உள்பிரிவின்படி, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை மாநிலங்கள் எதிர்க்க முடியாது.
இதை நடைமுறைப்படுத்த மறுக்கும் மாநில அரசுகள் அதற்கான விலையை அரசியல் சாசனப்படி (பிரிவு 356) கொடுக்க வேண்டியிருக்கும். மத்திய அரசுக்குக் கட்டுப்படாத மாநில அரசுகளைக் கலைக்க இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உண்டு; அதில் உச்ச நீதிமன்றமும் தலையிடாது.
இதேபோலத் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புப் பணிகளையும் எந்த மாநில அரசும் புறக்கணிக்கவோ, தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. ஆனால், பரபரப்புக்காக சிலர் வாய்க்கு வந்தபடி அறிக்கை வெளியிடுகின்றனர். உண்மை என்னவென்று அவர்களுக்கே தெரியும்.
எத்தனையோ பொருளாதார சீர்திருத்தப் பணிகள் காத்திருக்கையில், இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் என்ன அவசரம்?
நல்ல கேள்வி. இந்த நாட்டின் குடிமக்கள் யார் என்றே தெரியாத நிலையில் தான் நமது நாடு இருக்கிறது என்பதே அவமானம். தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புப் பணி கடந்த 70 ஆண்டுகளில் எப்போதோ செய்யப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்யக்கூட நரேந்திர மோடி அரசு வர வேண்டி இருக்கிறது. இதையும் 2014 முதல் 2019 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தில் மோடியால் செய்ய முடியவில்லை. ஏனெனில் அப்போது ராஜ்யசபாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாதிருந்தது. தற்போது ஜனநாயகரீதியாக தேர்தல்களில் வென்று, தனது வெற்றிகளால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக தன்னை வலுப்படுத்திக் கொண்டுள்ளதால்தான் இது சாத்தியமாகி உள்ளது. இதனை அசுரப் பெரும்பான்மை கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் செய்திருந்தால் இந்தக் கேள்வியே எழுந்திராது.
நமது குடிமக்களின் நிலை தெரிந்தால் மட்டுமே அவர்களுக்கான திட்டங்களை விரயமின்றித் தீர்மானிக்க முடியும். எனவே தேசிய குடிமக்கள் பதிவேடு மிகவும் அத்தியாவசியமாகும். அதேபோல, இந்த நாட்டை நம்பி அடைக்கலம் புகுந்தோர் எத்தனை நாட்களுக்கு அவநம்பிக்கையுடன் காத்திருப்பது? அவர்களும் நமது சகோதரர்கள் அல்லவா? அவர்களது கண்ணீரைத் துடைக்க இனியும் தாமதிப்பது சரியா?
இப்போதைக்கு குடியுரிமைத் திருத்தச் சட்டமும் தேவையான நேரத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விரைவில் பாஜக அரசு தே.கு.பதிவேட்டையும் தனது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்விரு சட்டங்களும் தனித் தனியானவை. என்றபோதும் ஒன்றுடன் ஒன்று பிணைந்துள்ளவை. எனவே, ஏற்கனவே தாமதத்தால் மறுக்கப்பட்ட நீதியை அவர்களுக்கு வழங்குவதே நியாயமாக இருக்க முடியும்.
தே.கு.பதிவேடு, கு.தி.சட்டம் ஆகிய விவகாரங்களில் சிறுபான்மையினரின் நம்பிக்கையைப் பெற பாஜக அரசு தவறிவிட்டது என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றனவே?
இந்திய ஊடகங்கள் பாஜக அரசின் எந்த நல்ல திட்டங்களை இதுவரை ஆதரித்திருக்கின்றன? ‘ஆகாத மருமகள் கை பட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்’ என்ற பழமொழி உண்டு. இடதுசாரி மயமான ஊடகங்களுக்கும், புரட்சிகர ஜனநாயகம் பேசும் லிபரல்களுக்கும் பாஜக எப்போதும் எட்டிக்காயாகவே இருந்துள்ளது. இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் இத்தகைய தவறான நபர்களால் வழிநடத்தப்படுகின்றனர். அதுவே அண்மைய கலவரங்களுக்குக் காரணம். உண்மை நிலையை நாம் மக்களிடம் எடுத்துச் செல்லும்போது, இந்த தவறான நபர்களின் அபத்தங்கள் வெளிப்படும். இஸ்லாமியர்கள் உண்மை நிலையை உணர வேண்டும். அவர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்கத் தயார் என்று அதனால்தான் அரசு தற்போது கூறி இருக்கிறது.
முன்கூட்டியே இஸ்லாமியர்களுடன் பேசி இருந்தால் தற்போதைய கலவரங்களைத் தடுத்திருக்கலாம் என்ற கருத்து சரியா?
உண்மையில், இந்தக் கலவரத்துக்கான அடிப்படை வெறுப்புணர்வு, அயோத்தி ராமஜன்மபூமி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோதே (நவ. 9, 2019) துவங்கிவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கொண்டுவரப்பட்ட முத்தலாக் தடை சட்டமும் (ஜூலை 2019) முஸ்லிம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் (ஆகஸ்ட் 2019), அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது (அக்டோபர் 2019) ஆகியவற்றையும் அப்போது எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் அமைதி காத்தன. அப்போது அடங்கி இருந்த அடிப்படைவாத சக்திகள், இப்போது எதிர்க்கட்சியினரின் தூண்டுதலால் வன்முறையில் இறங்கி உள்ளன என்பதே யதார்த்த உண்மை.
மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, அனைவரின் கருத்துகளும் செவி மடுக்கப்பட்ட பிறகே ஜனநாயகரீதியாக நிறைவேறி இருக்கிறது. இப்போது அரசியல் சாசன அடிப்படையில் அது மீறப்பட இயலாத சட்டம். எனவேதான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) எதிர்ப்பதாகக் கூறாமல், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை (CAB) எதிர்ப்பதாக எதிர்க்கட்சியினர் நாடகமாடி வருகின்றனர். இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் தில்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தவர்களின் மனுக்களை உடனடியாக விசாரிக்கவும், இடைக்காலத் தடை விதிக்கவும் நீதிமன்றங்கள் மறுத்ததில் இருந்தே, இந்தச் சட்டத்தின் அரசியல் சாசன அடிப்படை வெளிப்படுகிறது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை மக்கள் மன்றத்தில் பாஜக தனது தேர்தல் அறிக்கையாக முன்வைத்து தேர்தலில் வென்றுள்ளது. அதனை நிறைவேற்றுவது பாஜகவின் கடமை. இதுவும் இஸ்லாமியர்கள் அறிந்ததே. அவர்களும் வாக்களித்ததால்தான் இந்த அரசு முழுப் பெரும்பான்மையுடன் அமைந்துள்ளது. இதனை மாற்ற வேண்டுமானால், இதனை விரும்பாதோர் ஜனநாயக முறையில் வென்று சட்டத்தைத் திருத்துவது தான் சரியானது. (ஷாபானு ஜீவனாம்ச மறுப்பு சட்டம்- 1986 உதாரணம்). அதை விடுத்து வன்முறையில் இறங்கி மிரட்டல் அரசியலைக் கைக்கொள்வது முறையல்ல. இதனால் பாஜகவுக்கு மக்கள் மன்றத்தில் மேலும் ஆதரவு கூடும் என்பதை விரைவில் எதிரிகள் உணர்வார்கள்.
அஸ்ஸாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட ஹிந்துக்களைக் காப்பாற்றுவதற்காகவே குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற முஸ்லிம் தலைவர்களின் கருத்து உண்மையா?
உண்மையல்ல. அஸ்ஸாம் மாநிலத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டுள்ளோருக்கு (சுமார் 19 லட்சம்) அம்மாநிலத்தில்தான் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அது அம்மாநிலத்துக்கு உள்ள சிறப்பு அந்தஸ்து காரணமாக சாத்தியமில்லை. அல்லது அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்த நாட்டுக்கே (பங்களாதேஷ்) திருப்பி அனுப்பப்பட வேண்டும். எனவேதான் விடுபட்டவர்களின் ஆவணச் சரிபார்ப்புக்கு மேலும் கால அவகாசத்தை மத்திய அரசு கொடுத்திருக்கிறது. அது தனி விவகாரம்.
அரசு மதிப்பீட்டின்படி, மூன்று முஸ்லிம் நாடுகளில் இருந்து மதரீதியான பாரபட்சத்தால் பாதிக்கப்பட்டு தப்பிவந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அகதிகளாக வாழும் சுமார் 30,000 பேருக்கு மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும். இதனை தவறாகப் பிரசாரம் செய்வது அரசியல் சாசனத்தை மீறுவதாகும். அத்தகையோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும்போதுதான் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிக்கல்கள் தெரியவரும். அப்போது நடைமுறை அனுபவத்திலும், சூழ்நிலைக்குத் தக்கபடியும் மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு அந்தப் பிரச்னைகளைக் களைய வேண்டும்.
அண்டை நாடான மியான்மரில் மதக்கலவரங்களால் வெளியேறும் ரோஹிங்க்யா முஸ்லிம்களுக்கு ஏன் இந்தச் சட்டத்தில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை?
இதுபோன்ற கேள்விகளை இந்தியாவில் மட்டும் தான் கேட்க முடியும். ரோஹிங்க்யா முஸ்லிம்களால் மியான்மரில் ஏற்பட்ட பிரச்னைகளால்தான் அங்கு கலவரம் ஏற்பட்டது; அந்நாட்டு அரசும் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்தது. அதனால் அங்கிருந்து வெளியேறிய ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களை அண்டை நாடான பங்களாதேஷ் (அது ஒரு முஸ்லிம் நாடாக இருந்தும்) ஏற்கவில்லை. மற்றொரு முஸ்லிம் நாடான மலேசியாவும் அவர்களைத் துரத்துகிறது. எனவே அவர்கள் இந்தியாவில் ஊடுருவி உள்ளனர்.
அவர்கள் முறைப்படி வந்த அகதிகள் அல்லர். எனவே மியான்மர் நாட்டுக்கு அவர்களைத் திருப்பி அனுப்புவதே முறையானது. அந்நாட்டு அரசும் அவர்களை திரும்ப ஏற்கத் தயார் என்று அறிவித்திருக்கிறது. ரோஹிங்க்யா முஸ்லிம்களை பாகிஸ்தானோ, பங்களாதேஷோ கூட வரவேற்காத நிலைக்குக் காரணம் என்ன என்று நமது ‘லிபரல்கள்’ ஆராய வேண்டும்.
அடுத்து சீனாவில் அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ள உய்கர் முஸ்லிம்களுக்கும் புகலிடம் கொடுக்குமாறு கோரிக்கைகள் நமது இடதுசாரிகளால் முன்வைக்கப்படலாம். அவர்களின் அதிகாரப்பசி அப்படிப்பட்டது. ஆனால், யார் வேண்டுமானாலும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி நுழையவும், குடிமகன் உரிமை பெறவும் இந்தியா சந்தை மடமல்ல.
அகதிகள் விவகாரம் உலகளாவிய பிரச்னையாகி வருகிறது. இதனைத் தீர்க்க இந்தியா மட்டுமல்ல, அனைத்து உலக நாடுகளும் இணைந்து முயற்சிகளை மேற்கொள்வதே சரியாக இருக்கும்.
குடியுரிமை இல்லாத வெளிநாட்டினரை வெளியேற்ற தடுப்புக் காவல் மையங்கள் அமைக்கப்படுவதாக கூறப்படுவது உண்மையா?
இந்தியாவுக்குள் வாழும் இந்தியர் அல்லாதோர் கண்டறியப்பட்டால் அவர்களை சட்டப்படி அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்பியாக வேண்டும். அவர்கள் அகதிகளா, ஊடுருவல்காரகளா, அவர்களின் விருப்பம் என்ன என்பனவற்றின் அடிப்படையில் அதற்கான முடிவை அரசு எடுக்கும். அவ்வாறு கண்டறியப்படும் வெளிநாட்டினர் மீண்டும் நாட்டினுள் வசிக்க நமது சட்டம் அனுமதிக்கவில்லை. எனவே, அவர்களை தடுப்புக் காவல் மையங்களில் வைத்துப் பராமரிப்பதும், தகுந்த விசாரணைக்குப் பிரகு அவர்களை வெளியேற்றுவதும் அவசியம்.
உரிய கடவுச்சீட்டு, விசா இல்லாமல் மற்றொரு நாட்டினுள் பிரவேசிப்பது சர்வதேச சட்டங்களின்படி குற்றமாகும். அதற்கு தண்டனையும் உண்டு. உலகின் பல நாடுகளில் முறையற்ற வழிகளில் செல்லும் இந்தியர்கள் தண்டிக்கப்படுவதையும் திருப்பி அனுப்பப்படுவதையும் நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் கண்டு வருகிறோம். இதுவேதான், இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடிபுகும் வெளிநாட்டவருக்கும் பொருந்தும்.
ஏற்கனவே தடுப்புக் காவல் மையங்கள் நாட்டில் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மத்தியிலும் மாநிலத்திலும் ஆண்டபோதுதான் (2013) அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று இடங்களில் தடுப்புக் காவல் மையங்கள் துவங்கப்பட்டன. தற்போது மஹாராஷ்டிரம், கர்நாடகத்தில் தடுப்புக் காவல் மையங்களை அமைக்க பாஜக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
1946ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வெளிநாட்டினா் சட்டம், இந்தியாவிலுள்ள வெளிநாட்டினரின் இடப்பெயா்வைக் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவா்களை வெளியேற்ற கடவுச்சீட்டு சட்டம்-1920 மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
குறிப்பிட்ட நபா் வெளிநாட்டினா் என்பது உறுதியானால், சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அவரைத் திருப்பியனுப்பும் வரை தடுப்புக் காவல் மையத்திலோ அல்லது தடுப்பு மையங்களிலோ அவரைத் தங்கவைக்கலாம் என்று உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி பிறப்பித்திருந்தது.
எனவே தடுப்புக் காவல் மையங்கள் குறித்து தவறான பிரசாரம் செய்வதை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும். இந்த மையங்கள் நாட்டின் குடிமக்களான 130 கோடி பேரை எவ்விதத்திலும் பாதிக்காது. சொல்லப்போனால், உள்நாட்டில் வசிக்கும் மக்களுக்கு, கட்டுப்பாடின்றி வெளிநாடுகளிலிருந்து ஊடுருவுவோரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க இவை அவசியம்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) என்பது என்ன?
நாடு முழுவதும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, 15வது மக்கள்தொகை கனக்கெடுப்பு (2010-11) எடுக்கப்பட்டது. அப்போது சில தகவல்களையும் கூடுதலாக அரசு திரட்டியது. அதன் அடிப்படையில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2010இல் உருவாக்கப்பட்டது. National Population Register- NPR என்பதே இந்தப் பதிவேடு ஆகும். அதாவது இந்தப் பதிவேடு இந்நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் 6 மாதங்களுக்கு மேலாக வசிக்கும், அடுத்த 6 மாதங்கள் வசிக்கப் போகிற மக்களின் பட்டியலாகும். 2015இல் இப்பதிவேடு புதுப்பிக்கப்பட்டது.
2003இல் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, இதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அதில் உள்ள ஆதாரத் தகவல்களின் அடிப்படையில்தான் 12 இலக்க ஆதார் அடையாள அட்டைகள் நாட்டிலுள்ள 125 கோடி (96 சதவீதம்) மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த இந்தப் பதிவேடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டுப் பணிகளையும் எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளனவே?
2021 பிப்ரவரி முதல் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதையொட்டி தேசிய மக்கள்தொகை பதிவேடு-2021 ஐப் புதுப்பிக்க உள்ளதாக தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த டிச. 24இல் அறிவித்துள்ளது. அதற்காக ரூ. 3,941 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதனையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ளும் எதிர்க்கட்சியினர் இதனை எதிர்க்கின்றனர். இந்த நாட்டில் வசிக்கும் அனைவரையும் பட்டியலாகத் தொகுப்பது தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR). இது நாடு முழுவதும் 2010லேயே தயாரிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அவர்கள் அனைவரும் குடிமகன்களா என்பதை உறுதிப்படுத்தித் தொகுப்பது தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC). இப்போதைக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே தே.கு.பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
தே.ம.பதிவேடு தயாரிப்பில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தே.கு.பதிவேடு தயாரிக்கப்படும் என்ற கண்ணோட்டத்தில் எதிர்க்கட்சிகள் இதனை எதிர்க்கின்றன. காங்கிரஸ் கட்சி தான் 2010இல் இதனைக் கொண்டுவந்தது என்பதை அவை வசதியாக மறந்து விடுகின்றன.
இவ்விரு பதிவேடுகளின் அடிப்படை ஆதாரங்கள் வேறானவை. இரண்டுக்கும் பொதுவான சில அம்சங்கள் இருப்பினும், குடியுரிமை தொடர்பான ஆதாரங்கள் மக்கள்தொகை பதிவேடு புதுப்பித்தலின்போது கேட்கப்படாது. இதனை உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இணை அமைச்சர் கிஷன் ரெட்டியும் தெளிவுபடுத்தி உள்ளனர்.
உலக நாடுகள் இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது உண்மையா?
உண்மையல்ல. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த விஷயம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று கூறியுள்ளன. வேறெந்த நாடும் இதனை விமர்சிக்கவில்லை. இந்த சட்டத்தில் தொடர்புடைய ஆப்கானிஸ்தானும் பங்களாதேஷும் கூட இதை விமர்சிக்கவில்லை. பாகிஸ்தான் மட்டுமே கண்டித்துள்ளது; அதனைப் பொருட்படுத்தத் தேவையில்லை. இந்தச் சட்டம் குறித்து விமர்சித்த ஒரே நாடு மலேசிய நாடு மட்டுமே. அந்நாட்டில் பெருகிவரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் எதிரொலியாகவே அதனைக் காண வேண்டும். மலேசிய அரசின் விமர்சனத்தை இந்திய அரசு தூதரக வழியில் கடுமையாகக் கண்டித்துள்ளது.
‘வசுதைவ குடும்பகம்’; ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றெல்லாம் சொன்ன பாரதத்துக்கு, பிற நாடுகளால் கைவிடப்பட்ட மக்களைக் காக்கும் தார்மிகக் கடமை இல்லையா?
கண்டிப்பாக உண்டு. ஆனால், நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் தேவைகளை முதலில் நிறைவேற்ற வேண்டிய முதன்மைக் கடப்பாடும் இந்திய அரசுக்கு உண்டு. தனக்கு மிஞ்சியே தானம் என்ற பழமொழி உண்டு. அதை நிறைவேற்றிய பிறகு, உள்நாட்டுப் பாதுகாப்பு, சமூக உறவுகள், பண்பாட்டு மாற்றங்கள், பொருளாதாரச் சிக்கல்கள் ஆகியவற்றை உத்தேசித்த பிறகு, வெளிநாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு கருணை காட்டலாம். அதற்கான காலம் வரும்போது பாரதம் தனது கடமையை நிச்சயம் நிறைவேற்றும்.
(தொடர்கிறது)…
$$$
3 thoughts on “குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 3ஆ”