குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 3அ

-சேக்கிழான்

இதுவரை நமது உண்மையான குடிமகன்களின் எந்த விவரமும் அரசிடம் தெளிவாக இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே அரசின் ஆதாரமாக உள்ளது. இதுவரையிலான பிழைகளைச் சரிசெய்ய வேண்டுமானால், இனியேனும் தே.கு.பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும். இப்போது ஏதேனும் ஒரு அடையாள அட்டை உள்ள அனைவரும் இதில் சேர முடியும். இனிவரும் நாட்களில், புதிய பதிவேடு தயாரான பிறகு மக்களைக் கண்காணிப்பதும், அவர்களுக்கான நலத் திட்டங்களைத் தீட்டுவதும் அரசுக்கு சுலபமாக இருக்கும். 

(பகுதி-2)

3. கேள்வி- பதில் வடிவில் சில தகவல்கள் (அ)

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) என்பது என்ன?

இந்த நாட்டின் குடிமக்கள் யார் என்பதை வரையறுப்பதே தேசிய குடிமக்கள் பதிவேடு. 1951ஆம் வருடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 1955ஆம் வருடத்திய குடிமக்கள் சட்டத்தால் உருவாக்கப்பட்ட குடிமக்கள் பதிவேடு இது. துரதிர்ஷ்டவசமாக இத்தனை ஆண்டுகாலமாக இந்தப் பதிவேடு புதுப்பிக்கப்படவில்லை.

ஒவ்வொரு நாட்டிலும் யார் அந்த நாட்டின் குடிமகன் என்பதற்கான தெளிவான ஆவணங்கள் இருக்கும். நமது நாட்டில் இதுவரையிலான அரசுகள் இம்முயற்சியை மேற்கொள்ளாததால், 1955ஆம் வருடத்திய தேசிய குடிமக்கள் பதிவேடே (National Register of Citizens-NRC) இறுதியானதாக உள்ளது. 2003ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் குடிமக்கள் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று இந்தச்  சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது.

தே.கு.பதிவேடு புதுப்பிக்கப்படாததால், என்ன பிரச்னை?

உலகின் முன்னேறிய நாடுகள் அனைத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. ஆனால், நமது நாட்டில் அரசின் அலட்சியம் காரணமாக இந்தப் பதிவேடு புதுப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக வெளியார் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது சிரமமாக உள்ளது.

கடந்த 65 ஆண்டுகளில் பல  தலைமுறைகள் மாறிவிட்ட சூழலில், உண்மையான இந்தியக் குடிமகன் யார் என்பதை தற்போது தீர்மானிப்பதும் சவாலானதே. ஆனால், தனது பூர்வீக ஆவணங்கள் (முன்னோரின் சொத்து பத்திரங்கள்), வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் எந்த ஒருவரும் தான் தேசியக் குடிமகன் என்பதை நிரூபிக்க முடியும். 1971க்கு முந்தைய பூர்வீக ஆவணங்கள் எதையும் மக்கள் வழங்கத் தேவையில்லை என்று டிச. 31இல் அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. இவை எதுவும் இல்லாதவர்களும், கல்வி அறிவு இல்லாதவர்களும் கூட சாட்சியங்களின் அடிப்படையில் குடிமகன் பதிவேட்டில் சேர முடியும். குடிமகன் என்பது எந்த மத, மொழி, இன அடிப்படையும் அற்றது என்பதையும் மறக்கக் கூடாது.

தே.கு.பதிவேட்டை நாடு முழுவதும் அமலாக்க பாஜக துடிப்பது ஏன்?

இதுவரை நமது உண்மையான குடிமகன்களின் எந்த விவரமும் அரசிடம் தெளிவாக இல்லை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே அரசின் ஆதாரமாக உள்ளது. இதுவரையிலான பிழைகளைச் சரிசெய்ய வேண்டுமானால், இனியேனும் தே.கு.பதிவேடு தயாரிக்கப்பட வேண்டும். இப்போது ஏதேனும் ஒரு அடையாள அட்டை உள்ள அனைவரும் இதில் சேர முடியும். இனிவரும் நாட்களில், புதிய பதிவேடு தயாரான பிறகு மக்களைக் கண்காணிப்பதும், அவர்களுக்கான நலத் திட்டங்களைத் தீட்டுவதும் அரசுக்கு சுலபமாக இருக்கும். எனவேதான், தே.கு.பதிவேட்டை நாடு முழுவதும் கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக தெரிவித்தது. தற்போது தேர்தலில் வென்ற பிறகு ஜனநாயக முறையில் அதற்கான முயற்சிகளில் ஆளும் கட்சி என்ற முறையில் பாஜக இறங்கி இருக்கிறது. பாஜக தலைவர் அமித் ஷா, விரைவில் நாடு முழுவதும் தே.கு.பதிவேடு முறையை அமலாக்குவோம் என்று கூறியது அந்த அடிப்படையில்தான்.

எனினும் அரசு அதிகாரப்பூர்வமாக இந்தப் பதிவேட்டை உருவாக்கும் பணியை இன்னமும் துவக்கவில்லை. இந்தப் பதிவேட்டில் இஸ்லாமியர்கள் நீக்கப்படுவார்கள் என்ற எதிர்க்கட்சியினரின் பொய்யான பிரசாரம் காரணமாகவே முஸ்லிம்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வன்முறைகளில் இறங்கி உள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது மத அடிப்படையிலானது அல்ல. இதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் தயாராக இருப்பதாகவும் அரசு அறிவித்துள்ளது. தவிர, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து இதுவரை அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்று பிரதமர் அறிவித்திருக்கிறார். சிறுபான்மையின மக்களிடையே நிலவும் சந்தேகங்கள் போக்கப்பட்ட பிறகே தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய குடியுரிமை சட்டம் (Indian Citizens Act) என்பது என்ன?

இந்திய அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையில் உள்ள முதல் பட்டியலில் குடியுரிமை பற்றி விவரிக்கப்படுகிறது. குடியுரிமை தொடர்பான முழுமையான விளக்கங்கள் அப்போது கொடுக்கப்படவில்லை. எனினும் நாடாளுமன்றம் குடியுரிமை தொடர்பாக சட்டம் இயற்ற, சாசனத்தின் 11வது ஷரத்து முழு அதிகாரம் அளித்துள்ளது. அதன்படி 1955இல் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் குடியுரிமைச் சட்டம், இந்தியாவில் யார் குடிமகனாக இருக்கலாம் என்பதை வரையறுக்கிறது. அந்த விதிமுறைகள்:

  • 1949 நவ. 26 இல் இந்திய எல்லைக்குள் பிறந்தவராகவோ, அதற்குப் பின் பிறந்தவராகவோ இருப்பவர் தானாகவே இந்தியக் குடிமகன் ஆகி விடுகிறார் (Citizenship at the commencement of the Constitution of India).  அன்றே இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்துவிட்டது. அதன்பிறகு அரசியல் சாசனத்தின் பெரும் பகுதிகள் சேர்க்கப்பட்டு முறைப்படி 1950 ஜன. 26இல் அமலானது.
  • பிறப்பின் அடிப்படையிலும் குடியுரிமை (பிரிவு 3- பிறப்பு அடிப்படை Citizenship by birth) தீர்மானிக்கப்படுகிறது. 1950 ஜன. 26க்குப் பின் இந்திய மண்ணில் பிறந்தவர் இந்தியக் குடிமகன் ஆவார்.
  • இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் இருப்பவரின் 1950, ஜன. 26க்குப் பிறகு பிறந்த குழந்தையும் வம்சாவளி அடிப்படையில் (பிரிவு 4- வம்சாவளி அடிப்படை Citizenship by Descent) குடியுரிமை பெறலாம்.
  • குடியுரிமை சட்டத்தின் 5வது பிரிவின்படி, மத்திய அரசுக்கு 7 விதமான விதிமுறைகளுக்கு உள்பட்ட மக்கள் பதிவுக்கு விண்ணப்பித்து (பதிவு அடிப்படை- Citizenship by Registration) குடியுரிமை பெறலாம்.
  • இந்த நாட்டில் 11 ஆண்டுகள் வசித்த வெளிநாட்டவர் குடியுரிமை சட்டத்தின் 6 (1) விதிமுறைக்கு உள்பட்டவராக இருந்தால் அவர் இயல்பாக குடியுரிமை பெற முடியும் (பிரிவு 6- இயல்பாக்கம்- Citizenship by Naturalization).

இதுவரை எவ்வெப்போது இந்தச் சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது?

குடியுரிமை சட்டத்தைப் பொருத்த மட்டிலும்,  காலத்தின் தேவைக்கேற்ப நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தைத் திருத்திக் கொள்ளலாம் என்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் சாசனத்தில் பாகம்-2, ஷரத்துகள் 5-11 இல் கொடுக்கப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் இச்சட்டம் இதுவரை 6 முறை (1986, 1992, 2003, 2005, 2015, 2019) திருத்தப்பட்டுள்ளது.

இச்சட்டத்தில் 1986இல் முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, பிறப்பின் அடிப்படையில் இந்தியக் குடிமகன் ஆகலாம் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, பெற்றோரில் ஒருவரேனும் இந்தியக் குடிமகனாக இருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

அடுத்த திருத்தம் 1992இல் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 1950 முதல் 1992 வரை இந்தியாவுக்கு வெளியே பிறந்த ஒருவரது பெற்றோரில் ஒருவர் இந்தியக் குடிமகன் என்றால் அவர் இந்திய குடியுரிமை பெறுவார். இது வம்சாவளி அடிப்படையில் குடியுரிமையை உறுதி செய்தது.

2003இல் மூன்றாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில்தான் ஊடுருவல்காரர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படலாகாது என்று தெளிவாக வரையறுக்கப்பட்டது. தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) குறித்தும், குடிமக்கள் அடையாள அட்டை குறித்தும் இந்த சட்டத் திருத்தம் கூறியுள்ளது.

2005இல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் யார் என்பதற்கான வரையறைகளைத் திருத்தியது. அரசியல் சாசனம் எழுதப்படுவதற்கு முன்னரோ (1950), நாடு சுதந்திரம் பெற்ற பிறகோ (1947), முந்தைய இந்தியாவில் வசித்தவர்கள் பிற நாடுகளில் குடிமக்களாகி இருந்தால் அவர்களும் அவர்களது வாரிசுகளும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் எனக் கருதப்படுவார்கள் என்பதே அந்த வரையறை.

பதிவு அல்லது இயல்புரிமையின் அடிப்படையில் ஒருவர் குடியுரிமை பெறுவதற்கான விதிகளில் சில தெளிவான மாற்றங்களை 2015 சட்டத் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, பதிவு வேண்டுபவரின் பெற்றோர் இந்தியக் குடிமகன்களாக இருந்திருந்தால், அவர்கள் பதிவு விண்ணப்பத்துக்கு ஓராண்டுகாலம் முன்னர் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.

ஆறாவது சட்டத் திருத்தம் தான் 2019 டிச. 12இல் நிறைவேறி உள்ளது.

2019ஆம் வருடத்திய குடியுரிமை சட்டத் திருத்தம் என்ன சொல்கிறது?

இந்தியாவின் அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய (இஸ்லாமிய) நாடுகளில் மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அங்கிருந்து புகலிடம் தேடி இந்தியா வந்துள்ள மக்களுக்கு அடைக்கலமும்,  குடிமகன் என்ற உரிமையும் அளிக்க 2019ஆம் வருத்திய குடிமக்கள் திருத்தச் சட்டம் வகை செய்கிறது. அதற்கு அவர்கள் இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் (முன்னர் இந்த இயல்பாக்கக் காலம் 11 ஆண்டுகளாக இருந்தது); 2014 டிசம்பர் 31க்கு முன்னர் இந்தியாவுக்குள் வந்தவராக இருக்க வேண்டும்; அவர்கள் ஹிந்து, சீக்கியர், சமணர், பௌத்தர், பார்ஸி, கிறிஸ்தவர் ஆகிய சிறுபான்மை (எந்த நாட்டிலிருந்து வெளியேறி வந்தார்களோ அந்த நாட்டில்) மக்களாக இருக்க வேண்டும். அவர்கள் முறைப்படி அரசுக்கு விண்ணப்பித்து, இந்தியக் குடியுரிமைப் பதிவு பெறலாம் என்பதே இந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம்.

இந்த நாடுகளில் நடைபெறும் இஸ்லாமியர்களின் வன்முறையும், சிறுபான்மையினரின் வேதனையும் உலகம் அறிந்த உண்மை. 1947இல் இந்நாடுகளில் இருந்த சிறுபான்மையினரின் எண்ணிக்கையையும் இப்போதைய எண்ணிக்கையையும் ஒப்பிட்டாலே ஆபத்தின் வீரியம் புரியும். இந்த நாடுகளில் நிம்மதியாக வாழ முடியாமல், உயிரையும் மானத்தையும் காத்துக்கொள்ள சொத்துக்களையும் உறவுகளையும் இழந்து தப்பியோடி வரும் அபலைகள் இந்திய வம்சாவளியினர் என்பதால், அவர்களுக்கு உதவுவது நமது கடமை.

இந்தச் சட்டத்தில் ஏன் இஸ்லாமியர்கள் சேர்க்கப்படவில்லை?

இந்தக் கேள்வியே அடிப்படைப் புரிதல் அற்றது. ஏனெனில் அந்த நாடுகளில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அவர்களால் மதரீதியாகக் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள்தான் அடைக்கலம் நாடி இந்தியா வருகின்றனர். அவர்களையும், அவர்களை அந்த நாடுகளில் கொடுமைப்படுத்திய பெரும்பான்மை மதத்தினரையும் ஒரே அளவுகோல் கொண்டு பார்க்கக் கூடாது.

ஹிந்து, சீக்கியர், சமணர், பௌத்தர், பார்ஸி, கிறிஸ்தவர் ஆகிய  ஆறு மதத்தினருக்கு விசேஷமாக அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, அவர்கள் அடைந்துள்ள பாதிப்பின் அடிப்படையில் மட்டுமே. இந்தியாவை விட்டால் அவர்களுக்கு நாதி ஏது?

அப்படியானால், பாகிஸ்தானில் அகமதியாக்களும் ஷியாக்களும் முஸ்லிம்கள் என்றபோதும் அங்குள்ள ஷன்னி முஸ்லிம்களால் கொடுமைப்படுத்தப் படுகிறார்களே? அவர்களை இந்தியா புறக்கணிப்பது மதரீதியான பாரபட்சம் ஆகாதா?

பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடு; மதரீதியாக தன்னை அறிவித்துக் கொண்டுள்ள நாடு. ஷியாக்களும் அகமதியாக்களும் இஸ்லாமிய மதத்தின் உட்பிரிவுகள். ஒருகாலத்தில் அவர்களும் சேர்ந்துதான் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனவே, இஸ்லாம் மதத்தின் உட்பிரிவுகளுக்குள் நடைபெறும் மோதலுக்காக நாம் பரிதாபப்பட முடியாது. அது அந்நாட்டின் உள்விவகாரம். அதில் இந்தியா தலையிடக் கூடாது. வரலாற்றுரீதியாக, அவர்கள் இஸ்லாமுக்கு என்று தனிநாடு கோரி பிரிந்து சென்றவர்கள் என்பதையும் மறக்கக் கூடாது.

இருப்பினும் தஞ்சம் வேண்டி வந்தால், பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினுக்கு அளிக்கப்பட்டது போல புகலிடம் அளிக்கத் தடை ஏதும் இல்லை. தவிர, பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்துவரும் வேண்டுகோள்களின் அடிப்படையிலேயே எந்த அரசும் செயல்பட முடியும். எதிர்காலத்தில் அகமதியாக்கள் இந்தியக் குடியுரிமை கோரினால், அதை அரசு பரிசீலிக்க வாய்ப்புள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுவது சரியா?

உண்மையில் எதிர்க்கட்சிகள் புரிந்துகொண்டே இவ்விஷயத்தில் அரசியல் செய்கின்றன. அகதிகளைப் பொருத்த வரை இரு வகைகள் உள்ளன. பொருளாதார வசதிக்காக தாமாக வரும் அகதிகள், வலுக்கட்டாயம் காரணமாக ஒருநாட்டிலிருந்து தப்பி ஓடி வரும் அகதிகள் என இரு வகையாக்கலாம். பொருளாதார வசதிக்காக வரும் அகதிகளை ‘ஊடுருவல்காரர்கள்’ என்று உலகம் அழைக்கிறது. இதனை எந்த நாடும் அனுமதிப்பதில்லை. இதனை  ‘வெளிப்புறத்திலிருந்து வரும் ஆக்கிரமிப்பு’ என்று உச்ச நீதிமன்றமே வர்ணித்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் இந்த ஊடுருவலால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், இன வேறுபாடு, மத வேறுபாடு, மொழி வேறுபாடு போன்ற காரணங்களுக்காக ஒரு நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகையில், அங்குள்ள பெரும்பான்மை மக்களால் கொடுமை இழைக்கப்படுகையில், அங்கிருந்து தப்பி வரும் சிறுபான்மையினர் வாழ வழியற்ற அநாதைகள். இங்கு அதிக அளவில் மதரீதியான கொடுமைகளே அகதிகளின் பரிதாப நிலைக்குக் காரணமாக உள்ளது. இந்த நிலைக்கு அவர்களை ஆளாக்கியவர்கள் இந்த மூன்று நாடுகளில் பெரும்பான்மையாக வாழும் இஸ்லாமியர்கள் என்பதை மறுக்க முடியாது. எனவேதான், பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மட்டும் இந்தச் சட்டத்தில் கருணை காட்டப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் மூன்று வெளிநாடுகளில் இருந்து வெளியேறி அடைக்கலம் புகுந்துள்ள சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த அகதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

அதேசமயம், இந்நாட்டில் உள்ள சுமார் 18 கோடி முஸ்லிம்களைப் பற்றி குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஏதும் சொல்லவில்லை. அதற்கான சட்டம் அல்ல இது. ஆனால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விடுவர் என்பது போன்ற தவறான சித்திரம் ஒருசார்பான ஊடகங்களாலும், சுயநல அரசியல்வாதிகளாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

அஸ்ஸாம் மாநிலத்துக்கு மட்டும் தற்போதைய குடிமக்கள் திருத்தச் சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பது ஏன்?

1951 முதல் 1971 வரை, அண்டை நாடான கிழக்கு பாகிஸ்தானில் இருந்து (தற்போதைய பங்களாதேஷ்) லட்சக் கணக்கான ஹிந்து, முஸ்லிம் மக்கள் அகதிகளாக மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களில் ஊடுருவினர். அவர்கள் வங்கமொழி பேசியதால் மேற்கு வங்கத்தில் பிரச்னை ஆகவில்லை. ஆனால், அஸ்ஸாம் மாநிலத்தின் பிரத்யேகப் பண்பாட்டு அடையாளங்களும் தங்கள் அரசியல் அதிகாரமும் இந்த அகதிகளால் பாதிக்கப்படுவதாகக் கருதிய அஸ்ஸாம் மாநிலப் பிரிவினைவாதிகள் 1979 முதல் 1985 வரை நடத்திய வன்முறைகளால் 900க்கு மேற்பட்டோர் அங்கு உயிரிழந்தனர். அதையடுத்து, 1985இல் அஸ்ஸாம் பிரிவினைவாத அமைப்புகளுக்கும் அப்போதைய மத்திய அரசுக்கும் (ராஜீவ் காந்தி பிரதமர்) அஸ்ஸாம் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, அஸ்ஸாம் மாநிலத்துக்கான தே.கு.பதிவேடு உருவாக்கப்பட்டு, 1971 மார்ச் 25க்குப் பின்னர் அம்மாநிலத்தில் நுழைந்தவர்கள் அந்நியர்களாகக் கருதப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது.

பிற மாநிலங்களைப் பொருத்த வரை, 1951ஆம் வருடத்துக்குப் பின் இந்தியாவுக்குள் வந்தவர்கள் அந்நியர்கள் என்பது கூறப்படாத கருத்து. (அதற்கான எந்த ஆவணமும் இல்லை என்பது வேறு விஷயம்). அஸ்ஸாமிலோ, 1971க்குப் பிறகு வந்தவர்கள், 1985 வருடத்திய ஒப்பந்தப்படி அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமே நேரடிக் கண்காணிப்பில் இந்தக் கணக்கெடுப்பை நடத்தி உள்ளது. இப்போதைய கணக்கெடுப்பின்படி, சுமார் 19 லட்சம் பேர் அஸ்ஸாம் தே.கு.பதிவேட்டில் தகுந்த ஆதரங்களை சமர்ப்பிக்காததால் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் என இரு தரப்பினரும் உண்டு. அஸ்ஸாம் மாநிலத்தின் பிரத்யேக நலனுக்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தம் காரணமாக, குடிமக்கள் திருத்தச் சட்டப்படி புதிய குடியுரிமை பெறுவோர் அங்கு குடிபுக முடியாது.

வேறு சில வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தச் சட்டத்துக்கு விலக்கு உள்ளதா?

ஆம். பழங்குடியின மக்கள் மிகுந்த அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா ஆகிய மாநிலங்களில், அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையில் அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தின்படி, இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் பகுதியளவு செல்லாது. அதாவது, இம்மாநிலத்தவர் அல்லாத ஒருவர் புதிதாக இம்மாநிலங்களில் குடிமகனாக முடியாது.

அதேபோல, உள்நுழைவு உரிம அனுமதிச் சட்டம் (Inner Line Permit) கொண்டுள்ள அருணாசல பிரதேசம், நாகலாந்து, மிஸோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கும் இச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் 370வது ஷரத்தின் படி இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் அண்டைநாடான ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள் அகதிகளாக இந்தியாவில் சுமார் 30 ஆண்டுகளாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு இந்தச் சட்டத்தில் ஏன் குடியுரிமை அளிக்கப்படவில்லை?

இந்த சட்டத் திருத்தம் மதரீதியாக கொடுமைப்படுத்தப்பட்ட இந்திய வம்சாவளியினரின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவைப் பொருத்த வரை, அங்குள்ள மொழி அடிப்படையிலான, இன அடிப்படையிலான பாரபட்சத்தால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் அந்த நாட்டில் அரசியல் அதிகாரம் பெற்றவர்கள்; ஆனால், பெரும்பான்மை சிங்களவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை முஸ்லிம் நாடுகளில் மிகக் கொடூரமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினருடன் ஒப்பிடக் கூடாது. தவிர, தமிழகத்தில் அகதியாக இருந்தாலும், ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகம் (ஸ்ரீலங்கா) திரும்பவே துடிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போதும் சட்டவிரோதமாக கள்ளத் தோணியில் குடும்பத்துடன் ஸ்ரீலங்கா செல்லும் ஈழத் தமிழர்கள் பலர் உள்ளனர். மேலும், அவர்கள் இந்தியாவுக்கு இடம் பெயர்வது அவர்களது பல்லாண்டுக்கால உரிமைகளை தங்கள் சொந்த நாட்டில் இழப்பதாகிவிடும்.

மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பினர் அந்நாட்டு அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரை நடத்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீலங்காவில் உள்ள தமிழர்கள். இன்று அரசியல் சூழல் மாறியுள்ளது. விடுதலைப்புலிகளும் இப்போது இல்லை. எனவே மாறியுள்ள சூழலின் அடிப்படையில், நட்பு நாடான ஸ்ரீலங்கா அரசுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது.

1977, 1983 இனக்கலவரங்களை அடுத்து ஸ்ரீலங்காவில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். அவர்களில் பலர் அந்நாட்டுக்கே திரும்பிவிட்டனர். தற்போது, 107 இலங்கை அகதி முகாம்களில் சுமார் 64,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மீள அவர்களது நாட்டிலேயே குடிபுகச் செய்வதுதான் அவர்கள் இழந்த உரிமைகளை மீட்க உதவியாக இருக்கும். அதேசமயம், அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு குடியுரிமை அளிப்பது பற்றி அரசு சிந்திக்க வேண்டும். இருப்பினும், இப்போதுதான் இதற்கான விவாதம் தொடங்கி உள்ளது.

இவை அனைத்துக்கும் மேலாக, ஏற்கனவே, ஸ்ரீலங்காவிலிருந்து வந்த பல்லாயிரக் கணக்கான மலையகத் தமிழர்களுக்கு 1964ஆம் வருடத்திய சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் தேவைப்படின் ஈழத் தமிழ் அகதிகள் வேண்டுகோளை முன்வைத்தால் அவர்களுக்கென புதிய சட்டத் திருத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே விவாதத்தைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழக்க வேண்டும் என்ற சிந்தனை இப்போது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனிப்பட்ட விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

தற்போது ஈழத் தமிழ் அகதிகளுக்காக தமிழகத்தில் நீலிக் கண்ணீர் விடும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் ஏன் அவர்களை இந்தியக் குடிமக்கள் ஆக்க நடவடிக்கை எடுக்கவில்லை? உண்மையில், இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் விரும்பினால், அவர்கள் 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருந்தால், முறைப்படி விண்ணப்பித்து குடியுரிமை பெறும் வாய்ப்பு 2007 வரை இருந்தது. அதனைத் தடுக்கும் வகையில் 2007இல் தனி அரசாணையை வெளியிட்டது காங்கிரஸ் கூட்டணி அரசுதான். அந்த ஆணை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அகதிகளுக்குக்  குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றால், அதற்கான வேண்டுகோள் அவர்களிடமிருந்துதான் வர வேண்டும். அவர்கள் சொந்த ஊருக்குச் செல்லும் கனவுடன்தான் அகதிகள் முகாம்களில் தவிக்கின்றனர் என்பதே நிதர்சனம்.

(தொடர்கிறது)…

$$$