-சேக்கிழான்
‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், அண்மையில் (டிசம்பர் 2019) நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்திய கலவரங்கள் காட்டுகின்றன.

2. திட்டமிட்ட வன்முறைகளும் மக்களின் மௌனமும்…
‘உண்மை வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன் பொய் ஊரைச் சுற்றி வந்து விடும்’ என்ற பழமொழி உண்டு. அது முற்றிலும் உண்மை என்பதைத்தான், அண்மையில் (டிசம்பர் 2019) நாட்டின் பல பகுதிகளில் எதிர்க்கட்சிகளும் வன்முறையாளர்களும் இணைந்து நடத்திய கலவரங்கள் காட்டுகின்றன.
மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியவுடன் (டிச. 12), அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பில் ஒரு நியாயம் இருந்தது. அங்கு ஏற்கனவே அமலில் உள்ள 1985ஆம் வருடத்திய அஸ்ஸாம் ஒப்பந்தத்தை மீறுவதாக புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் அமைந்துவிடுமோ என்ற சந்தேகம் அம்மாநில மக்களுக்கு எழுந்ததில் வியப்பில்லை. அதனால் அங்கு கலவரம் வெடித்தது. (டிச. 12-14) ஆனால், மத்திய அரசும் அங்கு ஆளும் மாநில அரசும் தகுந்த விளக்கம் அளித்தவுடன், அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று நாட்களில் அமைதி திரும்பிவிட்டது. தவிர, கு.தி.சட்டத்துக்கு ஆதரவாக மக்கள் லட்சக் கணக்கில் திரண்ட பேரணிகளும் அங்கு நடந்திருக்கின்றன.
அகதிகள் பிரச்னையால் தத்தளிக்கும் மேற்கு வங்கத்திலும் டிச. 12 முதலே வன்முறைகள் நடந்தவண்ணம் இருந்தன. ஆனால், அஸ்ஸாம் அமைதியான பிறகும்கூட, அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியே வீதிக்கு வந்து 3 நாட்கள் (டிச. 16- 18) நடத்திய போராட்டங்களால், அங்கு மட்டும் அமைதி திரும்பவில்லை. தவிர, பாஜக அரசுக்கு எதிரான அவரது அரசியல்ரீதியான வெறுப்பு முழக்கங்கள் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், இஸ்லாமியர்களிடையே சந்தேகத்தைப் பரப்பவும் பயன்பட்டன.
ஒருவாரம் கடந்து மேற்கு வங்கம் அமைதிக்கு திரும்பியபோது, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், வன்முறையாளர்களும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு பல மாநிலங்களில் வன்முறைகளை அரங்கேற்றினர். வெள்ளிக்கிழமை தொழுகைகள் (டிச. 13, 20) அதற்கு தூபமிட்டன. தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்டு (டிச. 15) வாகனங்களை எரித்த மாணவர்கள் மீது காவல்துறை எடுத்த கடும் நடவடிக்கையும் அவர்களுக்கு பிரசார சாதனமாகிவிட்டது.
இதைக் கொண்டு, நாடு முழுவதும் மாணவர்களை போராட்டக் களத்தில் இறக்கின இடதுசாரி மாணவர் சங்கங்கள். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதனை பாஜகவுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்த விழைந்ததன் விளைவே, பல மாநிலங்களில் வன்முறை வெறியாட்டம்.
மாணவர்களை முன்னிறுத்திய போராட்டக்காரர்களால் அரசை நிலைகுலைய வைக்க முடிந்தது. மாணவர்களும், எதற்காகப் போராடுகிறோம் என்றே அறியாமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், அராஜகவாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு மோடி அரசுக்கு எதிரான கோஷங்களை முழங்கினர். நாடு முழுவதும் இதுவரை அச்சத்துடன் இருந்த வன்முறையாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பாகிவிட, ஆங்காங்கு வாகனங்கள் கொளுத்தப்பட்டன; காவலர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். உ.பி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வேறு வழியின்றி காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி வந்தது.
இதில் வேதனை என்னவென்றால், போராட்டத்தில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை சில லட்சங்கள் மட்டுமே. இதனை நமக்கென்ன என்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த குடிமக்களோ 100 கோடிக்கு மேல்.
இந்நிலையில் டிச. 20 அன்று, உலேமாக்கள் சபை உள்ளிட்ட இஸ்லாமிய மத அமைப்புகள் வெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து தமிழகம் எங்கும் மாபெரும் திரளைக் கூட்டி தங்கள் பலத்தைக் காட்டி அரசை எச்சரித்திருக்கின்றன. இன்னமும் அவர்கள், கு.தி.சட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது அவர்களது வெறித்தனமான மேடைப் பேச்சுகளில் புலப்பட்டது. தவிர, தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் குடியுரிமை திருத்த சட்டத்தையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்வதும் தெளிவாகவே தென்பட்டது.
இந்தக் குழப்பத்தை தெளிவுபடுத்த அரசு முயன்றாலும், எதிர்க்கட்சிகள் அவர்கள் தெளிவுபெற விடுவதற்குத் தயாரில்லை. அதனால்தான் வன்முறை பரவியது. இதனை பாஜக அரசு மீதான கரும்புள்ளியாக்க அவர்கள் துடிப்பதும் நன்றாகவே தெரிகிறது. இந்நிலையில் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் கு.தி.சட்டத்தை விளக்கியும், இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்தும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன.
ஆனால், இப்போது நாடு முழுவதும் பரவலான மாற்றம் தென்படுகிறது. அஸ்ஸாம், மேற்கு வங்கம், திரிபுரா, மஹாராஷ்டிரம், ராஜஸ்தான், தில்லி போன்ற மாநிலங்களில் லட்சக் கணக்கான மக்கள் பேரணி நடத்தி கு.தி.சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஏ.பி.பி. சி-வோட்டர் நிறுவனம் 2019, டிச. 21இல் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு நாடு முழுவதும் 62 சதவீதம் ஆதரவு இருப்பது தெரியவந்தது. இந்தச் சட்டத்துக்கு மக்களிடையே ஆதரவு பெருகி இருப்பது தெரிய வந்தவுடன் எதிர்க்கட்சிகளின் வேகம் குறைந்திருக்கிறது.
ஆனாலும், இந்தச் சட்டங்களை ஆதரிக்கும் பலருக்கும் கூட, இன்னமும் முழுமையான விவரங்கள் தெரிவதாகத் தோன்றவில்லை. அவர்களுக்காக சில விளக்கங்களை அளிப்பது கடமை மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும் கூட. இது, வன்முறையை நம்பி, நாட்டின் மீதும் அரசியல் சாசனத்தின் மீதும் கல்லெறிந்து கொண்டிருக்கின்ற மதவெறிக் கும்பல்களும் அறிய வேண்டிய விஷயமே.
எனவே, இங்கு தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register- NPR) தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens-NRC), குடிமக்கள் திருத்தச் சட்டம் (Citizenship Amndment Act- CAA) ஆகியவை பற்றிய தெளிவான, சுருக்கமான விளக்கங்களை தொடர்ந்து காணலாம்.
(தொடர்கிறது)…
$$$
3 thoughts on “குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 2”