-ஆசிரியர் குழு

பதிப்புரை
நடையில் நின்றுயர் நாயகன் எனத் திகழும், பரத கண்டத்தின் காவியத் தலைவனான ஸ்ரீ ராமனை தனது காப்பியத்தின் தலைவனாகக் கொண்டாடுகின்றார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
அறம் எனும் சொல்லுக்கு உருவமாகத் திகழ்பவர் ஸ்ரீ ராமன். மானுட குலத்திற்கு ‘ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்’ என பேராண்மையுடன் வாழ்ந்து காட்டி, வழிகாட்டுகின்றார் மரியாதா புருஷோத்தமன்.
ராமனின் பேரறம், வேடுவன் குகனையும் சகோதரனாக ஏற்கும்;
குரங்கினத்தின் சுக்ரீவனையும் சகோதரனாக ஏற்கும்; அசுரர் குலத்தில் உதித்தாலும் – நேர்மையின் பக்கம் மாறி நின்ற விபீஷணனையும் சகோதரனாக ஏற்கும்!
“குகனொடும் ஐவரானோம் முன்பு!
பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவரானோம்!
எம்முறை அன்பின் வந்த
அகனமர் காதல் ஐய,
நின்னொடும் எழுவரானோம்!"
-என்று சகோதரத்துவப் பண்பை வாழ்ந்து வழிகாட்டுகிறார் ஸ்ரீ ராமன்.
யுத்த தர்மத்திலும் ராமனின் அறம் போற்றத்தக்கது. அரக்க வேந்தன் ராவணன் நிராயுதபாணியாக நின்ற போது…
“வாரணம் பொருத மார்பும்,
வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கேற்ப
நயம்பட உரைத்த நாவும்,
தார் அணி மௌலி பத்தும்
சங்கரன் கொடுத்த வாளும்..."
-எல்லாம் இழந்து ராவணன் நின்ற போது – அவன் தனது மனைவியையே கவர்ந்து சென்றவன் என்ற போதும் – “இன்று போய் நாளை வா” என்று வாய்ப்பளித்த அறம் ராமனின் அறம்.
ராவணனை வென்று, விபீஷணனை இலங்கை அரசனாக்கிய பின்னர், ஸ்வர்ணபுரியாக ஜொலிக்கும் இலங்கையை பிரமிப்புடன் நோக்கிய இலக்குவனிடம் ராமன், “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்று கூறி, தம் தாய்மண்ணான அயோத்தி நமக்கு ஸ்வர்க்கத்தை விட மேலானது என அறிவுறுத்துகின்றார்.
அத்தகைய உதாரண புருஷன் ஸ்ரீ ராமனுக்கு அயோத்தியில் பல நூறு ஆண்டுகளாக ஆலயம் இல்லாமல் இருந்தது வேதனைக்குரியது. பல போராட்டங்களுக்குப் பின், பலரது ஒப்பற்ற, உணர்வுப்பூர்வமான பங்களிப்பின் பயனாக இன்று பிரம்மாண்டமான பேராலயம் அமைய இருக்கின்றது.
இந்த இனிய வேளையில், ராமர் கோயிலுக்கான போராட்டங்கள் அனைத்தையும் தொகுத்து ‘ஆலயம் காணும் அயோத்தி நாயகன்’ எனும் நூலினை விஜயபாரதம் பிரசுரம் வெளியிடுவதில் பேரானந்தம் கொள்கிறது.
ஸ்ரீ ராம ஜன்மபூமி போராட்டத்தில் பங்கெடுத்த திரு. சேக்கிழான் அவர்களே இந்நூலினை நமக்குப் படைத்தளித்திருப்பது, ஸ்ரீராமரின் அனுக்கிரஹம் என்று தோன்றுகிறது. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவரும், அயோத்தி இயக்கத்தை தமிழகத்தில் வழிநடத்தியவருமான திரு. ஆர்.பி.வி.எஸ்.மணியன் அவர்கள் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கி இருப்பது மிகவும் பொருத்தமானது.
நூலாசிரியருக்கும், அட்டைப்படம் வரைந்தளித்த கோவை ஓவியர் திரு. வே.ஜீவானந்தன் அவர்களுக்கும், நூலினை பக்க வடிவமைப்பு செய்து கொடுத்த கௌரி கிராஃபிக்ஸுக்கும், நூலின் உருவாக்கத்தில் பங்களித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நமது நன்றிகளும், ஸ்ரீராமனின் அருளாசியும் உரித்தாகுக.
மனிதனாகப் பிறந்து, மானுட குலத்திற்கு தனது வாழ்வின் மூலம் வழிகாட்டிய இறையவதாரம் ஸ்ரீ ராமனுக்கு அவன் பிறந்த அயோத்தியில் ஆலயம் அமைக்க நடந்த போராட்ட வரலாற்றையும், தடைகளை வென்ற வெற்றிச் சரித்திரத்தையும் விளக்கும் இந்நூலினை, வாசகர்கள் படித்து உணர்ந்து, ஸ்ரீ ராமபிரானின் அருளாசிக்குப் பாத்திரர்களாக வேண்டுகிறோம்!
விஜயபாரதம் பிரசுரம்
சென்னை
$$$

முன்னுரை
இன்று (2024 ஜன. 22ஆம் தேதி), அயோத்தி, ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமனின் சிலை ‘பிராணப் பிரதிஷ்டை’ செய்யப்படுகிறது. ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையால் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான கோயிலின் கர்ப்பகிருஹத்தில் பாலராமன் பிரவேசிக்க இருக்கிறான். சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமன் தனக்குரிய இடத்தை அடைந்திருக்கிறான். இதற்கு ராமபக்தர்களின் இடையறாத போராட்டமே காரணம் எனில் மிகையில்லை.
பொ.யு. 1528இல் அந்நிய ஆக்கிரமிப்பாளன் பாபரால் தகர்க்கப்பட்டு, அங்கு அடிமைச் சின்னம் அமைக்கப்பட்டது. அந்த அவமானத்தைத் துடைத்தெறிந்துவிட்டு, அதே இடத்தில் 2024இல் ஸ்ரீராமனுக்கான மாபெரும் ஆலயம் அமைகிறது. உலகம் வியந்து நம்மைக் காணும் உற்சாகத் தருணம் இது.
ஆனால், இந்த வெற்றி எளிதில் அடையப்படவில்லை. இதற்காக எண்ணற்ற ராம பக்தர்கள் போராடி இருக்கின்றனர். இந்த ராமகாரியத்தில் லட்சக் கணக்கானோர் தமது இன்னுயிர் ஈந்துள்ளனர்; கோடிk கணக்கானோர் தங்கள் கடும் உழைப்பை நல்கி இருக்கின்றனர். இவை வருங்காலத் தலைமுறைக்குக் கூறப்படுவது அவசியம். இந்த வெற்றிச் சரித்திரத்தின் பக்கங்களைத் தொகுத்துப் பதிவு செய்வது இன்றியமையாத கடமை என்ற எண்ணத்தில் எழுதியதே இந்நூல்.
ஸ்ரீராமனுக்காக இலங்கைக்கு சேது அமைத்தபோது அங்கும் இங்கும் புரண்டு மணலைக் கடலில் தூவிய சிறு அணில் போல, இந்த ராமகாரியத்தில் அடியேனும் சில ஆண்டுகள் பங்காற்றி இருக்கிறேன்; இளம் வயதில் 1989 ராம் சிலா பூஜை, 1990 ராம ஜோதி யாத்திரைகளில் தீவிரமாக இயங்கி இருக்கிறேன். அப்போது மக்களின் பக்திப் பெருக்கையும் ஹிந்து எழுச்சியையும் நேரடியாகக் கண்ணுற்றிருக்கிறேன். 1990 கரசேவை காலகட்டத்தில் இந்த ராம காரியத்துக்காக, அன்றைய திமுக ஆட்சியின்போது ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்ற பெயரில் கைதாகி சிறையில் 15 நாட்கள் இருந்திருக்கிறேன். எல்லாம் அவன் செயல். அந்த வகையில் இந்நூலை எழுதும் வாய்ப்பையும் தகுதியையும் ஸ்ரீராமனே அளித்திருப்பதாக நம்புகிறேன்.
ஆலயம் காணும் அயோத்தி மாநகரம், ஹிந்துக்களின் வரலாற்றில் மாபெரும் வெற்றிச் சின்னம். எனவே, எந்த ஒரு நிகழ்வின் இடமும் நாளும் தெளிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அதனை மனதில் கொண்டே, இந்நூலின் அத்தியாயங்களைப் பகுத்துக் கொண்டேன். இந்நூலின் இரண்டாம் அத்தியாயமான ‘அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை’, காலவரிசையில் அயோத்தி இயக்க நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறது. அதனைப் படிக்கும்போது, இந்தப் போராட்டத்தின் சிக்கல்களும், அதனை எதிர்கொண்ட நமது சமுதாயத்தின் தீரமான செயல்பாடுகளும் நமக்குப் புரிய வரும்.
ராமர் கோயில் இயக்கம் என்பது, ராமபக்தர்களின் தொடர் யுத்தம், அதற்கான சட்டப் போராட்டம், அதனை நிலைநிறுத்த உதவிய தொல்லியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகள், இந்த ராமகாரியத்தில் அனுமனாக உழைத்த பெருமக்கள் எனப் பல்வேறு அம்சங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாகும். எனவே அடுத்து வரும் அத்தியாயங்களில், சில இடங்களில் கூறியது கூறல் போல சில இடங்கள் தெரியக் கூடும். இயன்ற வரை இதனைத் தவிர்த்திருக்கிறேன். என்றபோதும், அந்தந்த அத்தியாயத்தின் தேவை கருதி, தவிர்க்க முடியாத இடங்களில் முக்கியமான நிகழ்வுகள் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.
அதேபோல, இந்நூலின் சில இடங்களில் ‘பாபர் மசூதி’ என்ற சொற்பிரயோகம் வருகின்றது. உண்மையில் அங்கு இருந்த கட்டடம் மசூதியே அல்ல. அங்கு தொழுகைகள் ஏதும் நடந்ததில்லை. அதற்கான வடிவமைப்பு எதுவும் அதில் இல்லை. தவிர, 1938லேயே வக்ஃப் வாரியம் அதனைக் கைவிடுவதாக அறிவித்துவிட்டது. அதற்கு பல நூறு ஆண்டுகள் முன்னிருந்தே அந்த இடம் ராமர் பிறந்த இடமாகத் தான் வழிபடப்பட்டிருக்கிறது. எனவே தான், பெரும்பாலான சட்டப்பூர்வமான வழக்குகளில் ‘சர்ச்சைக்குரிய கட்டடம்’ என்றே அந்த இடம் குறிக்கப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் தேவை கருதியும், குழப்பத்தைத் தவிர்க்கவும், ‘பாபர் மசூதி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அயோத்தி இயக்கம் குறித்த முழுமையான நூல் என்று இதனைக் கூற இயலாது. ஹிந்துக்களின் இந்த மாபெரும் சரித்திரம் எதிர்காலத்தில் மாபெரும் நூலாக எழுதப்பட வேண்டும். அதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக இந்நூல் அமையும் என எண்ணுகிறேன். இந்நூலில் உள்ள ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு துணைத் தலைப்புகளும் தனிநூலாகும் தகுதி படைத்தவை.
1980- 1990களில் ராமர் கோயில் மீட்புக்காக நாங்கள் போராடிய காலகட்டம், அரசியல் ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் எங்கும் நிராசையே நிலவியது. ஆயினும் இருளைக் கிழிக்கும் ஆதவனின் ஒளி போல, ராமபக்தியால் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டபோது எதிர்காலத்தில் நிகழப் போகும் சரித்திர நிகழ்வை மனக்கண்களில் நாங்கள் கண்டோம்; இன்று அதனை நிஜக்கண்களால் தரிசிக்கிறோம்.
‘கலியுகத்தில் சங்கமே சக்தி’ என்பதையும், ‘ராமபக்தியால் சாதிக்க இயலாதது ஏதுமில்லை’ என்பதையும், நமது நாட்டிற்கு மட்டுமல்லாது உலகிற்கும் உணர்த்தி இருக்கிறது, புண்ணிய பூமியாம் அயோத்தியில், ராம ஜன்மபூமியில் அமைந்திருக்கும் பேராலயம். இனி வரப்போகும் நமது வாரிசுகளுக்கு ஸ்ரீராமனின் வில்லும் சொல்லும் என்றும் காவலாக இருக்கும் என்ற நம்பிக்கையே, இந்நூலை எழுதி முடிக்கும் போது தோன்றியது.
அறத்தை நாம் காக்க, அறம் நம்மைக் காக்கும். அறத்தின் நாயகனான ராமன் நம் அனைவரையும் காத்தருளட்டும்!
சேக்கிழான்
திருப்பூர்
$$$
முழுமையான நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
மொத்த பக்கங்கள்: 128+ 4; புத்தகத்தின் விலை: ரூ. 125-
விஜயபாரதம் பிரசுரம், சென்னை
போன்: +91 89391 49466
இணைய முகவரி: https://vijayabharathambooks.com/
மின்னஞ்சல்: contact@vijayabharathambooks.com

$$$
One thought on “ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – பதிப்புரையும் முன்னுரையும்”