-சேக்கிழான்
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இது ஆறாம் பகுதியின் தொடர்ச்சி-2...

ஈ. 1980 முதல் இன்று வரை:
22. துறவியர் பெருமக்கள்
ஆயிரக் கணக்கான துறவியர் பெருமக்கள் அயோத்தி இயக்கத்தை ஆசீர்வதித்ததுடன், இணைந்து போராடி இருக்கிறார்கள். அவர்களுள் முதன்மையானவர் உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தர் (1931- 2019). விஸ்வ ஹிந்து பரிஷத், துறவியர் பேரவை, ராம ஜன்மபூமி இயக்கம் ஆகியவற்றில் மிகவும் தீவிரமாகப் பாடுபட்ட இவர், அரசியல்வாதிகளிடம் சமரசமின்றி உறுதியுடன் பேசி வந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் அனைவராலும் மதிக்கப்பட்ட சித்தரான தேவ்ரஹ பாபாவின் பங்களிப்பும் குறிப்பிடத் தக்கது. சரயூ நதிக்கரையில் ஒரு மரக்குடிசையில் இருந்த இவரை தரிசித்து ஆசி பெற, பிரதமர்களாக இருந்த இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் வந்தனர் என்றால் இவரது பெருமை புலப்படும். 1984இல் பிரயாகையில் நடைபெற்ற கும்பமேளாவின்போது தர்ம சன்சாத் கூட்டப்பட்டது. அதற்கு தலைமை தாங்கிய தேவ்ரஹ பாபா, ராமர் கோயில் தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்து சம்பிரதாயங்களைச் சார்ந்த மடாதிபதிகளையும் ஏற்கச் செய்தார். 1989இல் சிலான்யாஸ் நடைபெற அரசு உதவ வேண்டுமென ராஜீவ் காந்திக்கு அறிவுரை கூறியவர் இவரே. 1990இல் இவர் காலமானார்.
சுவாமி வாமதேவ், துறவியாக மட்டுமல்லாது, விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகியாகவும் இருந்தார். பசுப் பாதுகாப்பு இயக்கத்தை நடத்தியவர். ஜெய்ப்பூரில் 1984இல் நடந்த அகில பாரத மாநாட்டில் துறவியர்களை ஒருங்கிணைத்ததில் இவரது பங்கு குறிப்பிடத் தக்கது. 1990 கரசேவையின்போது அரசின் அடக்குமுறைக்கு அஞ்சாமல் கரசேவகர் படையை நடத்திச் சென்றவர்.
கேரளத்தைச் சார்ந்த சின்மயானந்த மிஷன் நிறுவனரான சுவாமி சின்மயானந்தர் (1916- 1993) விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவன உறுப்பினர். இவரது அயோத்தி இயக்கப் பங்களிப்பும் கவனத்திற்குரியது. இவரது இனிய, கம்பீரமான ஆங்கில உரை பலரையும் வசீகரித்தது.

காஞ்சி சங்கர மடம் அயோத்தி இயக்கத்தின் ஆதரவாளராகவே என்றும் இருந்து வந்துள்ளது. மகா பெரியவா என்று அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (1894-1994) 1989 சிலான்யாஸுக்கு மங்கலப் பொருட்களை அனுப்பி வைத்தார். அவரை அடுத்து பீடாதிபதியான ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (1935- 2018), வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அரசின் வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் தலைவர்களுடன் 2002-2003இல் அமைதிப் பேச்சு நடத்தினார். இவர் வெளிப்படையாகவே ராமர் கோயிலை ஆதரித்து பிரசாரம் செய்தார். தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ராமர் கோயில் இயக்கத்தை ஆதரித்து வருகிறார்.
வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், உச்ச நீதிமன்றம் அமைத்த அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றார். இதேபோல, ஹனுமான் பிரசாத் போத்தார், கர்பாத்ரிஜி மஹராஜ், ஜகத்குரு ஸ்வாமி சத்யானந்த சரஸ்வதி, மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் (இவர் தற்போது ராமர் கோயில் கட்டுமான அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்) உள்ளிட்ட பலநூறு துறவிகள் அயோத்தி இயக்கத்தின் அடிக்கற்களாக இருந்து வழிகாட்டி உள்ளனர்.
23. சுவாமி ராமபத்ராச்சார்யா:

அயோத்தி இயக்கத்தை ஆதரித்த துறவியர்களில் சுவாமி ராமபத்ராச்சார்யாவை தனித்துக் குறிப்பிடக் காரணம் உள்ளது. அயோத்தி நில உரிமை வழக்கில் இவரது சாட்சியம் மிக நுட்பமான ஆவணமாகக் கொள்ளப்பட்டது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவருக்கு சிறு வயதிலிருந்தே பார்வை தெரியாது.
1950இல் பிறந்த பண்டிட் கிரிதர் 1938இல் ஜகத்குரு ராமானந்தாச்சார்ய சுவாமி ராமபத்ராச்சார்யா ஆனார். ராமானந்தி துறவுப் பரம்பரையைச் சேர்ந்தவர்; சித்திரகூடத்தில் துளசிபீடத்தை நிறுவியவர்; ஹிந்து ஆன்மிகத் தலைவர், கல்வியாளர், சமஸ்கிருத அறிஞர், கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், பாடகர், 14 மொழிகளில் புலவர், 22 மொழிகளை பேசக் கூடியவர், தத்துவ ஞானி என பன்முகங்களைக் கொண்டவர் இவர். விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவரும் கூட.
அலகாபாத் நீதிமன்றத்தில் 2003இல் நடைபெற்ற ராமர் கோயில் வழக்கின்போது, சமய சம்பந்தமான நிபுணரின் கருத்தாக இவரது சாட்சியம் ஏற்கப்பட்டது. அப்போது ராமாயணம், ஸ்கந்த புராணம், ராமதமனீய உபநிடதம், யஜூர் வேதம், அதர்வண வேதம் ஆகியவற்றில் இருந்து மேற்கோள்களை முன்வைத்தார். அவற்றில் அயோத்தி எவ்வாறு புண்ணிய பூமியாகக் குறிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் கூறியபோது நீதிபதிகளே வியப்படைந்தனர். பார்வையற்ற நிலையிலும் எண்ணற்ற நூல்களைக் கற்ற அவரது மேதைமை நீதிமன்றத்தில் ராமகாரியமாக வென்றது.
துளசிதாசரின் படைப்பிலிருந்து (தோஹ சட்டகம்) 8 சுலோகங்களைக் கூறிய சுவாமி ராமபத்ராச்சார்யா, ராமர் கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டிருப்பதற்கு அவற்றை சாட்சியமாக விளக்கினார். ராமானந்த பரம்பரையில் பயிலப்படும் அயோத்யா மகாத்மியம் நூலின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய இடத்திலுள்ள நில அமைப்புகளையும், சரயூ நதியின் அமைவிடத்தையும், முன்னிருந்த கோயிலின் அமைப்பையும் ஞானக்கண் கொண்டு பார்த்தவர் போல அவர் விளக்கியபோது நீதிமன்றமே சமைந்து போனது.
அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் (2010) இவரது சாட்சியம் பிரதானக் குறிப்பாக எடுத்துக் கொள்ளப்பட்டது. பல்வேறு கொலை மிரட்டல்களையும் மீறி, ராமர் கோயில் இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக இன்றும் இவர் இயங்கி வருகிறார்.
24. அசோக் சிங்கல்:

அயோத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற பெயர்களைக் கேட்டவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வரும் மற்றொரு பெயர் அசோக் சிங்கல் (1926- 2015) தான். அந்த அளவிற்கு ஹிந்து இயக்கப் பணிகளும் ராமர் கோயில் போராட்டமும் அவரது வாழ்வின் அங்கமாகி இருந்தன.
பின்னாளில் ஆர்.எஸ்.எஸ். தலைவரான ராஜேந்திர சிங்கின் தொடர்பால் அந்த அமைப்பில் இணைந்த அசோக் சிங்கல், ஆக்ராவின் பெரும் செல்வந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர். தனது உலோகவியலில் பட்டப் படிப்பை முடித்தவுடன் (1950) ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியரானார் சிங்கல். இன்றைய உ.பி.,ஹரியாணா, தில்லி மாநிலங்களில் சங்கத்தில் பல்வேறு உயர் நிலைகளில் பணியாற்றினார். 1980இல் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இணை பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இவரது தலைமைப் பண்பே, பரிஷத்தை பெரும் போராட்டக் குணம் உள்ளதாக மாற்றியது. மிக விரைவில் அதன் தலைவரானார்.
1981இல் தமிழகத்தின் மீனாட்சிபுரத்தில் கூட்டு மதமாற்றம் நிகழ்ந்தபோது, அதைத் தடுக்க அங்கு சென்ற சிங்கல், பட்டியலின சகோதரர்களுக்காக 200 திருக்கோயில்களை பரிஷத் சார்பில் கட்டிக் கொடுத்தார். இவரது முயற்சியால் 1984இல் தில்லி விஞ்ஞான்பவனில் நடந்த துறவியர் பேரவை கூட்டத்தில் ராமர் கோயில் மீட்புக்கான தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னரே, ராமர் கோயிலுக்கான போராட்டம் மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியது.
“நாடு முழுவதிலும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இடிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான ஆலயங்களை ஹிந்துக்கள் கேட்கவில்லை. ஹிந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருத்தும் காசி, அயோத்தி, மதுரா ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய ஆலயங்கள் அமைக்க வேண்டும் என்றே கேட்கிறோம். இதற்கு இந்திய முஸ்லிம்கள் ஆதரவு அளீக்க வேண்டும்” என்று அசோக் சிங்கல் வலியுறுத்தினார். இது விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முதன்மைக் கோரிக்கையாக இன்றும் இருந்து வருகிறது.
தலைவர் என்பவர் தொண்டர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் அசோக் சிங்கலே உதாரணம். அயோத்தியில் 1990இல் நடந்த கரசேவையின்போது பயங்கரமான கட்டுக்காவலையும் மீறி அயோத்தி நகருக்குள் நுழைந்த சிங்கல், கரசேவகர்களின் படைக்கு தலைமை தாங்கி வழிநடத்தினார். அப்போது காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு ரத்தம் சிந்தினார். ராமர் கோயில் இயக்கத்தை ஒரு காட்டாறாக நடத்திச் சென்றவர் அசோக் சிங்கல். இவரது வாழ்வே ராமனுக்கான தவம். இவரை நவீன அனுமன் எனலாம்.
அசோக் சிங்கலுக்கு உதவியாக, விஷ்ணுஹரி டால்மியா, பிரவீண்பாய் தொகாடியா, வினய் கத்தியார் (இவர் பஜ்ரங்க தளத்தின் தலைவராக இருந்தவர்), சாத்வி ரிதம்பரா, தவுதயாள் கன்னா, ஆச்சார்ய கிரிராஜ் கிஷோர், எஸ்.சி.தீட்சித் (இவர் உ.பி. மாநில காவல் துறையின் தலைவராக இருந்தவர்) போன்ற பலநூறு அற்புதமான தலைவர்கள் செயல்பட்டனர். இவர்களால் வழிநடத்தப்பட்ட விஸ்வ ஹிந்து பரிஷத், ராமர் கோயில் போராட்டத்தில் குத்தீட்டியாக முன்னின்றது.
25. கே.கே.முகமது:

பிறப்பால் இஸ்லாமியராக இருந்தபோதும், நியாயத்தின் பக்கமே நிற்பேன் என்று கூறி, ராமர் கோயில் இயக்கத்திற்கு உதவி புரிந்தவர், தொல்லியல் அறிஞரான கே.கே.முகமது.
கேரளத்தில் 1950இல் பிறந்த கே.கே.முகமது, தொல்லியல் துறையில் அமைதியான சாதனைகள் பலவற்றை நிகழ்த்தியவர். ‘இபாதத் கானா’ என்னும் ஒரு கட்டடத்தை பதேபூர் சிக்ரியில் இவர் அகழ்ந்தெடுத்தார். அதுவே அக்பர் தீன்-இலாஹி என்னும் ஒரு கூட்டு மதத்தை உருவாக்கியதாகக் கூறப்படும் இடம். அதேபோல, பதேபூர் சிக்ரியில் அக்பரால் கட்டப்பட்ட வட இந்தியாவின் முதல் கிறிஸ்தவ வழிபாட்டிடத்தையும் கண்டறிந்தார். கேசரியா என்னும் ஊரில் அசோகரால் கட்டப்பட்ட ஒரு பௌத்த ஸ்தூபியையும் அகழ்ந்தெடுத்தார்; கேரளத்தின் மலப்புரத்திலும் கோழிக்கோட்டிலும் பல குடைவரைக் குகைகளும், கல்திட்டைகளும் இவரால் கண்டுபிடிக்கப்பட்டன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த தண்டேவாடா மாவட்டத்தில், அழியும் நிலையிலிருந்த 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பர்சூர், சாம்லூர் கோயில்களை மீட்டெடுத்தார். ம.பி.யில் குவாலியர் அருகே உள்ள 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பத்தேஸ்வர் கோயில்களைப் புதுப்பித்து மீட்டெடுத்தார்.
பேராசிரியர் பி.பி.லாலின் அகழ்வாய்வுக் குழுவில் (1975-76) பணியாற்றிய இவர், அங்கு கண்டறியப்பட்ட ராமர் கோயில் குறித்த உண்மைகளை எவருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்தினார். “இஸ்லாமியர்கள், மெக்கா, மதீனாவில் வழிபடுவது போன்று, அயோத்தி ஹிந்துக்களுக்கான புனித ஸ்தலம். இதனை இஸ்லாமியர்கள் மனமுவந்து விட்டுக் கொடுக்க வேண்டும்” என்று பத்திரிகையில் இவர் எழுதிய கட்டுரை, ராமர் கோயில் இயக்கத்தை சீர்குலைக்க முயன்ற இடதுசாரிகளுக்கு தூக்கமற்ற இரவுகளை உருவாக்கியது. 2019இல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
26. உமேஷ் சந்திர பாண்டே:

அயோத்தி ராமர் கோயிலில் (சர்ச்சைக்குரிய பாபர் மசூதிக் கட்டடம்) உள்ள ராமர் சிலைகளை பக்தர்கள் வழிபட உதவும் வகையில் கதவுகளைத் திறந்து விடுமாறு பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் 1986இல் வழக்கு தொடர்ந்தவர், வழக்கறிஞர் உமேஷ் சந்திர பாண்டே.
இவர் முதலில் தனது வழக்கை பைசாபாத் உரிமையியல் (முன்சீஃப்) நீதிமன்றத்தில் தான் தொடர்ந்தார். ஆனால், “இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தின் ஆய்வில் இருப்பதால் இந்த மனுவை விசாரிக்க முடியாது” என்று முன்சீஃப் மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்துவிட்டார். அதையடுத்தே மாவட்ட நீதிமன்றத்தை 1986 ஜன. 25இல் உமேஷ் நாடினார்.
“1949இல் சர்ச்சைக்குரிய கட்டடத்தினுள் ராமர் சிலை வைக்கப்பட்ட பிறகு அதனை உள்ளூர் நிர்வாகிகள் பூட்டியுள்ளனர். ஆனால் அது தொடர்பாக நீதித் துறையில் ஆலோசிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கட்டடம் பூட்டப்பட்டது சட்டவிரோதமானது” என்று உமேஷ் வாதிட்டார். அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, 1986 பிப். 1இல் அளித்த தீர்ப்பில், அயோத்தியில் ராமரை வழிபட சர்ச்சைக்குரிய இடத்தில் (பாபர் மசூதி வளாகம்) அனுமதி அளிக்குமாறு உத்தரவிட்டார். இதுவே ராமர் கோயில் இயக்கத்தின் இரண்டாவது திருப்புமுனையாக அமைந்தது.
27. லால் கிருஷ்ண அத்வானி:

அயோத்தி ராமர்கோயில் என்றவுடன் உடனே நாடு முழுவதிலும் நினைவுக்கு வரும் பெயர், லால் கிருஷ்ண அத்வானி. இவரது தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ராமர் கோயில் இயக்கத்தில் இணைந்ததே, போராட்டத்தை உச்சநிலைக்குக் கொண்டுசென்றது. இவர் நடத்திய ராம ரதயாத்திரை, வட மாநிலங்களில் தலைகீழ் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்று மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதற்கும், அயோத்தி வழக்கில் ஹிந்துக்கள் வெல்லவும் வித்திட்டது, இவரது தீர்க்கமான அரசியல் தலைமையும் தெளிவான முடிவுகளும் தான்.
பிரிவினைக்கு முந்தைய பாரதத்தில், கராச்சியில் 1927இல் பிறந்தவர் லால் கிருஷ்ண அத்வானி; இளம் வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். தொண்டர். பின்னாளில் பாகிஸ்தானாக மாறிய பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக அத்வானி பணி புரிந்திருக்கிறார். தேசப் பிரிவினையின்போது கராச்சியில் இருந்து தில்லி வந்த அத்வானி, இங்கும் சங்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1951இல் பாரதீய ஜனசங்கத்தில் சேர்ந்தார்.
பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி, சிறந்த நிர்வாகி, ராஜதந்திரி, மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி, நேர்மையான நிர்வாகி எனப் புகழ் பெற்றவர் அத்வானி. இவரது தெளிவான, உறுதியான ஆங்கில மேடைப் பேச்சு பாஜகவை அனைத்து மாநிலங்களிலும் விரிவுபடுத்தியது. கட்சியில் சக தோழர் அடல் பிகாரி வாஜ்பாயுடன் இணைந்து அத்வானி நிகழ்த்திய அரசியல் சாதனைகள், இந்திய வரலாறாகப் பதிவாகி இருக்கின்றன. 1998இல் வாஜ்பாய் பிரதமரானதற்கு அத்வானி வகுத்த தேர்தல் கூட்டணி வியூகமே அடிப்படைக் காரணம். அவரது அரசில் துணைப் பிரதமராகவும் அத்வானி இருந்தார்.
1975 நெருக்கடி நிலையை எதிர்த்து சிறை சென்றவர்களுள் அத்வானியும் ஒருவர். ஜனதா ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு பாரதீய ஜனசங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் வாஜ்பாய் தலைமையில் ஒன்றிணைந்து 1981இல் பாரதீய ஜனதா கட்சியை நிறுவினர். அதன் நிறுவன உறுப்பினராக அத்வானி இருந்தார். 1986இல் பாஜகவின் தேசியத் தலைவராக அத்வானி பொறுப்பேற்றார். அதுவரை தலைவராக இருந்த வாஜ்பாய், அரசியலில் மிதமான போக்கைக் கடைபிடித்து வந்தார். அத்வானி தலைவரானதும் பாஜகவின் போக்கில் மிகுந்த தீவிரமும், ஹிந்துத்துவ வேகமும் காணப்பட்டன. அக் காலகட்டத்தில் தேசிய அளவில் உருவான ராமர் கோயில் இயக்கமும் அதற்கு ஒரு காரணம்.
அயோத்தி ராமர் கோயில் இயக்கத்தை தேசிய எழுச்சியின் அடையாளம் என்று அத்வானி வர்ணித்தார். “ராமபக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பேச்சுவார்த்தையின் மூலமாகவோ, சட்டம் இயற்றியோ, அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்கப்பட வேண்டும்” என்று ஹிமாச்சலப் பிரதேசம், பாலம்பூரில் 1989 ஜூனில் கூடிய பாஜகவின் தேசிய செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது.
‘அயோத்தியில் ராமர் கோயில் அமைப்போம்’ என்று பாஜக தனது 1989 மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும் அறிவித்தது. அன்றைய காலகட்டத்தில் பாஜக முன்வைத்த மூன்று விஷயங்கள் தேசிய அளவில் மக்களைக் கவர்ந்தன. அவை: பொது சிவில் சட்டம், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370வது ஷரத்து நீக்கம், அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆதரவு ஆகியவை. அதுவே 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும், மக்களவையில் 85 எம்.பிக்களைப் பெறவும் வித்திட்டது. பாஜக ஆதரவில் தான் 1989இல் வி.பி.சிங் பிரதமர் ஆனார்.
1990களில் ராமர் கோயில் இயக்கம் விஸ்வ ஹிந்து பரிஷத்தாலும் துறவியர் பேரவையாலும் வேகமெடுத்தபோது, ராமர் கோயிலை ஆதரித்து ராம ரதயாத்திரையை அத்வானி நடத்தினார். 1990 செப். 25இல் குஜராத்தின் சோமநாதபுரத்தில் இருந்து அயோத்தி நோக்கி பல்வேறு மாநிலங்கள் வழியாக, சுமார் 10,000 கி.மீ தொலைவைக் கடந்து செல்லும் வகையில் இந்த ரத யாத்திரை திட்டமிடப்பட்டது. இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்தான், இன்று பிரதமராக உள்ள நரேந்திர மோடி.
இந்த யாத்திரை அக். 23இல் பிகாரில் தடுக்கப்பட்டதும், அயோத்தியில் 1990 அக்.30இல் நடைபெற்ற கரசேவையில் உ.பி. காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடுகளும் நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றின. 1991 மக்களவைத் தேர்தலில் பாஜக 120 இடங்களில் வென்றது. உ.பி.யில் பாஜகவின் கல்யாண் சிங் முதல்வரானார்.
அடுத்து 1992 டிச.6இல் நிகழ்ந்த கரசேவையில் அடிமைச்சின்னம் தகர்க்கப்பட்டு தற்காலிகக் கோயில் அமைக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட நீதிபதி எம்.எஸ்.லிபரான் ஆணையத்தின் அறிக்கை, எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமாபாரதி, அசோக் சிங்கல் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டியது.
மசூதி இடிப்பு வழக்கில் மத்தியப் புலனாய்வு அமைப்பால் (சி.பி.ஐ.) குற்றம் சாட்டப்பட்டு அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், அசோக் சிங்கல், உமாபாரதி உள்ளிட்டோர் விசாரணையை எதிர்கொண்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி உள்ளிட்ட 32 பேரையும் 2020 செப். 30 இல், லக்னௌ நகரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
1996, 1998, 2001 மக்களவைத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றிப் பயணம் தொடர்ந்ததில் அத்வானியின் பங்கு அளப்பரியது. பாஜகவில் அடுத்த தலைமுறைத் தலைவர்களின் பெரும் அணியை உருவாக்கியதிலும் அத்வானியின் பங்கு மேலானது. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு அத்வானி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். அயோத்தி இயக்கத்தில் அசோக் சிங்கலுக்கு அடுத்து இடம் பெறும் தேசியத் தலைவர் அத்வானி தான் எனில் மிகையில்லை.
அத்வானியைப் போலவே, அடல் பிகாரி வாஜ்பாய், பைரோன் சிங் ஷெகாவத், ராஜமாதா விஜயராஜே சிந்தியா, முரளி மனோகர் ஜோஷி, குஷாபாவு தாக்கரே, வெங்கைய நாயுடு, மதன்லால் குரானா, ஜனா.கிருஷ்ணமூர்த்தி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, பிரமோத் மகாஜன், உமாபாரதி, அமித் ஷா போன்ற நூற்றுக் கணக்கான பாஜக தலைவர்கள் ராமர் கோயில் இயக்கத்தின் அங்கமாக உழைத்திருக்கின்றனர். விஸ்வ ஹிந்து பரிஷத்தும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக நின்று உழைத்ததன் பலனையே இன்று அயோத்தியில் மாபெரும் ஆலயமாகக் காண்கிறோம்.
“எனது நீண்ட அரசியல் பயணத்தில், தீர்க்கமான பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்த முதன்மையான நிகழ்வாக அயோத்தி இயக்கத்தைக் கருதுகிறேன். நமது அரசியலில், சமூகத்தில், ஏன் நமது உண்மையான தேசிய அடையாளம் என்ன என்ற உணர்விலேயே கூட அந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது என்று சமகால இந்திய வரலாற்றைப் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் சான்று பகர்வான். தெய்வீக இயற்கையின் விதியே இந்த இயக்கத்தில் ஒரு மையமான கடமையை நிறைவேற்ற என்னை இதில் ஈடுபடுத்தியது என்று நம்புகிறேன்.”
-எல்.கே.அத்வானி
(My Country, My life- Autobiography by L.K.Advani. pg: 341)
28. கல்யாண் சிங்

அயோத்தி ராமர் கோயிலுக்காக தனது முதல்வர் பதவியையே இழக்கத் துணிந்தவர் கல்யாண் சிங் (1932- 2021). இவர் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தபோதுதான் அயோத்தியில் 1992 டிச. 6 கரசேவை நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் பல்வேறு அழுத்தங்களையும் தாங்கி, கரசேவகர்கள் மீது ஆயுதப் பிரயோகம் செய்யாமல் தவிர்த்து, அடிமைச் சின்னம் அகற்றப்பட உதவினார். ‘ராமபக்தர்களின் காவலர்’ என்று இவரை உ.பி. மக்கள் அழைத்தனர்.
இளம் வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் ஆகிய அமைப்புகளில் செயல்பட்ட கல்யாண் சிங், 1990களில் உ.பி. மாநில பாஜகவின் முகமாக மாறினார். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இவர், பத்துக்கு மேற்பட்ட முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்வானவர். 1990 கரசேவையில் முலாயம் சிங் அரசு நிகழ்த்திய அராஜகத்தை மாநில மக்களிடம் பிரசாரம் செய்து 1991இல் ஆட்சியைக் கைப்பற்றினார் கல்யாண் சிங்.
1992 கரசேவையின் போது இவரது ஆட்சி கலைக்கப்பட்டதாகப் பரவிய வதந்தியே, மசூதி இடிப்புக்கு அடிப்படைக் காரணமானது. ராம பக்தர்களின் உணர்ச்சி அலைகளின் முன்பு மாநில அரசு மௌன சாட்சியாக வேடிக்கை பார்க்க வேண்டி வந்தது. அதன் விளைவாக முதல்வர் பதவியை இழந்தார். இவரது அரசு மட்டுமல்லாது, ம.பி., ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்த பாஜக அரசுகளும் நரசிம்ம ராவ் அரசால் கலைக்கப்பட்டன.
பிறகு 1997இல் மீண்டும் உ.பி. முதல்வரானார். ஆனால் உள்கட்சிப் பூசலால், ஆட்சியில் இருந்தும் பாஜகவில் இருந்தும் விலகினார். பின்னாளில் மீண்டும் பாஜகவில் இணைந்து, மோடி பிரதமராகப் பாடுபட்டார்; ராஜஸ்தான் ஆளுநராகவும் பணியாற்றினர்; 2020இல் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இவரும் விடுவிக்கப்பட்டார்; 2021இல் காலமானார்.

29. கோத்தாரி சகோதரர்கள்:
அண்மைக் காலத்தில் ராமர் கோயில் மீட்புப் போராட்டத்தில் பல நூறு ராம பக்தர்கள் பலியாகி உள்ளனர். குறிப்பாக, 1990 அக். 30, நவ. 2 தேதிகளில் அயோத்தியில் கரசேவையில் ஈடுபட்ட கரசேவகர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் மாநில காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது, நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. அதிலும், கொல்கத்தாவைச் சேர்ந்த கோத்தாரி சகோதர்களின் பலிதானம், வட மாநிலங்களில் பெரும் ஆவேசத்தை ஏற்படுத்தியது.
கொல்கத்தாவைச் சேர்ந்த ஹீராலால் கோத்தாரி- சுமித்ரா தேவி தம்பதியரின் இரு மகன்கள் ராம்குமார் கோத்தாரி (பிறப்பு: 27.07.1968), சரத்குமார் கோத்தாரி (பிறப்பு: 14.10.1970). இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ். தொடர்புக்கு வந்த இவர்கள் உள்ளூரில் ஷாகா நடத்தி வந்தனர். ராமர்கோயில் இயக்கம் தீவிரமடைந்தபோது ராம்சிலா யாத்திரை, ராமஜோதி யாத்திரைகளில் தீவிரமாகப் பங்கேற்றனர். இவர்கள் இருவரும் 1990இல் ஒரே மாதத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு ராமஜோதியைக் கொண்டுசென்றனர் என்பதில் இருந்தே இவர்களின் தீவிர ஈடுபாடு புரியும்.
கரசேவைக்கு வருமாறு அழைப்பு வந்தபோது, கோத்தாரி சகோதரர்கள் அயோத்தி செல்லத் தயாராகினர். அப்போது பரிஷத் தலைவர்கள் இவர்களிடம் ‘சகோதரர்கள் இருவரும் அயோத்தி செல்ல வேண்டாம்; யாரேனும் ஒருவர் போனால் போதும்’ என்று அறிவுறுத்தினர். ஆனால் கோத்தாரி சகோதரர்கள் இருவரும் “நாங்கள் ராமலட்சுமணர்கள் போன்றவர்கள். எங்கு போனாலும் சேர்ந்தே தான் செல்வோம்” என்றனர். இவர்களின் பிடிவாதமே வென்றது. 1990 அக். 22ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து 69 கரசேவகர்கள் சென்ற முதல் அணியில் இருவரும் சென்றனர்,
ஆனால், வாரணாசிக்கு அருகே மொகல் சராயில் இவர்கள் சென்ற ரயில் நிறுத்தப்பட்டுவிட்டது. முலாயம் சிங் அரசு கரசேவையைத் தடுக்க அனைத்து விதமான போக்குவரத்துகளையும் முடக்கி இருந்தது. பேருந்துகளும் இயங்கவில்லை. எனவே வாரணாசியில் டாக்ஸிகளை வாடகைக்குப் பிடித்து அங்கிருந்து சிறு சிறு குழுக்களாக கரசேவகர்கள் சென்றனர். அவை கடும் காவல்துறையின் கெடுபிடியால் பிரதான சாலைகளில் செல்ல முடியவில்லை. கடைசியில் ரேபரேலியில் டாக்ஸி நிறுத்தப்பட்டுவிட்டது. அங்கிருந்து அயோத்திக்கு சுமார் 200 கி.மீ. தொலைவுக்கு கரசேவகர்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து நடந்தே சென்றனர்.
அயோத்தியில் கட்டுக்காவல் மிகவும் பலமாக இருந்த்து. அதையும் மீறி பல்லாயிரக் கணக்கானோர் நகரில் நுழைந்து ஆங்காங்கே ரகசியமாகத் தங்கி இருந்தனர். அவர்களுள் கோத்தாரி சகோதர்களும் இருந்தனர். கரசேவை நடைபெறும் அக். 30ஆம் தேதியும் வந்தது. அசோக் சிங்கல் போலீசால் தாக்கப்பட்டார் என்ற தகவல் தெரிய வந்ததும் கரசேவகர்கள் ஆவேசமடைந்து சர்ச்சைக்குரிய அந்த கட்டடத்தை நோக்கிப் பாய்ந்தனர். அவர்களுள் முதலில் சென்றவர்கள் கோத்தாரி சகோதரர்கள். மின்னல் வேகத்தில் தடைகளைக் கடந்து, கட்டுக்காவலை மீறி, பாபர் மசூதி என்று அழைக்கப்பட்ட அந்த கட்டடத்தின் கும்மட்டங்கள் மீது ஏறிய கோத்தாரி சகோதரர்கள், கரசேவையின் அடையாளமாக அங்கு காவிக் கொடியைப் பறக்கவிட்டனர்.
அந்தப் புகைப்படம் உலக அளவில் புகழ் பெற்ற படம். ‘ஈ, காக்காய் கூட அயோத்தியில் பறக்க விட மாட்டேன்’ என்று கொக்கரித்திருந்த உ.பி. முதல்வர் முலாயமுக்கு அது பெரும் அவமானத்தை ஏற்படுத்தியது. அவரது உத்தரவுப்படி பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, கரசேவகர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
அரசு கணக்கீட்டின்படியே 50 கரசேவகர்கள் பலியாகினர். உண்மையில், அந்த மூன்று நாட்களில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை வெளிவரவே இல்லை. சரயூ நதியில் மட்டுமே நூற்றுக் கணக்கான கரசேவகர்களின் சடலங்கள் மிதந்தன. ஹிந்துக்கள் கொல்லப்பட்டால் மனித உரிமை பற்றிக்கூட எந்த அரசியல்வாதியும் கவலைப்பட மாட்டார்கள் என்பதை மக்கள் உணர்ந்தனர்.
இதனிடையே, கும்மட்டத்தில் காவிக்கொடி ஏற்றிய கோத்தாரி சகோதரர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி, ஹனுமன்கார்ஹி கோயில் அருகே ஒரு வீட்டில் தங்கி இருந்தனர். நவ. 2ஆம் தேதி (அன்று கார்த்திகைப் பூர்ணிமா) அங்கு சென்ற காவல் துறையினர் அவர்களை வெளியே இழுத்து வந்து நடுச்சாலையில் சுட்டுக் கொன்றனர். கரசேவையின்போது நடத்திய துப்பாக்கிச் சூட்டால் அவர்கள் கொல்லப்பட்டதாக போலீசார் ஜோடிக்க முயன்றனர். ஆனால், அவர்களுடன் இருந்த மற்றொரு கரசேவகரான ராஜேஷ் அகர்வால் மூலமாக உண்மை வெளிப்பட்டுவிட்டது.
கோத்தாரி சகோதரர்கள் கொல்லப்பட்டபோது ராமின் வயது 23; சரத்தின் வயது 20. இருவரும் திருமணமாகாத இளைஞர்கள். இவர்களின் ஒரே தங்கையான பூர்ணிமாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடத்த நிச்சயமாகி இருந்தது. இவர்களின் உயிர்த்தியாகம் ஊடகங்களில் தாமதமாகவே வெளியானாலும், வட மாநிலங்களில் தீப்போல பரவியது. முலாயம் அரசுக்கு சாவுமணி அடித்தது கோத்தாரி சகோதரர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான கரசேவகர்களின் பலிதானமே.
கோத்தாரி சகோதரர்களுக்கு இன்று லக்னோ, ஜோத்பூர் உள்ளிட்ட பல இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பலிதானம் அயோத்தி கோயில் இயக்கத்தில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுவிட்டது.
30. கே.பராசரன்

ராமர் கோயில் இயக்கத்தின் வெற்றியில் சட்டப் போராட்டம் முக்கியமானது. அதிலும், உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத் திறனால் வழக்கின் முக்கியத்துவத்தை உணர்த்திய தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர் கேசவன் பராசரன் குறிப்பிட வேண்டியவர். இந்த வழக்கு விசாரணையின் (2000) போது பராசரனுக்கு வயது 92. தனது வயதைப் பொருட்படுத்தாமல், எண்ணற்ற வழக்கு ஆதாரங்களைப் பரிசீலித்து, தகுத்த வாதத்தை முன்வைத்தது, இவரது சட்ட நிபுணத்துவத்தைக் காட்டியது.
இவருக்குத் துணையாக ஒரு வழக்கறிஞர் படையே இயங்கியது. வி.யோகேஸ்வரன், அனிருத் சர்மா, ஸ்ரீதர் பொட்டராஜூ, அதிதி தானி, அஸ்வின்குமார், பக்தி வர்தன் சிங் ஆகியோரின் உதவியுடன் மிகவும் நேர்த்தியான வாதங்களை பராசரன் முன்வைத்து வாதாடினார். மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனின் வாதங்களும் இவ்வழக்கில் உறுதுணையாக இருந்தன.
தமிழகத்தின் ஸ்ரீரங்கம் அருகே 1927இல் பிறந்த இவர், உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்; மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராகவும் (1983-1989) தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராகவும் (1976), மாநிலங்களவை எம்.பி.யாகவும் (2012- 2018) இருந்தவர்; பத்மபூஷண் (2003), பத்மவிபூஷண் (2011) விருதுகளைப் பெற்றவர். “அயோத்தி நில உரிமை வழக்கில் ஸ்ரீராம் லல்லாவுக்காக வாதாடும் வழக்கே தனது தொழில்ரீதியான கடைசி வழக்கு” என்று அறிவித்துவிட்டுத் தான் இந்த வழக்கை பராசரன் நடத்தினார்.
உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் பராசரன் முன்வைத்த சில வாதங்கள் எதிர்த்தரப்பையும் யோசிக்க வைத்தன. “மொகலாய மன்னர் பாபர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கோயிலை இடித்து மசூதி கட்டிய வரலாற்றுத் தவறு திருத்தப்பட வேண்டும்” என்ற அவர், “அயோத்தியில் ஏற்கனவே 55- 60 மசூதிகள் உள்ளன, அவற்றில் எங்கு வேண்டுமாயினும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தலாம். ஆனால் ஹிந்துக்களுக்கு ஒரே ஒரு ராம ஜன்மபூமி தான் இருக்கிறது; ஹிந்துக்களைப் பொருத்த வரை ஒரு கோயில் எங்கிருந்தாலும், அது எப்படி இருந்தாலும் கோயில் தான்” என்று வாதிட்டார்.
சட்டம் ஏற்கும் தெளிவான வாதங்களும், அதற்கு ஆதாரமான உறுதியான சாட்சியங்களும், இறுதியில் சுமார் 70 ஆண்டுகால சட்டப் போரில் ஹிந்துக்களுக்கு வெற்றியைத் தந்தன.
31. மோடியும் யோகியும்:

அயோத்தி இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகு ஸ்ரீராமனுக்கு பிரம்மாண்டமான ஆலயம் அமைவதில், இன்றைய பிரதமர் நரேந்திர மோடிக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும் மாபெரும் பங்குண்டு.
இவர்கள் இருவருமே அயோத்தி இயக்கத்தில் ஆரம்பத்திலிருந்து பங்கேற்றவர்கள். தற்போது ஆட்சித் தலைமையை நிர்வகிப்பதால் கோயிலுக்கு இருந்த அனைத்து விதமான இடர்ப்பாடுகளையும் எளிதில் நீக்கியவர்கள். நாடு முழுவதிலும் – குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் – சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டியவர்கள்; ஒரு புரட்சிகரமான சாதனையை சத்தமின்றி நிறைவேற்றியவர்கள்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
-என்று திருக்குறள் (517) கூறும். இதற்கு இவ்விருவருமே உதாரணம். அத்வானியின் தளபதியாக இருந்த நரேந்திர மோடியும், மஹந்த் அவைத்யநாத்தின் சீடராக இருந்த யோகி ஆதித்யநாத்தும் காலம் தந்த பரிசுகள். இவர்களுடன் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கலால் உருவாக்கப்பட்ட சம்பத் ராயும் இணைந்தார். இவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டமின்றி செய்திருக்கும் சாதனையே இன்றைய ஸ்ரீராம் மந்திர்.

அயோத்தி கோயில் கட்டுமானத்திற்கான அறக்கட்டளையை நிறுவியது முதல், அதன் ஒவ்வொரு வடிவமைப்பையும் திட்டமிட்டு ஆலோசித்து, தனது முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ராவின் நேரடிக் கண்காணிப்பில் ஆலயக் கட்டுமானப் பணிகளை நடத்தியவர் பிரதமர் நரேந்திர மோடியே.
அதுபோலவே, ஆலயத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நேரடியாக வருகை தந்து பார்வையிட்டு, அரசு சார்பிலான அனைத்து உதவிகளையும் ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளைக்கு வழங்கி, பணிக்களை வேகப்படுத்தியவர் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தான்.
ஜனநாயகத்தில் மக்களே இறுதி எஜமானர்கள். நாட்டு மக்களின் பரிபூரண ஆதரவு பெற்ற மக்கள் தலைவர்களாக இவர்கள் இருவரும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்வதால் தான், இனியவை அனைத்தும் தற்போது கூடி வந்திருக்கின்றன. இதுவே இறைவனின் திட்டம். அவனன்றி ஓரணுவும் அசையாது.
இதுவரை குறிப்பிடப்பட்ட பிரமுகர்கள் மட்டுமல்லாது, இன்னும் பல்லாயிரக் கணக்கானோர் அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கத்தில் உழைத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் நாடு நன்றியுடன் வணங்குகிறது.
(தொடர்கிறது)
$$$
முழுமையான நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
மொத்த பக்கங்கள்: 128+ 4; புத்தகத்தின் விலை: ரூ. 125-
விஜயபாரதம் பிரசுரம், சென்னை
போன்: +91 89391 49466
இணைய முகவரி: https://vijayabharathambooks.com/
மின்னஞ்சல்: contact@vijayabharathambooks.com