-இரா.மோகனகிருஷ்ணன்
தமிழகத்தில் அவ்வப்போது வைணவர்களில் வடகலை- தென்கலை சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த மோதலின் பின்னணி என்ன என்று விளக்கும் வகையில்,கோரா தளத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரை, நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது…

முதற்கண், வடகலை சம்பிரதாயம் வடமொழிக்கும், தென்கலை சம்பிரதாயம் தமிழுக்கும் முதன்மை அளிக்கின்றன என்ற கருத்தை சில வைணவர்களும் அறியாமையால் பரப்பி வருகிறார்கள். அந்தக் கருத்து தவறு என்பது அடியேனுடைய தாழ்மையான கருத்து.
இரண்டாவதாக, தென்கலை சம்பிரதாயம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது; வடகலை சம்பிரதாயம் ‘ஆரிய சம்பிரதாயம்’ என்று சிலர் சொல்வது அரசியல் பிரசாரமே தவிற வேறில்லை.
நாதமுனிகளால் விதைக்கப்பட்டு ராமாநுஜர் தலைமையில் 10 ஆம் நூற்றாண்டில் வேரூன்றிய ஸ்ரீவைஷ்ணவ மரபில் வடகலை – தென்கலை என்ற பாகுபாடு தொடக்கத்தில் இல்லை.
வடகலையார், தென்கலையார் இருவருமே ராமாநுஜரையே தங்கள் முழுமுதல் ஆசானாகக் கருதுகிறார்கள்.
திவ்யப் பிரபந்தங்களைத் தொகுத்த நாதமுனிகளின் சீட பரம்பரையில் வந்த ராமாநுஜர், பிரபந்தங்களை ராகத்தோடு, நான்மறைகள் போன்று ஓதும் முறையை எல்லா வைணவக் கோயில்களிலும் அறிமுகப்படுத்தினார். மேலும் வடமொழி ஸ்தோத்திரங்களோடு பிரபந்தங்களையும் கருவறையில் ஓதும் வழக்கு முறைகளையும், பெருமாள் வீதிவலம் வரும் பொழுது, பெருமாளுக்கு முன் பிரபந்தங்களை ஓதும் கோஷ்டிக்கு இடம் கொடுத்து, வேதம் ஓதும் கோஷ்டியை பெருமாளைப் பின்தொடரச் செய்ததும், ராமானுஜர் தோற்றுவித்த மரபே.
இன்றளவும் ராமாநுஜ சம்பிரதாயத்தைப் பின்பற்றும் ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் உள்ள கோயில்கள் உட்பட, எல்லா வைணவக் கோயில்களிலும் இந்த மரபு இம்மி பிசகாமல் நடைமுறைப்படுத்தப் படுகிறது.
திருப்பதியாக இருந்தாலும், திருவரங்கமாக இருந்தாலும், மேல்கோட்டையாக இருந்தாலும் எல்லா வைணவக் கோயில்களிலும் தமிழ் வழிபாடு இன்றியமையாதது. திருமலையில் ஒவ்வொரு நாளும் விடியலில் கோயில் கருவறையையே ஜீயர் திவ்யப் பிரபந்தங்களை ஓதித்தான் திறக்கிறார். அதற்குப் பிறகுதான் மற்ற வழிபாடுகளெல்லாம்.
எனவே ராமாநுஜரை மீறி வடகலையார் தமிழை மதிப்பதில்லை என்ற கூற்று, தவறு மட்டுமல்ல; விஷமத்தனமானது!
வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னும் பகல் பத்து – இராப்பத்து என்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுவது எல்லா வைணவக் கோயில்களிலும் தொன்றுதொட்டு நிலவி வரும் மரபு.
பகல்பத்து விழாவில் மிக முக்கியமான ‘வேதசாம்யம்’ என்றழைக்கப்படும் மறை நிகர் பகர்தல் என்கிற நிகழ்வில், தமிழ் மறைகளான திவ்யப் பிரபந்தங்களை நான்மறைகளுக்கு நிகராக பெருமாள் அறிவிக்கும் காட்சி நடிக்கப்பட்டு அரங்கேற்றப்படுகிறது. வடகலையார் பராமரிப்பிலுள்ள திருஎவ்வுள் என்கின்ற திருவள்ளூராக இருந்தாலும் சரி, தென்கலையார் நிர்வாகத்திலுள்ள திருவல்லிக்கேணியாக இருந்தாலும் சரி, பகல் பத்து விழா நடைமுறைகளில் எந்த வேறுபாடுமில்லை.
வடகலை மரபை தனி மரபாகத் தோற்றுவித்த வேதாந்த தேசிகர் (13-14 ஆம் நூற்றாண்டு) வடமொழியில் எழுதிய துதிப் பாடல்கள் 28. அவர் தமிழில் எழுதிய துதிப் பாடல்கள் 24. பிரபந்தங்களைத் துதிக்கும் அவர் பிரபந்தங்களினால்தான் ‘புரியாத நான்மறைகளும் கற்றுத் தெளிந்தொம்’ என்று கூறியுள்ளார்.
அதேபோல் தென்கலை மரபைத் தோற்றுவித்த மணவாள மாமுனிகளும் (14ஆம் நூற்றாண்டு) வடமொழியில் சிறந்த நூல்களை இயற்றியுள்ளார்.
இத்தனைக்கும் பிறகு, ‘வடக்கு- தெற்கு பிரிவினை’ ஏன்? வடகலை மரபை போதித்த வேதாந்ததேசிகர் வாழ்ந்தது காஞ்சியில். தென்கலை மரபை போதித்த மணவாள மாமுனிகள் வாழ்ந்தது திருவரங்கத்தில். அதாவது ‘காஞ்சிக்குத் தெற்கே’. வடக்குத் திருமடத்தார்களும் தென் திருமடத்தார்களும் பிற்காலத்தில் முறையே வடகலை, தென்கலை என்றழைக்கப்பட்டனர்.
இவர்கள் சாற்றிக் கொள்ளும் திருமண் வடிவைத் தவிர, இரண்டு மரபுகளுக்குமிடையே உள்ள வேறுபாடுகள் பெரும்பாலும் ராமாநுஜரின் சொற்களையும் விசிஷ்டாத்வைத தத்துவக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்வதிலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே.
இப்பொழுது அடித்துக்கொள்ளும் சிறுபான்மையினரான வடகலை – தென்கலையார்களில் பெரும்பாலோருக்கு இந்த வேறுபாடுகளைப் பற்றித் தெரியுமா என்பது ஐயமே!
அந்த வேறுபாடுகள் என்னவென்று இப்பொழுது பார்ப்போம்…
1. குரங்கு, பூனை:
வடகலைக் கருத்துப்படி, குரங்குக் குட்டி தன் முயற்சியால், தாய்க் குரங்கு அங்குமிங்கும் தாவும் பொழுது, எப்படி தான் கீழே விழாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறதோ, அப்படி நாம் பரமனை நம் முனைப்பால் பற்றிக்கொள்ள வேண்டும். அத்ககைய முனைப்பு இல்லாதவர்களுக்குப் பரமனருள் கிட்டாது.
அதாவது பரமன் பாத்திரமறிந்து பிச்சையிடுபவன்.
தென்கலைக் கருத்துப்படி, ஒரு தாய்ப் பூனை, தன் குட்டியை தானே தன் வாயால் எவ்வாறு கவ்விச் செல்லுகிறதோ, அவ்வாறே பரமன் நம்மை வீடுபேறு நோக்கி, நம் முயற்சி எள்ளளவும் இல்லாமல், தானே தூக்கிச் செல்வான்.
அதாவது கார்மேகம் எந்த வேறுபாடும் பார்காமல் எல்லா இடங்களிலும் மழையைக் கொட்டுவது போல், பரமனும் எந்த விதமான வேறுபாடுகளும் பார்க்காது, எல்லோர் மேலும் தன் கருணை மழையைப் பொழிகின்றான்.
2. பிரபத்தி:
இரண்டு பிரிவுகளும் ‘பிரபத்தி’ என்கின்ற பரமனைச் சரணடையும் செய்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
3. பரண்யாசம் (சரணாகதி):
1ஆம் பத்தியில் கூறப்பட்ட மையக் கருத்தையொட்டி, வடகலை – தென்கலைப் பிரிவுகளுக்கிடையே, சரணாகதி செய்யும் வழிமுறைகளில் வேறுபாடுகள் உள்ளன.
வடகலைக் கருத்துப்படி ஒரு வைணவன் வயது வந்த பிறகு, ஒரு ஆசாரியரிடம் பரமனைச் சரணடைவதன் இன்றியமையாமையைக் கற்று, தீட்சை பெற்று, அவர் சொல்வதைச் செய்ய வேண்டும். இதற்கென்று, இரண்டு பிரிவினரும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய ஐந்து சடங்குகளோடு கூட (பஞ்ச ஸம்ஸ்காரங்கள்) வடகலையைச் சேர்ந்தவர்கள் ‘பரண்யாசம்’ என்னும் மற்றுமோர் தீட்சை சடங்கையும் சேர்த்துச் செய்வார்கள்.
வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் எல்லோரும் பரமனைச் சரணடையக் கடமைப் பட்டவர்கள். அதேபோல பரமனும் நம்மைக் காப்பதைத் தன் கடமையாகக் கருதுகிறான். ‘பிரபத்தி’ – அதாவது பரமனைச் சரணடைவதில் அசைக்க முடியாத நம்பிக்கை என்பது வைணவனின் வரையிலக்கணம். அந்த நம்பிக்கையற்றவன் வைணவனே அல்ல. எனவே ‘பரண்யாசம்’ போன்ற சடங்குகள் தேவையற்றவை என்பது தென்கலை மரபு சார்ந்த கருத்து.
4. போயபிழைகள்:
அவனை சரணடைபவர்களின் வினை விளைவுச் சுழலைச் சீராக்கி பரமன் அவர்களை ஏற்று வீடுபேறு அளிக்கின்றான் என்பது வடகலை மரபு. எளிமையாகக் கூற வேண்டும் என்றால், பரமன் தன்னைச் சரணடைபவர்களின் பாவங்களை மன்னித்தருளுகின்றான் என்று வைத்துக் கொள்ளலாம்.
தென்கலை மரபுப்படி பரமன் தன்னைச் சரணடைபவர்களின் பாவங்களை பொருட்படுத்தாதது மட்டுமல்லாமல்லாமல், ஒரு தாய்ப் பசு தன் கன்றின் உடலின் மேல் படிந்த மாசுகளைத் தன் நாவினால் நக்கிச் சுத்தப்படுத்துவதில் இன்பம் காண்பதுபோல, நம் தீம்புகளைத் தான் உண்டு நம்மைக் காக்கும் செயலில் இன்பம் காண்கிறான். நம் பாவங்களை ஒரு தாய் தன் மதலையின் குறும்புகளை ரசிப்பதுபோல் ரசிக்கின்றான். அவனளிக்கும் தண்டனைகளும் ஒரு தாய் தன் குழந்தையைத் தண்டிப்பது போன்ற அன்பின் வெளிப்பாடே; அவன் சினத்தின் விளைவல்ல!
5. மறையொழுக்கு:
நான் மறைகளால் பகுக்கப்பட்ட தினசரிக் கடமைகளை எல்லா வைணவர்களும் கட்டாயம் செய்தாக வேண்டும் என்பது வடகலையார் கருத்து. அவ்வாறு செய்யாவிட்டால், அதன் விளைவுகளை கட்டாயம் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
தென்கலை மரபுப்படி, நான்மறைகள் விதித்த தினசரிக் கடமைகள், ஒரு முற்றிய, பரமனை முழுதும் சரணடைந்த வைணவனுக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் அத்தகைய, ஆழ்ந்த நம்பிக்கை முற்றாத வைணவர்களுக்கு, ஒரு எடுத்துக்காட்டாக, முதிர்ந்த வைணவர்களும், நான்மறைகளால் பகுக்கப்பட்ட தினசரிக் கடமைகளைச் செய்வது நலம்.
6. கழிவிரக்கம்:
தென்கலை மரபுப்படி பரமன் நம் துன்பங்களைக் கண்டு வருந்துகின்றான். இந்தக் கருத்தை மகாகவி பாரதி, கண்ணன் பாட்டில் ‘நாயிகா பாவத்தில்’ (தலைவன், தலைவியின் உணர்வுகள்) மிக அழகாக வெளிப்படுத்துகின்றார் – ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் பெருகுதடி’ என்று.
நம் துன்பங்களைப் பரமன் தன் துன்பங்களாக நினைக்கிறானாம்.
மஹாத்மா காந்தி மிகவும் விரும்பிய ‘வைஷ்ணவ ஜனதோ’ என்கின்ற குஜராத்திப் பாடலில் நர்ஸி மேத்தா என்ற வைணவக் கவிஞர், “பரமனைப் போன்று பிறர் துயரைத் தன் துயராகக் கருதுபவனே வைணவன்” என்று பாடியுள்ளார்; ‘வைஷ்ணவ ஜனதோ ஜோ பீட பராயி ரே’ என்று பாடுகிறார்.
வடகலை மரபுப்படி ஒரு செயலைச் செய்ய முடியாதவன்தான் வருந்திக் கண்ணீர் விடுவான். பரமனால் நம் துயர்களை துடைக்க முடியும் பொழுது, அவனிடம் வருத்தம் போன்ற உணர்வுகளுக்கு இடமில்லை.
7. பிரபத்தியும் இதர உபாயங்களும்:
பக்தி, ஞானம், யோகம், செயல் போன்ற பல வழிகளால் பரமனை அடைய முடிந்தாலும், பரமனைச் சரணடைவதே எளிய வழி என்கிறது வடகலை மரபு.
பரமனை அடைய, அவனைச் சரணடைவதைத் தவிர வேறு எந்த வழியுமில்லை என்பது தென்கலை மரபு.
8. சரம ஸ்லோகம்:
பகவத் கீதையின் ‘ஸர்வஸதர்மாண் பரித்யச்ச’ என்று தொடங்கும் ஸ்லோகம் சாதி வேறுபாடின்றி எல்லா வைணவர்களுக்கும் உபதேசிக்கப்படும் மூன்று மந்திரங்களில் ஒன்று. அந்த ஸ்லோகத்திற்கு வடகலையார்கள் அளிக்கும் விளக்கம், தென்கலையார்களின் விளக்கத்திலிருந்து வேறுபடுகிறது.
கீதையின் சொற்களுக்கு மேம்போக்கான பொருள், ‘நீ எல்லா தருமங்களையும் விட்டுவிட்டு என்னை மட்டும் பற்றிக்கொள்’.
வடகலை விளக்கம்: பக்தி செய்வதில், அதாவது பரமனை வழிபடுவதிலுள்ள பலவிதமான கோட்பாடுகளை இயலாமையால் விட்டவர்களுக்கு, அவனைச் சரணடைந்தால் பரமனே அந்தக் கோட்பாடுகளாகச் செயல்படுகின்றான்.
வீடுபேறு பெற அவனைச் சரணடைவதைத் தவிர வேறு எதையும் செய்ய வேண்டாம் என்பது தென்கலை விளக்கம்.
9. பிராட்டி:
விசிஷ்டாத்வைத தத்துவக் கோட்பாடுகள்படி ஜீவாத்மா என்றகின்ற ‘ஜீவன்’ உயிர் மற்றும் உயிரற்ற எல்லாப் பொருள்களிலுள்ளும் (அவற்றின் வெளி வடிவு அல்லது உடலுக்குள்) உறைகிறது. அந்த ஜீவாத்மாவின் உள் உறைவது பரமாத்மா என்கின்ற பரமன்.
ஜீவன் என்று ஒன்று இல்லையேல் பரமனால் தன்னை வெளிப்படுத்த முடியாது. அவன் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான். பரமன் தன்னுள் இல்லையென்றால் ஜீவனால் எதுவும் செய்ய இயலாது. எனவே பரமனும் ஜீவனும் வெவ்வேறாக இருந்தாலும், அவற்றால் தனித்தனியாகப் பிரிந்திருக்க இயலாது.
இந்தக் கருத்தை உருவகப்படுத்துவதில் ‘பிராட்டி’ அல்லது மஹாலக்ஷ்மியின் பங்கு என்ன என்பதில் வடகலை, தென்கலை கருத்துக்கள் மாறுபடுகின்றன.
தென்கலை, பிராட்டியை எல்லா ஜீவர்களின் உருவகமாகக் காண்கிறது.
வடகலை, விஷ்ணுவையும் பிராட்டியையும் ஒருங்கிணைத்து பரமனின் உருவகமாகப் பார்க்கிறது. இந்த உருவகத்திற்கு ‘ஈருடல் ஓருயிர்’ அல்லது மிதுனம் என்று பெயர்.
10. மற்றவை:
‘கைவல்யம்’ என்றால் என்ன, திருப்புண்டரம் என்றழைக்கப்படும் ‘நாமத்தின்’ வடிவு, போன்ற பல்வேறு கோட்பாடுகளில் சிறு வேறுபாடுகள் உள்ளன. அவை அவ்வளவு இன்றியமையாதவையல்ல. எனவே அவற்றைப் பற்றி எழுதவில்லை.
$$$