-ச.சண்முகநாதன்

8. நம் ராமன் வருகிறான்…
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குத்தான் என்பார்
பாடுவார்களும் பல்பறை கொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்று அயோத்தி மாநகரே!
ஆய்ப்பாடி நகர மக்கள் கண்ணன் பிறந்ததைப் பற்றி பெரியாழ்வார் பாடிய பாடல், இன்று அயோத்தி மாநகருக்கும் அப்படியே பொருந்துகிறது.
இப்படியெல்லாம் ஒடுவார்களா, விழுவார்களா? இதெல்லாம் அதீத கற்பனையல்லவா என்றே நினைத்திருந்தோம். ஆனால் ‘ராம் ஆயேங்கே’ என்று பாரத தேசத்து மைந்தர்கள் ராம ரசம் பருகி ‘அரவணையில் துயில்வோன், ராமனென்ற பெயர் தாங்கிய நாயகனை, இறைவனை’ வரவேற்பதைப் பார்க்கும் பொழுது பெரியாழ்வார் எழுதியது அன்று உண்மையில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கை வருகிறது.
ராமன் பிறக்கப்போகிறான் என்ற செய்தி கேட்டதற்கே, அயோத்தி மாந்தர்….
“ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்”
ராமன் பிறந்த செய்தி கேட்டு
“ஆர்த்தனர் முறை முறை அன்பினால்; உடல்
போர்த்தன புளகம்; வேர் பொடித்த; நீள் நிதி
தூர்த்தனர்”
“வீடினர் அரக்கர்” என்று ‘அரக்கருக்கு முடிவு கட்ட ஒருவன் பிறக்கப் போகிறான்’ என்று ஆடிப்பாடி, அங்கிமிங்கும் ஓடி, மகிழ்ச்சி எனும் தேன் குடித்ததுபோல நினைவிழந்து திரிந்தனர். அதில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது, அரக்கர் குலம் அழிக்க ஒருவன் பிறக்கப் போகிறான் என்ற எதிர்பார்ப்பு.
ஆனால் இன்று ராமன் வருகிறான், அவன் பிறந்த இடத்துக்கே என்கிற ஒரே செய்தி. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ராமன் மீதுள்ள அன்பு மட்டுமே….
ராமன் 14 ஆண்டுகள் பிரிந்திருந்ததையே தாங்கிக்கொள்ள முடியவில்லை அயோத்தி மக்களுக்கு. மகிழ்ச்சியை விட்டொழிந்தனர்.
“இறைப் பெருஞ் செல்வம் நீத்த ஏழ்-இரண்டு ஆண்டும்,
யாரும் உறைப்பு இலர்”
ஆனால் இங்கே, சுமார் 500 வருடங்கள் ராமன் பிறந்த இடத்தில், கண்ணிருக்க வேண்டிய இடத்தில் ஒரு துருப்பிடித்த ஆணி இருந்தது போல, ஒரு அவமானச் சின்னம் நின்றிருந்தது.
ஒரு பெண்மணி 32 வருடங்களாய் மௌன விரதம் இருந்திருக்கிறார், ராமர் கோயில் அமையும் வரை பேசப் போவதில்லை என்று விரதம். எதிர்பார்ப்பு எதுவில்லாமல் ராமன் மீதுள்ள அன்பு மட்டும் மேலோங்கி.
ஒரு பக்தர் காலால் நடக்காமல் கைகளாலேயே நடந்து செல்கிறார். இன்னொரு பக்தர் நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவுக்கு நடந்தே போகிறார், ‘என் ராமன் மீதுள்ள அன்பினால்’ என்று உள்ளம் பூரிக்கிறார்.
பக்தர் கூட்டம் ஓடுகிறது விழுகிறது, உகந்து ஆலிக்கிறது, நாடுகிறது, நம்பிரான் திரும்புகிறான் என்று குதூகலிக்கிறது.
அன்று போர் முடிந்து ராமன் அயோத்தி திரும்பி வந்து முடிசூட்டிக்கொள்ளும் பொழுது மூன்று உலகுத்துள்ளோரும் அயோத்தி வந்து சேர்ந்தனராம்.
“அடுக்கிய உலகம் மூன்றும், ஆதரத் தூதர் கூற,
இடுக்கு ஒரு பேரும் இன்றி, அயோத்தி வந்து இறுத்தார்”
இன்று அயோத்தியில் ஒன்றுகூடி ராமனை வரவேற்க விரும்பும் ஜனத்தொகையைக் கணக்கெடுத்தால் ஏழுலகம் கணக்கு வரும்.
இன்னும் சில நாட்கள் தான்.
ராமன் வருகின்றான்…. வந்துகொண்டே இருக்கிறான்!
“ஹமாரா ராம் ஆயேங்கே”.
$$$