ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 6அ

-சேக்கிழான்

அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இந்த ஆறாம் பகுதி, ராமர் கோயில் அமையக் காரணமான நன்றிக்குரிய நாயகர்களை நினைவுகூர்கிறது....

6. நன்றிக்குரிய நாயகர்கள் (அ)

அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியை மீட்பதற்காக கடந்த 5 நூற்றாண்டுகளாக எத்தனையோ பேர் பாடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் இன்னுயிர் ஈந்த லட்சக் கணக்கான வீரர்களின் தியாகத்திற்கு தற்போது உரிய மதிப்பு கிடைத்திருக்கிறது. அந்த தியாகியர் அனைவரும் நமது போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள். அவர்களின் குறிப்பிடத்தக்க சிலரை இங்கு காலவரிசையில் காண்போம்.

. 1528 முதல் 1857 வரை:

1. ராஜா மெகதாப் சிங்:

அயோத்தியில் இருந்த, மாமன்னர் விக்கிரமாதித்தன் அமைத்த பிரமாண்டமான ஸ்ரீராமர் கோயிலை மொகலாய மன்னன் பாபரின் படைத் தளபதி மீர்பாஹி 1528ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கினான். கோயிலில் குவிந்திருந்த பெருஞ்செல்வத்தைக் கொள்ளையடிக்கவும், உருவ வழிபாட்டின் மீதான தங்கள் வெறுப்புணர்வைப் பதிவு செய்யவும், அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அவனது தலைமையிலான 4.5 லட்சம் வீரர்கள் கொண்ட அந்நியப் படையை எதிர்த்து, 1.74 லட்சம் வீரர்களுடன் போரிட்டு, வீரமரணம் அடைந்தார் பித்தி சமஸ்தான ராஜா மெகதாப் சிங். இந்தப் போர் 70 நாட்கள் நடைபெற்றது. (ஆதாரம்: லக்னோ கெஜட்டியர்- பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் கன்னிங்ஹாம் பதிவு).

அதையடுத்து, அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை பீரங்கிகளால் இடித்துத் தகர்த்த பாபரின் படைத் தளபதி மீர்பாஹி, தனது வெற்றிச் சின்னமாக, அங்கு பாபர் பெயரில் மசூதியைக் கட்டினான். அங்கு சிந்திய ஹிந்துக்களின் ரத்தத்தைக் குழைத்தே சுவர்களை எழுப்பியதாக, மற்றொரு பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் ஹாமில்டன் (ஆதாரம்: பாராபங்கி கெஜட்டியர்) பதிவு செய்திருக்கிறார்.

2. சுவாமி தேவிந்தன் பாண்டே:

அயோத்திக்கு அருகில் 6 மைல் தொலைவில் உள்ள கிராமம் சனேத்து. அதே அங்கு வாழ்ந்த சுவாமி தேவிந்தன் பாண்டே அயோத்தி ராமர் கோயில் இடிக்கப்பட்டதையும் அங்கு மெகதாப் சிங்கின் படை நிர்மூலமானதையும் அறிந்தார். அவர் அங்கிருந்த சூரியவம்ச ராஜ்புத்திர ஷத்திரியர்களைக் கொண்டு 90,000 வீரர்களுடன் பெரும் படையை உருவாக்கி, அயோத்தி நோக்கிச் சென்றார். அந்த மீட்புப் போர் 5 நாட்கள் நடைபெற்றது. ஆனால் பயனின்றி அனைவரும் பலியாகினர். அந்தப் போரில் சுவாமி தேவிந்தன் பாண்டே மட்டுமே அந்நியப் படையினர் 600 பேரைக் கொன்றதாக செவிவழிக் கதைகள் கூறுகின்றன. மொகலாயப் படையிடம் இருந்த பீரங்கிகளே அவர்களது வெற்றிக்கும், ஹிந்து மன்னர்களின் தோல்விக்கும் காரணமாகின.

3. ராஜா ரணவிஜய் சிங்

அதையடுத்து 14 நாட்கள் கழித்து, ஹன்ஸ்வர் தேச ராஜா ரணவிஜய் சிங், 26,000 வீரர்களுடன் அயோத்தியை மீட்க உக்கிரமான போர் புரிந்தார். ஆயினும், அவரும் அவரது படையினரும் வீர மரணம் அடைந்தனர். அந்தப் போர் 10 நாட்கள் நடைபெற்றது.

4. ராணி ஜெயகுமாரி கன்வர்:

ஹன்ஸ்வர் ராஜா ரணவிஜய் சிங்கின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி ராணி ஜெயகுமாரி கன்வர் ஆட்சிப் பொறுப்பேற்றார். தனது கணவர் எதற்காக உயிர் துறந்தாரோ, அதனை நிறைவேற்றுவதற்காக, அயோத்தியை மொகலாயர் பிடியிலிருந்து மீட்பதற்காக இவரது தலைமையிலான படை 10 முறை போர் புரிந்தது. இதற்காக 3,000 வீராங்கனைகள் கொண்ட மகளிர் படையையும் அவர் உருவாக்கினார்.

ராணியின் குருவான சுவாமி மகேஸ்வரானந்தஜியின் முயற்சியால் ராமபக்தர்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கு படைக்கலப் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்வாறு குறுகிய காலத்தில் 24,000 வீரர்களைக் கொண்ட படை அமைக்கப்பட்டது.

இதனிடையே பாபர் மறைவை அடுத்து அவரது மகன் ஹுமாயூன் மொகலாய மன்னராகி இருந்தார். அவரது படையுடன் ராணியின் படை பலமுறை (1530- 1556) மோதியது. பத்தாவது போரில் ராணியின் படை வென்று அயோத்தியை மீட்டது. ராமர் கோயில் இருந்த இடத்தில் வழிபாடுகளும் நடந்தன. ஆனால், மீண்டும் ஒரு மாதத்திற்குள் ஹுமாயூன் தில்லியிலிருந்து அனுப்பிய பெரும்படை, அயோத்தியில் இருந்த ராணியின் படையை நிர்மூலமாக்கியது. கைது செய்யப்பட்ட ராணியும் அவரது குருவும் சிரச்சேதம் செய்யப்பட்டனர். இந்தப் போர்களில் 24,000 ராமபக்தர்களும், 3000 வீராங்னைகளும் வீழ்ந்தனர்.

5. சுவாமி பலராமாச்சாரி:

     ராணி ஜெயகுமாரி கன்வரின் வீழ்ச்சிக்குப் பிறகு, அயோத்தி மீட்புப் போராட்டத்தைத் தொடர்ந்தவர், தமிழகத்தின் கோயம்புத்தூரில் இருந்து அயோத்தி சென்ற துறவியான சுவாமி பலராமாச்சாரி. இவர் அயோத்தியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்களைத் திரட்டி, படையை உருவாக்கினார். 1556 ஆம் ஆண்டு முதல் 1606ஆம் ஆண்டு வரை இவர் மட்டுமே 20 முறை அயோத்தியை மீட்க சிறு போர்களை நடத்தி இருக்கிறார். அதில் 15 முறை வென்றபோதும், யுத்த தர்மம் இல்லாத மொகலாயர்களின் இரவுநேரத் தாக்குதல்களால் ஒவ்வொரு முறையும் தோல்வியுற்றார். 

     எனினும் தொடர் போர்களால் மொகலாயப் படை பலவீனம் அடைந்திருந்தது. எனவே, மொகலாய மன்னரான அக்பர், ஹிந்துக்களுடன் மோதலைத் தவிர்க்க, இஸ்லாம் சமயத்தில் அங்கீகரிக்கப்பட்ட ‘அல் தக்யா’ வழிமுறைப்படி, பாபர் மசூதியின் வெளிப்புறத்தில் ராமர் சிலை வைக்க மேடை (ராம் சாத்புரா) ஒன்றை அமைத்துக் கொடுத்தார். சுவாமி பலராமாச்சாரியும் உடல்நலம் குன்றியதில் கும்பமேளாவில் காலமானார்.

6. பாபா வைஷ்ணவ தாஸ்:

     அக்பரைத் தொடர்ந்து மொகலாய மன்னரான ஜஹாங்கீரும் (1605-1528) ஷாஜகானும் (1628- 1658) ஹிந்துக்களுடன் மோதல் போக்கைத் தவிர்த்தனர். அயோத்தியில் ராம் சாத்புராவில் ஹிந்துக்களின் வழிபாடும் தொடர்ந்தது. எனினும் அடுத்து ஆட்சிக்கு வந்த ஔரங்கசீப் (1658- 1707) அதிதீவிர மதவாதியாக இருந்தார். அவரது பார்வையில் ஹிந்துக்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டிய காஃபிர்களாக இருந்தனர். அயோத்தியில் இருந்த ஹிந்துக்கள் வழிபட்ட கோயிலை அவரது படைகள் தரைமட்டமாக்கின. எனவே மீண்டும் அயோத்தி மீட்புப் போராட்டம் தொடங்கியது.

     குறிப்பாக, மராட்டியத் துறவியான சமர்த்த ராமதாசரின் சீடரான பாபா வைஷ்ணவ தாஸ் அயோத்தி மீட்புப் போருக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்த சூரியவம்ச ஷத்திரியர்களைக் கொண்ட படையை உருவாக்கி, அவர் மொகலாயப் படைகளை 30 முறை (1656-1707) எதிர்த்தார்.

     அவருடன் சராய் மன்னர் சர்தார் கஜராஜ் சிங், ராஜேப்பூர் மன்னர் கன்வர் கோபால் சிங், சிசிண்டா மன்னர் தாக்குர் ஜெகதாம்பிகா சிங் ஆகியோரின் படைகளும் போராடின. சிம்ததாரி சாதுக்கள், நிஹாங் சீக்கியர்கள், அகோரி சாதுக்கள் உதவியுடன் ஹிந்துக்கள் சில போர்களில் வென்றனர். ஆனால், அயோத்தியைத் தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை.

1660ஆம் ஆண்டு ஔரங்கசீப்பின் படைகளை சிம்ததாரி சாதுக்களின் படை வென்றது. அதன் பிறகு 4 ஆண்டுகள் அமைதியாக இருந்த மொகலாயர் படை 1664இல் திடீர்த் தாக்குதல் நடத்தி, சுமார் 10,000 சிம்ததாரி சாதுக்களைக் கொன்றழித்தது. மொகலாயப் பெரும்படையின் முன்னால், ஹிந்து மன்னர்களின் சிறு படைகள் வீழ்ந்தன. அயோத்தியை மீட்கப் போராடிய ஹிந்து மன்னர்கள் பலரும் வீரமரணம் அடைந்தனர்.

7. சூரிய வம்ச ஷத்திரியர்கள்:

அயோத்தியைச் சுற்றியுள்ள பலநூறு கிராமங்களில் சூரிய வம்ச ஷத்திரியர்கள் வாழ்கின்றர். இவர்கள் ராஜபுத்திர இனக்குழுவைச் சார்ந்தவர்கள். மொகலாய மன்னர்களின் படைகளால் அழிக்கப்பட்ட ஶ்ரீராமர் ஆலயத்தைக் காக்க முடியவில்லையே என்ற வேதனையில், அதைக் காப்பாற்ற வீரமாகப் போரிட்ட இந்த சூரிய வம்ச ஷத்திரிய வீரர்கள்,  “மீண்டும் இதே இடத்தில் ராமர் கோயிலை எழுப்பும் வரை,  தலையில் துண்டு கட்ட மாட்டோம், கால்களில்  செருப்பு அணிய மாட்டோம், குடையைப் பயன்படுத்த மாட்டோம்” என்று சபதம் செய்தனர். 

                எனவே தான்  ஆலயம் இடிக்கப்பட்ட நாளிலிருந்தே பலமுறை பல ஹிந்து மன்னர்களின் படைகளில் இணைந்து போர்களை நடத்தினர். தங்கள் போராட்டம் வெற்றி பெறாத போது, தங்கள் முன்னோர் செய்த சபதத்தை மீறாமல் – பல தலைமுறைகளாக –  ஐந்து நூற்றாண்டுகளாக – இந்த சூரிய வம்ச ஷத்திரிய குடும்பங்கள், தங்கள் கல்யாணக் காலங்களில் கூட செருப்பு அணிவதில்லை; தலைக்கட்டு அணிவதில்லை; மழையிலும் கூட குடைகளைப் பயன்படுத்துவதில்லை.

தற்போது ஸ்ரீராமர் ஆலயம் அமைந்துவிட்டதால் தங்கள் முன்னோரின் சபதத்தை முடித்துக்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர் இவர்கள். அதற்காக புதிய தலைக்கட்டு (உருமாலை) இங்குள்ள கிராமங்களில் மகிழ்ச்சிப் பிரவாஹத்துடன் விநியோகிக்கப்படுகிறது.

குரு கோவிந்த் சிங்

8. குரு கோவிந்த் சிங்:

     ஔரங்கசீப்பின் மதவெறி ஆட்சியை மராட்டியத்தில் எதிர்த்த வீரசிவாஜியைப் போல பஞ்சாபில் எதிர்த்து நின்றவர் குரு கோவிந்த் சிங் (1666- 1708). சீக்கியர்களின் பத்தாவது மற்றும் கடைசி குருவான கோவிந்த் சிங் ஸ்ரீராமரின் பக்தரும் கூட. அயோத்தியில் உள்ள ஸ்ரீ பிரம்மகுண்ட் சாஹிப் குருத்வாராவிற்கு 1672இல் வருகை தந்த குரு கோவிந்த் சிங், அயோத்தி ராம ஜன்மபூமிக்கும் வந்து வழிபட்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல, 1697இல் ராம ஜன்மபூமியை அழிக்க வந்த மொகலாயர் படைக்கு எதிராக பாபா வைஷ்ணவ தாஸின் சிம்ததாரி சாதுக்கள் படைக்கு உதவி புரிந்தார். அப்போது ஹிந்துப் படைகளின் தளவாடத் தளமாக அயோத்தியில் உள்ள ஸ்ரீ பிரம்மகுண்ட் சாஹிப் குருத்வாரா விளங்கியது. சீக்கியர்களில் போர்க்கலையில் விற்பன்னர்களான நிஹாங் சீக்கியர்கள் 400 பேர் கொண்ட படையணியை குரு கோவிந்த் சிங் அனுப்பினார். அவர்களின் உதவியுடன் மொகலாயப் படையை சிம்ததாரி சாதுக்களின் படை வென்றது. எனினும் அந்த வெற்றி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

9. போர்களைத் தொடர்ந்த மன்னர்கள்:

1717-இல் ராஜபுத்திர அரசர் சவாய் இரண்டாம் ஜெய்சிங் (1699- 1743), மொகலாய அரசுடன் சமாதானமாகப் பேசி, ராமர் கோயில் இருந்த இடத்தை விலைக்கு வாங்கினார். அதையடுத்து, அங்கு வழிபாடு சில காலம் தடையின்றி நடந்தது.

     ஔரங்கசீப்பிற்குப் பிறகு, மொகலாய பேரரசின் சரிவால் அயோத்தி (அவத் தேசம்) இஸ்லாமிய சிற்றரசரான நவாபின் ஆட்சிக்கு வந்தது. அப்போது நவாபிடமிருந்து ராம ஜன்மபூமியை மீட்க பல முறை போர்கள் நடத்தப்பட்டன. அமேதி ராஜா குருதத் சிங், பீரப்பூர் இளவரசர் கன்வர் ராஜ்குமார் சிங் ஆகியோரின் முயற்சியால் அயோத்தி நவாப் சதாதத் அலிகான் படை மீது 5 முறை படை எடுக்கப்பட்டது (1770 – 1814). ஒவ்வொரு முறையும் ஹிந்துக்கள் சிந்திய ரத்தத்தால் அயோத்தி நிலம் சிவந்தது. எனினும் ஹிந்துக்களின் கோபத்தைத் தணிக்க, பாபர் மசூதிக்கு வெளியே ஹிந்துக்கள் ராமரை வழிபட நவாப் அனுமதி அளிக்க வேண்டி வந்தது.

     அயோத்தி கோயில் நிலத்தின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக தொடர்ந்து ஹிந்துக்கள் போரிட்டுக் கொண்டே இருந்தனர் என்று லக்னோ கெஜட்டியரில் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் கர்னல் ஹண்ட் எழுதி இருக்கிறார்.

எம்கார்கி ராஜா கிருஷ்ண பிரசாத் பல்வார், அயோத்தியை மீட்பதற்காக ஹிந்து வீரர்களைத் திரட்டி,1814 முதல் 1836 வரை மூன்று முறை போர் தொடுத்தார். அயோத்தி நவாப் நசிருதீன் ஹைதர் ஷாவை எதிர்த்து இவர் நடத்திய மூன்றாவது போரில்  பேத்தி, ஹன்ஸ்வர், ஹஜூர்ஹட், அமேதி, தீயாரா பிரதேச மன்னர்களின் படைகளும், சிம்ததாரி சாதுக்களும் பங்கேற்றனர். போரில் ஹிந்துக்களுக்கு வெற்றி கிடைத்தது.

அடுத்து நவாபாக இருந்த வாஜித் அலி ஷாவை எதிர்த்து, 1853இல் மீண்டும் போர் நடத்தப்பட்டது. நிர்மோஹி அகாரா மடத்தின் துறவிகள் பாபர் மசூதியைக் கைப்பற்ற முயன்றனர். அப்போது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் தொடங்கி இருந்தது. பிரிட்டிஷ் அரசு பாபர் மசூதி வளாகத்தை இரண்டாகப் பிரித்தது. மசூதியின் உள்ளே முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும், வெளிப்புறத்தில் ராம் சாத்புராவில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.

10. அமீர் அலியும் பாபா ராம்சரண் தாஸும்:

முதல் இந்திய சுதந்திரப் போரின்போது மொகலாய அரசர் பகதூர்  ஷா ஜாபரை முன்னிறுத்தி பிரிட்டிஷாருக்கு எதிராக பல இடங்களில் போர்கள் நிகழ்ந்தன. அதில் ஹிந்து அரசரகளும் முஸ்லிம் மன்னர்களும் இணையாகப் பங்கேற்றனர். அப்போது, நல்லெண்ண அடிப்படையில், அயோத்தி ராமர் கோயிலை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க முஸ்லிம்கள் முன்வந்தனர்.

 உள்ளூர் முஸ்லிம் தலைவர் மௌலவி அமீர் அலி தலைமையில், துறவி பாபா ராம்சரண் தாஸிடம் கோயிலை அளிக்கத் தீர்மானித்தனர். ஆனால், பிரிட்டிஷ் அரசு அனுமதிக்கவில்லை. தவிர, அமீர் அலி, பாபா ராம்சரண் தாஸ் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன், ராஜதுரோக வழக்கில் தூக்கிலிட்டது பிரிட்டிஷ் அரசு.

1857இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போருக்குப் பின் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பிடி இறுகியது. அதன் விளைவாக முஸ்லிம் ஆட்சியாளர்களின் ஆதிக்கம் வீழ்ச்சி அடைந்த்து. அயோத்தியில் ஹிந்துக்கள் வழிபடத் தடைகள் இல்லாததாலும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இஸ்லாமிய அரசர்கள் போலவே ஹிந்து மன்னர்களும் பாதிக்கப்பட்டதாலும், அடுத்து வந்த சுமார் 60 ஆண்டுகள் அயோத்தியில் பெரிய மாற்றம் ஏதும் நிகழவில்லை.

மஹந்த் திக்விஜய்நாத்

. 1857 முதல் 1947 வரை:

11. மஹந்த் ரகுர்தாஸ்:

                பிரிட்டிஷாரின் ஆட்சி காரணமாக, அயோத்தி ராம ஜன்மபூமியை மீட்பதற்கான போராட்டம் சட்டப் போராட்டமாக மாறியது. அதற்கான முதல் விதையைத் தூவியவர் நிர்மோகி அகாரா மடத்தைச் சார்ந்த மஹந்த்  ரகுவர்தாஸ்.  தற்காலிகமாகராமர் சிலை வழிபடப்படும்இடத்திலேயே (ராம் சாத்புராவில்) ராமருக்குக் கோயில் கட்ட பிரிட்டிஷ் அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரி, மஹந்த் ரகுவர்தாஸ் பைசாபாத் துணை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர் வோட்ஹவுஸ் பிரபுவை எதிர் மனுதாரராகச் சேர்த்து அவ்வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் அந்த மனுவை நிராகரித்தனர்.

1886 மார்ச்சில் மஹந்த் ரகுவர்தாஸ் மீண்டும் மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்தார். சர்ச்சைக்குரிய கட்டடம், கோயிலை இடித்துக் கட்டப்பட்டது தான் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எனினும் மீண்டும் கோயில் கட்ட தடை விதித்தது.

12. மஹந்த் திக்விஜய்நாத்:

தமிழகம் அளித்த பதினெண் சித்தர்களுள் ஒருவரான கோரக்கரின் பெயரில் உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் கோரக்‌ஷ மடம் செயல்படுகிறது. இதன் மடாதிபதியாக இருந்தவர் மஹந்த் திக்விஜய்நாத் (1894- 1969). ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த இத்துறவி, அக்கட்சியின் முஸ்லிம் ஆதரவுப் போக்கால் வெறுத்து, வீர சாவர்க்கர் தலைமையிலான ஹிந்து மகா சபையில் 1937இல் சேர்ந்தார். அயோத்தி ராமர் கோயிலை மீட்க இவரது தலைமையில் அரசியல் ரீதியான முயற்சிகள் முதன்முறையாகத் தொடங்கின. கோரக்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இவர் செயல்பட்டார்.

இவருக்கு அடுத்து கோரக்பூர் மடத்தின் பீடாதிபதி ஆனவர் மஹந்த் அவைத்யநாத். இவரை அடுத்து பீடாதிபதியானவர் யோகி ஆதித்யநாத். இவர்கள் இருவரும் அயோத்தி இயக்கத்தில் பிரதானமானவர்களே.

(தொடர்கிறது)

$$$

முழுமையான நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க:

மொத்த பக்கங்கள்: 128+ 4; புத்தகத்தின் விலை: ரூ. 125-

விஜயபாரதம் பிரசுரம், சென்னை
போன்: +91 89391 49466
இணைய முகவரி: https://vijayabharathambooks.com/
மின்னஞ்சல்: contact@vijayabharathambooks.com

Leave a comment