ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 5

-சேக்கிழான்

அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலைதிரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன...இது ஐந்தாம் பகுதி...

5. உண்மையை நாட்டிய தொல்லியல் ஆதாரம்!

அயோத்தி என்றாலே ஸ்ரீராமனின் ஜன்மபூமி தான். இது உலகம் அறிந்த உண்மை. ஆனால், எவருக்கும் கட்டுப்பட விரும்பாத ஒரு சமூகத்திற்கு அஞ்சி நமது அரசியல்வாதிகள் உரிய முடிவெடுக்க முடியாமல் நீதிக்குப் புறம்பாகச் செயல்பட்டபோது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமி மீட்பு இயக்கம் பெரும் போராட்டமாக நடத்தப்பட்டதை நாம் அறிவோம்.

என்றபோதும், ஒவ்வொரு முறை பக்தர்களின் போராட்டம் உச்சநிலையை எட்டும்போதும் பிரச்னையைத் தள்ளிப்போட உதவும் உத்தியாக நீதித்துறை பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் நீதித்துறை உத்தரவு பிறப்பித்தபடி, அயோத்தியில் தொல்லியல் ஆய்வுகள் 2003ஆம் ஆண்டு நடைபெற்றன. இந்த ஆய்வின் முடிவுகளையும்கூட, இயன்ற வரை வெளியாகாமல் தடுக்கவே இடதுசாரிகளும், பாஜக அல்லாத அரசியல் கட்சிகளும் முயன்று வந்தனர். அவர்களுக்கு இடதுசாரி மயமான ஊடகத் துறையும் துணை புரிந்து வந்தது.

ஆயினும் உண்மை எங்கிருந்தாலும் வெளிப்பட்டே தீரும் என்பதற்கு சாட்சியாக, தொல்லியல் ஆய்வாளர்கள் பி.பி.லால், இரா.நாகசாமி, கே.கே.முகமது ஆகியோரின் நேர்மையான விளக்கங்கள் வெளியாகின. நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தொல்லியல் ஆய்வறிக்கைகள் ராமர் கோயில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி என்ற கட்டடம் கட்டப்பட்டதை உறுதிப்படுத்தியதுடன், அங்கிருந்த நிலத்திற்கு உண்மையான உரிமையாளர்கள் ஹிந்துக்கள் தான் என்று அடையாளம் காட்டின.

அயோத்தி ஸ்ரீராமர் கோயில் நிலம் யாருக்கு என்ற உரிமை வழக்கில் தொல்லியல் துறையின் சான்றுகள் பிரதான இடம் பெற்றன.   உரிமை வழக்கைப் பொருத்த வரை, சட்டப்படி அந்த நிலத்தில் பாபர் மசூதி இருந்ததற்கு முன் அங்கு ஹிந்து கோயில் இருந்ததா என்பதை சான்றாதாரங்களின் அடைப்படையில் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டி இருந்தது. அதற்கு தொல்லியல் ஆய்வுகள் உதவின.

2003 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வு முடிவுகள்,  1992 டிச. 6இல் இடிக்கப்பட்ட கும்மட்டங்களின் கீழே கிடைத்த  சான்றுகள்,  பழமையான இலக்கியங்கள், வெளிநாட்டு  யாத்திரீகர்கள் மூலம் கிடைத்த ஆவணங்கள் ஆகியவை மூலமாக உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த ஆதாரங்களின் பின்புலத்தில் தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010இல் தீர்ப்பளித்த்து.

எனினும் அதனை வழக்கில் தொடர்புடையோர் ஏற்காததால் உச்ச நீதிமன்றம் தலையிட்டது. முதலில், நீதிமன்றம் சமாதான முறையில் இஸ்லாமியத் தரப்புடன் சமாதானப் பேச்சு (மத்தியஸ்தம்) நடத்தவும் முயற்சி மேற்கொண்டது. அதில் பலன் இல்லாது போனதால் தான், உச்ச நீதிமன்ற அமர்வு இறுதித் தீர்ப்பை 2019இல் அளித்தது.

இதுவரை நடந்த ஆய்வுகள்:

இதுவரை அயோத்தியில் ஐந்து முறை அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முதல் முறையாக 1862 – 1863இல் ஏ.இ.கன்னிங்ஹாம்  என்ற பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் நடத்திய ஆய்வும், இரண்டாவதாக, 1889 முதல் 1891 வரை  பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர் ஏ.ப்யூரர் நடத்திய ஆய்வும் அரசுப் பதிவேடுகளில் (கெஜட்டியர்) பதிவாகி இருக்கின்றன.

அடுத்து சுதந்திர இந்தியாவில், பேராசிரியர் ஏ.கே.நரேன்  1969 – 1970இல் நடத்திய மூன்றாம் ஆய்வும்,   பேராசிரியர் பி.பி.லால்  1975 – 1976இல் நடத்திய  நான்காம் ஆய்வும் முக்கியமான பல உண்மைகளைக் கண்டறிந்தன. அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 2003 ஜனவரியில் தொல்லியல் ஆய்வுத் துறை (ஏ.எஸ்.ஐ.) மூலம் நடத்தப்பட்ட ஐந்தாம் ஆய்வு தான் நில உரிமை வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்திய ஆய்வாகும். இந்த ஆய்வின் முடிவு 2003 ஆகஸ்டில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஹிந்துக்களின் ஆலயங்கள் தனித்துவம் மிகுந்தவை. ஹிந்து ஆலயங்களின் முத்திரைகள்,  சிற்பங்கள், விமானங்கள், கர்ப்பகிருஹங்கள், மண்டபங்கள், சிற்பத் தூண்கள், சாளரங்கள்,   மேற்கூரைகள் உள்ளிட்ட அம்சங்கள் அனைத்திலும் பண்பாட்டு முத்திரை பதித்திருப்பார்கள். இவை அனைத்தும் அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயத்தின் அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. அகழ்வாய்வில் முழுமையான 12  சிற்பத் தூண்கள் கிடைக்கப் பெற்றன. இந்தத் தூண்களின் தாங்குதளமான கட்டுமான அடித்தளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.  இவையல்லாது, உடைக்கப்பட்ட 12 தூண்கள் மசூதி சுவர்களின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தன.

அந்தத் தூண்களில் காணப்பட்ட பூரண கலசமே, அவை ஹிந்து ஆலயக் கட்டுமானத்தின் ஒரு பகுதி என்பதன் சான்று.  மேலும் பக்கவாட்டில் நடத்திய அகழ்வாய்வில் 50க்கும் மேற்பட்ட முழுமையான தூண்கள் கிடைத்திருக்கின்றன. 17 வரிசைகளில் இந்த சிற்பத் தூண்கள் இருந்ததற்குரிய கட்டுமான அடித்தளங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டன. 

 சிற்ப வடிவங்களில் 263 நாக கன்னிகைகள், நடன மாதர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், வாத்தியம் இசைப்பவர்கள், துவார பாலகர்கள், தாமரை வடிவம் என்று ஹிந்து ஆலய இலக்கணத்திற்குரிய அனைத்து ஆதாரங்களும் கண்டறியப்பட்டு, நீதி மன்றத்தில் அந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

விஷ்ணுஹரி சிலா பலகை (கல்வெட்டு)

1992 டிசம்பர் மாதம் 6ஆம் தேதி, கரசேவை நிகழ்ச்சிக்குப் பின்,    அங்கிருந்த இடிபாடுகளை நீக்கியபொழுது 12ஆம் நூற்றாண்டை சார்ந்த விஷ்ணுஹரி சிலா பலகை (கல்வெட்டு) இடிபாடுகளில் கிடைத்தது. இந்தக்  கல்வெட்டில் மொத்தம் 20 வரிகள் உள்ளன.   இந்தக் கல்வெட்டு 1.10  மீட்டர் நீளமும், 0.56 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.  இந்தக் கல்வெட்டு சம்ஸ்கிருதத்தில் மிக உயர்ந்த நடையில் எழுதப்பட்டுள்ளது. இதன் ஒரு சிறிய பகுதி மட்டும் செய்யுளாக அமைந்துள்ளது.

இதன் 15 வது வரி,  இக்கோயில் கற்களால் (சிலா சம்ஹதி கிரக) அமைக்கப்பட்டதாகவும், தங்கக் கலசத்துடன் (ஹிரண்ய கலச, ஸ்ரீசுந்தரம்) கூடியதாகவும், மற்றக் கோயில்களுடன் ஒப்பிட முடியாத அழகு பொருந்தியதாகவும், முன்பு இருந்த அரசர்களால் (பூர்வைரபியக்ருதம் க்ருதம்ந்ரு பாதிபிர்) கட்டப்பட்டதாகவும் கூறுகிறது. “இந்த அற்புதமான (அதி அத்புதம்) கோயில், சாகேத மண்டலத்தில் அமைந்துள்ள கோயில் நகரமான (விபுத் ஆலாய்னி) அயோத்தியில் (19 வது வரியில்), பலி மற்றும் ராவணனைக் கொன்றழித்த இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறது.

பாபர் மசூதியின் கட்டுமானத்தில் பூரணக் கலசத் தூண்களை உபயோகித்திருப்பதும்  ஆதாரமாக உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதேபோன்ற கட்டுமானத்தை  பழைய தில்லியில் குதுப்மினாருக்கு அருகில் உள்ள குவாதுல் இஸ்லாம் மசூதியில் தற்போதும் காணலாம். அந்த மசூதி கட்டப்பட்டது பற்றிய சான்றுகளைச் சொல்லும் பொழுதே 23 ஆலயங்களை அழித்துக் கட்டப்பட்ட மசூதி என்று இஸ்லாமிய நூல்களிலேயே ஆதாரம் சுட்டப்பட்டிருக்கிறது. அதேபோல, அயோத்தியிலும் மசூதி சுவர்களுக்குள் கோயில் தூண்கள் இருந்தன. (காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இதே போன்ற காட்சியை வெளியிலிருந்தே காண முடியும்.)

தொல்லியல் ஆய்வு மூலம்  கிடைத்த ஆதாரங்களில் முக்கியமானவை, ஒரே அளவிலான 30 தூண்களின் அடிப்புறங்கள் ஆகும். தூண்கள் இரண்டு வரிசையாக அடுத்தடுத்து இணையாக (பிரகாரம்) அமைக்கப்பட்டுள்ளன. உடைந்த நிலையில் கிடைத்த கருங்கல் துண்டுகளில் ஹிந்து சமயச் சின்னங்களான தாமரை, கௌஸ்துப மணி (விஷ்ணுவின் மார்பில் இருப்பது), முதலை ஆகியவற்றின் புடைப்புச் சிற்பங்கள் காணப்பட்டன.

ஒரு கருங்கல் பலகையின் சிறு பகுதி 20 அடி ஆழத்தில் எடுக்கப்பட்டது. தேவநாகரி எழுத்தில் ஐந்து எழுத்துக்கள் கொண்ட ஒரு ஹிந்துப் பெயர் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.   எட்டு முனைகள் (அஷ்ட கோணம்) கொண்ட யாக குண்டம் ஒன்றும் குறிப்பிட்ட ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்புக் கட்டடம் இடிக்கப்பட்ட பிறகு அதே இடத்தில் கிடைத்த தொல்லியல் சான்றுகள்.

பிற வரலாற்றுச் சான்றுகள்:

மொகலாய அரசர் அக்பரின் வரலாற்றைக் கூறும் ‘அக்பர் நாமா’வின் ஆசிரியரான அபுல் பஸல், தனது ‘அயினி அக்பரி’ நூலில்  ‘ஜன்மஸ்தான்’ என்று அயோத்தியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார் . 1598இல் அவந்த பிரதேசத்தில்  குறிப்பாக அயோத்தியில் ராம நவமி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது பற்றி  ‘அயினி  அக்பரி’யின் மூன்றாம் பாகத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெசூட்ஸ் பாதிரியான ஜோஸப் டிபண்ட்தாலெர்  (Joseph Tieffenthaler)  1740-இல் தனது பயணம் பற்றிக் குறிப்பிடும் போது,  அயோத்தியில் வழிபாட்டிலிருந்த குழந்தை ராமர் ஆலயம், சீதையின் சமையலறை, சொர்க்க வாயில்  ஆகியவற்றை நேரில் பார்த்து பதிவு செய்திருக்கிறார். 

லக்னோவில் புகழ் பெற்ற இஸ்லாமிய அகாதெமியான ‘நட்வத்-உல்- உலாமா’வின் நிர்வாகியான மௌலானா ஹக்கீம் சயீத் அப்துல் ஹய்,  ‘இந்தியா’ என்ற அராபிய மொழியில் எழுதப்பட்ட நூலை 1973இல் உருது மொழியிலும்,  1977 இல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார்.  மேற்படி நூலில்   Hindustan ki Masjidein  என்ற தலைப் பில் 17 பக்கங்களில்   இந்தியாவில் உள்ள  7 மசூதிகளைப் பற்றி எழுதியுள்ளார்.  அந்த ஏழு மசூதிகளும்  ஹிந்துக் கோயில்கள் தகர்க்கப்பட்டு, இடிபாட்டுக் கட்டுமானப் பொருள்களைக் கொண்டே அதன் மீது மசூதிகள் கட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஒன்று அயோத்தி.  

1813 – 1814 வருடங்களில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய  கம்பெனிக்காக நில அளவை (சர்வே) செய்தபோது, அயோத்தியிலும் சர்வே நடத்தப்பட்டது. அங்கு சர்வே நடத்திய பொறியாளர் பிரான்சிஸ் புக்கானன்,  வழிபாட்டில் இல்லாத மூன்று கும்மட்டங்களைப் பற்றியும், அங்கு இருந்த சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளில் ஹிந்து தெய்வங்களின் சிற்பங்கள் இருந்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.  

முதல் சீக்கிய குருவான குரு நானக் தேவ்  1510 – 1511 வருடங்களில் அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயத்திற்கு வந்ததாக  சீக்கிய நூல் குறிப்புகளும் ஆவணங்களும்   உள்ளன.

2003 ஜனவரியில் கனடா நாட்டைச் சேர்ந்த நிலவியல் அறிஞர் கிளவுட் ரோபில்லார்ட் என்பவர்  ரேடார் அலைகள் மூலம் ஆய்வு செய்தபின்,   “இந்த (இடிக்கப்பட்ட) மசூதிக்கு அடிப்புறத்தில் சில கட்டடப் பகுதிகள் உள்ளன.   இக் கட்டடப் பகுதிகளில் உள்ள தூண்கள், அஸ்திவாரச் சுவர்கள், செங்கல் பாவிய தரைகள் ஆகியவை ஒரே காலத்தில் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த கட்டடமாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இவை அனைத்தும், ஹிந்துக்களின் தரப்பில் நியாயம் இருப்பதை அலகாபாத் உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் உணர்வதற்கு உதவின. அதன் விளைவாகவே, சிறுபான்மைப் பூச்சாண்டியையும் மீறி, அரசியல் அரங்கில் ஹிந்துக்களுக்கு செய்யப்பட்ட துரோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக  2019இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீதியை நிலைநாட்டியது.

காண்க: 

தொல்லியலாளர் கே.கே.முகமது அவர்களுடன் ஒரு நேர்காணல்

அயோத்தியில் அரசு அகழ்வாராய்ச்சி முடிவுகள்- டாக்டர் இரா.நாகசாமி

(தொடர்கிறது)

$$$

விவேக அமுதம்

“தென்னாட்டின் சில பழைய கோயில்களும் குஜராத்திலுள்ள சோமநாதபுர ஆலயமும் ஏராளமான சரித்திர ஞானத்தை உங்களுக்கு அளிக்கும்; எத்தனையோ புத்தகங்களைப் படிப்பதை விட அதிகக் கூர்மையான சூட்சுமப் பார்வையை உங்களுக்கு அவை தரும்.

கவனித்துப் பாருங்கள். இந்தக் கோயில்களில் நூற்றுக் கணக்கான தாக்குதல்களின்  வடுக்களும், புனர்நிர்மாணத்தின் நூற்றுக்கணக்கான சின்னங்களும் உறைந்துள்ளதைப் பாருங்கள். தொடர்ந்து அவை அழிக்கப் பட்டன. இடிபாடுகளிலிருந்து தொடர்ந்து, மீண்டும் புத்துணர்ச்சியுடன் வழக்கமான வீறுடன் எழுந்தன. அதுவே தான் நமது தேசிய ஜீவசக்தி. அதனைப் பின்பற்றிச் செல்லுங்கள்; உங்களைப் புகழ்நிலைக்கு அது இட்டுச் செல்லும். அதனைக் கைவிட்டால் இறந்தொழிவீர்கள். செத்து மடிவதே முடிவாகும். அந்த ஜீவசக்தியைப் புறக்கணித்தால், அக்கணமே பூண்டற்றுப் போவது தான் ஒரே முடிவு.

             –சுவாமி விவேகானந்தர்
             (Complete  Works of Swami Vivekananda, Vol. 3
             (Lectures from Colombo to Almora, The Future of India.)

$$$

முழுமையான நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க:

மொத்த பக்கங்கள்: 128+ 4; புத்தகத்தின் விலை: ரூ. 125-

விஜயபாரதம் பிரசுரம், சென்னை
போன்: +91 89391 49466
இணைய முகவரி: https://vijayabharathambooks.com/
மின்னஞ்சல்: contact@vijayabharathambooks.com

Leave a comment