-சேக்கிழான்
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன...இது மூன்றாம் பகுதியின் தொடர்ச்சி...

3. மாபெரும் மக்கள் இயக்கம் (ஆ)

புனிதச் செங்கற்கள் வழிபாடு:
அயோத்தியில் பிரம்மாண்டமான ஆலயம் அமைப்பது என, அலகாபாத்தில் கூடிய துறவியர் பேரவை மாநாடு 1989 பிப்ரவரியில் முடிவு செய்தது. அதே ஆண்டு ஜூனில், ‘அயோத்தியில் ராமர் கோயில் அமைப்போம்’ என்று பாஜக தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.
அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். போஃபர்ஸ் ஊழல் காரணமாக நற்பெயரை அவர் இழந்திருந்த சூழலில், மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்தது. அந்தச் சூழலைப் பயன்படுத்தி ராமர் கோயில் பணிகளை விரைவுபடுத்தியது பரிஷத்.
1989 நவ. 7இல் அயோத்தியில் ராமர் ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் ஜூனில் அறிவித்தது. அதையொட்டி, நாடு முழுவதிலும் இருந்து ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட, ஸ்ரீராமர் பெயர் பொறிக்கப்பட்ட செங்கற்களை அனுப்பும் வகையில், ராம்சிலா யாத்திரைகள் நடத்தப்பட்டன.
இந்த யாத்திரைகளில் நாடு முழுவதிலும் இருந்து 3.5 லட்சம் புனித செங்கற்கள் பூஜிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பப்பட்டன. தமிழகத்தில் மட்டுமே 5,375 கிராம மையங்களில் ‘ஸ்ரீராம்’ புனித செங்கற்கள் பூஜிக்கப்பட்டன. ஒவ்வொரு கிராம மையத்தையும் சார்ந்து மேலும் பல கிராமங்களில் புனிதச் செங்கற்கள் பூஜிக்கப்பட்டன என்பது குறிப்பிட வேண்டியதாகும்.
இந்த செங்கற்களை சேகரிக்க, நாடு முழுவதிலும் ராம்சிலா ரதங்களின் யாத்திரைகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 5 ராம்சிலா ரதங்களின் யாத்திரை நடைபெற்றது. நீலன், நளன், அங்கதன், சுக்ரீவன், ஜாம்பவான் என்ற பெயர்களிலான அந்த ரதங்கள் ஊர்தோறும் ராமபக்தியைப் பெருக்கின. ரதங்களின் வருகையின்போது பல இடங்களில் பெரும் ஊர்வலங்கள், மாநாடுகள் ஏற்பாடாகி இருந்தன.
இதன் நிறைவாக, மத்திய அரசின் ஆதரவுடன், அயோத்தியில் பாபர் மசூதி வளாகத்துக்கு வெளியே ‘ராம் சிலான்யாஸ்’ எனப்படும் பூமிபூஜை நடைபெற்றது. பிரதமர் ராஜீவ் அறிவுறுத்தியபடி, அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் பூட்டா சிங் இந்நிகழ்வில் பங்கேற்றார். பிகாரைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் காமேஸ்வர் சௌபால், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். ஸ்ரீராமனுக்கு அமையவுள்ள ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டியவர் ஒரு பட்டியலின இளைஞர் என்ற செய்தியானது, தீண்டாமைக்கு எதிரான ஹிந்து இயக்கங்களின் உளப்பாட்டை நாடு முழுவதும் பிரகடனப்படுத்தியது.
(சிலான்யாஸின் போது அயோத்திக்கு அனுப்பப்பட்ட 3.5 லட்சம் புனித செங்கற்கள், அயோத்தியில் கரசேவகபுரத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. வெவ்வேறு மொழிகளில் ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று எழுதப்பட்ட இந்த செங்கற்கள் மொழி வேற்றுமையை வெல்லும் நமது கலாச்சார ஒருமைப்பாட்டைப் பறைசாற்றுகின்றன. அங்கு செல்லும் பக்தர்கள் இந்தக் கற்களைத் தொட்டு வணங்கிச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.)

ரத யாத்திரையும் கரசேவையும்:
1989 தேர்தலில் ராஜீவ் காந்தி தோல்வியுற்றார். பாஜக ஆதரவுடன் டிசம்பரில் வி.பி.சிங் பிரதமரானார். அப்போது கோயில் விஷயத்தில் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு வி.பி.சிங் வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, ராமர் கோயில் இயக்கத்தை பரிஷத் நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைத்தது. ஆனால், அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை.
எனவே 1990 ஜூனில் ஹரித்வாரில் கூடிய விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உயர்மட்டக் குழு, தேவோத்தன் ஏகாதசி நாளில் (1990 அக். 30) கோயில் நிர்மாணப் பணியை (கரசேவை) தொடங்குவது என முடிவெடுத்தது. அதற்கு முன்னதாக நாடு முழுவதும் ராமஜோதி யாத்திரைகள் திட்டமிடப்பட்டன.
அயோத்தியில் ராமர் கோயில் எதிரே பாரம்பரிய வழக்கப்படி அரணிக்கட்டைகளைக் கொண்டு ஏற்றப்பட்ட தீபமானது நாடு முழுவதிலும் பல்லாயிரம் தீபங்களாகப் பெருகி, ரதங்களில் புனிதச் சின்னமாக யாத்திரை செய்தன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேசமெங்கும் ராமபக்திப் பிரவாஹம் அலையடித்தது.
ராம்சிலா யாத்திரையைப் போல பல மடங்காக இந்த யாத்திரை நடைபெற்றது. அயோத்தியில் இருந்து வந்த ஜோதி என்பதால் மக்கள் அதனுடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைந்தனர். அந்த தீபங்களிலிருந்து ஏற்றப்பட்ட தீபங்கள் பலகோடி ஹிந்துக்களின் இல்லங்களில் ஒளிர்ந்தன. அதேசமயம், லட்சக் கணக்கான கரசேவகர்கள் அயோத்தி நோக்கிச் செல்லத் தொடங்கினர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆதரவு தெரிவித்து, குஜராத்தின் சோமநாதபுரத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி நோக்கி ராம ரத யாத்திரையை பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானி 1990 செப். 25ஆம் தேதி தொடங்கினார். 10 மாநிலங்கள் வழியாக 10,000 கி.மீ. பயணித்து, அக்டோபர் 30ஆம் தேதி அயோத்தியை அடைவது அந்த ரத யாத்திரையின் திட்டமாக இருந்தது. இந்த யாத்திரை சென்ற இடமெல்லாம் பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரண்டு வரவேற்பளித்தனர்.
விதிவசமாக வி.பி.சிங் அரசு, அயோத்தி இயக்கத்தை முடக்கத் திட்டமிட்டு, அந்த சதியிலேயே அழிந்தும் போனது. பிகாரின் சமஸ்திபூரில் அக். 23இல் ரத யாத்திரை தடுக்கப்பட்டு, அத்வானி கைது செய்யப்பட்டார். அதையடுத்து, வி.பி.சிங் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது; அரசு கவிழ்ந்தது. அடுத்த சில வாரங்களில் சந்திரசேகர் பிரதமரானார்.
அத்வானி கைதைத் தொடர்ந்து நாடு முழுவதும் லட்சக் கணக்கான ஹிந்து இயக்கத் தொண்டர்கள் பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டனர். தமிழகத்திலும் சுமார் 30,000 பேர் கைது செய்யப்பட்டனர். புதிய பிரதமராக சந்திரசேகர் பொறுப்பேற்ற பிறகே அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே, அக்.30இல் நடைபெற இருந்த கரசேவையை முடக்க அனைத்து சட்டவிரோத முறைகளையும் உ.பி.யில் இருந்த முலாயம் சிங் அரசு கையாண்டது. மாநிலமெங்கும் காவல் துறையினரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, உ.பியில் நுழைந்த லட்சக் கணக்கான கரசேவகர்கள் கைது செய்யப்பட்டனர். “அயோத்திக்குள் தன்னை மீறி ஈ, காக்காய் கூட நுழைய முடியாது” என்று கொக்கரித்தார் முலாயம்.
ஆனால், ராமபக்தியின் முன்பு அரசின் கட்டுக்காவல்கள் பயனற்றுப் போயின. காவலை மீறி, தடைகளை மீறி, தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடுகளை மீறி, கரசேவகர்கள் அயோத்தியில் நுழைந்து புதிய சரித்திரம் படைத்தனர். சர்ச்சைக்குரிய கட்டடத்தின் கும்மட்டம் மீது கரசேவகர்களால் பறக்கவிடப்பட்ட காவிக்கொடி, ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்தது.
அதேசமயம், அக்.30 முதல் நவ. 2 வரை 4 நாட்களில் கரசேவகர்கள் மீது முலாயம் சிங் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நூற்றுக் கணக்கானோர் பலியாகினர். (இவர்களில் கோத்தாரி சகோதரர்களின் சரிதம், பின்னால் வரும் அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது). சரயூ நதி கரசேவகர்களின் சடலங்களால் நிறைந்தது. ராம ஜன்மபூமியை மீட்க நடந்த 77வது போராக 1990 கரசேவை அமைந்தது.

டிசம்பர் 6 கரசேவை:
அந்த கரசேவகர்களின் தியாகம் வீணாகவில்லை. ஊடகங்கள் எவ்வளவுதான் மறைக்க முயன்றபோதும், அந்த பலிதானச் செய்திகள் ஊர்தோறும் பரவின. உ.பி. மாநிலத்தில் ஒவ்வொரு ஊரிலும் கரசேவையில் பங்கேற்று, முலாயம் அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள்; தவிர, தேசமெங்கும் இருந்து வருகை தந்த கரசேவகர்களுக்கு விருதுபசாரம் செய்த பாக்கியம் பெற்றவர்களும் இருந்தார்கள். வி.பி.சிங், முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரின் துரோகத்துக்கு அடுத்த தேர்தலில் மக்கள் பதிலடி கொடுத்தார்கள். உ.பி. சட்டசபைத் தேர்தலில் பாஜக அமோகமாக வென்று ஆட்சியைப் பிடித்தது; 221 பாஜக எம்.எல்.ஏ.க்களுடன், 1991 ஜூன் மாதம், கல்யாண் சிங் முதல்வரானார்.
அதேசமயம், காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமராக இருந்த சந்திரசேகர் அரசும் கவிழ்ந்திருந்ததால், 1991 மே மாதம் மக்களவைத் தேர்தலும் நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். அது தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. ராஜீவ் அனுதாப அலையில் கரைசேர்ந்த காங்கிரஸ் கட்சி, மத்தியில் நரசிம்ம ராவ் தலைமையில் ஆட்சி அமைத்தது.
பிரதமரான நரசிம்ம ராவ், ஆரம்பத்தில் அயோத்திப் பிரச்னைக்குத் தீர்வு காண உண்மையிலேயே மனப்பூர்வமாக முயன்றார். ஆனால் அவருக்கு கட்சிக்குளேயே கடும் எதிர்ப்பு இருந்தது. தவிர இஸ்லாமியர்களின் வாக்குவங்கி குறித்த அச்சமும் அவரது செயல்பாட்டிற்குத் தடையாக இருந்தது.
இந்த நிலையில், ராமர் கோயிலை அமைக்க டிசம்பர் 6இல் கரசேவை நடத்தப்போவதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தது. அதற்கு ஆதரவாக, ராமர் பாதுகை யாத்திரைகள் நாடு முழுவதும் நடந்தன; லட்சக் கணக்கான கரசேவகர்கள் மீண்டும் அயோத்தி நோக்கிச் சென்றனர்.
கரசேவையைத் தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த கல்யாண் சிங் அரசு கரசேவைக்கு ஆதரவாகச் செயல்பட்டது. எனவே கரசேவைக்கு எதிராக மத்திய அரசே வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் மூலமாக தடையாணை பெற்று, கரசேவையை நிறுத்த முயன்றது. அதேசமயம், உ.பி. முதல்வர் கல்யாண் சிங்கின் அரசு கலைக்கப்படப் போவதாக மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. ஆனால் கல்யாண் சிங் கலங்கவில்லை.
டிச. 6ஆம் நாள், அயோத்தியில் குழுமி இருந்த லட்சக் கணக்கான கரசேவகர்கள் அமைதியாக பஜனை பாடிக் கொண்டிருந்தனர். மேடையில் அசோக் சிங்கல், லால் கிருஷ்ண அத்வானி உள்ளிட்டோர் அவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கல்யாண் சிங் அரசு கலைக்கப்பட்டதாக வதந்தி பரவியது. அது கரசேவகர்களை ஆவேசம் கொள்ளச் செய்தது.
அவர்கள் அருகில் ராணுவத்தின் காவலில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடத்தின் மீது பாய்ந்தனர். அங்கிருந்த அயோத்தி இயக்கத் தலைவர்கள் எவ்வளவோ கூறியும் கரசேவகர்களைத் தடுக்க இயலவில்லை. ராணுவவீரர்களும் காவல் துறையினரும் அமைதி காத்தனர்; 1990இல் நிகழ்ந்தது போன்ற இன்னொரு ரத்தச் சகதியை யாரும் விரும்பவில்லை. தவிர அனைவரின் உள்ளத்திலும் ராமபக்தி மிளிர்ந்தது. அதன் பலனாக, அன்று ஒரே நாளில் அங்கு 464 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த அவமானச் சின்னம் அகற்றப்பட்டது. கூடவே அங்கு தற்காலிக ராமர் கோயிலையும் கரசேவகர்கள் அமைத்தனர். அதுவே ராமனின் சித்தம் போலும்.
மறுநாள் அந்த இடத்தை ராணுவம் வசப்படுத்தியது. இந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்குப் பதிலடியாக, உ.பி. ம.பி, ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் இருந்த பாஜக ஆட்சிகள், அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் அரசால் கலைக்கப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்க தளம் ஆகிய அமைப்புகள் அரசால் தடை செய்யப்பட்டன. (பிறகு பாஹ்ரி தீர்பாணையத்தால் இத்தடைகள் நீக்கப்பட வேண்டியதாயிற்று).
நீதித் துறையின் பங்களிப்பு:
1992 டிச. 6 சம்பவத்திற்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி அயோத்தியில் அமைக்கப்பட்ட தற்காலிக ராமர்கோயிலில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு ராமர் கோயிலுக்கான போராட்டம் முழுவதும் சட்டத்தின் அடிப்படையில் நீதிமன்றங்களிலேயே நடைபெற்றது.
இந்திய அரசியல் வானிலும், மாற்றங்கள் வேகமெடுத்தன. பாஜக நாட்டின் மைய நீரோட்டக் கட்சியாக மாறியது. காங்கிரஸ் தனது பிரதான தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை பாஜகவிடம் பறிகொடுத்தது. ஐ.கே.குஜரால், தேவெ கௌடா ஆகியோரின் குறுகிய கால ஆட்சிக்குப் பிறகு பாஜகவின் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக (1998- 2004) இருந்தார். அவர் காலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. நீதிமன்ற உத்தரவுப்படி அயோத்தி தொல்லியல் ஆய்வு (2003) இவரது ஆட்சிக் காலத்தில் தான் நடத்தப்பட்டது.
வாஜ்பாயை அடுத்து பிரதமரான மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, முந்தைய நிலையில் மாற்றமின்றித் தொடர்ந்தது. அதேசமயம், காங்கிரஸ் ஆதரவு வழக்கறிஞர்கள் சிலர் ராமர் கோயில் வழக்கை முடக்க பல வகைகளில் முயன்றனர். ஆயினும் நமது நீதித்துறையை ஓரளவுக்கு மேல் காங்கிரஸ் கட்சியால் கட்டுப்படுத்த முடியவில்லை.
2010இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு அயோத்தி வழக்கின் முக்கியமான திருப்பு முனை. என்றபோதும் அது முழுமையாக இல்லாததால் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.
2014இல் அமைந்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நீதித்துறையுடன் இணக்கமாக இருந்து, அயோத்தி வழக்கில் சட்டரீதியான தீர்வை எட்ட முயன்றது. இறுதியாக,2019இல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அயோத்தி என்ற கனலின்மீது படிந்திருந்த சாம்பலை ஊதித் தள்ளியது.
இந்த இடத்தில் ஒரு முக்கியமான உண்மையைப் பதிவு செய்தாக வேண்டும். எந்த ஒரு நாட்டிலும் அரசோ, சட்டமோ மக்களுக்காகத் தான் செயல்படுகின்றன. மக்கள் நினைத்தால் சட்டத்தையும் மாற்ற முடியும்; அரசையும் மாற்ற முடியும் என்பதே மக்களாட்சியின் அடிப்படைத் தத்துவம். மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்தால் மட்டுமே அரசும் சட்டமும் மதிப்புப் பெறும். இதனை பாரத மக்கள் தங்கள் ஒன்றுபட்ட சக்தியால் உணர்த்தியதால் தான் இறுதி வெற்றி கைகூடியது.
தேசமெங்கும் ஹிந்துக்களை ஒருங்கிணைத்து அவர்களின் சக்தியை உணரச் செய்த ஹிந்து இயக்கங்களின் கடின உழைப்பே மாற்றத்திற்கு வித்திட்டது. முற்காலத்தில் பாரதம் ஒற்றுமைக் குலைவால் இழந்த ராம ஜன்மபூமியை, அதே ஒற்றுமை என்னும் மருந்தால் திரும்பப் பெற்றது என்பது தான் அயோத்தி ராமர் கோயில் உலகிற்குச் சொல்லும் பாடம்.
(தொடர்கிறது)
$$$
முழுமையான நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
மொத்த பக்கங்கள்: 128+ 4; புத்தகத்தின் விலை: ரூ. 125-
விஜயபாரதம் பிரசுரம், சென்னை
போன்: +91 89391 49466
இணைய முகவரி: https://vijayabharathambooks.com/
மின்னஞ்சல்: contact@vijayabharathambooks.com