-சேக்கிழான்
அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன...இது மூன்றாம் பகுதி...

3. மாபெரும் மக்கள் இயக்கம் (அ)
அயோத்தி ராமர் கோயில் நிர்மாணம் என்பது ஒரு மாபெரும் மக்கள் கூட்டியக்கத்தின் சாதனையாகும். அயோத்தியின் சுமார் 500 ஆண்டுகால வரலாற்றைப் பார்த்தாலே, இன்றைய வெற்றியின் பின்புலம் புரியும்.
அயோத்தி ராமர் கோயில் மீட்புப் போராட்டங்களை 1528- 1857, 1857- 1947, 1947- 1980, 1980- 2024 என்று நான்கு கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். இதில் முதல் கட்டம் (1528- 1857), மன்னர்களாலும் ராம பக்தர்களாலும், உடனடி எழுச்சியாகவும் ஆக்கிரமிப்பாளனை எதிர்த்தும் நேரடியாக நடத்தப்பட்ட ஆயுதம் ஏந்திய போராட்டங்கள். இவற்றில் பலமுறை ஹிந்துக்கள் வென்றபோதும், அவை தொடரவில்லை. சிற்றரசர்களாக ஹிந்து மன்னர்கள் பிரிந்திருந்ததே, மொகலாய அரசர்களின் பெரும்படையை முழுமையாக வெல்ல முடியாமல் செய்துவிட்டது.
இரண்டாவது கட்டத்தில் (1857- 1947), ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுப் பகைவனான ஆங்கிலேயரின் ஆட்சி இந்தியாவில் நிலைபெற்றிருந்தது. அயோத்தியில் ராமர் கோயில் இடிக்கப்பட்டிருந்தாலும், ராம ஜன்மபூமியில் கட்டடத்திற்கு வெளியே நின்று பக்தர்கள் வழிபட பிரிட்டிஷ் அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதனை முஸ்லிம்களால் தடுக்க முடியவில்லை. அதே சமயம், ஹிந்துக்களின் ஆலயப் போராட்டங்களை பிரிட்டிஷ் அரசு சமயோசிதமாக நசுக்கி வந்தது. அவர்கள் நினைத்திருந்திருந்தால் இப்பிரச்னையை முழுமையாகச் சரி செய்திருக்க முடியும்; ஆனால் நினைக்கவில்லை.
அயோத்தி கோயில் விவகாரத்தில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான சர்ச்சை நீடிப்பதே நல்லது என்ற முடிவில் அவர்கள் இருந்தனர். 1857இல் ராமர் கோயில் இடத்தை நல்லெண்ண அடிப்படையில் ஹிந்துக்களிடம் அளிக்க முன்வந்த அயோத்தி முஸ்லிம் தலைவர் அமீர் அலியையும், ஹிந்துக்களின் தலைவர் பாபா ராம்சரண் தாஸையும் தூக்கிலிட்டுக் கொன்றது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் மதப் பிரச்னை நீடிக்க வேண்டுமென்றே நினைத்தனர். ஆயினும், சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தான் தொடங்கின.
மூன்றாவது காலகட்டம் (1947 – 1980), சுதந்திரத்திற்குப் பிந்தைய போராட்டம் தொடங்கிய காலம். நாட்டின் புதிய ஆட்சியாளர்கள் மதச்சார்பின்மை என்ற கவர்ச்சிகரமான கோஷத்தில் ஆழ்ந்திருந்த காலம். என்றபோதும் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மகா சபை, பாரதீய ஜனசங்கம் போன்ற அமைப்புகளால் அயோத்தி கோயில் மீட்புக்கான ஆரம்பகட்டப் பணிகள் அப்போது செய்யப்பட்டன.
1948இல் நிகழ்ந்த மகாத்மா காந்தி படுகொலை, ஹிந்து எழுச்சியைத் தடுப்பதற்கான கேடயமாக ஜவஹர்லால் நேரு அரசாலும், இந்திரா காந்தி அரசாலும் நேர்த்தியாகப் பயன்படுத்தப்பட்டது. ஹிந்து மக்கள் ஓரணியாகத் திரள்வதை ஊடகங்கள் மதவெறியாகச் சித்தரித்தன. அதன் விளைவாக 1980 வரை மிகப் பெரிய மாற்றத்தை ராம பக்தர்களால் நிகழ்த்த இயலவில்லை.
நான்காவது காலகட்டம் (1980- 2024) தான் ராமர்கோயில் மீட்பு இயக்கத்தின் திருப்புமுனைக் காட்சிகள் நிறைந்தது. ஹிந்து இயக்கங்கள் ராமர் கோயில் இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றின. மதச்சார்பின்மை என்ற பெயரில் தாங்கள் அரசுகளால் மோசம் செய்யப்படுவதை ஹிந்துக்கள் உணரத் தலைப்பட்டனர்.
மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில், சங்க பரிவாரின் (ஆர்.எஸ்.எஸ். குடும்பம்) அரசியல் அமைப்பான பாரதீய ஜனதா கட்சி அரசியல் ரீதியாக ராமர் கோயில் இயக்கத்தை முன்னெடுத்தது. அதன் விளைவாக, தேர்தல்களில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள், தேசத்தின் மனசாட்சியை அனைத்துத் தரப்பினருக்கும் மிகவும் துலக்கமாக வெளிப்படுத்தின.
இந்த மக்கள் இயக்கத்தின் வெற்றியால், 1986 முதல் 2019 வரையிலான சட்டப் போராட்டம் தொடங்கியது. இந்த சட்டப் போரில் சாட்சியம் அளிக்க தொல்லியல் துறை ஆய்வு செய்தாக வேண்டிவந்தது. நீதிமன்றம் தீர்வை நோக்கி நகர்ந்த அதே காலத்தில், நாட்டு மக்களும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கி, நீதியை நிலைநாட்டுவதற்கான செம்மையான சூழலை அளித்தனர். இறுதியில் உண்மை வென்றது.

தூண்டுகோலான தமிழகம்:
1980களில் தமிழகத்தில் நிகழ்ந்த இருவேறு நிகழ்வுகள் தேசிய அளவில் பெரும் மாற்றத்திற்கு வித்திட்டன. அதில் முதலாவது நிகழ்ச்சி, மீனாட்சிபுரம் மதமாற்றம். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் வாழும் பட்டியலின மக்கள், ஹிந்து சமுதாயத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து கூட்டாக இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக 1981 பிப். 19இல் அறிவித்தனர். அதையடுத்து ஹிந்து இயக்கத் தலைவர்களும் துறவியர்களும் அங்கு சென்றனர்.
அப்போது ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்களாக இருந்த மோரோபந்த் பிங்களே, அசோக் சிங்கல் ஆகியோர் தமிழகத்திற்கு வந்தனர். மீனாட்சிபுரம் மதமாற்றம் தேசிய அரசியலிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்றைய பாஜக தலைவர் அடல் பிகாரி வாஜ்பாயும் அந்தக் கிராமத்திற்குச் சென்றிருந்தார். அப்போதைய எம்.ஜி.ராமசந்திரன் தலைமையிலான மாநில அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தது. அதன்மூலம் மதமாற்றம் ஓரளவு அங்கு தடுக்கப்பட்டது. தவிர, பட்டியலின சகோதரர்களின் கஷ்டங்களை தேசம் உணரத் தொடங்கியது.
அதே ஆண்டு தமிழகத்தின் வேலூரில் இதற்கு மாறான ஒரு காட்சி உருவானது. முஸ்லிம் ஆதிக்கத்தின் போது வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலின் மூலவர் விக்ரஹம் மீட்கப்பட்டு, பக்தர்களால் பாதுகாப்பாக வேறு ஓரிடத்திற்கு (சத்துவாச்சாரி) இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, வேலூர் கோட்டையும் அங்கிருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தன.
இக்கோயிலில் மூலவரான சிவலிங்கத்தை மீண்டும் நிறுவி, கோயிலில் பக்தர்கள் வழிபட அரசு உதவ வேண்டும் என்பது ஹிந்து பக்தர்களின் பல்லாண்டுகாலக் கோரிக்கையாக இருந்தது. வழக்கம் போல அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தான், அரசின் தடையை மீறி, 1981 மார்ச் 16ஆம் நாள், ஜலகண்டேஸ்வரர் கோயிலின் கர்ப்பகிருஹத்தில் மூலவரான சிவலிங்கத்தை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஸ்தாபித்தனர். இந்தப் பணியை முன்னின்று சாதித்தவர்கள், வேலூரில் பணியாற்றிய சங்க பிரசாரகர்களான அமரர்கள் ம.வீரபாகு, சுந்தர.ஜோதி உள்ளிட்டோர்.
வேலூர் கோட்டை கோயிலில் மூலவர் பிரசன்னமாகிவிட்டார் என்று அறிந்தவுடன் வேலூர் மாவட்டம் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் எந்த ஜாதி வேறுபாடுமின்றிக் குவிந்தனர். அரசால் மக்களின் வேகத்தைத் தடுக்க முடியவில்லை. எனவே ஜலகண்டேஸ்வர்ர் கோயிலை அன்றிலிருந்து தரிசனத்திற்கு அரசு திறந்துவிட்டது.
இந்த நிகழ்வுகளில் இருந்து தேசம் முக்கியமான உண்மைகளைக் கண்டறிந்தது. ‘சமய விழிப்புணர்வே ஜாதி வேற்றுமையை இல்லாது ஒழிக்கும். அதுபோலவே, மக்களின் ஒற்றுமை இருந்தால் அரசு மக்கள் சக்திக்கு அடிபணிந்தே தீரும். ஒரு கோட்டினை சிறிய கோடாக்க வேண்டுமானால் அதன் அருகே பெரிய கோட்டினைக் கிழிக்க வேண்டும். அதாவது சமய ஒற்றுமை மூலமாகவே தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க முடியும்’ என்று ஹிந்து இயக்கங்களின் தேசியத் தலைவர்கள் உணர்ந்தனர்.
‘தமிழகத்தின் வேலூரில் ஹிந்துக்களால் கோயிலை மீட்க முடியுமானால், உ.பி.யில் உள்ள அயோத்தி, மதுரா, காசி கோயில்களை ஏன் மீட்க முடியாது?’ என்று அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாளாசாகேப் தேவரஸ் அப்போது கேள்வி எழுப்பினார். தமிழகம் வழிகாட்டியது; தேசம் அதனை சிக்கெனப் பிடித்துக் கொண்டது.

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அரும்பணி:
ஆர்.எஸ்.எஸ். குடும்ப அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத், மத சம்பந்தமான பணிகளில் இயங்குவது. இது, நாட்டிலுள்ள பல்வேறு சம்பிரதாயங்களைச் சார்ந்த மடாதிபதிகள், துறவிகள், சாதுக்களை 1980க்கு முன்னரே ஒருங்கிணைத்திருந்தது. 1969இல் உடுப்பியில் பரிஷத் நடத்திய துறவிகள் மாநாடு, “ஹிந்து சமுதாயத்தில் தீண்டாமைக்கு இடமில்லை: ஹிந்து சாஸ்திரங்கள் ஜாதி வேற்றுமையை அங்கீகரிக்கவில்லை; ஹிந்துக்கள் அனைவரும் சகோதரர்கள்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அன்று தொடங்கி ஹிந்து சமுதாயத்தின் தன்னார்வப் பாதுகாவலனாக பரிஷத் உருவெடுத்தது.
அதன் புதிய நிர்வாகியாகப் பொறுப்பேற்ற அசோக் சிங்கலும், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோரோபந்த் பிங்களேவும், நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த ஏகாத்மதா (ஒருமைப்பாட்டு) யாத்திரைகளை நடத்தத் திட்டமிட்டனர். அதன்படி 1983 நவம்பரில், மூன்று யாத்திரைகள் நாடு முழுவதிலும் நடத்தப்பட்டன. நேபாளத்தின் காத்மண்டு முதல் தமிழகத்தின் ராமேஸ்வரம் வரை முதல் யாத்திரை நடைபெற்றது. அடுத்து, வங்கத்தின் கங்காசாகர் முதல் குஜராத்தின் சோமநாதபுரம் வரை இரண்டாவது யாத்திரை நடைபெற்றது. அடுத்து, இமயத்தின் ஹரித்வார் முதல் தமிழகத்தின் கன்னியாகுமரி வரை மூன்றாவது யாத்திரை நடைபெற்றது.
இந்த யாத்திரைகளில் புனிதப்பயணிகளாக நாடு முழுவதும் சென்றவர்கள் ஆங்காங்கே ஆரவாரமாக வரவேற்கப்பட்டனர். கங்கையின் புனித தீர்த்தத்தை அவர்கள் சுமந்து சென்றனர். ஒவ்வொரு புனிதத் தலத்திலும் உள்ள புனித மண்ணும் தீர்த்தமும் சேகரிக்கப்பட்டன. நாடு முழுவதிலும் உள்ள துறவிகளும் இந்த யாத்திரைகளில் பங்கேற்று ஆசி வழங்கினர். தீண்டாமைக்கு எதிராகவும் சமய ஒருமைப்பாட்டிற்கு ஆதரவாகவும் இந்த யாத்திரையில் சென்றவர்கள் பிரசாரம் செய்தனர்.
இதனை விஸ்வ ஹிந்து பரிஷத் நடத்தியது. பின்னணியில் இருந்து பிங்களே வழிநடத்தினார். இந்த யாத்திரை நாடு முழுவதிலும் பெரும் ஹிந்துத்துவ ஆதரவு அலையை உருவாக்கியது. ‘ஆன்மிக ஒருமைப்பாடே தேசத்தை ஒன்றிணைக்கும்’ என்பதை உறுதிப்படுத்திய ஏகாத்மதா யாத்திரையே, அடுத்து வந்த ராமர் இயக்க ரத யாத்திரைகளின் தாய்.

துறவியர் பேரவையின் முழக்கம்:
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முயற்சியால் உருவான ‘தர்ம சன்சாத்’ எனப்படும் துறவியர் பேரவை மாநாடு, 1984 ஏப்ரலில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான முக்கியமான தீர்மானத்தை பிரயாகை (அலகாபாத்) கும்பமேளாவில் நிறைவேற்றியது. ‘அயோத்தி, மதுரா, காசியில் உள்ள இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்று அரசை துறவிகள் கோரினர்.
அதையடுத்து, ராமர் கோயிலை மீட்க, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கலும் ராம ஜன்மபூமி மீட்பு இயக்கத்தைத் தொடங்கினார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடத்தில் நிறுவப்பட்ட ராமர் சிலைகளை பக்தர்கள் வழிபட, பூட்டிய கதவுகளைத் திறக்க வேண்டும் எறு பரிஷத் கோரியது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, 1984 செப்டம்பரில், பிகாரில் உள்ள சீதாமார்ஹி முதல் உத்தரப்பிரதேசத்திலுள்ள அயோத்தி வரை (சீதா ஜன்ம பூமி முதல் ராம ஜன்மபூமி வரை) ஸ்ரீராமர் – ஜானகி யாத்திரையை பரிஷத் நடத்தியது. அதில் ராம பக்தர்களின் பங்கேற்பு உற்சாகம் அளிப்பதாக இருந்தது.
அந்த ஆண்டு, அக். 7ஆம் நாள்,அயோத்தி ராமர் கோயிலை மீட்க நாடு முழுவதும் சங்கல்ப தினம் அனுசரிக்கப்பட்டது. லட்சக் கணக்கானோர் ராமர் கோயிலை விடுவிக்க சபதம் ஏற்றனர். இதனிடையே, பிரதமர் இந்திரா காந்தி அக். 31இல் படுகொலை செய்யப்பட்டதால் ஸ்ரீராமர் – ஜானகி யாத்திரை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில்ராமர் கோயிலில் வழிபட கதவுகளைத் திறந்து விடுமாறு பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, 1986 பிப். 1 ஆம் தேதி ஆலயத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. அதன்பிறகு ராமர் கோயில் இயக்கம் தீவிரமடைந்தது. 1988 அக்டோபரில் அயோத்தியில் நடைபெற்ற ஸ்ரீராம மகா யக்ஞத்தில் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதே காலகட்டத்தில் அன்றைய ஒரே தொலைக்காட்சி சேனலான தூர்தர்ஷனில், 1987 ஜனவரி 25 முதல் 1988 ஜூலை 31 வரை ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு ராமானந்த் சாகரின் தயாரிப்பில் உருவான ராமாயணம் ஒளிபரப்பப்பட்டது. அதுவும் தேசமெங்கும் ராமபக்தியைப் பெருக்கியது.
(தொடர்கிறது)
$$$
முழுமையான நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க:
மொத்த பக்கங்கள்: 128+ 4; புத்தகத்தின் விலை: ரூ. 125-
விஜயபாரதம் பிரசுரம், சென்னை
போன்: +91 89391 49466
இணைய முகவரி: https://vijayabharathambooks.com/
மின்னஞ்சல்: contact@vijayabharathambooks.com