ஆலயம் காணும் அயோத்தி நாயகன் – 2அ

-சேக்கிழான்

அயோத்தி ஸ்ரீ ராம ஜன்மபூமியில் குழந்தை ராமர் விரைவில் (ஜன. 22) எழுந்தருள உள்ள நிலையில், அயோத்தி ராமர் கோயில் மீட்பு இயக்கம் குறித்த நூலை திரு. சேக்கிழான் எழுதியுள்ளார். சென்னை, விஜயபாரதம் பிரசுரம் வெளியிடும் இந்த நூலின் சில பகுதிகள் தொடராக இங்கே இடம் பெறுகின்றன... இது இரண்டாம் பகுதி...

2. அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை! (அ)

அயோத்தி ராம ஜன்மபூமி மீட்புக்கான போராட்டம் இங்கே காலவரிசையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. பலிதானங்களும், சட்டரீதியிலான யுத்தங்களும், மக்களின் போராட்டங்களும் சங்கமிக்கும் இந்த வரலாறு, எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த, வரும் தலைமுறையினருக்கு ஊக்கசக்தியாக இருக்கும்

பொ.யு.மு. 100: ஸ்ரீராமன் பிறந்த அயோத்தியில், மிகப் பிரம்மாண்டமான ராமர் கோயில் விக்கிரமாதித்த மன்னரால் கட்டப்பட்டது. அங்கு குழந்தை ராமர் அருள்பாலித்தார்.

பொ.யு.பி. 1528  செப்டம்பர்: அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துத் தகர்த்த மொகலாய மன்னன் பாபரின் படைத் தளபதி மீர்பாஹி, தனது வெற்றிச் சின்னமாக, அங்கு பாபர் பெயரில் மசூதியைக் கட்டினான். அவனது தலைமையிலான 4.5 லட்சம் வீரர்கள் கொண்ட அந்நியப் படையை எதிர்த்து, 1.74 லட்சம் வீரர்களுடன் போரிட்டு, வீரமரணம் அடைந்தார் பித்தி தேச ராஜா மெகதாப் சிங். 

1528: அயோத்திக்கு அருகில் 6 மைல் தொலைவில் உள்ள கிராமம் சனேத்து.அதே அங்கு வாழ்ந்த சுவாமி தேவிந்தன் பாண்டே, அங்கிருந்த சூரியவம்ச ஷத்திரியர்களைக் கொண்டு 90,000 வீரர்களுடன் பெரும் படையை உருவாக்கி, அயோத்தி நோக்கிச் சென்றார். அந்த மீட்புப் போர் 5 நாட்கள் நடைபெற்றது. ஆனால் பயனின்றி அனைவரும் பலியாகினர்.

(1853ஆம் ஆண்டு வரை இது போல பல போர்கள் 76 முறை நடைபெற்றுள்ளன. (அவை குறித்து பின்னர் பார்க்கலாம்).  

1611: பிரிட்டிஷ் வியாபாரி வில்லியம் ஃபின்ச் எழுதிய பயணக்குறிப்பில்,  ‘ஆக்கிரமிப்பில் இருந்தபோதும், அயோத்தியில் இருந்த மசூதியில் ஹிந்துக்கள் ராமனை வழிபட்டனர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

1717: ராஜபுத்திர அரசர் இரண்டாம் ஜெய்சிங், மொகலாய அரசுடன் பேசி, ராமர் கோயில் இருந்த இடத்தை விலைக்கு வாங்கினார். அதையடுத்து, அங்கு வழிபாடு சில காலம் தடையின்றி நடந்தது.

1853: அவத் ராஜ்ஜியத்தின் மன்னராக நவாப் வஜித் ஷா இருந்தபோது,  நிர்மோஹி அகாரா மடத்தின் துறவிகள் பாபர் மசூதியைக் கைப்பற்ற முயற்சி; கலவரம்; பிரிட்டிஷ் அரசு பாபர் மசூதி வளாகத்தை இரண்டாகப் பிரித்தது. மசூதியின் உள்ளே முஸ்லிம்கள் தொழுகை நடத்தவும், வெளிப்புறத்தில் ராம்சாத்புராவில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டது.

1855: ஹிந்துக்கள் வழிபடுவதை எதிர்த்து, அயோத்தியில் இஸ்லாமியர்கள் மதக்கலவரத்தில் ஈடுபட்டனர். பிரிட்டிஷ் அரசு அதனை ஒடுக்கியது.

***

அவமானச் சின்னமாக நின்றிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடம்- 1949

1857: முதல் இந்திய சுதந்திரப் போரின்போது நல்லெண்ண அடிப்படையில், அயோத்தி ராமர் கோயிலை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க முஸ்லிம்கள் முன்வந்தனர்;  உள்ளூர் முஸ்லிம் தலைவர் அமீர் அலி தலைமையில், துறவி பாபா ராம்சரண் தாஸிடம் கோயிலை அளிக்கத் தீர்மானித்தனர். ஆனால், பிரிட்டிஷ் அரசு அனுமதிக்கவில்லை. தவிர, அமீர் அலி, பாபா ராம்சரண் தாஸ் ஆகிய இருவரையும் ராஜதுரோக வழக்கில் தூக்கிலிட்டது பிரிட்டிஷ் அரசு.

1883: மீண்டும் கோயிலை மீட்க பக்தர்கள் முயற்சி; இஸ்லாமியர்கள் எதிர்ப்பு. பிரிட்டிஷ் அரசு தடுத்தது; சுற்றிலும் வேலி அமைத்த மாவட்ட நிர்வாகம் வளாகத்தைப் பூட்டியது. கோயில் கட்ட பைசாபாத் துணை ஆணையர் தடை விதித்தார்.

1885 ஜன. 27: அந்த இடத்திலேயே (ராம்சாத்புராவில்) ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி, மஹந்த் ரகுவர்தாஸ் பைசாபாத் துணை நீதிமன்றத்தில் வழக்கு. நீதிபதிகள் நிராகரிப்பு.

1886 மார்ச்: மஹந்த் ரகுவர்தாஸ் மீண்டும் மாவட்ட நீதிமன்றத்தில் மனுச் செய்தார். சர்ச்சைக்குரிய கட்டடம், கோயிலை இடித்துக் கட்டப்பட்டது தான் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எனினும் மீண்டும் கோயில் கட்ட தடை விதித்தது.

1934 மார்ச் 27: ஷாஜகான்பூரில் நிகழ்ந்த பக்ரீத் பசுவதையை அடுத்து அயோத்தியில் கலகம் மூண்டது. சுமார் 200 பைராகிகள் தலைமையில் திரளான மக்கள் பாபர் மசூதி கட்டுமானத்தைத் தாக்கி அதன் கும்மட்டங்களைத் தகர்த்தனர். பிரிட்டிஷ் காவல் படை அங்கு வந்து கலகத்தைக் கட்டுப்படுத்தியது; மஹந்த் ராம்கிஷோர் தாஸ், மஹந்த் ரகுவர்பிரசாத், பாபா மங்கள் தாஸ், மஹந்த ராமாவதார் தாஸ், மஹந்த் சத்ருகன்தாஸ், யமுனாதாஸ் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

     அப்போது பைசாபாத் துணை ஆட்சியராக இருந்த ஜே.பி.நிக்கல்சன், கலகத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்தே அபராத வரி வசூலித்தார். அவ்வாறு வசூலான ரூ. 1.25 லட்சம் தொகையைக் கொண்டு, இடிக்கப்பட்ட கும்மட்டங்களை மீண்டும் கட்டிச் சீரமைத்தார். (ஆதாரம்: The Disputed Mosque: A Historical Inquiry– Sushil Srivastava – 1990).

1936:  ‘மீர்பாஹி ஒரு ஷியா முஸ்லிம் என்பதால், பாபர் மசூதி ஷியா முஸ்லிம்களுக்கே சொந்தம்’ என்று ஷியா சட்ட வாரியம் வழக்கு.

1937: அயோத்தி ராமர் கோயிலை மீட்க, கோரக்பூரிலுள்ள கோரக்‌ஷ பீடத்தின்  தலைவர் மஹந்த் திக்விஜய்நாத் (மஹந்த் அவைத்யநாத்தின் குரு) தலைமையில் முயற்சிகள் தொடங்கின.

1938:  ‘மசூதி உள்ள இடம் கைவிடப்பட்டது; அங்கு எந்த முஸ்லிமும் செல்ல வேண்டாம்’ என்று மாவட்ட வக்ஃப் வாரிய ஆணையர் அறிவித்தார்.

1946:  ‘பாபர் மசூதி கட்டப்பட்டது சன்னி முஸ்லிமான பாபருக்காக என்பதால், சன்னி முஸ்லிம்களுக்கே மசூதி சொந்தம்’ என பைசாபாத் நீதிமன்றம் தீர்ப்பு.

1946: ராமர் கோயிலில் வழிபாட்டு உரிமை கோரி, ஹிந்து மகா சபையின் அங்கமான அகில பாரதீய ராமாயண மகாசபா போராட்டத்தைத் தொடங்கியது.

***

1992 டிச. 6 கரசேவை

1947: இந்தியா சுதந்திரம் பெற்றது. குஜராத் கடற்கரையில் கஜினி முகமதுவால் அழிக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்யும் பணி தொடங்கியது. அதேபோல அயோத்தியில் ராம ஜன்மபூமியிலும் அரசே ராமர் கோயிலை நிர்மாணிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. புதிய அரசு கண்டுகொள்ளவில்லை.

1949 அக்டோபர்: அயோத்தியில் ஸ்ரீ ராமசரிதமானஸ் பாராயணம் செய்யும் தொடர் போராட்டத்தை அகில பாரதீய ராமாயண மகாசபா நடத்தியது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குழுமி, ராமாயண பாராயணம் செய்தனர்.

1949 டிச. 22: சர்ச்சைக்குரிய கட்டட (பாபர் மசூதி) வளாகத்தினுள் ஜன்மஸ்தானில் திடீரென, ராமர், சீதை விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. லட்சக் கணக்கில் பக்தர்கள் அயோத்தியில் வழிபடத் திரண்டனர்.

1949 டிச. 23: மாநில காவல் துறைத் தலைவர் காவல் தடையுத்தரவு பிறப்பித்தார். ஆலயக் கதவு பூட்டப்பட்டது. கட்டடத்துக்குள் உள்ள ராமர் சிலையை அகற்றுமாறு இஸ்லாமியர்கள் வற்புறுத்தல்.

1949 டிச. 27: அந்தச் சிலைகளை அகற்றினால் கலவரம் வெடிக்கும் என்று கூறி, மத்திய அரசின் உத்தரவை ஏற்க பைசாபாத் மாவட்ட ஆட்சியர் கே.கே.நாயர், நகர மாஜிஸ்திரேட் தாகுர் குருதத் சிங் ஆகியோர் மறுப்பு. 

1949 டிச. 28: மாநில அரசின் உத்தரவை ஏற்க மறுத்து, மாவட்ட ஆட்சியர் கே.கே.நாயர் பதவியை ராஜினாமா செய்தார்.

1950 ஜன. 16: அயோத்தி பிரமுகர்  கோபால் சிங் விஷாரத், பூட்டப்பட்ட கட்டடத்தை அரசு திறந்துவிட்டு ராமரை வழிபட அனுமதிக்குமாறு கோரி வழக்குத் தொடர்ந்தார் (அயோத்தி நில உரிமை வழக்கு-1).

1950 மே 25: திகம்பர் அகாரா மடத்தின் சார்பில் மஹந்த் ராமசந்திர தாஸ் பரமஹம்ஸரும், ராமரை வழிபட உரிமை கோரி, பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் (இரண்டாவது வழக்கு).

1950 ஜன. 19:  “கட்டடத்தினுள் இருக்கும் ராமர் சிலையை எக்காரணம் கொண்டும் அகற்றக் கூடாது; அங்கு தொடர்ந்து பூஜைகள் இடையூறின்றி  நடைபெற வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவு.

1959 டிச. 17: அயோத்தியில் செல்வாக்கு மிகுந்த ராமானந்தி பைராகி குழுவைச் சார்ந்த நிர்மோகி அகாரா மடம் சார்பில், சர்ச்சைக்குரிய அந்த இடம் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று நில உரிமை கோரி வழக்கு தொடுத்தது (மூன்றாவது வழக்கு).

1961 பிப். 1: பாபர் மசூதிக்குள் உள்ள ராமர், சீதை சிலைகளை அகற்றக் கோரியும், சர்ச்சைக்குரிய கட்டடத்தின் (பாபர் மசூதி) மீதான உரிமையையும் கோரி சன்னி வக்ஃபு வாரியம், பைசாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில்  வழக்கு (நான்காவது வழக்கு).

1975-76: இந்திய தொல்லியல் துறையின் டைரக்டர் ஜெனரல் பேராசிரியர் பிரஜ் பாசி லால் தலைமையிலான குழுவினர் அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் அருகே அகழாய்வு நடத்தினர். அந்த ஆய்வில், அந்த இடத்தில் பழமையான கோயில் கட்டுமானம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால், அந்த ஆய்வறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

***

(1980- 2024…. தொடர்கிறது)

$$$

முழுமையான நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்க:

மொத்த பக்கங்கள்: 128+ 4; புத்தகத்தின் விலை: ரூ. 125-

விஜயபாரதம் பிரசுரம், சென்னை

போன்: +91 89391 49466
இணைய முகவரி: https://vijayabharathambooks.com
மின்னஞ்சல்: contact@vijayabharathambooks.com

Leave a comment