அயோத்தியாயணம்-3

-ச.சண்முகநாதன்

3. பெரிதினும் பெரிது அயோத்தியா.

அங்கே அறம் பெரிது, தர்மம் பெரிது. பாசம் பெரிது, வீரம் பெரிது. அயோத்தியாவில் மதில்களும் பெரிது. அயோத்தியின் புகழ் பெரிது.

அயோத்தியாவைச் சுற்றியுள்ள மதில், மலைகளைப் போல வலிமையாய், நகர மாந்தரைக் காக்கும் காவல் தெய்வமாய் இருந்தது; காத்து வந்தது.

நகரத்து மதில் அங்கு வாழும் சமுதாயத்தைப் பிரதிபலிக்கிறது.

அயோத்தி மாநகரின் மதிலின் நன்மையை யாராலும் முழுமையாக உணர முடியாது; அதனால் அந்த மதில் வேதத்தை ஒக்கும்.

மதிலின் மேல் பகுதி மிகவும் உயர்ந்து விண்ணில் இருப்பதால், அந்நகரின் மதில் விண்ணில் வாழும் தேவரை ஒக்கும்.

நகரை செம்மையாகக் காப்பதால், கலைமானை வாகனமாகக் கொண்ட துர்க்கையை ஒக்கும்.

காளி சூலத்தை ஏந்தி மக்களைக் காப்பது போல மதிலின் மேல் இருக்கும் இடிதாங்கி கொண்டு மக்களைக் காப்பதால் அந்த மதில் காளியை ஒக்கும்.

பெருமை கொண்ட எல்லாம் ஒக்கும்.

இறுதியாக,

யாவரும் தன்னை எளிதாக அடைய முடியாதபடி இருத்தலால் அயோத்தியின் மதில் அந்த ஈசனை ஒக்கும்.

எப்பேர்ப்பட்ட நகரம் அயோத்தி! அந்நகரின் மதில் ஈசனை ஒக்கும்.

“மேவ அரும் உணர்வு முடிவு இலாமையினால்,
  வேதமும் ஒக்கும்; விண் புகலால்,
தேவரும் ஒக்கும்; முனிவரும் ஒக்கும்,
  திண் பொறி அடக்கிய செயலால்;
காவலின், கலை ஊர் கன்னியை ஒக்கும்;
  சூலத்தால், காளியை ஒக்கும்;
யாவையும் ஒக்கும், பெருமையால்;
  எய்தற்கு அருமையால், ஈசனை ஒக்கும்”

இதை அறிந்துதானோ என்னவோ இன்று ராம ஜன்மபூமியில் கட்டப்படுகிற கோயிலில் எல்லாமே பிரம்மாண்டம். கோயில், அதன் மதில்கள், கோயில் மணி, துவஜஸ்தம்பம் என்று எல்லாமே  ‘யாவையும் ஒக்கும். அவற்றின் பெருமை எய்தற்கு அருமையால், ஈசனை ஒக்கும்’.

கம்பன் தாள் பணிவோம்.

$$$

Leave a comment