அயோத்தியாயணம்-1

-ச.சண்முகநாதன்

1. பூமியின் முகவரி

இன்னும் சில நாட்களில் ராம ஜென்மபூமி அதன் உரிய இடத்தைப் பெற உள்ளதை நினைக்கும் பொழுது, இந்த மார்கழியில், மனம் ஆண்டாளாய் மாறி  “பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் பரவசம் அடைய” ஆவல் கொள்கிறது,

கம்பன் மொழி பேசலாம் என்று கம்பனைப் படித்த பொழுது, அவன் ராமனைப் பாடும் பொழுதோ அயோத்தியைப் பாடும் பொழுதோ கள்ளுண்ட வண்டு போல ஆகி விடுகிறான் என்பது உறுதியாயிற்று.

அயோத்தியின் பெருமையைப் பாடும் முன்னர், கோசல நாட்டின் பெருமையைப் பார்ப்போம். அந்த நாட்டில் வள்ளல்கள் யாரும் இல்லை, ஏனென்றால் வறுமையில் யாரும் இல்லை.

“வண்மையில்லை ஓர் வறுமை இன்மையால்”

அடுத்த வரி மிகவும் முக்கியமானது.  “திண்மையில்லை நேர் செறுநர் இன்மையால்”. அந்த நாட்டோடு போர் புரிபவர் இல்லை, ஆதலால் அந்த நாட்டின் பராக்கிரமச் சிறப்பு தெரிவதில்லை.

இந்த நிலை கொடுங்கோல் மொகலாயர் வரும் வரை நீடித்தது போல. கொடுங்கோலர்கள் ராமபிரான் பிறந்த இடத்தைத் தகர்த்த பொழுது அதைத் தடுக்கும் திண்மையில்லாமற் போனது.

போகட்டும், 2014இல் அந்தத் திண்மை பன்மடங்காகத் திரும்பி வந்திருக்கிறது. அயோத்தி மாநகர் இழந்த பொலிவை திரும்பப் பெறுகிறது.

அயோத்தியின் பெருமையை கம்பன் மூக்கில் விரல் வைத்துப் பாடுகிறான். இவ்வளவு அழகான, பெருமையான நகரமா அயோத்தி என்று.

“நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ!
  நிறை நெடு மங்கல நாணோ!
இலகு பூண் முலைமேல் ஆரமோ! உயிரின்
  இருக்கையோ! திருமகட்கு இனிய
மலர்கொலோ! மாயோன் மார்பில் நன் மணிகள்
  வைத்த பொற் பெட்டியோ! வானோர்
உலகின் மேல் உலகோ! ஊழியின் இறுதி
  உறையுளோ! யாது என உரைப்பாம்”

“நிலமகளின் விலாசம் அயோத்தியோ” என்று ஆரம்பத்திலேயே அயோத்தியின் பெருமையை வானில் வைக்கிறான் கம்பன்.

பூமியின் திலகமோ? பூமியின் கண்ணோ? மங்கல சூத்திரமோ? நிலமகளின் மார்பில் அணிந்த இரத்தின மாலையோ? நிலமகளின் உயிரின் இருக்கையோ? லட்சுமி வசிக்கும் தாமரையோ? திருமால் மார்பில் அணிந்த ஆபரணங்கள் வைக்கப்பட்ட பெட்டியோ? தேவலோகத்திற்கும் மேலான இடமோ? இல்லை ஊழிக்காலத்தில் எல்லாமும் தங்கும் திருமாலின் வயிறோ?”

இவற்றில் எது அயோத்தி மாநகர் என்று ஆச்சர்யப்பட்டுப் பாடுகிறான் கம்பன்.

இன்றைய பொலிவூட்டப்பட்ட அயோத்தியைப் பார்க்கும் பொழுது இந்த கம்பன் பாடல் நினைவு வருகிறது.

அயோத்தி is regaining its glory.

நிலமகள் முகமோ! திலகமோ!

அயோத்தி மாநகர் இந்தப் பூமியின் முகவரியாக மாறுகிறது.

நன்றி மோடி! நன்றி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் எண்ணற்ற தியாகிகளுக்கு.

$$$



Leave a comment