குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 1

-சேக்கிழான்

இதற்கு முந்தைய குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள் குடியுரிமையின் வேறு பல சிக்கலான பரிணாமங்களை அணுகின. ஆயினும், நாட்டில் இதுவரை முழுமையாக குடிமக்களாக அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் அகதிகளை என்ன செய்வது என்பதில் தெளிவான திசை காட்டப்படவில்லை. அந்தக் குறைபாட்டைப் போக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சியால் உருவானதே குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019.

பதிப்புரை

1 குடியுரிமைத் திருத்தச் சட்டம்- யாருக்கானது?

நாடு முழுவதும் கடந்த 2019 டிசம்பர் 12 அன்று குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அமலானது.

பாரதத்தின் அங்கமாக இருந்து வேறு நாடுகளாகப் பிரிந்து சென்று தங்களை இஸ்லாமிய நாடுகள் என்று மதரீதியானவையாக அறிவித்துக் கொண்ட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளில் இருந்து உயிராசையுடன் தப்பி ஓடிவந்துள்ள பல்லாயிரக் கணக்கான அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டத் திருத்தம் இது.

இந்தச் சட்டம் 1955ஆம் வருடத்திய இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் ஆறாவது திருத்தம். அதாவது இதற்கு முன் இந்தச் சட்டம் 5 முறை (1985, 1992, 2003, 2005, 2015) திருத்தப்பட்டுள்ளது.

அப்போதெல்லாம் இதுபற்றி சிறு செய்திகூட வெளியானதாகத் தெரியவில்லை. ஆனால், இம்முறை, கு.தி.சட்டம்-2019 அமலான நாள் துவங்கி இரண்டு வாரங்களுக்கு நாடு முழுவதும் அமளி ஏற்பட்டது. அந்த வன்முறைகளின் பின்னணியில் ஆட்சியை இழந்த எதிர்க்கட்சிகளின் வன்மமும், சுயநல அரசியலும் இருந்தன.

உண்மையில் இந்தச் சட்டத்தை உருவாக்கியது ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசுதான். அதற்கான தேவையை உருவாக்கியது அன்றைய பாகிஸ்தான் அரசு. அப்போதைய பாகிஸ்தான் அதிபர் லியாகத் அலி கானுக்கும் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும் இடையில் 1950இல் கையெழுத்தான இருநாட்டு ஒப்பந்தம், இரு நாடுகளின் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்யவே உருவானது. ஆனால், அது பாகிஸ்தானைப் பொருத்த வரை, வெற்றுக் காகிதமாகவே மாறிப்போனது.

அப்போதுதான் இந்தியக் குடிமகன் யார் என்பதை வரையறுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்காகவே இந்தச் சட்டம் 1955இல் உருவாக்கப்பட்டது.

அன்றைய சூழலில் பாகிஸ்தான் பகுதிகளில் மதவெறியர்களால் கொடுமைக்கு உள்ளான ஹிந்து, சீக்கிய அகதிகள் இந்தியா நோக்கி பெருமளவில் வந்து குவிந்தனர். அதேபோல, கிழக்கு வங்கத்திலிருந்து (அப்போதைய பாகிஸ்தானின் கிழக்கு மாகாணம்) லட்சக் கணக்கான சிறுபான்மை மத அகதிகள் 1950களில் வீடு வாசல் துறந்து, அகதிகளாக மேற்கு வங்கம் வந்தனர். 1947க்கு முன் தங்கள் தாயகமாக இருந்த பாரதம் நோக்கி அவர்கள் ஓடி வந்தது வியப்பல்ல. ஏனெனில் பிரிந்துசெல்லும் பாகிஸ்தானில் அவர்களுக்கு நாகரிகமான வாழ்க்கை உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அது நடைமுறையில் சாத்தியமாகாதபோது, அவர்களின் புகலிடம் இந்தியாவாகத்தான் இருக்க முடியும்.

கிழக்கு வங்கத்தில் உருது பேசும் பாகிஸ்தான் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வாழ வங்கமொழி பேசும் கிழக்கு பாகிஸ்தான் முஸ்லிம்களால் முடியவில்லை. இந்த மொழிபேதம் காரணமாக பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் தவித்த கிழக்கு பாகிஸ்தான் (முந்தைய கிழக்கு வங்கம்) மக்கள் அகதிகளாக வரத் துவங்கினர். இந்தக் குடியேற்றம் 1950களிலேயே துவங்கிவிட்டது. அப்போதுதான் நேரு- லியாகத் ஒப்பந்தம் (1951) கையெழுத்தானது.

அதையடுத்து, பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து பங்களாதேஷ் ஆக 1971இல் பிரிந்தபோதும், பெருமளவில் அகதிகள் வெளியேற்றம் கிழக்கு இந்தியா நோக்கி நிகழ்ந்தது. இந்த அகதிகளில் ஹிந்துக்களும் உண்டு; இஸ்லாமியர்களும் உண்டு.

இந்தியா- பாகிஸ்தான் நாடுகளிடையே போர்கள் நடைபெற்ற காலங்களில் (1965, 1971, 1999) எல்லாம், பாகிஸ்தான் பகுதியில் வாழும் சிறுபான்மை ஹிந்துக்களும் சீக்கியர்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகவே இருந்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டபோது (1992 டிச. 6) பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இஸ்லாமிய மதவெறியர்கள் நடத்திய கலவரங்களில் ஆயிரக் கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர். பங்களாதேஷில் இந்தியர்களுக்கு எதிரியாகக் கருதப்படும் காலிதா ஜியா பிரதமரானபோதும் (2001) அங்குள்ள ஹிந்துக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

மொழிரீதியாக வேறுபட்டாலும் மத அடிப்படையில் ஒன்றுசேர்ந்து அந்நாட்டில் இருந்த பெரும்பான்மை முஸ்லிம்கள் நடத்திய வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஹிந்துக்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வரத் துவங்கினர். அவர்கள் புகலிடம் தேடிய பகுதிகள் மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள்.

அதேபோல, முன்னொரு காலத்தில் காந்தாரமாக விளங்கிய பகுதியான ஆப்கானிஸ்தானில் போர்மேகம் சூழ்ந்தபோதும், தலிபான் போன்ற மதவெறியாளர்களின் பிடியில் அந்த நாடு சிக்கியபோதும் பல்லாயிரக் கணக்கான இந்திய வம்சாவளியினர் தப்பி இந்தியா வந்தனர்.

இந்த மூன்று நாடுகளில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு வாழ்வை இழந்தோருக்கானதுதான் குடியுரிமை சட்டத் திருத்தம்- 2019.

இதற்கு முந்தைய குடியுரிமைத் திருத்தச் சட்டங்கள் குடியுரிமையின் வேறு பல சிக்கலான பரிணாமங்களை அணுகின. ஆயினும், நாட்டில் இதுவரை முழுமையாக குடிமக்களாக அங்கீகரிக்கப்படாமல் இருக்கும் அகதிகளை என்ன செய்வது என்பதில் தெளிவான திசை காட்டப்படவில்லை. அந்தக் குறைபாட்டைப் போக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொண்ட முயற்சியால் உருவானதே குடியுரிமைத் திருத்தச் சட்டம்-2019.

ஆனால், தற்போது இந்தச் சட்டம் குறித்த தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால், நாட்டில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, டிச. 12 முதல் இரண்டு வாரங்கள் நாட்டின் சில பகுதிகளில் இஸ்லாமியர்களால் நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறைகளும், பல இடங்களில் எதிர்க்கட்சிகளால் நடத்தப்பட்ட போராட்டங்களும், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன.

குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டம் அகதிகளுக்கானது மட்டுமே. மூன்று இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக வரும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்திய குடியுரிமை பெறலாம் என்பதை, இந்தியாவில் குடிமக்களாக ஏற்கனவே வாழ்ந்துவரும் சுமார் 18 கோடி இஸ்லாமியர்களுக்கு இந்திய குடியுரிமையே மறுக்கப்பட்டதுபோல சிலர் துஷ்பிரசாரம் செய்திருக்கின்றனர். அதன் விளைவே தேவையற்ற போராட்டங்களும், கீழ்த்தரமான வன்முறைகளும்.

தவிர, தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் இத்துடன் குழப்பிக் கொண்டுள்ளனர். தூங்குபவனை எழுப்பலாம்; தூங்குபவன் போல நடிப்பவனை எழுப்ப முடியாது என்பார்கள். அதுபோல, அனைத்தையும் அறிந்திருக்கும் காங்கிரஸ் தலைவர்களே இத்தனை குழப்பங்களையும் பரப்பி வருகின்றனர் என்பது வேதனையான உண்மை.

இந்நிலையில், தேசநலன் விழைவோர், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தெளிவு பெறுவது அவசியம் ஆகியுள்ளது. அப்போதுதான் தவறான பிரசாரங்களை முறியடிக்கவும், தேசத்தில் அமைதியை நிலைநாட்டவும் முடியும்.

(தொடர்கிறது)…

$$$

3 thoughts on “குடியுரிமைத் திருத்த சட்டம்: தெளிவான கண்ணோட்டம் – 1

Leave a comment