-பி.ஆர்.மகாதேவன்
சென்னை புத்தகக் காட்சி நாளை (ஜன. 3) தொடங்கி, ஜனவரி 21 வரை நடைபெறுகிறது. தொடர்ந்து புத்தகக் காட்சிகளைப் பார்த்து வரும் இது குறித்த எழுத்தாளரின் தனிப்பட்ட பார்வை இது...

உடுத்தாத புடவைகளுக்குப் போட்டியாக
படிக்காத புத்தகங்களை
வாங்கி அடுக்கும் நல் வாசகன்…
பஜ்ஜி கடை, அப்பளக்கடை
ஜிகிர் தண்டா தூத் தேடித் திரியும்
அதி நல்ல வாசகன்…
பொது அறிவுப் புத்தகங்கள்,
புதிய வகை கணக்குப் புத்தகங்கள் வாங்கவென்றே
இளைய தலைமுறையை இழுத்துவரும்
பெற்றோர், ஆசிரியக் கண்மணிகள்…
வாரேல் என மறிக்கும் கொடிகள் போல்
போகேல் என வாசலிலேயே மேடை போட்டு மறிக்கும்
சொற்பொழிவு ஜோக்கர்கள்…
டாப் டென்னில் எகிறும்
சமையல், கோலம்,
இடதுசாரி, சுய முன்னேற்றப் புத்கங்கள்…
வாங்குவாரற்ற புனித நூல்களை
இலவசமாகத் திணிக்கும் மத மாற்றிகள்…
தன் புத்தகத்துக்கு தானே
பின் அட்டைப் புகழுரையும் எழுதிவிட்டு
(வெளியாகும் முன்னும் பின்னும் புத்தகத்தை
படித்துப் பார்க்கும் ஒரு நபர்தானே எழுதவும் முடியும்?)
வாங்க வரும் அசட்டு வாசகருக்கு
வம்படியாகக் கையெழுத்துப் போட்டு
செல்ஃபியும் எடுத்துக்கொண்டு
சிலிர்த்துக்கொள்ளும்
சில எழுத்தாளச் சிங்கங்கள்…
கட்சிக்காரனாகவோ வெளியில் இருந்து ஆதரவாகவோ
அத்தனை அராஜகத்தையும் நியாயப்படுத்திவிட்டு
கலை, இலக்கிய முகமூடி அணிந்து
மானுட அறத்தை மயிர் பிளக்கப் போதிக்கும் எழுத்தாளன்கள்…
“மாபெரும் கலைஞர்கள் பலர்
வாழும் காலத்தில் புறக்கணிக்கவே பட்டிருக்கிறார்கள்;
நான் புறக்கணிக்கப்படுகிறேன்;
அப்படியென்றால் நானும் மாபெரும் கலைஞன் தானே?” என்று
மனதுக்குள் மருகிக்கொள்ளும் பாணபத்ர ஓணாண்டிகள்…
கோடிகளை வெளுக்க சினிமா,
லட்சங்களை வெளுக்க பதிப்பகம்…
கூடவே இடது, சமூக நீதி, செக்குலரிச
முகமூடிகளில் ஏதாவது ஒன்று…
இருதய அறுவை சிகிச்சைக்குப் போவதற்கு முந்தைய
கடைசி அழைப்பாகவும்
ஆப்பரேஷன் முடிந்து உடல் தேறியதற்குப் பிந்தைய
முதல் அழைப்பாகவும்
ராயல்ட்டி கேட்கும் அப்பாவி எழுத்தாளர்கள்…
மழை வெள்ளத்திலும்
கரையான் அரிப்பிலும் தப்பித்து
விற்பனை பலி மேடைகளில்
விற்காமல் தேங்கப்போகும் புத்தகங்களை
கண்காட்சி முதல் நாள் பிரித்துப் பரத்தியும்,
இறுதி நாள், பரத்தியதை அட்டைப் பெட்டியில் அடுக்கியும்,
ஊர் ஊராகச் சுமந்து திரியும் பதிப்பகத்தார்கள்…
(திருவிழாக்கால பலூன் விற்பனையாளருக்கு
தரை வாடகைப் பணமாவது மிஞ்சும்).
ஆஸ்தான அறிவுஜீவி, இலக்கிய விதூஷகர்களுக்கு
பொன்னாடை போர்த்தி
பொற்கிழி வழங்கும் முடி சூடிய மன்னன்…
குனிந்து கூழைக் கும்பிடு போடும்
கரை வேட்டி கட்டாத/கட்டிய
எழுத்தை ஏய்த்தாளும் கண்மணிகள்…
தனக்கான பரிசு மோதிரத்தை தானே வாங்கித் தந்த
தானைத் தலைவன் காட்டிய வழியில்,
தனக்குத் தானே நம்பர் ஒன் பட்டம்
கொடுத்துக்கொள்ளும் தற்குறிக் கும்பல்கள்…
இவர்களில் யாரோ ஒருவர் தான்
நீங்களும் நானும்!
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில்
மேல் என்ன, கீழ் என்ன?
வாருங்கள், சேர்ந்து முழங்குவோம்:
“எழுத்தாளரே தேசத்தின் முதுகெலும்பு!
பதிப்பாளரே சமூகத்தின் கண்கள்!
வாசிப்பே வாழ்க்கையின் லட்சியம்!
இலக்கியமே ஆகச் சிறந்த கலை!
சமூக நீதி மாடலின்
சற்றும் மனம் தளராத மற்றுமொரு
சரித்திர சாதனை!”
அப்புறம் சொல்ல மறந்துவிட்டதே…
அவர் மட்டும் இல்லேன்னா…
$$$