-மகாகவி பாரதி
நமது வேதங்களிலும் புராணங்களிலும் கூறியிருப்பனவற்றை விட எல்லாம் அறிந்தவர்களாக, அதீத ஞானம் வாய்ந்தவர்களாக, இப்போது மட்டுமல்ல, எப்போதும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்காகவே மகாகவி பாரதி எழுதிய அற்புதமான கட்டுரை இது. “ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்!” என்று எச்சரிக்கிறார் மகாகவி...

வேதக் கொள்கைகளை எல்லா ஜனங்களுக்கும் தெளிவாக உணர்த்தும் பொருட்டு முன்னோர்களால் புராணங்கள் ஏற்படுத்தப்பட்டன. ‘நான்’, ‘எனது’ என்ற அகந்தையாலும் பிறருக்குப் பலவிதங்களிலே தீங்கிழைப்பதும், தமக்குத் தாமே பலவிதமான அச்சங்களும் தீங்குகளும் வருவித்துக் கொள்ளுதல் ஜீவர்களின் இயற்கை. இந்த இழிவு கொண்ட இயற்கையை ஞானத்தீயிலே போட்டுப் பொசுக்கி விடுதல் வேத ரிஷிகளால் ஏற்படுத்தப்பட்ட யக்ஞம் அல்லது வேள்வியின் கருத்து.
எல்லாம் ஈசன் செயல்; எல்லாம் அவனுடைய ரூபம். கம்ப ராமாயணத்தில் ஹிரண்யனுக்கு ப்ரஹ்லாதாழ்வான் உபதேசித்தருளியடி, அவன்
சாணிலு முளன்: மற்றாங்கோர்
அணுவினைச் சத கூறிட்ட
கோணிலும் உளன்; மாமேருக்
குன்றிலும் உளன்: இந்நின்ற
தூணிலும் உளன்: யான் சொன்ன
சொல்லிலும் உளன்.
அவனைத் தவிர வேறு பொருளே கிடையாது. ‘அவனன்றி ஓர் அணுவு மசையாது’ ஆதலால், இந்த உலக முழுவதும் பரிபூரண அழகுடையது; பரிபூரண மங்களத் தன்மை யுடையது. அந்தக் கடவுள் ஸர்வ சக்தியுடையவன். ஆதலால் கீதையிலே சொல்லியபடி, எல்லாப் பொறுப்புக்களையும் அவன் பாதங்களிலே சுமத்திவிட்டு, நாம் எப்போதும் கவலையின்றி ஆனந்தத்துடன் வாழும்படியாக நம் மனத்தைத் திருத்திக் கொள்ளக் கடவோம் என்ற துணிவே ஞானத் தீ என்று சொல்லப்படும். அது வேதாக்நி.
இங்ஙனம் நிச்சயிக்கப்பட்ட கடவுளிடத்தும், அவனுடைய கலைகளாகிய எல்லா ஜீவர்களிடத்தும், தீராத மாறாத அன்பு செலுத்துதலே பக்தி என்று சொல்லப்படும். இந்தப் பக்திதான் முடிவான ஸாதனம். இதனால் ஈசன் நம்மிடத்தேகருணை பூண்டு நமக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைக் கொடுப்பான். இது அமிர்த பானம். இதுதான் நான்கு வேதங்களின் தீர்ப்பு.
இந்தக் கடவுளை முழுமையாக நோக்குமிடத்தே,வேதம் அவனுக்கு ‘தத்’ (அஃது) அதாவது பரப்ரஹ்மம் என்றபெயரும், ‘ஸத்’ (உண்மைப் பொருள்) முதலிய பெயர்களும் கொடுக்கிறது.
படைத்தல், காத்தல், மாற்றுதல், அருள் செய்தல்,வலிமையுடைமை, தெளிவுடைமை, ஒளியுடைமை, எங்கும் பரந்திருக்குந் தன்மை, பலபடத் தோன்றுந் தன்மை, ஆனந்த இயல்பு முதலிய கடவுளின் எண்ணிறந்த குணங்களையும் இயல்புகளையும் பிரிவுபடுத்தி நோக்குமிடத்தே, வேதம் அந்தந்தக் குணங்களுக்கும் இயல்புகளுக்கும் தக்கபடி, அவன் ஒருவனுக்கே பிரமன், விஷ்ணு, சிவன், இந்திரன், வாயு, ஸோமன், ஸூர்யன், வருணன், அக்நி, பகவான் முதலிய பலவேறு நாமங்களை வழங்குகிறது.
இந்த விஷயத்தை ரிக் வேதம் ‘ஏகம் ஸத்’ என்ற தொடக்கமுடைய மந்திரத்தில் மிகவும் தெளிவாக விளக்கிக் காட்டுகிறது.
எனவே, வேதத்தின் வழி நூல்களாகிய புராணங்களில், இக் கடவுளை உணர்வதற்கு ஸாதனாங்களாகிய தவம், பக்தி, யோகம் முதலியனவற்றை அனுஷ்டிக்கும் நெறிகளும், இந்த வழியே செல்ல விரும்புவோனுக்கு இன்றியமையாதனவாகிய திடசித்தம், நேர்மை, ஜீவகாருண்யம் முதலிய குணங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் நெறிகளும் இந்தக் குணங்கள் ஏற்படாதபடி தடுக்கும் பயம், கர்வம், கோபம், நிஷ்டூரம் முதலிய அசுர குணங்களை அறுக்கும் நெறிகளும் பல திருஷ்டாந்தங்களாலும் சரித்திரங்களாலும் உவமைக் கதைகளாலும் உபதேசங்களாலும் விஸ்தாரமாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
உபாஸனை புரிவோரின் இயல்புகளுக்கும் வேண்டுதல்களுக்கும் தக்கபடி, அப் புராணங்கள் பரமாத்மாவின் முக்கியமான மூர்த்தி பேதங்கள் அதாவது குணபேதங்களைச் சிறப்பாகக் காட்ட வேண்டி, சில இடங்களில் அக்கினியையும், சில இடங்களில் இந்திரனையும், இங்ஙனமே மற்ற மூர்த்திகளையும் முதன்மையாகக் கூறும் வேத வழியை அனுசரித்து, புராணங்களும் சில அக்கினியை மேம்படுத்தியும் சில விஷ்ணுவை மேம்படுத்தியும் சில சிவனை மேம்படுத்தியும் காட்டுகின்றன.
ஆயினும், கால நடையிலே இப்புராணங்களை மாத்திரமே ஆதாரமாகக் கொண்ட மதபேதங்கள் நம்முடைய தேசத்தில் ஏற்பட்டுவிட்டன. வேதக் கல்வியும் வேத ஞானமும் குன்றிப்போயின. வேத ஆராய்ச்சி ஒரு வகுப்பினருக்கே விசேஷஉரிமையாகக் கொண்டாடப்பட்டது. இதனால் பொது ஜனங்களுக்குள்ளே வேத ஆராய்ச்சி சூன்யமாய் விட்டது.
புராணங்களில் வேறு வேறு மூர்த்திகளுக்கு ஆதிக்யம் சொல்லப்பட்டிருப்பதை யொட்டி, மத பேதங்கள் கட்சி பேதங்களாகி முடிந்தன. இதனால் வைதிக மதமாகிய ஹிந்துமதம் பல பிரிவுகளுடையதாய் விட்டது. ஜனத்தொகை, அவ்வக்காலத்து அரசர்களின் கொள்கை- இவற்றிற்குத் தக்கபடி ஹிந்து மத பேதங்களுக்கு மேன்மையும் தாழ்வும் ஏற்படலாயின.
பெயரளவில் எல்லா மதங்களும் வேதம் ஒன்றையே பிரமாணமாகப் பேசிய போதிலும், நடையிலே ஹிந்து மதஸ்தர்கள் தத்தம் புராணங்களையே தலைமையாகக் கொண்டு அவற்றின் கருத்துக்குத் தக்கபடி வேதத்தை மாற்றிப் பொருள் செய்யலாயினர். தம் தம் மூர்த்திகளை உயர்வாகக் கூறுவதன் உண்மைப் பொருளை மறந்து இந்த மதஸ்தர்கள் மிகப் பெரிய அஞ்ஞானத்தில் ஆழ்ந்து வேதத்திற் காட்டிய இந்த மூர்த்திகளை இழிவுபடுத்திப் பேசலாயினர். இந்திரன், அக்கினி, வாயு வருணன் என்ற மூர்த்திகளே வேதத்தில் முக்கியமானவை. பின்னிட்டு இந்த மூர்த்திகளை தாழ்ந்த தேவதைகளாக மதிக்கத் தொடங்கி விட்டார்கள்.
காலக் கிரமத்தில் வைஷ்ணவம், சைவம், சாக்தம் முதலிய சில மதங்களே நாட்டில் மிஞ்சி நின்றன. எனவே, வேதத்தில் முக்கிய மூர்த்திகளாகிய வாயு, வருணன், சூரியன்,இந்திரன் முதலியவர்களைப் பிற்காலத்துப் புராணங்கள் தூஷணை செய்யத் தொடங்கிவிட்டன. முற்பகல் செய்தது பிற்பகல் விளையும். பின்னிட்டுச் சைவ வைஷ்ணவ புராணங்களில் அவ்வக் காலத்து ராஜாக்கள் ஜனங்களின் கோட்பாடுகளை உயர்த்தும் பொருட்டாக மேற்படி கட்சி பேதங்கள் பஹிரங்க விரோதங்களாக முடிந்து, சைவ புராணங்களில் விஷ்ணு தூஷணைகளும், வைஷ்ணவ புராணங்களில் சிவ தூஷணைகளும் ஏராளமாகச் சேர்க்கப்பட்டன. அதற்கிசையவே புதிய கதைகளும் கற்பிக்கப்பட்டன.
எனவே, இந்நூல்கள் பெரும்பாலும் நம்முடைய தெய்வத் தன்மையையும் வைதிக மாண்பையும் இழந்து போய், வெட்கமற்ற அவைதிக தூஷணைகள் நிரம்பி கக்ஷிச் சண்டைகளை மிகுதியாகச் சேர்த்து ஜனங்களுக்குள்ளே பகைமைத் தீயை மூட்டிவிடலாயினர். இங்ஙனம் பரம சத்தியமாகிய ஹிந்து மதம் சிதைவு பெற்றுப் போயிற்று. ஹிந்து ஜாதியார் வீழ்ச்சியடைந்தனர். வேதம் ஒளி மறைந்து, பிற்காலத்தில் வேதத்துக்கு நாம மாத்திரையாக கொடுக்கப்பட்ட உயர்வைக்கூட இந்தக் கக்ஷிக்காரர் சிலர் மறுக்கலாயினர். திருஷ்டாந்தமாகப் பிற்காலத்துச் சைவர்களிலே சிலர் வேதங்களைக் காட்டிலும் சிவாகமங்களே மேலென்று சொல்லத் தலைப்பட்டார்கள். இங்ஙனம் ஏற்பட்ட புராணச் சண்டைகளுக்கு வேதமே காரணமாக இருந்ததென்று தவறாகக் கருதி வைதிக ஞானிகளே சிலர் வேதத்தைக் கர்ம காண்டமென்றும் உபநிஷத்தை ஞானகாண்டமென்றும் சொல்லலாயினர்.
வஸிஷ்டர் முதலியவர்களைக் ‘கர்மி’களென்றும் பிற்காலத்துப் பண்டாரங்களை ‘ஞானி’களென்றும் ஜனங்கள் மதிக்கலாயினர். இந்த அலங்கோலங்களெல்லாம் தீர்ந்து, ஹிந்துமதம் ஒருமை நிலையெய்தி, ஹிந்துக்கள் ஒற்றுமையும் வைதிக ஞானமும் எய்தி, மேம்பாடு பெற்று, பூமண்டலத்தின் ஆசார்ய பதவிகொண்டு வாழ வேண்டுமாயின், அதற்கு நாம் கையாள வேண்டிய உபாயங்கள் பின்வருவன:-
(1) வேதம், உபநிஷத்துக்கள், புராணங்கள்- இவற்றை இக்காலத்தில் வழங்கும் தேச பாஷைகளில் தெளிவாக மொழி பெயர்க்க வேண்டும்.
(2) புராணங்களில் தத்தம் தேவர்களை மேன்மைப்படுத்தும் அம்சங்களையும், மேற்படி பொது வேதக் கொள்கைகளாகிய தவம், உபாஸனை, யோகம் முதலியவற்றைவிளக்கும் அம்சங்களையும், உலகநீதி, பூர்வசரித்திரம் இவற்றை விளக்கும் அம்சங்களையும் மாத்திரமே ப்ரமாணமாகக் கொண்டு, இதர தேவதூஷணை செய்யும் அம்சங்களை ப்ரமாணமில்லாதனவென்று கழித்துவிட வேண்டும்.
(3) வேதத்தின் உண்மைக் கருத்தை உணர்ந்தோரும் ஸமரஸ ஞானிகளுமான பண்டிதர் மூலமாக நாடு முழுவதும் புஸ்தகம், பத்திரிகை, உபந்யாஸங்கள் முதலியவற்றால் பிரமாண்டமான ப்ரசாரத் தொழில் நடத்த வேண்டும். ஹிந்துக்களே, பிளவுண்டு மடியாதீர்கள்! வேதத்தின் பொருளை உணர்ந்து மேம்பட்டு வாழ வழி தேடுங்கள்!
ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள் (பகுதி 19) பாரதி பிரசுராலாயம் வெளியீடு-1949
$$$