-மகாகவி பாரதி
ரவீந்திர கவியின் உபந்யாஸத்தை ஜப்பான் தேசத்தார் மிகவும் பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகள் உயர்ந்த புகழ்ச்சி பேசுகின்றன. நல்ல காரியம் செய்தார். இப்படியே இங்கிலாந்து முதலிய எல்லாத் தேசங்களிலும் போய், பாரத தேசத்தின் அறிவு மஹிமையை மற்றொரு முறை விளக்கி வரும்படி புறப்பட்டிருக்கிறார் போலும்.

சென்ற (1921ஆம் ஆண்டு*) ஜூன் மாதம் பன்னிரண்டாம் தேதி ஜப்பான் ராஜதானியாகிய டோக்கியோ நகரத்தில் ஸாம்ராஜ்ய ஸர்வ கலா சங்கத்தாரின் முன்பு ரவீந்திர நாதர் செய்த பிரசங்கம் பூமண்டலத்தின் சரித்திரத்திலே ஒரு புதிய நெறியைக் காட்டுவது. விவேகாநந்தர் செய்துவிட்டுப் போன தொழிலை வளர்ப்போரில் ரவீந்திரர் ஒருவர்.
விவேகாநந்தர் ஆத்மாவின் பயிற்சியை மாத்திரம் காட்டினார். ரவீந்திரர், ‘உலக வாழ்க்கையும், உண்மையான கவிதையும், ஆத்ம ஞானமும் ஒரே தர்மத்தில் நிற்பன’ என்பதை வெளிநாடுகளுக்குச் சொல்லும் பொருட்டாக பாரத மாதாவினால் அனுப்பப்பட்டிருக்கிறார்.
‘பாரத தேசமே லோக குரு’ என்ற செய்தி ஏற்கெனவே பல ஜப்பானியப் பண்டிதருக்குத் தெரியும். எனினும், நம்மவர் ஒருவர் நேரே போய் அந்த ஸ்தானத்தை நிலை நிறுத்துவதற்கு இதுவரை அவகாசப்படாமலிருந்தது. வங்காளத்து மஹா கவியாகிய ரவீந்திரநாத் தாகூர் போய் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தார். இந்தத் தொழிலுக்கு அவர் மிகவும் தகுதியுடையவர் அவருடைய கவிதையின் கீர்த்தி பூமண்டல முழுதும் ஏற்கெனவே பரவி யிருக்கிறது. உலகத்து மஹா கவிகளின் தொகையில் அவரைச் சேர்த்தாய்விட்டது
‘கீதாஞ்சலி’ முதலாவதாக, அவர் இங்கிலீஷ் பாஷையில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் நூல்கள் மிகவும் சிறியன; பார காவியங்களல்ல, பெரிய நாடகங்களல்ல; தனிப் பாடல்கள் சில காண்பித்தார். உலகம் வியப்படைந்தது. நல்வயிர மணிகள் பத்துப் பன்னிரண்டு விற்றால், லக்ஷக்கணக்கான பணம் சேர்ந்து விடாதோ? தெய்வீகக் கதையிலே பத்துப் பக்கம் காட்டினால் உலகத்துப் புலவரெல்லாம் வசப்பட மாட்டாரோ?
கோபோ நகரத்தில் உயேனோ என்றதோர் பூஞ்சோலையிருக்கிறது. அதனிடையே அழகான பௌத்தக் கோயில் ஒன்று இருக்கிறது. அந்தச் சோலையிலே குளிர்ந்த மரங்களின் நிழலில் பல ஜப்பானிய வித்வான்கள் கூடி அவருக்கு நல்வரவுப் பத்திரிகை படித்தார்கள். ஜப்பானிய ஸாம்ராஜ்யத்தில் முதல் மந்திரியாகிய ஒகூமாப் பிரபு என்பவரும், வியாபார மந்திரியாகிய ஸ்ரீமான் கோனோவும், கல்வி மந்திரியாகிய பண்டித தகாத்தாவும் வேறு பல பெரிய கார்யஸ்தர்களும் அந்தச் சபைக்கு வந்திருந்தார்கள். நல்வரவுப் பத்திரிகை வாசித்து முடிந்தவுடனே, ரவீந்திரநாதர் பின்வருமாறு வங்காளி பாஷையில் பேசலானார்:-
“எனக்கு ஜப்பானிய பாஷை தெரியாது. இங்கலீஷ் தெரியும்; ஆனால் அது உங்களுடைய பாஷையன்று. உங்களிடம் அந்தப் பாஷை பேச எனக்கு ஸம்மதமில்லை. மேலும், எனக்கே அது இரவல் பாஷை; ஆனபடியால் ஸரளமாக வராது. ஆதலால், வங்காளியிலே உங்களிடம் பேசுகிறேன்” என்றார். பண்டித கிமுரா என்ற ஜப்பானிய வித்வானொருவர் வங்கத்து மொழி தெரிந்தவராதலால் ரவீந்திர நதரின் வார்த்தைகளைச் சபையாருக்கு ஜப்பானிய பாஷையில் மொழிபெயர்த்துச் சொன்னார்.
பின்பு, ரவீந்திர நாதர் பேசுகிறார்:- “கோபோ நகரத்தில் வந்து இறங்கியவுடனே எனக்கு ஜப்பான் விஷயத்தில் அதிருப்தியுண்டாகி விட்டது. எதைப் பார்த்தாலும் மேற்குத் தேசங்களின் மாதிரியாகவேயிருக்கிறது. ஜப்பானியர் தமது ஸ்வயமான தர்ம ஸம்பத்தை இழந்துவிடலாகாது” என்றார். இந்தக் கருத்தின் விவரத்தைப் பின்னே நாம் படிக்கப் போகிற டோக்கியோ ஸர்வ கலா ஸங்க உபந்யாஸத்திலே விஸ்தாரமாகக் காணலாம். அப்போது மஹா மேதாவியாகிய முதல் மந்திரி ஒகூமா எழுந்திருந்து ரவீந்திரருக்கு நன்றி கூறினார்.
ஸ்ரீமான் ஒகூமா கூறியது:- “எனக்கு இங்கிலீஷ் நேரே தெரியாது. இவர் வங்காளி பாஷை பேசியதை நான் இங்கிலீஷ் என்று நினைத்தேன். நல்ல தருணத்திலே இவர் நமது தேசத்துக்கு வந்தார். நியாயமான எச்சரிக்கை கொடுத்தார். நமது தேசத்தின் சித்த நிலை இப்போது இரண்டுபட்ட பாதைகளின் முன்பு வந்திருக்கிறது. நமதறிவு எந்த வழியிலே திரும்புதல் தகும் என்பதை இப்போது நிச்சயிக்க வேண்டும். இத் தருணத்தில் நமக்கு நல்வழி காட்டும் பொருட்டாக இந்த மஹான் தோன்றினார்.”
டோக்கியோ உபந்யாஸத்தைப் பற்றி ஒரு தனிப்பகுதி எழுத வேண்டும். அதன் ஸாராம்சம்:- “உறங்கின ஆசியாவை ஜப்பான் எழுப்பிவிட்டது. அதன் பொருட்டு நாமெல்லோரும் ஜப்பானுக்கு நன்றி செலுத்த வேண்டும். உறங்கும் பூமண்டலத்தை, பாரத நாடு தலைமையாக ஆசியா எழுப்பிவிடப் போகிறது.” இந்தக் கருத்தை ஜப்பானிய பண்டிதர் அந்நாட்டுப் பத்திரிகைகளில் அங்கீகாரம் செய்துகொண்டு மிகவும் அழகாக நன்றி வார்த்தைகள் சொல்லியிருக்கிறார்கள்.
டோக்கியோ ஸாம்ராஜ்ய கலாசங்கத்தில் பாரத கவி ரவீந்திரர் செய்த ஆச்சரியமான பிரசங்கத்திலே அவர் சொன்னதாவது:- “முதலாவது, உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். ஆசியா கண்டத்தில் பிறந்த எல்லா ஜனங்களும் உங்களுக்கு நன்றி செலுத்தக் கடன் பட்டிருக்கிறோம். எல்லாப் பந்தங்களைக் காட்டிலும் இழிவான பந்தம் உள்ளச் சோர்வு. இதனால் கட்டுண்டவர் தம் நம்பிக்கையில்லாதவர். கேட்டீர்களா, சிலர் சொல்லுவதை:- “ஆசியாக் கண்டம் பழமையிருளில் மூழ்கிக் கிடக்கிறது; அதன் முகம் பின்னே முதுகுப் புறமாகத் திருப்பி வைக்கப்பட்டிருக்கிறது” என்று. இப்படி வார்த்தை சொல்வோரின் பேச்சை நாமும் நம்பினோம். சிலர் இதையே ஒரு தற்புகழ்ச்சியாக்கி “அப்படித்தான்; நாங்கள் பழமையிலே தானிருப்போம். அதுதான் எங்களுக்குப் பெருமை” என்றார்கள்.
“விஷயங்கள் இந்த ஸ்திதியில் இருக்கும்பொழுது நாமெல்லாம் ஒரு மோஹ நித்திரையில் வீழ்ந்திருந்த காலத்திலே, ஜப்பான் தனது கனவு நிலைமை நீங்கி எழுந்தது; நடக்கத் தொடங்கிற்று; பூதாகாரமான அடியெடுத்து வைத்தது; நிகழ் காலத்தை அதன் முடிவிலே போய்ப் பற்றிக் கொண்டது. எல்லோரும் தட்டி யெழுப்புண்டோம். ‘பூமியின் மேலே, சில எல்லைக்குள்ளிருக்கும் சில தேசத்தாருக்கு மாத்திரம் முன்னேற்றம் வசப்படாது’ என்ற மாயை போய்விட்டது. ஆசியா கண்டத்தில் பெரிய ராஜ்யங்கள் ஸ்தாபனம் செய்திருக்கிறோம். பெரிய சாஸ்திரம், கலை,காரியம் – எல்லாம் இங்கே தழைத்தன. உலகத்திலுள்ள பெரிய மதங்களெல்லாம் இங்கே பிறந்தன. ‘இந்த மனிதனுடைய சுபாவமே மதிச் சோர்வும் வளர்ச்சிக் குறையும் உண்டாகும்’ என்று சந்தேகப்பட வேண்டாம். பல நூற்றாண்டு நாம் நாகரிக விளக்கைத் தூக்கி நிறுத்தினோம். அப்போது மேற்குலகம் இருளில் தூங்கிக் கொண்டிருந்தது. நமக்குப் புத்தியுண்டு. நம்முடைய புத்தி ஒரு நத்தைப் பூச்சியில்லை. நம்முடைய கண் மாலைக் கண்ணில்லை.
“ஆசியா, ஜப்பானுக்குக் கொடுத்தது அந்தப் பயிற்சி, ஜப்பான் இக்காலத்திலே புதியவளும் பழையவளுமாக விளங்குகிறாள். குல உரிமையால் கீழ்த்திசையில் நமது பழைய பயிற்சி அவளுக்குக் கிடைத்திருக்கிறது. ‘மெய்யான செல்வமும் மெய்யான வலிமையும் வேண்டுமானால், ஆத்மாவுக்குள்ளே நோக்கத்தைச் செலுத்த வேண்டும், என்று கற்பித்த பயிற்சி, ஆபத்து வரும்போது பிரார்த்தனை தவறாதபடி காப்பாற்றும் பயிற்சி, மரணத்தை இகழச் சொல்லிய பயிற்சி, உடன் வாழும் மனிதனுக்கு நாம் எண்ணற்ற கடமைகள் செலுத்த வேண்டும் என்று தெளிவித்த பயிற்சி, ‘கண்ட வஸ்துக்களிலே, அகண்ட வஸ்துவைப் பார்’ என்று காட்டிய பயிற்சி. ‘இவ்வுலகம் ஒரு மூடயந்திரமன்று. இதற்குள்ளேயே தெய்வ மிருக்கிறது; இது யதேச்சையாக நிற்பதன்று; கண்ணுக்கெட்டாத தொலையில் வானத்திலிருக்கவில்லை; இங்கே இருக்கிறது அந்தத் தெய்வம்’ -இந்த ஞானத்தை உயர்த்திய பயிற்சி: அநாதியாகிய கிழக்குத் திசையில் புதிய ஜப்பான் தாமரைப் பூவைப் போல் எளிது தோன்றி விட்டாள். பழைய மூடாசாரங்களை ஜப்பான் உதறித் தள்ளி விட்டாள்; சோம்பர் மனதிலே தோன்றிய வீண் பொய்களை மறந்து விட்டாள். நவீன நாகரிகப் பொறுப்புக்களைத் தீவிரமாகவும் தகுதியாகவும் தரித்து வருகிறாள்.
“ஜப்பான், ஆசியாவுக்குத் தைரியம் கொடுத்தது. உள்ளே உயிர் இருக்கிறது. நமக்குள் வலிமை யிருக்கிறது. மேல் தோல்தான் காய்ந்து போயிருக்கிறது. அதைக் கழற்றியெறிந்து விட்டு அதற்கு அப்பால் ஓடுகிற கால நதியிலே முழுகி ஸ்நானத்தைப் பண்ணியெழ வேண்டும். தற்காலத்துக்குப் பயந்து, முற்காலத்திலே போய்த் தலையை நுழைத்துக் கொள்ளுவோன் உயிருந்த போதிலும் செத்தவனுக்கு ஸமானமே. இது ஜப்பான் சொல்லிக் கொடுத்த விஷயம். பழைய விதையிலே உயிர் ஸத்து நீங்கவில்லை. புதிய காலமாகிய வயலிலேயே நடவேண்டும். இது ஜப்பான் சொல்லிக் கொடுத்த விஷயம். ஜப்பான் பிறரைப் போல் வெளியபிநயம் காட்டி இந்தப் பெரிய ஸ்தானத்தை அடையவில்லை. பிறரைப் பார்த்து நாமும் அவர்களைப்போல் ஆக வேண்டுமென்று பாவனைகள் காட்டினால், வலிமையுண்டாகாது. பிறரிடம் சாஸ்திர ஞானம் வாங்கிக் கொள்ளுதல் வெளியபிநயம் அன்று. பிறர் கல்வியை நாம் வாங்கலாம்; கோணல்களை வாங்கக் கூடாது. தேசத்தாருக்கென்று பிரிவுபட்டதனித்தனிக் குணங்கள் பலவுண்டு. எல்லாத் தேசத்தாருக்கும் பொதுவான மானுஷீக குணங்கள் பலவுண்டு. பிறரிடம் ஒன்றைவாங்கிக்கொள்ளும் போது, ஸாவதானமாக வாங்கிக்கொள்ள வேண்டும்.”
ரவீந்திர கவியின் உபந்யாஸத்தை ஜப்பான் தேசத்தார் மிகவும் பக்தியுடன் கொண்டாடுகிறார்கள். பத்திரிகைகள் உயர்ந்த புகழ்ச்சி பேசுகின்றன. நல்ல காரியம் செய்தார். இப்படியே இங்கிலாந்து முதலிய எல்லாத் தேசங்களிலும் போய், பாரத தேசத்தின் அறிவு மஹிமையை மற்றொரு முறை விளக்கி வரும்படி புறப்பட்டிருக்கிறார் போலும்.
‘டோக்கியோ மானிச்சி’ என்ற ஜப்பானியப் பத்திரிகைசொல்லுகிறது:- “அறிவில் ஜப்பான் பாரத தேசத்திற்குக் கடன்பட்டிருக்கிறது. ஜப்பான் நாகரீகம் பெறாதிருந்த காலத்தில், பாரததேசம் அதில் உயர்ந்திருந்தது. பாரத ஞானம் பூ மண்டலம் முழுவதையும் தீண்டியிருக்கின்றது. ‘ப்லாத்தோ’வுக்கு உபதேசம் பாரததேசத்திலிருந்து கிடைத்தது. ஸ்வேதன் போர்க், ஸாபன் ஹோவர் என்ற பிற்காலத்து ஞானிகளும் பாரத தேசத்தின் அறிவுக்கு வசப்பட்டார். பாரத நாகரீகம் நமக்குச் சீனா, கொரியா வழியாக வந்தது. நாம் இந்தியாவின் கடனைத் திரும்பக் கொடுக்க வேண்டும். ரவீந்திர நாதரை நாம் மிகவும் கௌரவப் படுத்த வேண்டும்.”
“யோர்த்ரை” என்ற ஜப்பானியப் பத்திரிகை சொல்லுகிறது:- “உலக வாழ்க்கையும் கவிதையும் சுதி சேர்ந்து நிற்க வேண்டும் என்பது ரவீந்திரர் கொள்கை. ஜப்பான் பாரத நாட்டுக்கு மிகவும் அறிவுக் கடன் பட்டிருக்கிறது”.
இவ்வாறு ரவீந்திரருடைய பேச்சு வரும்போது, ஜப்பானியப் பத்திரிகைகள் தமது நாடு பாரத பூமிக்கு அறிவுக்கடன் பட்டிருப்பதை நினைத்துக் கொள்ளுகின்றன. ரவீந்திரருடைய கீர்த்தி உலகத்தில் அதிகமாகப் பரவி ஏறக்குறைய நான்கு வருஷங்களாகவில்லை. இந் நான்கு வருஷங்களுக்குள், ஜப்பான் தேசத்தில் ஸம்ஸ்கிருத இலக்கண புஸ்தகங்கள் எப்போதைக் காட்டிலும் அதிகமாக விலையாகின்றனவாம். ‘பாரத தேசமே லோக குரு’ என்பதை உலகத்தார் அங்கீகாரம் செய்வார்கள். நாம் போய் நினைப்பூட்ட வேண்டும்.
பாரத பூமி உலகத்தாருக்கு எந்த விதமான ஞானத்தைக் கொடுத்துப் புகழைக் கொள்ளுமென்பதை விளக்குவதற்கு முன்பாக, சாஸ்திர (ஸயின்ஸ்) வார்த்தை ஓரிரண்டு சொல்லி முடித்து விடுகிறேன் ‘செடியின் நாடி மண்டலம் மனிதனுடைய நாடி மண்டலத்தைப் போலவே உணர்ச்சித் தொழில் செய்கிறது’ என்பதை உலகத்தில் சாஸ்திர நிரூபணத்தால் ஸ்தாபனம் செய்தவர் நமது ஜகதீச சந்திர வஸூ. உலோகங்களிலும், இவர் பல புதிய சோதனைகள் செய்திருக்கிறார். ஒளி நூலில் மஹாவித்வான். தந்தியில்லாத தூரபாஷைக் கருவியை ‘மார்க்கோனி’ பண்டிதர் உலகத்துக்கு வழக்கப்படுத்து முன்பே, ஜகதீச சந்திரர் அந்த விஷயத்தைப் பற்றித் துல்ய ஆராய்ச்சிகள் செய்து முடித்திருந்தார். செடிகளுடைய ப்ராணனில் நாடியுணர்ச்சி யெங்ஙனமெல்லாம் தொழில் செய்கிறது என்பதைக் கண்டுபிடித்ததே, இவர் மனித சாஸ்திரத்துக்கு இதுவரை செய்திருக்கும் உபகாரங்களில் பெரிது. இப்போது சில வருஷங்களாக ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பண்டிதக் கூட்டத்தார் ஜகதீச வஸுவினிடம் மிகுந்த மதிப்புப் பாராட்டி வருகின்றனர்; நல்ல புகழ்ச்சி கூறுகின்றனர். நவீன சாஸ்திர ஆராய்ச்சிக்கு மிகவும் நுட்பமான கருவிகள் வேண்டும். ஜகதீச வஸூவின் ஆராய்ச்சிக் கருவிகள் கல்கத்தாவில் நமது தேசத் தொழிலாளிகளாலே செய்யப்படுவன. ஐரோப்பிய ராஜதானிகளிலே இத்தனை நேர்த்தியாக அந்தக் கருவிகளைச் செய்யத்தக்க தொழிலாளிகள் இல்லை. ஆகையால் அங்குள்ள பண்டிதர்கள் புதிய வழியில் செடியாராச்சிக்கு வேண்டிய கருவிகளையெல்லாம் கல்கத்தாவிலிருந்து வரவழைத்துக் கொள்கிறார்கள்.
சாஸ்திரம் பெரிது, சாஸ்திரம் வலியது. அஷ்ட மஹாசித்திகளும் சாஸ்திரத்தினால் ஒருவேளை மனிதனுக்கு வசப்படலாம். பூர்வ காலத்தில் பலவகைக் கணித சாஸ்திரங்களும் இயற்கை நூலகளும் பாரத நாட்டிலேதான் பிறந்த பின்பு உலகத்தில் பரவியிருப்பதாக சரித்திர ஆராய்ச்சியிலே தெரிகிறது. இப்போது ‘ஸயின்ஸ்’ பயிற்சியில் இவ்வளவு தீவிரமாக மேன்மை பெற்று வருகிறோம்; காலக் கிரமத்தில் தலைமை பெறுவோம்.
இனிமேல், கதையைச் சுருக்கிவிடவேண்டும்; வருங்காலத்தில் உலகத்துக்குப் பாரத தேசம் என்ன பாடம் கற்பிக்கும்? எதனால் இந்நாடு ‘லோக குரு’ ஆகும்? உலகத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கப் போவது கர்மயோகம்.கடமையைச் செய்து, தவறாதபடி செய்து, இன்பத்தோடிருக்கவழி எப்படி? யோகமே வழி. “யோகமாவது செய்கைத் திறமை” என்று பகவான் கீதையிலே சொல்கிறார். பூமண்டலத்திற்கு யோகம் நாட்டுவோம்.
***
சென்னை கிருஸ்துவ கலாசாலையில் டாக்டர் மில்லர் என்றொரு பாதிரி யிருந்தார். அவர் நல்ல புத்திசாலி என்று பெயரெடுத்தவர். அவர் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசும்போது, கடவுளின் அந்தர்யாமித் தன்மையை மற்றெல்லா மதங்களைக் காட்டிலும் ஹிந்து மதத்திலேதான் தெளிவாகக் காட்டி யிருக்கிறார்களென்று சொல்லியிருக்கிறார். சாதாரணப் பாதிரி. கொஞ்சம் புத்திசாலியாகையால் இதைத் தெரிந்துகொண்டார். கடவுள் சர்வாந்தர்யாமி என்பது எல்லா மதங்களிலுமுண்டு. ஆனால் இங்கேதான் அதைத் தெளிவாகச் சொல்லுகிறோம். பிற மதங்களில் தெளிவில்லை.
‘அந்தர்யாமி ‘, ‘உள்ளே செல்வோன்’, ‘உள்ளே நிற்போன்’, ‘உள்ளே செல்வோன்’ என்பது தாதுப் பொருள். ‘உள்ளே நிற்போன்’ என்பது வழக்கப் பொருள். “தெய்வம் எதற்குள்ளேயும் நிற்கிறது” என்று சாதாரணமாக எல்லோரும் சொல்லுகிறார்கள். இதன் அர்த்தத்தை அவர்கள் நன்றாக மதியினாலே பற்றிக் கொள்ளவில்லை. “தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்.” ஆம், அதன் பொருள் முழுதையுங் கண்டாயா?சாத்தன் எழுதுகிறான், கொற்றன் எழுதச் சொல்லுகிறான். “எழுதுவோன், எழுதுவிப்போன் – இரண்டும் தெய்வம். பன்றி சாகிறது; பன்றியாக இருந்து சாவது தெய்வம். எதனிலும் உள்ளே நிரம்பிக் கிடக்கிறது’ என்றால், செய்கையெல்லாம் அதனுடையது என்று அர்த்தம்.
“இயற்கையின் குணங்களால் செய்கையெல்லாம் நடப்பன. அகங்காரம் கொண்ட மூடன் ‘நான் செய்கிறேன்’ என்று நினைத்துக் கொள்ளுகிறான்” என்று பகவத் கீதையிலே பகவான் சொல்லுகிறான். செய்கைகள் எல்லாம் பரமாத்மாவின் செய்கைகள். ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது.’ ‘என் செயலாவது யாதொன்றுமில்லை.’
நமக்குப் பொறுப்பில்லை, தொல்லையில்லை, செய்கையில்லை; கடமை மாத்திரம் உண்டு.
‘கடமையில் உனக்கு அதிகாரம், பயனிலே இல்லை’ என்பது கீதை. ‘செய்கையில்லாது நீங்கிவிடுவது’ என்றால் சோம்பேறியாய் விடுதல் என்று அர்த்தமில்லை. பகவத் கீதை மூன்றாம் அத்தியாயத்தை ஒவ்வொரு ஆர்யனும் தினம் மூன்று வேளை வாசிக்க வேண்டும்.
முதலாவது விஷயம்:- ஒருவிதமான செய்கையுமில்லாமல் சும்மாயிருப்பது இவ்வுலகத்தில் எப்பொழுதும் சாத்தியப்படாது. நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உன்னை எப்போதும் பிரகிருதி செய்கையிலே புகுத்தி ஆட்டிக் கொண்டிருக்கிறாள். உன்னிஷ்டப்படி யெல்லாம் நடக்கவில்லை, நீ இஷ்டப்படுவதே மழை பெய்வதைப்போல் இயற்கையிலேயே விளையும் செய்கை. சித்தமே ஜடம்.
இரண்டாவது விஷயம்:- “நான் பிரிவில்லை என்று கண்டு, தெய்வமே உள்ளதாகையால் அதற்குச் சேவகமாக உலகத் தொழில்களைப் பிழையில்லாமல் செய்து கொண்டு வர வேண்டும். கடமையைத் தவிருவோன் விடுதலை பெற்றவன் அன்று. விடுதலையின் தலைமேலே ஒரு கடமை நிற்கிறது. தெய்வத்துக்கே கடமையுண்டு. பகவான் கர்மயோகி. ஸந்யாஸம் அவசியமில்லை. பெண்டு பிள்ளைகள் பொய்யில்லை. மற்ற மனிதர்கள் மண் கட்டிகள் அல்லர். அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய கடமைகள் உண்டு.”
‘கடமை செய்யாதவன் வயிறு பிழைப்பதே நடக்காது’ என்று கிருஷ்ணன் அழுத்திச் சொல்கிறார்.
‘இவ்வுலகத்துச் செய்கைகளுக்கு நாம் பொறுப்பில்லை’என்று எல்லாச் செயல்களையும் ஈசனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டோர். சோம்பேறிகளாய்ப் பிறருக்கு எவ்விதப் பயனும் இல்லாமல் வெறுமே பிறர் போடும் தண்டச் சோறு தின்று கொண்டிருக்கும் துறவு நிலையிலே போய்ச்சேரும்படி நேரிடும்’ என்று சில புத்திமான்கள் பயப்படுகிறார்கள். ‘அப்படிப் பயப்பட இடம் இல்லை’ என்பதை வற்புறுத்திக் காட்டும் பொருட்டாகவே, நான் இந்த வார்த்தையை இத்தனை விஸ்தாரப் படுத்துகிறேன்.
‘தெய்வமே துணை’ என்று இருப்போர் ஓயாமல் தொழில் செய்து கொண்டிருப்பார்கள். தெய்வ பக்தி உண்மையானால் பரோபகாரம் அங்கே யிருக்கும். பரோபகாரம் இல்லாத இடத்தில், தெய்வபக்தி வேஷத்தைத் தவிர வேறொன்றுமில்லை. ஆங்கிலேயர், பிரெஞ்சியர், ருஷியர், பெல்ஜியர், செர்வியர், யுனைடெட் ஸ்டேட்ஸ்காரர், இத்தாலியர்,ஜப்பானியர், மாண்டிநீக்ரோவர், அல்பானியர், போர்ச்சுகேசியர், ருமானியர், க்யூபா நாட்டார், பனாமர், கிரேக்கர், சீய நாட்டார்ஆகிய பதினாறு தேசத்தாரும் ஜர்மனிக்கும் அதனுடன் சேர்ந்த ஆஸ்திரியா, துருக்கி, பல்கேரியா தேசத்தாருக்கும் விரோதமாகப் போர்புரிந்து வருகிறார்கள். மேன்மேலும் நம்முடைய நேசக் கட்சியாருக்குத்தான் துணை சேருகிறதே ஒழிய, ஜெர்மனிக்குப் புதிய துணை கிடையாது. மேற்கூறிய பதினாறு தேசங்களைத் தவிர, சீனா, ப்ரஜீல், பொலிவியா, க்வாடிமாலா, ஹொண்டூராஸ், நிகராகுவா, லிப்ரியா, ஹெய்தி, ஸாண்டோமிங்கோ முதலிய நாட்டார் மேற்படி ஜர்மானியருடன் தூது சம்பந்தங்களை நீக்கித் தமது விரோதத்தை உணர்த்தியிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் பயப்படாமல் அந்த மானங்கெட்ட ஜர்மனிக்காரப் பயல்கள், நேசக்கட்சியாருடைய நியாயங்களைக் காட்டிலும் தங்களுடைய இரும்பு வலிமையே பெரிய வலிமை என்று எண்ணி, வீண் இறுமாப்புக்கொண்டு சண்டை நடத்திக்கொண்டு வருகிறார்கள்.
‘இன்றைக்கானாலும், நாளைக்கானாலும், நாளையன்றைக்கானாலும், ஒரு மாசம் சென்றாலும், ஒரு வருஷம் சென்றாலும், என்றைக்கானாலும், ஜர்மனியை நம்மால் தோற்கடிக்க முடியுமாதலால், ருஷ்யாவில் கோன்ஸ்கியை நீக்கி அதிகாரம் பெற்றிருக்கும் மாக்ஸிமிஸ்த் கட்சியார் ஜர்மனியுடன் தனி சமாதானமும் பேசத் தொடங்கியிருப்பது பெரிய காரியமில்லை. நாம், கடைசி ஆள், கடைசி ரூபாய் மிஞ்சும்வரை போரை நிறுத்த மாட்டோம்’ என்ற ஒரே உறுதியுடன் மிஸ்டர் லாயிட் ஜார்ஜ் முதலிய நேசக் கட்சி மந்திரிகள் பேசுகிறார்கள்.
இதனிடையே, ‘நேசக் கட்சியார் இந்தப் போரை நடத்திவரும் நோக்கந்தான் யாதோ?’ என்று கேட்டால், ‘ஒரு ஜாதியாரை மற்றொரு ஜாதியார் தம் இஷ்டப்படி அந்தந்தத் தேசத்தாரால் ஆளப்பட வேண்டுமென்ற கொள்கையை நிலை நிறுத்தும் பொருட்டாகவும் சண்டை போடுகிறோம்’ என்று நேசக்கட்சி மந்திரிகளும் ப்ரசிடென்ட்மார்களும், பத்திராதிபர்களும், சென்ற மூன்று வருஷங்களாகத் தினம் மூன்றுமுறை ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வார்த்தையைக் கேட்டவுடன் பாரத புத்திரராகிய ஹிந்து முஹமதியர்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, “சபாஷ்! நேசக் கட்சியாருக்கும் நமக்கும் ஒரே நோக்கம். நம்முடைய தேசத்தில் ஆங்கிலேயர் தம் இஷ்டப்படி அரசு செலுத்தும் முறைமையை மாற்ற வேண்டும் என்றே நாமும் முயற்சி செய்து வருகிறோம். ஏற்கனவே, இங்கிலாந்தும் நம்முடைய கொள்கையைத் தழுவி விட்டதாகச் சொல்லுகிறபடியால், இங்கிலாந்து கஷ்ட தசையிலிருக்கும் இத்தருணத்தில் நாம் இங்கிலாந்துக்கு இடையூறுசெய்யாமல், இங்கிலாந்துக்கு நம்மால் இயன்ற உதவி செய்ய வேண்டும்” என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்.
பாரத தேசத்தாரில் லட்ச லட்சமான ஜனங்கள் இந்தப் போரில் மடிந்து ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தோம். கோடானுகோடி திரவியத்தைக் கொடுத்து வருகிறோம். இன்னும் சேனையில் ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே, நாம் வாய் திறந்து கேட்டால், இங்கிலாந்து நமக்கு இப்போது சுயராஜ்யம் கொடுக்கும். நம்மை ஏமாற்றாது. இந்தச் சமயத்தில், நாம் இத்தனை உதவி செய்யும்போது, காங்கிரஸ், முஸ்லீம் சபையார் சொல்வதை நாம் சரி என்று நினைக்கவில்லை. சண்டை முடியுமுன்பாக இப்பொழுதே கைமேலே சுயராஜ்யம் வேண்டும் என்றுநம்மவர் கேட்க வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்.
சண்டை முடிந்த பிறகு சுயராஜ்யம் போதுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், அது கிடைப்பது அரிதாகும். இப்பொழுதே ஏன் கொடுக்கும்படி கேட்கக் கூடாது? அயர்லாந்து தேசத்தில் சண்டை முடியு முன்பாகவே ஸ்வராஜ்யம் கொடுப்பதற்குரிய முறைமைகளைப்பற்றி ஆலோசனை செய்வதற்காக ஒரு சபை நடந்து வருகிறது. அதில் ஸகல கட்சியாரும் சேர்ந்திருக்கிறார்கள். அதுபோலவே, இந்தத் தேசத்திற்கும் ஒரு சபை ஏற்படுத்த வேண்டும்; அதில் இங்கிலீஷ் பிரதிநிதிகள் பாதித்தொகை, பாரதப் பிரதிநிதிகள் பாதித்தொகையாக இருந்து நடத்த வேண்டும். அவ்விதமான சபையை மந்திரி மாண்டேகு இந்தத் தேசத்தில் இருக்கும்போதே நியமிக்க வேண்டுமென்று நம்மவர் கிராமந்தோறும் சபைகள் கூடி ‘கூ! கூ!’ என்று பெரிய சப்தம் போட வேண்டும்.
திராவிடக் கட்சியார் என்றும், இஸ்லாமியக் கட்சியார் என்றும், யாரோ சிலர் செய்யும் பொய் மேளக் கச்சேரியை நாம் இகழ்ந்து நகைத்து, ‘காங்கிரஸ், முஸ்லீம் சங்கங்களே தேசத்துக்குப் பொது’என்பதை ஒரே வார்த்தையாக எங்கும் நிலைநிறுத்த வேண்டும். காங்கிரஸ் முஸ்லீம் சபைகளை எதிர்த்து, நமக்கு சுயராஜ்யம் வேண்டாமென்று சொல்லும் ஸ்வதேச விரோதிகளை அடக்கி விட்டு, நாம் இப்போதே ஸ்வராஜ்யம் கேட்கும்படி நமது பிரதிநிதிகளாகிய காங்கிரஸ், முஸ்லீம் சபையாரைத் தூண்ட வேண்டும்.
மந்திரி மாண்டேகு சென்னைக்கு வந்திருப்பதால், இந்தச் சத்தம் கிராமங்களில் இடிமுழக்கம் போலே நடைபெற்று வர வேண்டும்.
ஜனங்களே! உடனே சுயராஜ்ய ஸ்தாபன சபையைக் கூட்டும்படி இரைச்சல் போடுங்கள். அழுதபிள்ளை பால் குடிக்கும்.
ஆதாரம்: பாரதியார் கட்டுரைகள் (பகுதி 19) பாரதி பிரசுராலாயம் வெளியீடு-1949
$$$