-சேக்கிழான்
சநாதன தர்மம் என்பது ஹிந்து வாழ்வியல் அறம். இங்கே தமிழ் இலக்கியங்கள் கூறும் சநாதன வாழ்வியல் அறங்கள் பதமாக எடுத்துக்காட்டப்படுகின்றன...

1. இயன்றதைச் செய்வோம்!
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை;
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
(திருமந்திரம்- 252)
இறைவனுக்கு எளிமையாகப் பச்சிலை சூட்டி வணங்கினாலே போதும். பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். நாம் உண்ணும்போது உண்கிற உணவில் ஒரு கைப்பிடி எடுத்து பசித்தோருக்குக் கொடுத்தாலும் போதும். இவை அனைத்தையும் விட, யாருக்கும் இன்னுரை சொன்னாலே கூட போதும் என்கிறார் தமிழ்ச் சான்றோரான திருமூலர். எளிமையும் சிரத்தையும் தான் நமது ஹிந்து வாழ்வியல் அறத்தின் அடிப்படைகள். இதுவே தமிழ் கூறும் சநாதனம்!
$$$
2. பசிப்பிணி அறுப்போம்!
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன்; பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்!
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்;
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்!
(திருவருட்பா- 3471)
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை சென்ற நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானி ஜெகதீச சந்திரபோஸ் உலகிற்கு அறிவியல் சோதனைகளின் மூலமாக நிரூபித்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே நமது அருளாளர்கள் தாவரங்களை ஓருயிராக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். இதன் உச்சம் தான் அருளாளர் வள்ளலாரின் இப்பாடல்.
வெம்மையால் வாடும் பயிர்களைக் கண்டு வள்ளலாரின் மனமும் வாடுகிறது. அப்படிப்பட்டவர், வறுமையால் பசியால் வாடும் எளியவர்களின் துயர் கண்டு இரங்காமல் இருப்பாரா? அவர் மனம் பசியால் வாடுவோரைக் கண்டு பதைபதைக்கிறது. அந்த ஏழைகளைக் கண்டு வள்ளலாரின் உடல் இளைக்கிறது. அதனால்தான் அணையா அடுப்புடன் இன்றும் வடலூரில் சத்திய தருமச்சாலையில் அன்னம் பாலிப்பு நித்திய தானமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பசிக்கொடுமை நீக்குவதே தலையாய அறம் என்கிறது ஹிந்து வாழ்வியல் அறம். இதுவே தமிழ் கூறும் சநாதனம்!
$$$
3. கடமையே வாழ்வின் பொருள்!
‘நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திருக் கர கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே’
(தேவாரம்-1262)
கடம்ப மாலை அணிந்த முருகனைப் பெற்றவள் பார்வதி. அவளை உடலின் இடப்பாகமாகக் கொண்டவர் சிவபெருமான். தென்கடம்பை திருக்கரக் கோயிலில் கொலுவிருக்கும் இந்த ஈசனுக்குப் பணி செய்து கிடப்பதே என் கடன் என்று இப்பாடலில் உள்ளம் உருகுகிறார் திருநாவுக்கரசர். தள்ளாத வயதிலும் கோயில் கோயிலாகச் சென்று உழவாரப் பணி மேற்கொண்ட இந்த அடியார், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று கூறியதுடன், இறைவனுக்கும் ஒரு கடன் இருக்கிறது; இந்த அடியேனைத் தாங்குவதே அந்தக் கடமை என்று நினைவுறுத்துகிறார். இறைப்பணியே தனது வாழ்வின் கடமை என்பது தான் ஹிந்து வாழ்வியல் அறம். இதுவே தமிழ் கூறும் சநாதனம்!
$$$
4. கல்லும் புல்லும் எல்லாம் ஒன்றே!
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்...
(திருவாசகம் – சிவபுராணம்: 26 – 32)
தாவர இனங்களில் கல், புல், பூடு, மரம் என்னும் நான்கும், உயிரினங்களில் புழு, பாம்பு, பறவை, பல்மிருகம், மனிதர், அசுரர், முனிவர், பேய், கணங்கள், தேவர் என்னும் பத்தும் அடங்கும் என்பது பொதுவான நமது நம்பிக்கை. ஜடப்பொருளான கல்லுக்கும் இப்பாடலில் தாவரத்திற்கு இணையான ஓரிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த உலகில் கல் முதல் தேவர் வரையிலான படிநிலைகளில் வாழ்ந்து இளைத்ததன் இறுதியில், இப்பிறவியின் பயன் இறைவனின் கழல்களைப் பற்றுவதே என்று உணர்கிறார் மாணிக்கவாசகர். ஓருயிரான புல்லும், உயிரற்ற கல்லும், ஊர்வனவான புழுக்களும் பாம்பும், ஐந்துயிரான மிருகங்களும் பறவைகளும், ஆறுயிர் கொண்ட மனிதர்களும், மானுடத்திற்கு அப்பாற்பட்ட தேவர்களும் அவர்களின் எதிர்நிலையான அசுரர்களும் இறைவன் முன்னிலையில் ஒன்றே என்பது இப்பாடலில் கூறப்படும் ஹிந்து வாழ்வியல் அறம். இது. இதுவே தமிழ் கூறும் சநாதனம்!
$$$
5. இல்லறத்தானின் கடமை
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
(திருக்குறள்- 43 / இல்வாழ்க்கை அதிகாரம்)
உலக வாழ்வை நீத்த நமது முன்னோர் (நீத்தார்), தேவர் (கடவுள்), விருந்தினர், சுற்றத்தார் (நம்மை நம்பி உள்ளவர்கள்), தான் (சொந்தக் குடும்பம்) என்று சொல்லப்படும் ஐந்து அம்சங்களையும் காக்க வேண்டிய பணியை வழுவாமல் நிறைவேற்றுவதே, இல்லறத்தானின் கடமை என்கிறார் திருவள்ளுவர். “பிரம்மச்சாரி, வானப்பிரஸ்தி, சந்யாசி ஆகிய மூவரையும் காக்கும் கடமை கொண்டவன் கிரஹஸ்தன்” என்று மற்றொரு குறளிலும் கூறுகிறார் பொய்யாமொழிப் புலவர். இதுவே ஹிந்து வாழ்வியல் அறம். இதுவே தமிழ் கூறும் சநாதனம்!
$$$
6. வையகம் அளக்கும் மழலை
மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில்
பேணிஉனக்குப் பிரமன்விடுதந்தான்
மாணிக்குறளனே... தாலேலோ...
வையமளந்தானே... தாலேலோ...
(பெரியாழ்வார் திருமொழி - மூன்றாம் திருமொழி: 1)
இறைவனைக் குழந்தையாகக் கருதி, கொஞ்சித் தாலாட்டி மகிழ்வது நமது மரபு. அவன் சிறுகுடை பிடித்த குறளன்; அறியாச் சிரிப்புடன் மழலை நடை பயிலும் வாமனன்; அதேசமயம் மூன்றடி நிலம் கேட்டு விஸ்வரூபியாக வளர்ந்து, வையகம் அளந்து நிற்பவனும் அவனே என்பதை உணர்ந்து பாடுகிறார் பெரியாழ்வார். அன்புக்கு சிறுமழலையாகக் கட்டுப்படும் இறைவன் அகங்காரத்தைப் பொடியாக்குவதிலும் சமர்த்தன் என்ற நம்பிக்கையே ஹிந்து வாழ்வியல் அறம். இதுவே தமிழ் கூறும் சநாதனம்!
$$$
7. நாட்டின் இலக்கணம்
வன்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல் கேள்வி மேவலால்.
(கம்ப ராமாயணம்- பாலகாண்டம், நாட்டுப்படலம்: 53)
ஒரு நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ராமன் அவதரித்த கோசல நாடே முன்னுதாரணம் என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். அந்நாட்டில் வறுமை என்பதே இல்லை என்பதால் அங்கு வன்முறையும் இல்லை; எதிர்த்துப் போரிட எதிரி இல்லாததால், மக்களின் வலிமையைக் காட்டும் வாய்ப்பும் இல்லை; பொய் என்பதை அறியாத மக்கள் என்பதால் அங்கு உண்மை என்ற சொல்லுக்கே இடமும் இல்லை; நாட்டு மக்கள் அனைத்தும் அறிந்த கேள்வி ஞானம் கொண்டிருப்பதால் அங்கு அறியாமையும் இல்லை என்கிறார் கம்பர். நாட்டு மக்களும் நாடும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான இத்தகைய உயர் இலக்கணத்தைக் கொண்டிருப்பதுவே ஹிந்து வாழ்வியல் அறம். இதுவே தமிழ் கூறும் சநாதனம்!
$$$