-சேக்கிழான்
சநாதன தர்மத்தின் சிறப்புக் குறித்து சான்றோர் பெருமக்கள் சிலரது அமுதமொழிகள் இவை...

1. சநாதனத்தின் ஆதாரம்
தர்மமே வாழ்க்கையின் ரகசியம். நமது சகோதர சகோதரிகளுடன் இரக்கம், கருணையுடன் தொடர்பு கொள்ளவும், தவறுகளை மன்னிக்கவும், துயரங்களைத் தாங்கிக் கொள்ளவும், எளியோருக்கு சேவை செய்யவும், அனைவரிடத்தும் அன்பு செலுத்தவும் அதுவே கற்றுத் தருகிறது. அத்வைதம் (இறைவனும் நாமும் ஒன்றே என்ற, இருமையற்ற நிலை) என்பது அனுபவரீதியில் புரிந்துகொள்ள வேண்டியது. ஆனால், நமது தனிப்பட்ட வாழ்க்கையில் அன்பு செலுத்துவதன் மூலமாகவும் கருணையாலும் இதனை எளிதாக வெளிப்படுத்தலாம். இதுவே நமது மாபெரும் மகான்கள், தூய துறவியர் பெருமக்கள் கற்பித்த அற்புதமான பாடமாகும். இதுவே சநாதன தர்மத்தின் ஆதாரமாகும்.
-மாதா அமிர்தானந்தமயி தேவி
$$$
2. இயற்கையின் வழிமுறை
சநாதன தர்மம் என்பது இயற்கையின் நித்தியமான வழிமுறையாகும். இது மதத்திற்கு முந்தைய, உண்மையான ஆன்மிகத்தின் முதன்மையான தொகுப்பாகும். மாறாத லட்சியங்களின் அடித்தளத்தில் நிறுவப்படும் சிறந்த நாகரிகத்துக்கான முயற்சிகள், வாழ்வின் உயர்ந்த இலக்கை அடைவதற்கான தாபங்கள், உயர்ந்த சித்தாந்தங்களை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
-ஸ்ரீ தர்ம பிரவர்த்தக ஆச்சார்யா
(சநாதனம் தர்மம்: இயற்கையின் நித்திய வழி)
$$$
3. அனைத்துயிர்களுக்கும் உரித்தானது!
சநாதனம் தர்மம் என்பது ஒரு தேசத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கோ, ஒரு சமுதாயத்திற்கோ மட்டும் உரிமையானதல்ல. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உரித்தானது அது. எனவே இதனை ஏற்குமாறு ஒவ்வொரு மனிதரும் கற்பிக்கப்பட வேண்டும். நாம் வீடு திரும்புவது போல இறைவனை அடைய வேண்டும். இதுவே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் அடிப்படை உணர்வாகும்.
-பக்தி வேதாந்த பிரபுபாதா
(பிருந்தாவன் – 1972 சொற்பொழிவு)
$$$
4. எனது வாழ்வின் லட்சியம்
எனது வாழ்க்கையின் பிரதான நோக்கம், சநாதன தர்மத்தின் செய்தியைப் பரப்புவதே. ஒவ்வொரு வீட்டிற்கும் சநாதன தர்மத்தின் செய்தி செல்ல வேண்டும்; சுவாமி விவேகானந்தர் போன்ற துறவியர் பெருமக்கள் போதித்த, நல்ல மனிதர்களை உருவாக்கும் மகத்தான திட்டத்தை மாபெரும் முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது வாழ்வின் லட்சியம்.
-ஏகநாத் ரானடே
(விவேகானந்த கேந்திரத்தின் நிறுவனர்)
$$$
5. உலகு தழுவிய பார்வை
சநாதன தர்மம் என்று கூறப்படும் ஹிந்து தர்மம், உலகு தழுவிய பார்வையை உடையது. உலகளாவிய ஒருமைப்பாடே இதன் மூல ஆதாரமாக இருப்பதால், இது யாரையும் மதம் மாற்றும் எண்ணமோ, உலகில் ஆதிக்கம் செலுத்தும் கட்டாயமோ அற்றதாக உள்ளது. அதேசமயம், அதர்மத்தையும் அகங்காரத்தையும் நீக்கிக் கொள்ளுமாறு அது நம்மிடம் கோருகிறது. அனைவரிடமும் தன்னை உணர்தல், உயிர்ப்பான பிரபஞ்சம் ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பதே ஹிந்து தர்மத்தின் அடிப்படையாகும்.
-டேவிட் ஃபிராலே
(அமெரிக்காவைச் சார்ந்த ஹிந்துத்துவ அறிஞர்)
$$$
6. சநாதனிகள் என்பதில் பெருமிதம்!
வேதங்கள், உபநிடதங்கள், ஆரண்யகங்கள், பிராமணங்கள் போன்ற நமது ஞானக் கருவூலங்கள், யாராலும் இயற்றப்பட்டவை அல்ல; அவை பல்வேறு ரிஷி முனிவர்கள் அனுபவப்பூர்வமாகக் கண்டறிந்த, இயற்கையை அதன்மூலமாக உணர்ந்த உண்மைகளின் தொகுப்பாகும். அவற்றின் காலமும் கண்டறிய இயலாதது. குறுகிய வாழ்நாள் உள்ளவற்றுக்கு மட்டுமே தோற்றத்தைக் கூற முடியும். எப்போதும் பரிணமிக்கக் கூடிய, நித்தியமான வழிமுறைக்கு எவ்வாறு கால நிர்ணயம் செய்வது? எனவே, இந்த உலகில் வாழும் அனைவருமே – அவர்கள் சார்ந்திருக்கும் மதங்கள் வெவ்வேறாக உள்ள போதிலும், அவர்கள் இதனை ஏற்க மறுக்கும் போதிலும் – அவர்களும் சநாதனிகளே. எனவே நித்தியமான சநாதனிகள் என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம்!
-சுவாமி சின்மயானந்தர்
$$$
7. சநாதன தர்மத்தின் சிறு தரிசனம்…
சுவாமி விவேகானந்தர்தான் கடல் கடந்து சென்ற முதல் துறவி. 1893இல் அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற சர்வசமயப் பேரவையில் சநாதன தர்மத்தின் (வேத சமயம்) பிரதிநிதியாகப் பங்கேற்க அவர் சென்றார். பல்வேறு சமயத்தினரும் சமுதாயத்தின் பலதரப்பினரும் கூடியிருந்த அந்த மாபெரும் அவையில் சுவாமி விவேகானந்தர் மட்டுமே மிகவும் இளையவர்.
அந்த அவையில் சநாதன தர்மத்தின் சிறு தரிசனத்தை சுவாமி விவேகானந்தர் முன்வைத்தார். சநாதன தர்மம் என்பது நித்தியமானது; யாராலும் தோற்றுவிக்கப்படாதது; கண்டிப்பாக நம்பியாக வேண்டிய குறிப்பிட்ட ஆணைகள், கட்டளைகளைக் கொண்ட மதங்களுடன் இதனை ஒப்பிட இயலாது. அதேசமயம், ஆன்மாவை உணரும் அறிவியலாகவும் இயற்கையை விளக்கும் தன்மை உடையதாகவும் சநாதன தர்மம் இருக்கிறது.
சநாதன தர்மம் பிற மதங்களைப் போல நிறுவனரைக் கொண்டிருப்பதல்ல. மனிதர்களால் உருவாக்கப்படாத, நித்தியமான, ஆன்மிக விதிமுறைகளே இதன் அடித்தளம். இதனையே சிகாகோவில் சுவாமி வெற்றிகரமாக முன்வைத்தார்….
-சுவாமி அபேதானந்தர்
$$$
8. சநாதனமே நிலைத்திருக்கும்!
அனைத்து சமயங்களும் இறைவனை அடைவதற்கான வழிகளே என்பதை தனது ஆன்மிக சாதனைகளின் மூலமாக உணர்ந்தவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர். அனைத்துப் பாதைகளும் ஒரே இலக்கை நோக்கியவை என்பதை தெளிவாக உணர்ந்தவர் அவர். என்றபோதும், சநாதன தர்மத்தின் வழியில் வாழவே அவர் விரும்பினார். ஒருமை உணர்வின் அடிப்படையிலானது சநாதன தர்மமே என்பது அவரது கருத்து. “ஹிந்து தர்மம் மட்டுமே சநாதன தர்மம் ஆகும். பல்வேறு சமய நம்பிக்கைகள் இப்போது நிலவலாம். அவை யாவும் இறைவன் திருவுள்ளம் உள்ள வரை மட்டுமே வாழும். ஹிந்து தர்மம் மட்டுமே என்றும் நிலைத்திருக்கும்” என்றார் அவர்.
ஆதாரம்: ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்கள்.
(சிந்தி பிரம்ம சமாஜத்துக்கு விஜயம் – அத்தியாயம்- 32).
$$$
9. மதிப்பீடுகள் நித்தியமானவை
ஹிந்து தர்மம் என்று இன்று நாம் அழைக்கும் பெயருக்கு மிகவும் பொருத்தமான சொல் சநாதன தர்மம் என்பதே. ஹிந்து சமயம் என்று தற்போது அழைக்கப்படுவது, இதன் உண்மையான பெயர் அன்று. காலத் தொடக்கம் அற்ற இந்த வாழ்வியல் தர்மத்திற்கு வரலாற்றுக் காலத்தில் வைக்கப்பட்ட பெயரே ஹிந்து என்பதாகும். அநாதியான வேதங்களில் இந்த தர்மம் வேர் கொண்டிருக்கிறது. இது நிறுவப்பட்ட மதமும் அல்ல. ஆர்யவர்த்தத்தில் முனிவர்களின் இறை அனுபவத்தால் விளைந்த இனிய கனி இது. வைதீக சமயம் என்றும், வேதாந்தம் என்றும்கூட இது அழைக்கப்படுகிறது…. காலங்கள் மாறலாம். நிலப்பரப்பிலும் மாற்றங்கள் நிகழலாம். ஆனால், உண்மை, அன்பு, கருணை, பெற்றோருக்குச் செய்யும் கடமைகள் போன்ற மதிப்பீடுகள் என்றும் மாறாதவை. இந்த மதிப்பீடுகள் நித்தியமானவை; பிரபஞ்சம் தழுவியவை. இவையே சநாதன தர்மம் என்று அழைக்கப்படுகின்றன….
-பகவான் சத்ய சாய்பாபா
$$$
10. நிலையான தத்துவஞானம்
சநாதன தர்மம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இந்தச் சொல்லிற்கு நிலையான தத்துவஞானம், நிலையான நம்பிக்கை, அசைக்க முடியாத நித்திய சட்டம், மரியாதைக்குரிய ஒழுங்கு முறை என பல விதமான பொருள்கள் சொல்லப்படுகின்றன.
சநாதன தர்மம் என்பது, அனைவருக்கும் பொதுவான கடமை மற்றும் ஒரு ஆன்மிக அடையாளமாகும். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல், சேவை செய்தல், தொன்மையானது, நிலையான நெறிமுறைகளைக் கொண்டது என்பதே சநாதன தர்மமாகும்.
-கவியரசு கண்ணதாசன்
(அர்த்தமுள்ள இந்து மதம்)