-ஆர்.என்.ரவி
கடலுார் மாவட்டம், வடலுாரில் 2023 ஜூன் 21-இல் நடைபெற்ற வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி பேசிய உரையின் சுருக்கமான தொகுப்பு இது…

உலகின் மிகப்பெரும் ஞானியான திருவருட்பிரகாச வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சநாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகள், மகான்களின் பல நூல்களைப் படித்திருக்கிறேன். அதில், வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது மிகவும் பிரமிப்பு ஏற்பட்டது. பத்தாயிரம் ஆண்டுகால சநாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். வள்ளலார் சநாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன்.
காழ்ப்புணர்ச்சியாலும் அறியாமையாலும் சநாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்து தேவையற்ற கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
சநாதன தர்மம் என்றால் என்ன? நமது ரிஷிகளும் ஞானிகளும் உலகின் தொடகமென்ன, படைப்பின் மூலமென்ன என்பதை நாம் எளிய முறையில் புரிந்துகொள்வதற்காக நமது உபதேசங்களின் மூலமாகவும் தத்துவங்களின் மூலமாகவும் வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.
சநாதன தர்மத்தைப் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், படைக்கக்கூடிய ஒரு தலைவன், அவனே படைப்பில் அண்டங்களாகவும் பேரண்டங்களாகவும் உயிர்களாகவும் மரங்களாகவும் பூச்சிகளாகவும் வியாபித்திருக்கிறான். அந்தந்த உயிர்களுக்குள்ளாகவும் அவன் விளங்குகிறான் என்பதுதான் சநாதன தர்மம்.
உங்களில் என்னைக் காண்கிறேன். என்னில் உங்களைக் காண்கிறேன். இந்தத் தத்துவத்தை உணர்த்துவதுதான் சநாதன தர்மம். இந்த சநாதன தர்மத்தை யார் ஏற்காவிட்டாலும், மறுத்தாலும் இதற்கு இடையூறு செய்தாலும் அவர்களும் இந்த சநாதன தர்மத்திற்குள் தான் இருப்பார்கள். அவர்களை நாம் அந்நியராகப் பார்ப்பது கிடையாது.
வள்ளலார் கூறிய ஒரு வாக்கியம் என் இதயத்தைத் தொட்டது. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என அவர் பாடியதை, இதுவரை நான் கூறிய சநாதன தர்மத்தின் எதிரொலியாகவே நான் காண்கிறேன். ‘எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான் வருவேன்’ என பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார். இதேபோன்ற ஒரு சூழல் 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் இருந்தது. அந்தக் காரிருளை நீக்க வந்த ஜோதிதான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலின்போது, தோன்றியவர் அவர்.
நாட்டில் ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்த போதும். புதிதாக வெளிநாட்டிலிருந்து வந்த வழிபாட்டு முறையால் நமது அடையாளம் மறையும் நிலை ஏற்பட்டது. இந்தியப் பண்பாட்டில் சிறுதெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு எனப் பல வழிபாட்டு முறைகள் உள்ளன. அவை ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது இல்லை. புதிதாக வந்த மதங்கள், தன்னுடைய மதம் மேம்பட்ட மதம் என்று சொன்னபோதுதான் முதன்முதலாக இங்கே பிரச்னை வந்தது.
ஆங்கிலேயர்கள் சநாதன தர்மத்தை அழிக்க முடியாது என்று உணர்ந்தவுடன், நம் பெருமைகளை அழிக்க முயன்றார்கள். பிஷப் கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்கள் நமது தமிழ் நூல்களை மொழிமாற்றம் செய்யும்போது, அவற்றில் இருந்த இறைமைக் கருத்துகளை நீக்கிவிட்டு, தங்களுக்குத் தேவையான கருத்துகளை மட்டுமே வெளியில் பரப்பினார்கள்.
காரல் மார்க்ஸ் என்ற இன்னோர் அறிஞர் இருக்கிறார். அவரும் இதேபோல பல கட்டுரைகளை எழுதினார். அவர் நம்மைப் பற்றி 1852இல் சில கட்டுரைகளை எழுதியுள்ளார். காரல் மார்க்ஸ் போன்றவர்கள் நம்மைப் பற்றி மோசமாக பேசிக் கொண்டிருந்த அதே காலத்தில் தான், வள்ளல் பெருமான் என்ற ஞான சூரியன் தமிழகத்தில் தோன்றினார் .
ஆன்மிகத்தில் உயர்ந்த நாடு நமது நாடு. நமது நாட்டின் பிரதமர் மோதி பேசுவதை உலகத் தலைவர்கள் இப்போது உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ளனர். இந்தியா வல்லரசாகி உலகத்தின் தலைமையை விரைவில் ஏற்கும். இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்லும் போது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கொள்கையை உலகம் ஏற்கும்.
.
- திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலாரின் இருநூறாவது ஆண்டு இன்று நிறைவு
$$$