-என்.ஆர்.ஸத்யமூர்த்தி, எஸ்.ஆர்.சேகர்
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-12) இன்றைய தார்மிகக் குரல்கள்: என்.ஆர்.ஸத்யமூர்த்தி, எஸ்.ஆர்.சேகர்...

51. அரசியல் சாசனத்திற்கு விரோதமான பேச்சு
-என்.ஆர்.ஸத்யமூர்த்தி
சனாதன தர்மம் என்பது இந்து மதம் தான் என்று தெளிவாக தி.க. தலைவர் கி.வீரமணி சொல்லிய அதே மேடையில் ‘சனாதன தர்மத்தை எதிர்ப்பது என்று சொல்வது பொருளற்றது, சனாதன தர்மத்தை ஒழித்தே தீர வேண்டும்’ என்று தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருப்பது நியாயமான கண்டனங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்தப் பேச்சுக்களால் பெரும்பாலான இந்துக்களின் மனம் புண்பட்டுடிருக்கின்றது. இந்துக்களைத் தவிர பல இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் கூட, ‘இத்தகைய பேச்சு நியாயமற்றது, தேவையற்றது’ என்று உணர்கிறார்கள்.
மத நம்பிக்கைகளை இழிவுபடுத்திப் பேசுவது ஒரு கிரிமினல் குற்றமாகும். அரசியலமைப்புச் சட்டம் பாரத நாட்டு மக்களுக்கு அவர்களின் மத நம்பிக்கையைக் காக்கும் உரிமையைக் கொடுத்துள்ளது. அந்த உரிமையைப் பறிக்கும் இத்தகைய பேச்சுக்கள் அரசியல் சாசனத்திற்கு விரோதமானவை.
சனாதன தர்மம் என்றால் ஆதியும் அந்தமும் அற்ற தன்மை கொண்டது என்ற பொருளாகும். தர்மம் என்றால் அறம் எனப்படும். ஒரு தத்துவம் அல்லது ஒரு அமைப்பு இவ்வாறு காலங்களின் சோதனைகளைத் தாங்கி எதிர்கொண்டு தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது என்றால் அதனைப் பாராட்ட வேண்டும்; போற்ற வேண்டும். அதை விடுத்து ஒழிக்க வேண்டும் என்று சொல்வது ஏற்கத்தக்கதல்ல.
சனாதன தர்மம் என்ற பெயர் கொண்ட இந்து மதம் நம் தமிழ் மொழி போல மிகத் தொன்மை வாய்ந்தது. இறைவன் தமிழ் மொழியை அகத்தியனுக்கு அளித்தார்; வடமொழியை பாணிணிக்கு அளித்தார் என்பது ஆன்றோர்கள் முடிவு. நம் தாய்த் தமிழை ஒத்த இந்து மதத்தை ஒழிப்பேன் என்று பேசுவது எக்காரணத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
சனாதான தர்மம் சாதிப் பிரிவுகளைத் தோற்றுவித்தது; சாதி அடிப்படையில் உயர்ந்தோர் தாழ்ந்தோரை உருவாக்கியது; பெண்களை அடிமைப்படுத்துவதற்கு ஆதரவாக அமைவது; உடன்கட்டை ஏறுதலுக்கு உடன்பாடு காணுவது – என்றெல்லாம் தவறான காரணங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. சனாதன தர்மத்தின் சிறப்புகள் கடலினும் மாணப் பெரியவை. சனாதன தர்மம் தான் இந்தியாவின் செல்வச் செழிப்பிற்கு வழிகோலி பல ஐரோப்பிய நாட்டவர்களை இந்தியாவிற்குள் வரவழைத்தது.
உலகத்தில் உள்ள மதங்கள் எல்லாம் கூடி தம் பெருமையைப் பறை சாற்றுகின்ற அமைப்பாக நிகழ்த்தப்பட்ட சிகாகோவில் 1893இல் நடந்த சர்வ சமய மாநாட்டில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தமிழ்ச் சனாதனிகளின் கருத்தை முன்னெடுக்கும் வகையிலும், ‘வசுதைவ குடும்பகம்’ என்ற வடமொழிக் கருத்தை வெளிப்படுத்தும் வகையிலும், “அமெரிக்க நாட்டுச் சகோதரிகளே சகோதரர்களே” என்று முழங்கி தமிழ்நாட்டை உள்ளடக்கிய பாரத தேசத்தின் பெருமையினை வையகம் எங்கும் பரப்பிய விவேகானந்தரைக் கண்ட பின்னரும், இவர்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமென்று நினைப்பதும் சொல்லுவதும் ஏற்க முடியாதது.
இந்து மதத்தில் சாதியப் பிரிவுகள் இருந்தது என்பது உண்மைதான். இந்து மதத்தின் எந்த நூலிலும், எந்த இடத்திலும் ஒரு சாதி உயர்ந்தது இன்னொன்று இழிவானது என்று சொல்லப்படவே இல்லை. மேலும் சாஸ்திரங்களில் பேசப்பட்ட நான்கு வர்ணங்கள் ஏற்றத்தாழ்வுகளைக் குறிப்பன அல்ல. அவை மனிதர்களின் சுபாவங்கள், விருப்புகள், இயல்புகள் ஆகியவற்றைச் சார்ந்தவை. மனிதனின் மூளையின் நரம்புகள் முழுமை பெறுகின்ற இடம் உள்ளங்கால் ஆகும். திருவள்ளுவரும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்று சொன்னதும் இக்கருத்தைத் தான்.
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு பிரிவுகளைப் பற்றிப் பேசுகின்றோமே, அவற்றின் கீழ் ஒவ்வொன்றிலும் ஓராயிரம் பிரிவுகள் உள்ளனவே. அவற்றை இந்து மதமா தோற்றுவித்தது? இத்தகைய பிரிவுகள் சமுதாயத்தில் காலத்தின் தேவைக்கேற்ப Division of labour, specialization ஆகிய கோட்பாடுகளுக்கு ஏற்பத் தோன்றியவை. மேலும் இத்தகைய ஏற்பாடுகள் ஒரு வித நியாயமான இட ஒதுக்கீடு முறையாகும். சாதிகள் இல்லை என்று சொல்லிக்கொண்டு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்படுகின்ற இன்றைய நிலையிலும் கூட, சிறந்த ஏற்பாடாகவே அது அமைந்தது. முஸ்லிம்களிலும் கிறிஸ்தவர்களிலும் 300-க்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் உள்ளன. இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவர்களாக மாறிய தலித் மக்கள் தங்கள் சாதிய அடையாளத்தை விடாமல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் எஸ்.சி. பிரிவில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்களே. இவர்களின் சாதிப்பிடிப்பிற்கு இந்து மதமா காரணம்? எஸ்.சி. பிரிவினர் இடையேயும் தமிழ்நாட்டில் 76 உட்பிரிவுகளும், எஸ்.டி. பிரிவினரிடையே 36 உட்பிரிவுகளும் உள்ளனவே. எஸ்.சி.களில் வள்ளுவர் என்ற பிரிவினர் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகவும் ஒதுங்கி வாழ்கிறவர்களாகவும் கருதப்படுகிறார்களே! இதற்கெல்லாம் இந்து மதமா காரணம்?
இந்து மதத்தில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்று சொல்வது உண்மைக்குப் புறமானது. போற்றத்தக்க பல ரிஷிகளின் பத்தினிகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்திய மக்கள் அனைவரும் போற்றி வணங்குகிற சீதாதேவி சனாதனம் தந்த நன்கொடை அல்லவா? ராமாயணத்தைப் பற்றிக் கூறும் போது அதை, ‘சிறை இருந்தாள் ஏற்றம் கூறும்’ என்பர். மகாபாரதத்தைப் பற்றிப் பேசினாலோ அது ‘பாஞ்சாலி சபதம்’ ஆகும். தமிழ்நாட்டின் ஔவையாரும் பிசிராந்தையாரும் பொன்முடியாரும் இன்ன பிற இருபதிற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்களும் சனாதன தர்மத்தின் சீதனமே.
உடன்கட்டை ஏறுதல் என்ற முறை தமிழ்நாட்டிலும் இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.
‘காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி
ஊதுஉலைக் குருகின் உயிர்த்துஅகத்து அடங்காது
இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின்
நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்:
நளிஎரி புகாஅர் ஆயின் அன்பரோடு
உடன்உறை வாழ்க்கைக்கு நோற்றுஉடம்பு அடுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து"
(மணிமேகலை – ஊர் அலர் உரைத்த காதை: 42-48) என்ற வரிகளும்
“பல் சான்றீரே! பல் சான்றீரே.......
………………………………
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு
ஈமம் நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்ந்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!”
என்ற பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு இயற்றிய வரிகளும் (புற நானூறு- 246) நினைவுகூரத் தக்கன.
இந்து தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறவர்கள் கூறும் காரணங்கள் சரியானவை அல்ல என்பதை விளக்கியுள்ளோம். இவர்கள் கூறும் காரணங்கள் மற்ற மதங்களில் இருப்பது கண்டும் வாய் திறவாமல் இந்து மதத்தை மட்டும் குறி வைப்பது, இவர்களின் பின்புலத்தையே காட்டுகின்றது.
- திரு. என்.ஆர்.ஸத்யமூர்த்தி, ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலர்; கடலூரில் வசிக்கிறார். பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுவதன் மூலமாக சமுதாய எண்ணங்களைப் பிரதிபலிப்பவர்.
$$$
52. உடையும் திராவிடப் புரட்டுகள்
-எஸ்.ஆர்.சேகர்
சனாதன தர்மத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம், ‘நாங்கள் எதிர்ப்பது சனாதன தர்மத்தில் உள்ள தீய வழக்கங்களை மட்டும் தான்’ என்று மடை மாற்றுகிறார்கள்!
சனாதன தர்மம் பிறரைக் கல்வி கற்க அனுமதிப்பதில்லை என்று இவர்கள் எப்பொழுதும் கூறி வருவதைப் பார்த்திருக்கிறோம்!
எந்த அடிப்படையில் இதைக் கூறுகிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்!
சனாதன தர்மம் உச்சத்தில் இருந்த காலமான கிறிஸ்து பிறப்புக்கு (2000 ஆண்டுகளுக்கு) முந்தைய காலத்தையே எடுத்துக் கொள்வோம்!
புறநானூற்றுப் பாடலில் (புறம்- 183) பாண்டியன் நெடுஞ்செழியன் கீழ்க்கண்டவாறு பாடுகிறார்:
“உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
………………………………………
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே”
“சமூகத்தின் கீழ்ப்படியில் உள்ள ஒருவன் கல்வி கற்றால் அவனைத் தேடி எல்லாக் குலத்தோரும் செல்வர்” என்று அரசனே சொல்லும்போது கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா!
ஈரோடு ராமசாமி அவர்கள் வருகைக்குப் பின்னர் தான் பெண்கள் கல்வி கற்றார்கள் என்பது அடுத்த மிகப்பெரிய புரட்டு!
ஒளவையாரும், காரைக்கால் அம்மையாரரும், காக்கைப்பாடினியாரும் கல்வி கற்றது எப்படி?
சனாதன தர்மம் பெண்களின் கல்விக்கு முழு முக்கியம் கொடுப்பது! கல்வித் தெய்வமாக பெண் தெய்வத்தை வழிபடுவதே சனாதன தர்மம்!
இடைப்பட்ட காலத்தில் சில மனிதர்கள் செய்த தவறுகள் எல்லாம் சனாதன தர்மத்தின் போதனைகள் அல்ல.
சனாதன தர்மம் என்றுமே எவரையும் புறக்கணிக்காது!
- திரு. எஸ்.ஆர்.சேகர், பாஜகவின் தமிழக மாநிலப் பொருளாளர்.
- இது இவரது முகநூல் பதிவு.
$$$
53. பத்திரிகைச் செய்தி
”சநாதன தர்மம் ஹிந்துக்களின் தினசரி கடமைகளின் தொகுப்பு”
–சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி

சென்னை, செப். 16: “சநாதன தர்மம் என்பது ஹிந்துக்களின் நித்தியக் கடமை, நாட்டுக்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி கூறியுள்ளார்.
மத விவகாரங்கள் குறித்து பேசும்போது மற்றவர்களைக் காயப்படுத்தாமல் பேசுவது முக்கியம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் சநாதன தர்மத்துக்கு எதிரான கருத்துகளைப் பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை எதிர்த்து, இந்து முன்னணி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சேஷசாயி முன்பு செப். 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லூரி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைப் பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதி சேஷசாயி கூறியதாவது:
“சநாதன தர்மம் என்பது ஹிந்துக்களின் நித்தியக் கடமைகளின் தொகுப்பு. நாட்டுக்கான கடமை, அரசனுக்கான கடமை, பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமை, ஆசிரியருக்குச் செய்ய வேண்டிய கடமை, ஏழைகளைப் பாதுகாப்பதற்கான கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு. இந்தக் கடமைகளை மேற்கொள்ளக் கூடாதா?
சநாதனம் ஜாதியவாதத்தையும் தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. நாட்டில் தீண்டாமையைச் சகித்துக்கொள்ள முடியாது. அனைத்துக் குடிமக்களும் சமமானவர்கள். மதப் பழக்கவழக்கங்களில் சில மோசமான நடைமுறைகள் தெரியாமல் புழக்கத்தில் இருக்கலாம். அவற்றைக் களையெடுக்க வேண்டுமே தவிர, பயிரை ஏன் வேரறுக்க வேண்டும்? தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ, மாணவிகளை கல்லூரிகள் ஊக்குவிக்கலாம்.
வெறுப்புப் பேச்சு கூடாது:
சநாதன தர்மத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் தற்போது கூச்சல்தான் அதிகமாக இருக்கிறது. பேச்சு சுதந்திரம் என்பது வெறுப்புப் பேச்சைப் பேசுவதற்கான சுதந்திரமாக இருக்க முடியாது.
இந்த விஷயத்தில் அரசியல் சாசனம் தெளிவான வரையறைகளைக் கொண்டுள்ளது. வெறுப்பு பேச்சு பேசுவதை சட்டப்பிரிவு 19(2) கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு மதமும் நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை. எனவே, மத விவகாரங்கள் குறித்து பேசும்போது மற்றவர்களைக் காயப்படுத்தாமல் பேசுவது முக்கியம்” என்றார்.
- நன்றி: தினமணி செய்தி.
$$$
54. ஒரு கருத்துப் படம்- டைம்ஸ் ஆஃப் இந்தியா
-சந்தீப் ஆத்வர்யூ
சனாதனம் குறித்த அவதூறுப் பேச்சால் இ.ண்.டி.யா. கூட்டணிக்கு திமு.க.வின் உதயநிதி ஆப்பு வைத்து விட்டார் என்பதைச் சித்தரிக்கும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை கார்ட்டூன்…

(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)
$$$