-சுவாமி விமூர்த்தானந்தர், பட்டுக்கோட்டை பிரபாகர், கோ.சேஷா
சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-12) இன்றைய தார்மிகக் குரல்கள்: சுவாமி விமூர்த்தானந்தர், பட்டுக்கோட்டை பிரபாகர், கோ.சேஷா.

48. சுவாமி விவேகானந்தர் உணர்த்தும் சனாதன தர்மம்
-சுவாமி விமூர்த்தானந்தர்
இன்று சில அரசியல்வாதிகள் தூண்டிவிட்டால்தான் இந்து மக்கள் தங்கள் மத மகிமைகளைப் பற்றிப் பேசவும் எழுதவும் சிந்திக்கவும் செய்வது துரதிர்ஷ்டம்.
பெரும்பான்மையான இந்துக்கள் தங்களைப் பிறர் எவ்வளவு தூற்றினாலும் கேலி செய்தாலும் சகித்துக் கொள்ளும் ஜடத்தன்மையை வளர்த்துக் கொண்டுள்ளார்கள். இதற்கு அகிம்சை என்று அருவருக்கத்தக்கப் பொருளும் கொடுக்கிறார்கள். வீரராஜன் சிவாஜியும் வீரத் துறவி விவேகானந்தரும் உதித்தும் உரைத்தும் ஜனங்கள் ஜடத்தில் ஜமாய்ப்பது பெரும் வெட்கக்கேடு.
சனாதனம் என்றால் நித்ய நூதனம் – நித்தியமாகவும் புதுமையாகவும் உள்ளது என்று பொருள். சனாதன மதமான இந்து மதத்தில் அவதார புருஷர்களும் ஆச்சாரியார்களும் பக்த சிரோமணிகளும் காலத்தின் தேவைக்கேற்ப தோன்றிக்கொண்டே இருப்பார்கள். இது இந்து சமயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. ‘தீயவற்றை ஒடுக்கவும் நல்லவற்றை வாழ்விக்கவும் நான் அவதரிக்கின்றேன்’ என்று கீதையில் கண்ணபிரான் முழங்கினார்.
இந்து மதத்திற்கு வேண்டிய சீர்திருத்தத்தை இந்து சமயச் சான்றோர்களே செய்துள்ளார்கள்; செய்தும் வருகிறார்கள். இந்து மதம் தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்ளும் ‘ஆட்டோ கரெக்ஷன்’ கொண்ட ஓர் அமைப்பு என்பதை பிற மதத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். சுவாமி விவேகானந்தர் சென்னையில் 1897ஆம் ஆண்டு, பிப்ரவரி 9 அன்று ‘எனது போர்முறை’ என்ற தலைப்பில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்:
“சென்னையின் சீர்திருத்தவாதிகளுக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும்... இந்தியாவில் எப்போதாவது சீர்திருத்தவாதிகளுக்குக் குறைவு இருந்ததுண்டா? இந்தியாவின் வரலாற்றை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ராமானுஜர் யார்? சங்கரர் யார்? குருநானக் யார்? சைதன்யர் யார்? கபீர் யார்? தாது யார்? ஒளி மிகுந்த நட்சத்திரக் கூட்டங்களின் வரிசைகள்போல, ஒருவர் பின்னால் ஒருவராக வந்த இந்த முதல்தர ஆச்சாரியர்கள் எல்லாம் யார்? தாழ்ந்த குலத்தினரை எண்ணி ராமானுஜர் உருகவில்லையா? மிகவும் தாழ்ந்த குலத்தினரைக்கூடத் தமது நெறியில் அனுமதிப்பதற்கு அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபடவில்லையா? முகமதியர்களையும் தமது நெறியில் சேர்த்துக்கொள்ள அவர் முயலவில்லையா? இந்துக்களுடனும் முகமதியர்களுடனும் உறவாடி, ஒரு புதிய நிலையைக் கொண்டு வர குருநானக் முயலவில்லையா? “அவர்கள் எல்லோரும் முயன்றார்கள், அவர்களுடைய பணி இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது. வித்தியாசம் இதுதான்: அவர்கள் இன்றைய சீர்திருத்தவாதிகளைப் போல் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை; இன்றைய சீர்திருத்தவாதிகளைப்போல யாரையும் சபிக்கவில்லை. வாழ்த்துக்களை மட்டுமே அவர்களுடைய உதடுகள் மொழிந்தன. அவர்கள் ஒருபோதும் நிந்திக்கவில்லை. “நம் இனம் எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் மக்களிடம் கூறினார்கள். அவர்கள் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தார்கள்; பின்னர் மக்களை நோக்கி, ‘இந்துக்களே, இதுவரை நீங்கள் செய்தவை எல்லாம் நல்லதே. ஆனால் என் சகோதரர்களே, அதைவிட இன்னும் நல்லவற்றைச் செய்வோம்' என்றே கூறினர்....”
தலைவலி வந்தால் தலையையே எடுக்கும் தீவிரம்:
தனிமனிதனோ, ஓர் அமைப்போ, ஒரு சமயமோ எதுவாக இருந்தாலும் இந்த உலகில் அது செல்வாக்கு செலுத்தும்போது அதற்கு நல்லது – கெட்டது தொடர்பு இருக்கத்தான் செய்யும். நல்லது பெற்றால் வளம் பெறும். வேண்டாதவற்றால் வீண் கசடுகள் சேரும். இது இயல்பு.
அந்த விதத்தில் இந்து மதத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயிரமாயிரம் நன்மைகள் இந்த உலகிற்குக் கிடைத்துக்கொண்டே வருகின்றன. ஒரு சில தீமைகளும் தொய்வுகளும் தடைகளும் தவிர்க்கப்பட வேண்டியவையும் கால ஓட்டத்தில் இந்து மதத்தில் சேர்ந்திருக்கலாம்; சேர்ந்துள்ளன. இந்த நிலை எல்லோருக்கும் எல்லா அமைப்புகளுக்கும் சமயங்களுக்கும் பொருந்தும் ஒன்றே என்பதை புத்திசாலிகள் அறிவார்கள்.
தீயவற்றைத் தள்ளிவிட்டு நல்லவற்றை ஏற்கும் குணத்தை ஒருவருக்கு சிறு வயது முதல் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் அவர் வளர்ந்த பிறகு குறைகளைப் பெரிதுபடுத்துவதில் குளிர் காய மாட்டார்.
தலைவலி வந்தால் அதற்கு மருந்தைத் தேடு. மாறாக, தலை இருந்தால்தானே தலைவலி வரும் என்று தலையையே சீவப் போனானாம் ஒரு தறுதலை. அப்படிப்பட்ட சிலர் இன்று இந்து மதத்தை நிர்மூலமாக்க களத்தில் குதித்துள்ளார்கள்.
சனாதன தர்மம் அழியாது – ஸ்ரீராமகிருஷ்ணர்:
ஆன்மிகம், தியாகம், பக்தி, தெய்வீக வாழ்க்கை, மக்கள் தொண்டு, ஆன்மிக சாதனைகள் போன்றவற்றைக் கொண்ட இந்து மதம் தன் மூல பலத்தோடு இருக்கும் வரை யாரும் இந்து மதத்தை நிர்மூலம் செய்துவிட முடியாது. இதை சுவாமி விவேகானந்தருடைய சிந்தனைகள் நமக்கு உறுதி கூறுகின்றன.
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரும் ‘இந்து மதத்தை யாராலும் அழித்துவிட முடியாது’ என்று அபயவாணி வழங்கி இருக்கிறார். ஏனென்றால் சனாதன தர்மமான இந்து மதம் சாமானியமான ஒரு லட்சியத்திற்காக ஏற்படுத்தப்பட்டதல்ல. அது சுயம்பு; தெய்வத்தின் ஆணையால் உதித்த ஒன்று. சனாதன தர்மம் தொன்றுதொட்டுத் தொடர்ச்சியாக, தொய்வின்றிச் சொல்லி வரும் செய்தியை சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையில் நாம் அவதானிக்கலாம்.
சுவாமி விவேகானந்தர் 1893 சிகாகோ சர்வ சமயப் பேரவையில் ‘இந்து மதம் எல்லோருக்கும் தாய் மதம். ஏனென்றால் அது அனைவரையும் அரவணைக்கிறது. அவரவருக்குரிய மரியாதையைத் தருகிறது’ என்ற சனாதன தர்மத்தின் சாராம்சத்தை முழங்கினார். சுவாமி விவேகானந்தர் 130 வருடங்களுக்கு முன்பு சிகாகோ சொற்பொழிவில் உரைத்த மேற்கூறிய சில கருத்துகள் இன்றும் நமக்குப் பொருத்தமாகவே இருப்பதைப் பாருங்கள்:
“பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப் பற்று, இவற்றால் உண்டான மத வெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்தப் பூமியை நிரப்பியுள்ளன; உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத் தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதைவிடப் பன்மடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!”
இந்த நிலை மாற, சனாதன தர்மம் சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளில் கூறுவதையும் கேளுங்கள்:
“இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும் உதவு, சண்டையிடாதே; ஒன்றுபடுத்து, அழித்து விடாதே; சமரசமும் சாந்தமும் வேண்டும்; கருத்து வேறுபாடு வேண்டாம்” என்று எழுதப்படும் என்ற தனது விருப்பத்தை, உலகின் அனைத்து சமயங்களுக்கான ஆசீர்வாதமாக சுவாமி விவேகானந்தர் மொழிந்தார். மேற்கூறிய செய்தி இன்றும் எவ்வளவு முக்கியம் என்பதை எண்ணிப் பாருங்கள்.
இந்து தர்மம் பரவலாக இருந்த பாரதத்தின் அந்த நாளைய வரலாற்றைப் பற்றி ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், “பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை” என்று பதிவு செய்திருக்கிறார். இதனை சுவாமி விவேகானந்தர் தனது சிகாகோ பிரசங்கத்தில் கூறியிருக்கிறார். இது போன்ற லட்சியத்திற்காகப் பாடுபடுவது சனாதன தர்மம்.
இந்து தர்மம் ஒருவரையும் பாவி என்றோ, ஒதுக்கப்பட்டவன் என்றோ எவனையும் தள்ளியது இல்லை. நமது வேதங்கள் உபநிஷதங்கள் மக்களிடம், “பேரின்பத்தின் பங்குதாரர்களே” என்றுதான் அனைவரையும் அழைக்கிறது. அந்த உன்னதமான செய்தியை சுவாமிஜி கிறிஸ்தவர்களும் மற்ற மதத்தினரும் இருந்த சர்வ சமயப் பேரவையில் ‘இந்து மதம்’ என்ற தலைப்பில் உரைத்தார்:
“இந்து, வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன்வசப்பட்ட சாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும்புகிறான். ஜடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான எங்கும் நிறைந்த இறைவன் இருப்பாரானால் அவரை நேரே ஒருவர் காண விழைகிறான். அவன் அவரைக் காண வேண்டும்; அதுதான் அவனது எல்லாச் சந்தேகங்களையும் அகற்றும். “ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக்கூடிய சிறந்த சான்று, ‘நான் ஆன்மாவைக் கண்டுவிட்டேன், நான் கடவுளைக் கண்டுவிட்டேன்' என்று கூறுவதுதான். நிறைநிலைக்கு அதுதான் ஒரே நியதி. இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ, கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம். “ஆன்மா தெய்வீகமானது, ஆனால் ஜடப் பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும்போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலையே முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுதலை. “கடவுளின் கருணையால்தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத் தான் கிடைக்கும். எனவே இறைவனின் கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போதுதான் இதயக்கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.”
இது இந்து மதத்தின் முக்கியமான அடிப்படைக் கருத்து என்பது சுவாமி விவேகானந்தரின் முடிவு.
உலகம் தழுவிய மதம் வேண்டும்:
சனாதன தர்மத்தின் வேதங்கள் ‘சத்தியத்தை தரிசிப்பதற்காக வேதங்களையே கடந்து செல்’ என்று உரைக்கின்றன. முன்னேறு என்பது மட்டுமல்ல, முன்னேறிக் கொண்டே இரு என்பதுதான் இந்து சமய சாஸ்திரங்களில் சாரமாக நாம் காண்பது. சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தை இன்னும் விரிவுபடுத்தி அருளினார்:
“சகோதரர்களே! இந்து சமயக் கருத்துகளின் சுருக்கம் இதுதான்.….. என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப்படுத்தப்படாததாக இருக்க வேண்டும். “அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லோர் மீதும் சமமாக வீசுவதுபோல அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும். “அது பிராமண மதமாகவோ, பௌத்த மதமாகவோ, கிறிஸ்தவ மதமாகவோ, முகமதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டுமொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். “விலங்கினங்களைப் போல் உள்ள காட்டுமிராண்டி மக்களிலிருந்து, இவரும் ஒரு மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு, அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர்வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். “அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லோரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும். அத்தகைய மதத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும்.”
சனாதன தர்மத்தின் உயர்நோக்கம் இது. பிரபஞ்சத்தில் பிரளயம் வந்தால்கூட இந்த நோக்கத்தைக் கடவுள் காப்பாற்றி அடுத்த படைப்பிற்கு அதை அர்ப்பணிப்பார். ‘சேர வாரீர் ஜகத்தீரே’ என்பதோடு, சேர்ந்த பின்னர் ஜகத்தை முன்னேற்ற வாரீர் என்பது சுவாமி விவேகானந்தரின் இந்து மத விரிவாக்கச் சிந்தனை ஆகும்.
- தஞ்சை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மஹராஜ் ‘பொருள் புதிது’ தளத்திற்கென எழுதிய பிரத்தியேகக் கட்டுரை இது.
$$$
49. இதற்குப் பெயர் சனாதன ஒழிப்பு அல்ல!
-பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டையில் என் அப்பாவின் மூத்த சகோதரிக்கு (எனக்கு அத்தை) பால்ய விவாகம் நடந்து இரண்டாண்டுகளிலேயே கணவரை இழந்து கைம்பெண்ணாக தாய்வீடு திரும்பிவிட்டார்; குழந்தையும் இல்லை.
அப்போது என் அப்பா பள்ளிப் பருவத்தில். என் அய்யா முன்பே காலமாகிவிட, பாட்டி மட்டுமே.
குடும்ப நிர்வாகம் முழுக்க அத்தைதான். அப்பாவை வளர்த்து, 17 வயதிலேயே சொந்தமாக தொழில் துவங்க ஆதரவாக நின்று, திருமணம் செய்துவைத்து, நான் உள்பட நான்கு குழந்தைகளையும் வளர்த்ததில் அத்தையின் பெரிய பங்கு உண்டு.
ஊரில் பலரும் அவரை என் அப்பாவின் அம்மா என்றுதான் நினைத்தார்கள். ’அம்மாவை கோயில்ல பார்த்தேன்’ என்று யாரும் சொன்னால், ‘அவர் என் அம்மா இல்லை சகோதரி’ என்று அப்பா திருத்தியதில்லை.
80 வயது வரை வாழ்ந்து மறைந்த அவருக்கு எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வு மட்டுமே நோக்கமாக இருந்தது. தனக்கென்று எந்த விருப்பங்களும் கிடையாது. ஆரோக்கியமாக இருந்தபோது பழனி, திருச்செந்தூர் என்று பக்திப் பயணங்கள் சென்றுவந்ததோடு சரி. மற்றபடி வீடு, கடை, கோயில் என்றே அவர் வாழ்க்கை இருந்தது.
விபரம் தெரிந்த பிறகு ஒரு நாள் நானும், அப்பாவும் மட்டும் தனிமையில் இருந்தபோது கேட்டேன்.
“நீங்கள்தான் சின்னப் பையன். நம் உறவினர்களில் யாருக்குமே அவருக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று தோன்றவே இல்லையா அப்பா?”
நீண்ட நேரம் அமைதியாக இருந்துவிட்டு பெருமூச்சுடன் சொன்னார், “அப்படி முயற்சி எடுக்கக் கூடாது என்று பிடிவாதமாக யாரும் இல்லை. ஆனால் கைம்பெண்களுக்கு இரண்டாம் திருமணம் என்கிற சிந்தனையே அப்போது எவர் மனதிலும் இல்லை. காரணம் அது சமூக வழக்கத்தில் இல்லை.”
அது சமூக வழக்கத்திற்கு வந்ததற்கு, ‘விதவா விவாகம் தவறில்லை’ என்கிற சிந்தனையை சமூகத்தில் விதைத்து வளர்த்த சிந்தனையாளர்கள் அத்தனைப் பேரும் என் மரியாதைக்குரியவர்கள்.
சடங்கு, சம்பிரதாயம் என்கிற பெயரில் பெண் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் எதிரான கோட்பாடுகளை சமூகத்தில் விதைத்து வளர்த்தவர்கள் இந்தத் தலைமுறைக்காரர்கள் அல்ல.
அதனால் அவர்களை விமரிசிப்பது பிரயோஜனமில்லாத பகை உணர்ச்சியையும், வெறுப்புணர்ச்சியையும் வளர்க்கும் வீண் வேலை.
ஆனால் அந்தப் பழைய கோட்பாடுகளை இன்றும் ஆதரிக்கும், ஆராதிக்கும், போதிக்கும் நபர்களையும் அவர்களின் துருப்பிடித்த சிந்தனைகளையும் புறக்கணித்துத்தான் ஆக வேண்டும்.
இதற்குப் பெயர் சனாதன ஒழிப்பு அல்ல!
பகுத்தறிவு வளர்ப்பு!
எல்லா மதங்களும் சொல்லும் நீதிகள் பலவும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை. எல்லா மதங்களும் சொல்லும் அநீதிகள் மட்டுமே எதிர்க்கப்பட வேண்டியவை.
- திரு. பட்டுக்கோட்டை பிரபாகர், பிரபல எழுத்தாளர்.
- இது இவரது முகநூல் பதிவு.
$$$
50. அனைவருக்கும் சொந்தமானது சனாதனம்
-கோ.சேஷா
மரபார்ந்த காலங்களில், பூணூல் அணிவது முதல் அமாவாசை தர்ப்பணம் செய்வது வரை பல சடங்குகளை அனைத்துத் தரப்பு மக்களும் பின்பற்றி வந்தனர். கால ஓட்டத்தில் பெருவாரியாக பிராமணர் அல்லாதோர் இச்சடங்குகளைக் கைவிட, பிராமணர்கள் மட்டும் தொடர்ந்து பின்பற்றி வந்தனர்.
இக்காரணத்தினால் சனாதன தர்மம் என்கின்ற இந்து மதத்தைக் காக்கும் கடைசி பாதுகாப்பு வேலியாக பிராமணர்கள் திகழ்ந்தனர். இதைக் கூர்ந்து கவனித்தனர் இந்து மதத்தை வேரறுக்க விழைந்தோர். பிராமணர்களை ஒழிக்காவிட்டால் இந்து மதத்தை ஒழிக்க முடியாது என்று புரிந்து கொண்டு அவர்களுக்கு எதிரான ஒரு உளவியல் போரை நடத்த வியூகம் வகுத்தனர். ஹிட்லர் யூத வெறுப்பை ஜெர்மனியில் வேரூன்றியதைப் போல பார்ப்பன வெறுப்பை தமிழகத்தில் சனாதன எதிரிகள் விதைத்தனர்; சங்ககாலத் தரவுகளின்படி தமிழ் சமூகத்தின் அங்கமாக வாழ்ந்தோரை வந்தேறி என்றும் வஞ்சகன் என்றும் கட்டம் கட்ட ஆரம்பித்தனர்.
தொடர் ஆயிரமாண்டு படையெடுப்புகளால் நலிவடைந்த நம் திருநாட்டில், அடிப்படைத் தேவைகளுக்கே அன்றாடம் போராடிக் கொண்டிருந்த மக்களோ இதையெல்லாம் ஆராய்ந்து பகுத்தறிந்து மெய் காண இயலா நிலையில் இருந்தனர்.
நம் கோயில்களும், கோயில்கள் உணர்த்தும் மனித வாழ்வின் மேலான அறநெறிகளும் சூறையாடப்பட்டன. கேள்வி கேட்க முன்வந்தோரிடம் ‘பிராமணன் உன்னை அடிமைப்படுத்தும் நரகமே கோயில்கள்’ என்று மனச்சலவை செய்ய முனைந்தனர் நயவஞ்சகர்கள்.
அதன் விளைவு? மாலிக் காபூரின் கோரப் படையெடுப்பின் போது சாதி பேதங்களைக் களைந்து அரங்கனுக்காக பத்தாயிரம் வைணவத் தமிழர்கள் தங்கள் தலைகளைக் காவு கொடுத்த வீர சோழ மண்ணில் இன்று, நூற்றாண்டுகள் தொட்ட கோயில்களை இடித்தேன் என்று மார்தட்டும் அரக்கர்களே மண்ணாளும் தலைவர்களாக வலம் வருகின்றனர்.
இந்த நிலை மாற வேண்டும் என்றால், சனாதன தர்மத்தின் விரோதிகள் உற்பத்தி செய்த பிராமணர்- பிராமணரல்லாதோர் என்கிற சதிக் கோட்பாட்டிலிருந்து தமிழ் சமூகம் வெளிவர வேண்டும்.
வான்மழையும் கதிரொளியும் எப்படி அனைவருக்கும் சொந்தமோ, அதே போலத்தான் சனாதன தர்மமும் பாரதத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. இந்த உண்மையை இந்துக்கள் அனைவரும் உணர. ஆதீனங்களும், மடாதிபதிகளும், மதகுருமாரும் சனாதன தர்மத்தின் யதார்த்தத்தை எளியோருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறான கலாச்சாரக் களச்சீராய்வு நடக்காவிடில் நம் மகத்தான நாகரிகத்தை காப்பாற்றவே முடியாது என்பது தெளிவாகி விட்டது.
- திரு. கோ.சேஷா தமிழ்த் திரையிசைக் கவிஞர்.
- இது இவரது டிவிட்டர் (எக்ஸ்) தளப் பதிவு.
(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)
$$$