வாழும் சனாதனம்!- 8

-திருநின்றவூர் ரவிகுமார், ச.சண்முகநாதன், கோ.ஆலாசியம்

சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… (இது பகுதி-8). தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பாடப் புத்தகத்தில் ‘இந்து மதம் தான் சனாதன தர்மம்’ என இந்தப் பாடப் புத்தகத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருப்பதையும் இங்கே பதிவு செய்திருக்கிறோம்...இனிமேலும்  “நான் சனாதனத்தை அழித்தே தீருவேன்; நான் இந்து மதத்தை அழிப்பதாகக் கூறவில்லை” என்று மறுபடியும் உளறுவாரா, இளவரசர்?

31. கோபுரத்தின் மேல் ஏற்றிவைத்தாலும்…

-திருநின்றவூர் ரவிகுமார்

‘சனாதனம்’ என்ற வார்த்தை  ‘தர்மம்’ என்ற சொல்லுடன் சேர்த்தே பயன்படுத்தப்படுகிறது. இரண்டும் சமஸ்கிருத மொழிச் சொற்கள்.

சனாதனம் என்ற சொல்லுக்கு எப்போதும் இருக்கக் கூடிய அல்லது காலத்தைக் கடந்த, நிரந்தரமான என்று பொருள் சொல்லப்படுகிறது. அப்படி என்றால், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காத, நிரந்தரமற்ற, மாறக்கூடிய விஷயம் இருக்கிறது என்பதும் உள்ளார்த்தமாகத் தொக்கி நிற்கிறது.

எப்போதும் இருக்கக் கூடியது எது? நமக்கு (மனித குலத்திற்கு) தெரிந்து சில லட்சம் ஆண்டுகளாகவும் இன்னும் பல லட்சம் ஆண்டுகள் இருக்கப் போவது என்று நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகம் நிரந்தரமானது. உலகம் என்பது, அதில் உள்ள உயிரற்ற, உயிர் உள்ளவை அனைத்தும் சேர்ந்ததுதான். உயிர் உள்ளவற்றில் ஆறாவது அறிவு சில நேரங்களில் செயல்படும் சாத்தியம் உள்ள உயிரினம் மனிதன். அதாவது மனிதனுக்கு இந்த உலகம், பிரபஞ்சம் பற்றிய விழிப்புணர்வு உள்ளது. இதை  ‘பிரம்ம ஞானம்’ அல்லது  ‘ஆத்ம ஞானம்’ என்று நான்மறைகள் கூறுகின்றன.

ஆத்ம ஞானமே நிரந்தரமானது, எப்போதும் இருக்கக் கூடியது, சனாதனம் என்கிறது மறைநூல்கள். சனாதனத்திற்கு இன்னொரு வார்த்தையும் உள்ளது, அது ஸ்ருதி. அப்படியானால் மாறக் கூடியதற்கு என்ன சொல்? அது ஸ்மிருதி.

பாரத நாடு மிகப் பரந்த நாடு; பல்வேறு மொழிகளும் சமூகங்களும் பழக்க வழக்கங்களும் கொண்டது. இந்த நாடு முழுவதும் ஒரே ஸ்மிருதி – சமூக சட்டங்கள், நெறிமுறைகளின் தொகுப்பு – எப்பொழுதும் பின்பற்றப்பட்டதில்லை. ஒரே நேரத்தில் பல்வேறு ஸ்மிருதிகள் நாட்டில் பல்வேறு பகுதியில் நடைமுறையில் இருந்துள்ளன என்று ஸ்மிருதியைப் பற்றி அடிப்படைப் புரிதலை ஏற்படுத்துகிறார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.

இன்றும் கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தினர் யாக்ஞவல்கியர் ஸ்மிருதியை தங்கள்  வாழ்வில் பின்பற்றுகின்றனர். தமிழக அரசியல் மேடைகளில் பெரிதும் உதைபடும்  ‘மனு ஸ்மிருதி’ இன்று எந்தப் பகுதியில்- குறிப்பாக தமிழகத்தில் – பின்பற்றப்படுகிறது என்பது கேள்விக்குறி. நாடு முழுவதும் இன்று நம்மைக் கட்டுப்படுத்தும் அரசியல் சாசனம்  ‘பீம ஸ்மிருதி’ என்று சிலரால் அழைக்கப்படுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

திராவிடக் கட்சிக்காரர்களுக்கு ஸ்ருதி, ஸ்மிருதி என்ற இந்த இரண்டு வார்த்தைகள் இடையே குழப்பம் இருக்கிறது அல்லது வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சனாதனத்திற்கும் சாதாரணத்திற்கும் உள்ள வேறுபாடு இப்போது விவாதப் பொருளாக மாறி உள்ளது. அறிவார்ந்த விவாதமாக இருந்தால் விளக்கம் கூற முடியும். ஆனால் தமிழ்நாட்டில் இது அரசியல் ஆகியுள்ளது.

அரசியல் ஒரு சாக்கடை என்று நினைக்கும் பலரும், இன்றைய அரசியலில் குதித்தாடும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின்  ‘சனாதன எதிர்ப்பல்ல ஒழிப்புதான் சரி’ என்ற பேச்சை அருவருப்புடன் பார்க்கிறார்கள். எதிர்ப்பு வந்தவுடன் சமூக நீதி, பெண் விடுதலை, ஆலயப் பிரவேசம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர், பிராமணிய ஆதிக்கம் என்ற வார்த்தைகள் எல்லாம் தற்காப்புக் கேடயங்களாக எழுகின்றன. ஆனால் இவை நடைமுறையில் இல்லாததால் இந்த வார்த்தைக் கேடயங்களும் உறுதியாக நில்லாமல் உடைந்து வீழ்கின்றன.

உதயநிதியின் வீச்சை உடைத்தெறியும் பணியை செவ்வனே அதே மேடையில் செய்தவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.  ‘சனாதனம் என்றால் இந்து மதம்தான்’ என்று அவர் தெளிவாகச் சொன்னார். ஒருவகையில் உண்மைதான். சனாதனம் என்ற கருத்தியலை பாரத நாட்டு எல்லைக்கு வெளியே பிறந்த எந்த சமயமும் தனதென்று சொந்தம் கொண்டாடுவதில்லை.

அல்லா மனிதனைப் படைத்தார். மனிதன் அனுபவிப்பதற்காக (மனுஷி உட்பட) மற்றவற்றைப் படைத்தார் என்கிறது இஸ்லாமிய மதம். விலக்கப்பட்ட கனியை உண்ட பாவத்தினால், படைத்தவரால் சபிக்கப்பட்டதே மனித இனம் என்கிறது விவிலியம்.  ‘எல்லா உயிர்களும் இவ்வுலகில் வாழ உரிமை உள்ளது. எல்லா உயிரினமும் தெய்வ அம்சத்தைக் கொண்டவை. அவை அனைத்தும் மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திக்கிறேன்’  என்கிறது சனாதனம். இந்த சனாதனத்தை எதிர்க்க நினைப்பதே அறிவீனம்; ஒழிக்க வேண்டும் என்பது இனப்படுகொலை.

நடனத்தையும் நடன கலைஞரையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாது.  நாட்டியக் கலையை ஒழிக்க வேண்டும் என்றால் அக்கலைஞரை ஒழிக்க வேண்டும். கலைஞரை ஒழிக்காமல் அந்தக் கலையை ஒழிக்க முடியாது. குரலிசையும்  அப்படியே. கலை வேறு, கலைஞர் வேற அல்ல. சனாதனம் வேறு, அதை வாழ்வியலாகக் கொண்ட சனாதனி வேறல்ல என்கிறார் மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசன்.

தர்மம் என்பதை மதம் என்று மொழிபெயர்க்கிறார்கள் பலர். கடமை என்று ஸ்ரீமத் பகவத்கீதை பொருள் கூறுகிறது என்கிறார் லோகமான்ய பாலகங்காதர திலகர் பெருமான். மனிதனை வாழ்விக்கின்ற, உயர்த்துகின்ற செயல்களை கடமையென,   தர்மமென வரையறுக்கிறார் அவர். தன் மனைவியைத் தவிர மற்ற பெண்களை தாயாக, சகோதரியாகக் கருதுவது மனிதனை உயர்த்தும் செயல். இதுவே ஹிந்து (சனாதனம்) என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்த இடத்தில் முதியவர் ஈவெரா சொன்னதை ஒப்பிட்டு, வேற்றுமையை, சனாதன ஒழிப்பைப் புரிந்து கொள்ளவும்.

தர்மம் என்ற வார்த்தைக்கு முன்னொட்டாக வரும் சனாதனத்தை வெட்டிவிட்டு அங்கு  ‘வருண’ என்ற சொல்லை இணைத்து வர்ணாசிரம தர்மம் என்றும், அது தர்மமா என்றும் கேலியாகக் கேட்கப்படுகிறது. வர்ணாசிரம தர்மம் என்றால் குலத்தொழில் என்று விளக்கப்படுகிறது. ஒரு வாதத்திற்காக சரியென்று எடுத்துக்கொண்டு, குடும்பக் கட்சி வாரிசு அரசியல் பற்றி யாரும் கேள்வி எழுப்பிவிடக் கூடாது. அப்படி எழுப்பினால் அது சனாதனம். அது எதிர்க்கப்பட வேண்டியதல்ல, ஒழிக்கப்பட வேண்டியது. பாஜகவைத் தவிர மற்ற இ.ந்.தி.ய. கூட்டணிக் கட்சிகள் எல்லாம் இந்த விஷயத்தில் ஒன்றுபட்டுள்ளன.

வேடிக்கை என்னவென்றால், இதை ஏற்றுக் கொள்ளாத கம்யூனிஸ்ட் கட்சியினர் இதற்கு மேடை அமைத்துக் கொடுத்துள்ளதுதான். அதே மேடையில் விரதமிருந்து சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட்டு வரும் சேகர் பாபு கைதட்டி ரசித்ததையும் கண்டோம். அவர் ஹிந்து  அறநிலையத் துறை அமைச்சராக இருப்பது வெட்கக் கேடானது. உடனடியாகப் பதவி நீக்கம் அல்லது மாற்றம் செய்யப்படுவது தான் சரியானது.

ஹிந்து சமுதாயத்தில் உள்ள சாதிகள் தான் சமூகம், அதில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது, அதை நீக்க வேண்டும் என்பதே சமூகநீதி என்றுதான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மாறாக, இஸ்லாமிய சமூகத்தினர், கிறிஸ்தவ சமூகத்தினர் அல்லது மொழி வழியாக தெலுங்கு சமூகத்தினர், மலையாளிகள், கன்னட சமூகத்தினர் என்று நீங்கள் புரிந்து கொண்டால் நீங்கள் சனாதனி; ஒழிக்கப்பட வேண்டியவர். தலித் ஆயர்கள் நியமிக்க வேண்டும் என்று கேட்பது சமூகநீதி எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

கற்பில் சிறந்தவள் சீதையா, திரௌபதியா என்று விவாதிக்க வேண்டும். அதே வேளையில் ஒரு பெண் பலருடன் உடல்ரீதியாக உறவு கொள்வதையும், திருமணம் கடந்த பாலுறவு என்பதையும் முற்போக்காகவும் பெண் விடுதலையாகவும் கருத வேண்டும். தாலி கட்டுவது பிற்போக்கு; மேடையில் தாலி அறுப்பது பெண் விடுதலை. தலைவர் எடுத்துக் கொடுத்தால் அறுபதாம் கல்யாணத்தில் மேடையில் இரண்டாம் தாலி கட்டலாம். அந்த உரிமை அவாளுக்கு மட்டுமே உள்ளது. இதற்கு மாறாக நீங்கள் நினைத்தால் சனாதனி; ஒழிக்கப்பட வேண்டியவர்.

அடுத்து, தீட்டு. தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்பதெல்லாம் ஹிந்து சனாதனம். இது எல்லா மதங்களிலும் இருக்கிறது. விவிலியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பல ஹதீஸ்களை என்னால் மேற்கோள் காட்ட முடியும் என்கிறார் பிரபல எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் (தினமலர்- சிந்தனைக்களம்). ஆனால் அவர் பார்ப்பனிய சனாதனி. எனவே……

உலகம் முழுக்கவும் சனாதனம், தர்மம் என்ற வார்த்தைக்குப் பொருள் ஒரே விதமாக இருந்தாலும், தமிழகத்தில் மட்டும் முற்றிலும் வேறுவிதம். அதற்குக் காரணம் திராவிடக் கருத்தியல். இந்த விஷ(ம)ச் சிந்தனையிலிருந்து மாற மறுப்பது மதியீனம்; அதுவே ஒழிக்கப்பட வேண்டியது. அதற்கு சிறந்த வழி வாக்குச்சீட்டு. சிரிக்கும் காந்தியை மீறி சீறும் வாக்காளர்கள் தேவை.

  • திரு. திருநின்றவூர் ரவிகுமார், ‘பொருள்புதிது’ தளத்தின் ஆசிரியர்குழு உறுப்பினர்.

$$$

32. அடக்கம் அமரருள் உய்க்கும்.

-ச.சண்முகநாதன்

திராவிடத்தின் விஷ நாக்குகள் மீண்டும் ஹிந்துக்களை தீண்டிப் பார்த்திருக்கின்றன. 

பொழுது போகாத ஒரு வீணன் தி.க. தலைவன் தலைமையில்,  கலாச்சாரமேதும் இல்லாத கயவர்கள் கொண்ட கழகம், தமிழக அரசை ஆட்டுவிக்கிறது. 

விடலைப்பருவத்தில் இருந்து இன்னும் முதிர்ச்சியடையாத, எதற்கோ விலைபோன   ‘விலை’யாட்டுத் துறை அமைச்சர் அடங்காமை கொண்டு  ‘ஹிந்துமதம் எனும் சனாதனத்தை ஒழிப்பேன்’ என்று ஹிரண்யனாய் ஊளையிட்டிருக்கிறார். 

இருக்கிறது என்பதற்கு சித்தாந்தம் தேவைப்படுகிறது. எதுவும் இல்லை என்பதற்கு சித்தாந்தம் எதற்கு? எதுவும் இல்லை என்று சொல்வதற்கு அறியாமை மட்டும் போதுமே. திராவிடத்திடம் அறியாமை கொட்டிக் கிடக்கிறது. அறியாமையும் அடங்காமையும் திராவிடத்தின் சொத்து. 

தீண்டாமையைப் போதிக்கிறது ஹிந்துமதம் என்று அறிவிலித்தனமாகக் கூவி வருகிறதே! எத்தனை உதாரணம் சொல்லிப் புரிய வைக்க முயன்றாலும் மேலை நாட்டுப் பணத்துக்காக மானத்தை விற்ற கூட்டம் செவிப்புலன்களையும் விற்று விட்டது. எதுவும் காதில் ஏறாது. 

உலகப் பொதுமறை என்றும், வள்ளுவன் சொல்லாதது எதுவும் இல்லை என்றும்,  திருவள்ளுவர் ஹிந்து அல்ல என்றும் கூவிக் கொண்டிருக்கும் கூட்டம், வள்ளுவன் ஏன் தீண்டாமை பற்றி ஒரு குறளும் எழுதவில்லை என்று என்றாவது யோசித்திருக்கிறதா? 

அவ்வளவு பெரிய குற்றம் 2000+ வருடங்களுக்கு மேலாக திணிக்கப் பட்டிருக்கிறது என்று ஒப்பாரி வைக்கும் கூட்டம், வள்ளுவன்  ‘தீண்டாமை’ என்ற அதிகாரம் ஏன் எழுதவில்லை என்று கேட்டிருந்தால் ஓரளவுக்கு உண்மை தெரிந்திருக்கும். இந்த தீண்டாமை என்பதே அந்நியர் நம் மேல் செய்வித்த சதி என்று. 

இங்கு எல்லாமே எல்லாருக்கும் கிடைத்துக் கொண்டுதான் இருந்திருக்கிறது. பரிணாம வளர்ச்சியின் படி எல்லோரும்  நகர்ந்திருக்கிறோம் தற்காலத்தில். இனி வரும் காலங்களில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நடந்ததற்கெல்லாம் பிராமணர்களைச் சாடுவது வேசித்தனம்.

இங்கு எல்லோரும் சனாதன மதத்தைத் தழுவி போற்றி வந்திருக்கின்றனர். அது தாயைப் போற்றுவது போல இயற்கையான ஒன்று. 

பள்ளர் இனமக்களை கோயிலில் நிறுத்தி அவர்களுக்கு முறை செய்து கையில் திருநீறு கொடுத்து திருவிழாவைத் தொடங்கியுள்ளது இந்த ஹிந்து தமிழ் சமூகம், 

“குதிரை சுமந்து குயவனார்‌ வந்தார்‌ வணங்கி அய்யனைக்‌  கும்பிட்டு மனத்‌ தெம்பிட்டு உடனே இயல்புடன்‌ பரிதனைச்‌ சன்னதி  முன்‌னிலங்க நிறுத்தினார்‌ பரியை நிறுத்தித்‌ தூபங்‌ கொடுத்துப்‌ பள்ளர்  கையில்‌ விபூதி கொடுக்க இரு கையினாலே வாங்கிப் பூசிக் கொண்டெருது கட்டுவாராம்‌”

பள்ளர் இனமக்களின் கையில் விபூதி கொடுத்து பின்னரே திருவிழா தொடங்கும் மரபு இருந்திருக்கிறது எங்கள் சனாதன தர்மத்தில். 

இதைத்தான் ஒழிக்கப்போகிறாரா, விடலைத் துறை அமைச்சர்?

எல்லோரும் நெற்றியில் நாமம் தரித்திருந்தோம். காலப்போக்கில் பிராமணர்கள் மட்டுமே அதைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். கோனார்கள் நாமம் தரித்த நெற்றியுடன், குடுமி வைத்துக் கொண்டிருந்தனர். 

“பட்டை நாமம்‌ போட்டுக்‌ கொண்டு, பல்லைப்‌ பல்லைக்‌ காட்டிக்‌ கொண்டு, குட்டியு மாட்டையு மோட்டிக்‌ கொண்டு, கோனார்‌ வந்து தோன்றினார்‌” என்று 19ஆம் நூற்றாண்டு இலக்கியம் பாடுகிறது.

இன்றும் யாதவர்கள் நாமம் தரிப்பதுண்டு என்றாலும் எண்ணிக்கையில் குறைவே. ஆனால் இன்றைக்கு நாமம் போடுவது பிராமணர்களின் குணமாக மட்டுமே கருதப்படுகிறது. பழமையை மறக்காமல் அதைப் போற்றுவது பிராமணர்களின் நல்ல குணம். இசை , நடனம், இலக்கியம் எல்லாவற்றையும் விடாமல் பற்றிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக்க் கடத்துவது பிராமணர்களே. 

இந்த மண்ணுக்குரிய பெருமைகளை காற்றில் பறக்கவிடாமல், அவற்றையே  மூச்சாகக் கொண்டு வாழும்  சமூகம் பிராமண சமூகம். அந்த சமூகத்தின் மேல் உள்ள காரணமற்ற வெறுப்பில்  ‘சனாதன தர்மத்தை ஒழிப்பேன்’ என்பது அடங்காப் பிடாரித்தனம். 

விடலைப்பருவ அமைச்சரின் அறியாமை தீர என்ன வழி என்று தெரியவில்லை. எதையும் புரிந்து கொள்ளும் திறனற்றவராக இருப்பது மட்டும் அல்ல, அதுவே பெருமை என்று வேறு நினைக்கிறார். அவரது குடும்ப வியாதியும் அதுவே. இந்த அடங்காமை இவரின் சித்தாந்தத்தை ஆரிருளில் தள்ளுவது உறுதி.

அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்.

  • திரு. ச.சண்முகநாதன் முகநூலில் எழுதிய பதிவு இது…

$$$

33. கமலம்… பாத கமலம்!

-கோ.ஆலாசியம்

ஒவ்வொரு வர்ணத்தாரும் படைத்தவனின் உடலில் வெவ்வேறு பகுதியில் படைக்கப்பட்டான், அதில்  ‘சூத்திரன்’ படைக்கப்பட்டது இறைவனின் திருப்பாதமே என்பது வேதாந்த விளக்கம்.  இதனையே சனாதன எதிர்ப்பாளர்கள் தவறாகப் புரிந்துகொண்டு விமர்சிக்கிறார்கள்.

ஆயினும் வேதங்களின் இருப்பிடம் இறைவனின் திருப்பாதங்களே என்பது ஞானிகளின் கூற்று. அந்தத் திருப்பாதங்களே மோட்சத்தின் வாசல். அதனால் தானே, அதனை சிரமேற் கொண்டு தொழுதேத்துவர் மாமுனிகள் தொட்டு யாவரும். அத்திருப்பாதங்களினும் உயர்ந்த ஒன்று தான், யாருக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் உண்டோ! 

மனுதர்மங்கள் பல்வேறு காலத்தில், பல்வேறு பட்டவர்களால் வகுக்கப்பட்ட அந்தந்தக் காலத்தோடு இயைந்த அறமாக வகுக்கப்பட்டவை. அவை ஸ்மிருதிகளாக கருதப்படும் மாற்றத்திற்கு உகந்தவை. 

வர்ணாசிரமும் அத்தகையதே! வேதம் ஒரு போதும் வர்ணத்தை பிறப்பின் அடிப்படையில் வகைப்படுத்தவில்லை; மாறாக தனிமனித குணம் ஒழுக்க நெறிமுறைகளைக் கொண்டொழுகும் அவனது தனி மனித வாழ்வியல் தன்மையிலேயே அவனை ஒவ்வொரு வர்ணத்தின் அடிப்படையில் வகைப்படுத்தியது. 

அவ்வகையிலே நந்தனாரையும், இன்னும் சில சிவனடியார்கள், ஆழ்வார்களையும் நாம் உதாரணமாகக் காணலாம்.

சூத்திரன் இறைவனின் திருப்பாதங்களில் இருந்து, அதன் மிக அவசியமான உயர்ந்த அடிப்படை தன்மையோடு படைக்கப்பட்டான் என்பதை உணர்ந்த  அறிவுடையோர்கள், வேத ஞானம் கொண்டோர், அவர்களை கீழாக ஒருபோதும் எண்ணியது, எண்ணுவது, எண்ணப்போவதும் இல்லை.

அத்தகைய மாமுனிகள் தொட்டு, அனைத்து மகாத்மாக்களும், எந்த இடத்திலிருந்து சூத்திரன் படைக்கப்பட்டதாக அறிகிறோமோ, அந்த இடமான, இறைவனின் திருப்பாதங்களையே ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலராகவும், வேதங்களாகவும் தங்களுக்கு மோட்சமளிக்கும் இடமாகக் கருதி எப்போதும் தங்கள் சிரமேற்கொண்டு தொழுது வாழ்வில் உயர்ந்து நற்கதி அடைகிறார்கள். 

இப்போது புரிய வேண்டும், இறைவனின் திருபாதங்கள் எத்தனை உயர்வானவை என்று. அறிவுடையாரின் புத்திகளுக்கு மட்டுமே இவை  புரியும்.

வேதம் பரப் பிரமத்தின் சுவாசம், அது பரப் பிரமத்தைப் போன்றே அனாதியானது, அழிவற்றது;  ஊழியில் அதனோடே ஒடுங்கும் தன்மையது.

வர்ணத்தில் உயர்வு – தாழ்வு காண்பது; அறிவு அணுவளவும் அற்ற முட்டாள்களின் செயல்களே. அவன் எந்தக் குடியில் பிறந்திருந்தாலும் சரி, எத்தனை உயரிய இகலோகம் பற்றிய கருத்துக்களை வாசித்திருந்தவனாயினும் சரி, அப்படி அறிவார்ந்தவர்கள் ஒருபோதும் யாரையும் வர்ண பேதத்தால் கீழாக நடத்த மாட்டார்கள்.

வேதங்களை அறிவோடு அணுகி அறிந்து உணர்ந்தவனுக்கே இவை புரியும் என்பதே உண்மை.

  • திரு. கோ.ஆலாசியம் சிங்கப்பூரில் பணிபுரியும் பொறியாளர். இது இவரது முகநூல் பதிவு.

$$$

34. தமிழக அரசின் பாட நூலில்  ‘சனாதனம்’

-ஆசிரியர் குழு

கீழே உள்ள ஆதாரம், தமிழக அரசின் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்புக்கான பாடநூலில்  (மேல்நிலை இரண்டாம் ஆண்டு- அறவியலும் இந்தியப் பண்பாடும்) உள்ளது. பள்ளிக் கல்வித் துறை வெளியீடு. 

இதில் 58ஆம் பக்கம், ‘இந்தியப் பண்பாடும் சமயங்களும்’ என்ற பாடத்தில் உள்ள விளக்கம் இது. ‘இந்து மதம் தான் சனாதன தர்மம்’ என இந்தப் பாடப் புத்தகத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

“இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.  ‘சனாதனம் தருமம்’ என்றால்  ‘அழிவில்லாத, நிலையான அறம்’ எனப்படும்...” 

-என்கிறது பாட நூலில் உள்ள விளக்கம்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் பொய்யாமொழி மகேஷ், தனது சக அமைச்சரும் கழக முதலாளியுமான திரு. உதயநிதி ஸ்டாலினிடம் இந்தப் பாடத்தை எடுத்துக்காட்டி, விளக்குவாரா?

இனிமேலும் “நான் சனாதனத்தை அழித்தே தீருவேன்; நான் இந்து மதத்தை அழிப்பதாகக் கூறவில்லை” என்று மறுபடியும் உளறுவாரா, இளவரசர்?

.

(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)

$$$

Leave a comment