வாழும் சனாதனம்! – 7

கவிஞர் நந்தலாலா, பி.ஏ.கிருஷ்ணன், ஜடாயு, பா.இந்துவன், கோதை ஜோதிலட்சுமி

அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டதை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கிறது. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிகக் குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன… இது பகுதி-7…

26. வெண்ணெய் வெட்டும் மொன்னைக் கத்திகள்!

(கவிதை)

-கவிஞர் நந்தலாலா

வர்ண தர்மங்கள்
வாழும் சமூகத்தின்
வாஸ்துப் பிழைகள்,
அதனால் அதை இடிப்போம்.!
கடப்பாரை ஏந்துங்கள்,
கண்ணில் நெருப்போடும்
புல்டோசரோடும்
புறப்பட்டு வாருங்கள்!

முரசடித்துக் கூப்பிட்டும்
மூச்சில்லை, பேச்சில்லை.
அக்கப்போர், பொய்க்குதிரை
அட்டைக் கத்திகளை
நம்பிக் களமாடும்
நம்பிகளும் இன்றில்லை.
சாகா வரம் பெற்ற
சனாதனமோ சிரிக்கிறது!

***

பிள்ளைப் பிராயத்திலே- மனம்
பேதப் படுமுன்னே
கல்வி கலைகளிலே- நீ
கால்பதித்து நின்றுவிடு!

காமம் அரும்பியதேல் – ஒரு
கன்னிக்கு மாலையிடு!
ஏமச் சுற்றத்தை
எப்போதும் பேணியிரு!

ஊருணி நீர்போல – நீ
உனையே தந்துதவு!
நாட்டுக்கு நன்கொடைபோல்- நீ
நல்லதொரு சந்ததி தா!

மண்ணுயிர்க்கு நல்லன செய்!
மற்றவர்க்குச் செய்ததுபோல்
தன்னுயிர்க்கு நல்லதுவாம்
தவம் செய்: காடுபுகு!

ஆவி விடுமுன்னே- எமன்
அழைப்பு வரும் முன்னே
காவித் துறவியர் போல் – மெய்
கண்டு தெளிந்து விடு!

இதுவும் சனாதனம்தான்.

***

பசி தீர்க்கும் அன்னவயல்,
பாலூட்டும் தாய்ப்பசுக்கள்,
இவ்விரண்டும் பேணி
எல்லோர்க்கும் போய் உதவி,
வேளாளன் வாழ்ந்த
விதமெல்லாம் பார்த்தாயா?

விளைந்த பொருள் யாவும்
வீடெங்கும் போய்ச் சேர
கட்டுமரம் ஏறி
சுற்றம் துணை நீங்கி
கடல் கடந்த வாணிபரின்
கதை எல்லாம் கேட்டாயா?

சத்தியமும் தர்மமும்
தரைமீது வாழ்வதற்கே
சத்திரியர் பலர் வாழ்ந்த
சங்கதியை அறிவாயா?

வேதமும் கல்வியும்,
வித்தையும் தன் வாழ்வும்,
விற்பனைக்கு வைக்காமல்
அந்தணர் பலர் வாழ்ந்த
சிந்தை நலம் உணர்ந்தாயா?

அதுவும் சனாதனம்தான்.

***

சட்டம் இயற்றி நீ
சனாதனத்தைச் சாய்ப்பாயா?

வாலிபத்தில் சந்நியாசம்,
வயோதிகத்தில் சம்பாத்யம்,
மழலைக்கு மணவாழ்க்கை,
கிழவர்க்கே கல்லூரி.

இதுவே இனிநீதி
என்று முரசடிப்பாயா?

அரிசி வயல்களிலே
அரளி விதைப்பவனே
உயர்ந்த விவசாயி…

பலபொருளும் பதுக்கி
பணம்பார்க்க கற்றவனே
வணிகர்குல திலகம்…

சட்டத்தைக் குருடாக்கி
சத்தியத்தின் நாவறுத்து
இஷ்டப்படி வாழ்வோன்
இன்றுமுதல் சத்திரியன்…

இப்படி ஏதேனும்
மாற்றங்கள் செய்வாயா?

வெண்ணெய் வெட்டவும்
வேலைக்கு உதவாத
மொன்னைக் கத்தியே!
சனாதனத்தை எப்படி நீ
சாய்ப்பாயோ, சொல்லப்பா!

.

  • திரு. நந்தலாலா, திரையிசைக் கவிஞர்.
  • இது இவரது முகநூல் பதிவு.

$$$

27. தடம் புரளும் கம்யூனிஸ்ட்கள்

-பி.ஏ.கிருஷ்ணன்

இன்றைய (04.09.2023) தீக்கதிரின் தலையங்கத்தை மார்க்ஸ், ஏங்கல்ஸ் மற்றும் லெனின் படித்திருந்தால் மூன்று பேரும் தூக்குப் போட்டுக்கொண்டு செத்துப் போயிருப்பார்கள்.

திமுகவிற்கு விலை போய்விட்டால், மார்க்சிய சிந்தனை என்றால் என்ன என்பதைக் கூடப் படிக்க முடியாமல் அறிவுச் சோம்பேறித்தனம் ஆட்டிப் படைக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம்:

“அமைச்சர் உதயநிதி பேசும்போது, கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி உடன்கட்டை ஏற வைத்தது, கைம்பெண்களுக்கு மொட்டைஅடித்து வெள்ளைப்புடவை உடுத்தச் சொன்னது, குழந்தைத் திருமணங்களை நடத்தி வைத்தது, இதைத்தானே பெண்களுக்கு சனாதனம் செய்தது என்று சரியாகவே கேட்டார். பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகளை எதிர்த்து இந்தியாவில் நீண்ட நெடிய போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தக் கொடுமைகள் எல்லாம் மநு அநீதியின் பெயராலும் வர்ணாசிரமத்தின் பெயராலும் நடத்தப்பட்டன என்பதை இன்றைக்கு அலறுபவர்கள் மறுக்க முடியுமா?”

இதை எழுதியவர் அல்லது எழுதியவர்கள் Engels எழுதிய Anti-Duhring நிச்சயம் படித்திருக்க மாட்டார்கள். இனவெறிக் குப்பைத்தொட்டியில் உழலுபவர்களுக்கும் மார்க்சிய அடிப்படைப் புத்தகங்களுக்கும் என்ன தொடர்பு?

இது ஏங்கல்ஸ் சொல்வது:

The idea that all men, as men, have something in common, and that to that extent they are equal, is of course primeval. But the modern demand for equality is something entirely different from that; this consists rather in deducing from that common quality of being human, from that equality of men as men, a claim to equal political and social status for all human beings, or at least for all citizens of a state or all members of a society. Before that original conception of relative equality could lead to the conclusion that men should have equal rights in the state and in society, before that conclusion could even appear to be something natural and self-evident, thousands of years had to pass and did pass.

இதைச் சொல்லி விட்டு, சமத்துவம் என்பது எவ்வாறு மனிதகுல வரலாற்றில் வளர்ச்சி அடைந்தது. பெண்கள், அடிமைகள் போன்றவர்களுக்கும் சமத்துவம் வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு படிப்படியாக உருவானது என்பதையும் மனித உரிமைகள் என்ற கோட்பாடு எவ்வாறு உருவானது என்பதையும் விளக்குகிறார்.

இதைக் கடைசியாகச் சொல்கிறார்:

The idea of equality, both in its bourgeois and in its proletarian form, is therefore itself a historical product, the creation of which required definite historical conditions that in turn themselves presuppose a long previous history.

இதுதான் இந்தியாவிலும் நடந்தது. இன்று எந்தப் பெண்ணும் தீக்குளிக்கவில்லை. குழந்தைகள் திருமணம் சட்டப்படித் தடை செய்யப்பட்டிருக்கிறது. வெள்ளைப் புடவை, மொட்டை போன்றவை எதுவும் இல்லை. இவற்றிற்கும் சனாதனத்திற்கும் என்ன தொடர்பு? எந்த இந்துக் கட்சியினர் பெண்கள் இவற்றைச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்? பாஜக சொல்கிறதா? நினைத்தாலும் அவர்களால் சொல்ல முடியாது. அதுதான் ஏங்கல்ஸ் சொல்லும் வரலாற்றின் பாதை. ஒவ்வொரு கலாச்சாரங்களுக்கும் தனித்தனியாகப் அப்பாதை அமைகிறது. இதேபோல சமத்துவம் என்பதற்கும், ஒவ்வொரு கலாச்சாரமும் அதற்குத் தேவையான பாதையை அமைத்துக் கொள்ளும்.

எனவே அன்றைய இந்தியாவில் சமத்துவம் இல்லை, அதற்கு சனாதனம்தான் காரணம், அதை ஒழிக்க வேண்டும் என்று புறப்படுவது அடிப்படையில் மார்க்சியக் கோட்பாடுகளுக்கு எதிரானது. மார்க்சியம் தெரிந்தவர்கள் இது தொழிலாளி வர்க்கத்தைத் திசை திருப்பும் சதி என்பதைத் தெளிவாக அடையாளம் கண்டு கொள்வார்கள். முதலாளித்துவம் அதிக வலு அடையும் போது ஆண்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பெண்களுக்குச் சமத்துவம் வந்து சேர்ந்து விடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

மதத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராட்டம் நடத்துகிறோம் என்று சொல்வது கேலிக் கூத்து மட்டும் அல்ல, அந்த இயக்கத்திற்குச் செய்யும் துரோகம்.

இது புகாரின் மற்றும் ப்ரோப்ராஸென்ஸ்கி எழுதிய The ABC of Communism என்ற புத்தகத்திலிருந்து:

But the campaign against the backwardness of the masses in this matter of religion, must be conducted with patience and considerateness, as well as with energy and perseverance. The credulous crowd is extremely sensitive to anything which hurts its feelings. To thrust atheism upon the masses, and in conjunction therewith to interfere forcibly with religious practices and to make mock of the objects of popular reverence, would not assist but would hinder the campaign against religion. If the church were to be persecuted, it would win sympathy among the masses...

இவர்கள் சொல்வது 1920 இருந்த ரஷ்யாவைப் பற்றி. போல்ஷிவிக் புரட்சி வெற்றியடைந்த பின். நாம் இருப்பது மதம் வலுவாக வேரூன்றியிருக்கின்ற நாட்டில். அதில்  ‘சனாதனத்தை ஒழிக்கிறேன்’ என்று கம்யூனிஸ்டுகள் கிளம்புவது தங்களைத் தாங்களே ஒழித்துக் கொள்வதற்குச் சமமாகும்.

***

சனாதன ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்களைப் படித்தேன்.

அவற்றில் சில:

‘ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் இருக்கும் மனுவின் சிலை அகற்றப்பட வேண்டும். அரசு அலுவலகங்களில் மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசு அலுவலகத்தில் உள்ள எந்த வழிபாட்டிடத்தையும் அரசு நிர்வகிக்கக் கூடாது. அமைச்சர்களும் அரசு அலுவலர்களும் மதம் சார்ந்த, சாதி சார்ந்த நிகழ்வுகளில் பங்கெடுக்கக் கூடாது. பொதுச் சுடுகாடு எல்லா ஊர்களிலும் வேண்டும். கலப்புத் திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கட்டணமில்லாக் கல்வியும் வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வேண்டும்.’

இவை அனைத்தும் நடந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். இத்தீர்மானங்களை அங்கீகரித்து அரசு ஆணைகள் வெளியிடும் வரை போராடுவோம் என்று அறிவித்திருந்தால், இவர்களை யோக்கியர்கள் என்று மக்கள் கருதுவார்கள்.

இனி கம்யூனிஸ்டு இயக்கம் லும்பன் வர்க்கத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது என்பதற்குச் சான்றாக விளங்கும் தீர்மானங்கள் சில நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. கணபதி ஹோமத்திலிருந்து பூப்பு வரை தீட்டைக் குறித்த தீர்மானங்கள். இச்சடங்குகள் அனைத்தும் பார்ப்பனியச் சடங்குகளாம். எனவே அகற்றப்பட வேண்டுமாம்.

‘தீட்டு’ என்பது பார்ப்பனியத்திற்கு மட்டும் சொந்தமானது என்று நினைத்து, தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு அசாத்தியமான மொண்ணைத்தனம் வேண்டும். அல்லது அசாத்தியமான இனவெறித்தனம் வேண்டும். தங்களை  கம்யூனிஸ்டு என்று சொல்லிக் கொள்பவர்கள் எவரும் இம் மூடத்தனத்தைச் செய்ய மாட்டார்கள். மரணம், மாதவிடாய், இறந்த மிருகங்களைச் சாப்பிடுதல் போன்றவை உலகெங்கும் – ஆப்பிரிக்கா, சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற பல கலாச்சாரங்களிலும் தீட்டாக அறியப்படுகின்றன. அதே போன்று புதுமனை புகுவதிலும் பலத்தரப்பட்ட சடங்குகள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகின்றன.

தீட்டு என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது.

உதாரணமாக இவை பைபிள் சொல்வது:

“(லேவியராகமம்): 1. அசுத்தமான காட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால், அவன் தீட்டும் குற்றமும் உள்ளவனாவான்.

2. மனைவி மாதவிலக்கில் இருக்கும்போது, அவளை வெற்றுடம்பாக்காதே!

3. உனக்கு அடுத்திருப்பவனின் மனைவியுடன் இன்பக்கலவி கொண்டு உன்னைத் தீட்டாக்கிக் கொள்ளாதே.

4. பெண்ணுடன் பாலுறவு கொள்வதுபோல ஆணோடு கொள்ளாதே! அது அருவருப்பு.

5. இவற்றில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டாக்கிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட வேற்றினத்தவர். இவற்றால் தீட்டானதால் நாடே தீட்டாகிவிட்டது.

6.  மனிதப் பிணத்தைத் தொடுபவன் எவனும் ஏழு நாள்களுக்குத் தீட்டுப்பட்டிருப்பான்.”

இதேபோன்று கணக்கற்ற இஸ்லாமிய ஹதீசுகளை என்னால் மேற்கோள் காட்ட முடியும்.

தீட்டை ஒழிப்பதையும் சனாதனம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதை ஒழிப்பதையும் ஒன்றாக நினைத்து, இது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவது போலக் கோமாளித்தனம் வேறு ஏதும் கிடையாது.

இந்து மதத்தில் தீட்டைக் குறித்த சடங்குகள் அதிகம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவை சமூகத்தினால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. நகரமயமாதல் நடக்கும் போது அவை மாறுதல்கள் அடைகின்றன.

இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். தமிழகத்திலிருந்து பிராமணர்கள் தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள். குறிப்பாக சடங்குகளை நடத்தும் பிராமணர்கள். இன்னும் சில பத்தாண்டுகளில் இவர்களைத் தேடுபவர்களின் எண்ணிக்கை கூடுமே தவிர, குறையாது. சடங்குகளைத் தீர்மானிப்பவர்கள் மக்கள்; மார்க்சீயப் போர்வையில் அலைந்து கொண்டிருக்கும் தற்குறிகள் அல்ல.

இன்னொரு வேடிக்கையான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பார்ப்பனச் சடங்குகளுகளுக்கு மாற்றாக புதிய கொண்டாட்டங்களை உருவாக்க வல்லுனர் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டுமாம்! இவர்களை விட படு கேவலமான போலிகளை எங்காவது பார்க்க முடியுமா? மீண்டும் சொல்கிறேன். கொண்டாட்டங்கள் மக்களால் தீர்மானிக்கப்படுகின்றன;  குழுக்களால் அல்ல.

இவர்களால் நிறைவேற்றப்படாத முக்கியமான தீர்மானங்கள், சாதி ஒழிய வேண்டும் என்பதும் அதற்கான செயல்முறைகள் என்ன என்பது பற்றியும். சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லத் துணிவில்லாத கோழைகள்தாம், இது போன்ற போலித் தீர்மானங்களை சனாதன ஒழிப்பு என்ற பெயரில் நிறைவேற்றுவார்கள்.

உண்மையான கம்யூனிஸ்டுகள் இம்மாநாட்டின் பக்கத்திலேயே சென்றிருக்க மாட்டார்கள். திராவிட இயக்கத்தின் அடிமைகளின் கதை வேறு.

***

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் திமுகவைத் தொடர்ந்து விமரிசனம் இல்லாமல் ஆதரித்து வருவதற்கும் பாஜவை கடுமையாக விமரிசிப்பதற்கும் என்ன காரணமோ, அதே காரணம்தான் தமிழக பிராமணர்கள் பாஜகவை விமரிசனம் இல்லாமல் ஆதரிப்பதற்கும், திமுகவை கடுமையாக விமரிசிப்பதற்கும்.

இதைக் கருத்தில் கொள்ளும் போது சில கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சனாதனத்தைக் குறித்து எழுதும் பதிவுகளும் தமிழ் பிராமணர்களில் சிலர் திரு. உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்குப் பின்புலம் கிறிஸ்தவச் சதிதான் என்று எழுதுவதும் சிரிப்பை வரவழைக்க்கிறது.

எந்த மதமும் சமத்துவத்தைப் போதித்ததில்லை. எல்லா மதங்களின் பெயர்களாலும் சுரண்டல்கள் தொடர்ந்து நடந்து வந்திருக்கின்றன. எல்லா மதங்களும் தங்களைக் காத்துக்கொள்ள மாற்றங்களை (வேறு வழியில்லாமல்) ஏற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயம்.

ஹிந்து மதத்தை சனாதன மதம் என்று சொல்வது  ‘இது மிகப் பழைய கத்தி. பிடி சில தடவைகள் மாற்றப்பட்டிருக்கிறது. கத்தியின் உலோகம் துருப் பிடித்ததால் பலதடவை சாணை பிடிக்கப்பட்டிருக்கிறது’  என்று சொல்வது போலத்தான். இந்த உவமை மற்றைய மதங்களுக்கும் பொருந்தும்.

வர்ணாசிரமம் என்பது கழற்றி எறியப்பட்ட பிடி. பாஜக உட்பட எந்தக் கட்சியும் வர்ணாசிரமத்தைத் தூக்கிப் பிடிப்பதில்லை. சாதி என்பது புதிய பிடி. திமுக உட்பட எல்லாக் கட்சிகளும் இதைத் தூக்கிப் பிடிக்கின்றன.

இதையும் கழற்றி எறிய வேண்டும் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. சனாதனத்தை அல்ல. அதற்கு இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எல்லா மதங்களையும் ‘இனி சாணை பிடிக்க முடியாது’ என்ற நிலை வரும் போது தூக்கி எறிய வேண்டியதுதான். அது எப்போது, எந்த மதத்திற்கு வரும் என்பதை இன்று யாராலும் சொல்ல முடியாது.

***

திரு. உதயநிதி ஸ்டாலின் சொன்னது சரிதான் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.  ‘இளம் பெரியார்’ என்ற பட்டத்தையும் அவருக்கு அளித்திருக்கிறார்.

தமிழகத்தின் அரையணாக் கூட்டம் காஞ்சி மடம் பதிப்பித்திருந்த குப்பை* ஒன்றிலிருந்து சில பக்கங்களைப் போட்டு, பெரியாரின் கூற்றின் படி பிராமணர்கள் பிறவிக் கிரிமினல்கள் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

இந்தக் குப்பையில் சொல்லியிருப்பதை விட ஆயிரம் மடங்கு, காஃபிர்களை எதிர்த்து பரானி, சிர்ஹிந்த் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள். பிராமணர்கள் தங்களுக்குள்ளே என்ன எழுதிக் கொண்டாலும் அவர்கள் ஆட்சியில் இருந்ததில்லை. இஸ்லாமியர் ஆட்சியிலும் இருந்தார்கள்; செயல்களிலும் இறங்கினார்கள்.

எனவே திரு. உதயநிதி சனாதனத்திற்கு எதிராகப் பட்டியலிட்ட நியாயங்கள் அனைத்தையும் இந்துத்துவவாதிகள் இஸ்லாமிய மதத்திற்கு எதிராகப் பட்டியலிட்டு சனாதனத்திற்கு திராவிடம் செய்ய நினைப்பதைத்தான் நாங்களும் இஸ்லாத்திற்கும் செய்ய நினைக்கிறோம் என்று சொல்ல முடியும்.

நிச்சயம் சொல்லப்படும்.

காங்கிரஸ் அதை எதிர்த்தால், ‘உங்கள் தலைவர்களே, திரு. உதயநிதி ஸ்டாலினை ஆதரித்திருக்கிறார்களே நீங்கள் இந்து விரோதிகள், எல்லா இந்துக்களையும் மதம் மாற வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள். அதனால் உங்கள் தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று பாஜவினர் சொல்வார்கள். சொல்வது நிச்சயம் எடுபடும்.

எனவே இந்த விவகாரத்தில் பாதிப்படையப் போவது இந்தியாவின் சிறுபான்மையினர் தாம்.

  • திரு. அனந்தகிருஷ்ணன் பக்‌ஷிராஜன் (பி.ஏ.கிருஷ்ணன்) மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அதிகாரி; எழுத்தாளர். பகுத்தறிவு என்ற போர்வையில் தமிழகத்தில் நிலவும் இனவெறுப்பு அரசியலை எந்த சித்தாந்தச் சார்பும் இன்றி கடுமையாக விமர்சித்து வருபவர்.
  • இது, இவரது முகநூல் பதிவுகளின் தொகுப்பு.
  • *அடிக்குறிப்பு: இது கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து.

$$$

28. ஆபத்தான மூளைச்சலவை

-ஜடாயு

சனாதன ஒழிப்பு என்று உதயநிதி இன்று பேசுவதும்,  ‘இந்து என்றால் திருடன்’ என்று கருணாநிதி சாகும் வரை பேசி வந்ததும் ஒரே இந்துமத வெறுப்பு, பிராமண வெறுப்புப் பிரசாரம் தான். என்ன, அப்பொழுதெல்லாம் கருணாநிதியின் பேச்சை வழக்கமான கொசுக்கடி என்று தமிழ்நாட்டு இந்துக்கள் அலட்சியப்படுத்தி வந்தனர். இந்த வெறுப்பு விஷ சாக்கடையின் துர்நாற்றம் பற்றிய பிரக்ஞை கூட அற்றுப்போய் விட்டிருந்தது. ஆனால் 2023இல் மைனர் ஸ்டாலினின் வெறுப்புப் பேச்சு அப்படி ஒதுக்கப்படாமல் தேசிய அளவில் பிரச்சினையாகி கொழுந்துவிட்டு எரிகிறது. பல தரப்புகளில் இருந்தும் அந்தப் பேச்சுக்கு எதிரான கண்டனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. வழக்குகளும் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்கான முக்கிய காரணம், 2014இல் இந்தியாவில் ஏற்பட்ட மகத்தான அரசியல் மாற்றங்களும், அதற்கு உந்து சக்தியாகச் செயல்படும் இந்து தர்ம எழுச்சியும் இந்துப் பெருமித உணர்வும் தான்.

அதுவும், கடந்த சில ஆண்டுகளில், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாக்கள், வர்த்தக நிறுவனங்கள், வெளிநாட்டு சக்திகள் என எந்த இடத்தில் இருந்து இந்து விரோத வெறுப்புணர்வு வெளிப்பட்டாலும், அதற்கு எதிராக உடனடியாகக் குரல்கள் எழுகின்றன. கண்டனங்களும் எதிர்ப்பும் பரவலாகப் பதிவு செய்யப்படுகின்றன என்பதை அடிப்படை அரசியல் அறிவு உள்ள எவராலும் புரிந்துகொள்ள முடியும்.

முன்பு போல  ‘முற்போக்கு, சீர்திருத்தம்,  பகுத்தறிவு’ என்ற பெயர்களில் இந்துமத வெறுப்பைக் கொட்டும்  ‘செக்யூலர் பொற்காலம்’ மலையேறி விட்டது. இந்த அப்பட்டமான விஷயம் கூட கிறிஸ்தவ மத அதிகார பீடங்களின் முன்பு மண்டியிட்டு அதன் ஏவலாளியாகச் செயல்படும் உதயநிதி ஸ்டாலின் கண்களுக்குத் தெரியவில்லை. அவர் அந்த அளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்; அல்லது கூமுட்டையாக இருக்கிறார். அவரது பேச்சை  நியாயப்படுத்தும் திமுக கொத்தடிமைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

பி.கு: ‘சனாதன சாரதி’ சத்ய சாய்பாவின் காலில் விழுந்து மு.க.ஸ்டாலின் ஆசி பெற்ற செய்தியை நினைவூட்டியிருக்கிறார்  அரவிந்தன் நீலகண்டன். இதைக் குறித்து திமுக தரப்பு எந்த அதிர்ச்சியும் அடைவதில்லை. இந்த இரட்டைவேடம்,  ‘திராவிட’ போலித்தனம் எல்லாம் தமிழர்களுக்கு ரொம்ப பழக்கமானது தானே, இதில் என்ன புதுசா இருக்கு என்பது தான் இதற்கான திமுக கொத்தடிமைகளின் எதிர்வினை. ஆனால் எப்பேர்ப்பட்ட சோம்பேறியும் திடீரென்று ஒரு உலுக்கலில் எழுந்திருந்து சுறுசுறுப்படைவான் என்பதுதான் உலக நியதி. 2024இல் அவர்களுக்கு இது புரியும்.

  • திரு. ஜடாயு, இணைய எழுத்தாளர்;  ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தை நடத்தி வருபவர்.
  • இது இவரது முகநூல் பதிவு.

$$$

29. குறள் கூறும் சனாதனம்

-பா.இந்துவன்

‘சனாதன தர்மம்’ என்றால் என்ன? இச்சொல் எக்காலத்திலிருந்து புழக்கத்தில் உள்ளது? ‘சனாதன தர்மம்’ என்ற சொல்லின் பொருள் என்ன? இவற்றை வெறும் திருக்குறளை வைத்தே விளக்கலாம். இருந்தாலும் சனாதன தர்மம் என்ற பெயர் இன்று ஹிந்து மதம் என்று அழைக்கப்படும் பெயருக்குப் பதிலாக முற்காலங்களில் வழங்கப்பட்ட பெயர்தான் என்பதையும் மறுக்க முடியாது.

சனாதன தர்மம் என்ற சொல்லாடல் இன்றிலிருந்து 5,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட  மகாபாரதத்தில் உண்டு. அதோடு 18 புராணங்களில் ஒன்றான சிவபுராணத்திலும் உண்டு. மகாபாரதத்தில்  ‘ஞான வழியையும் கர்ம வழியையும் காட்டும் வழியாக’ கண்ணன் காட்டியதே சனாதன தர்மம் என்ற பொருளில் வருகிறது. அதாவது,

“யேச வேதவிதோ விப்ரா: யே சாத்த்யாத்ம விதோ ஜநா:/
தே வதந்தி மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம்//

     -மகாபாரதம் (சாந்தி பர்வம்)

சிவபுராணத்தில் சிவபெருமான் ஜோதி ரூபமாகக் காட்சியளிக்கும்போது  ‘நானே சனாதன தர்மம்’ என்கிறார். அதாவது சிவபெருமான் கூறும் தர்ம நெறிகளே, அறநெறிகளே சநாதன தர்மம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.

அதுபோல மனு ஸ்மிருதியில் உண்மையைப் பேச வேண்டும். உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்பதுதான் சனாதன தர்மம் என்ற பொருளில் வருகிறது. அதாவது மனு ஸ்மிருதியின் நான்காவது அத்தியாயம், 138 ஆவது வசனம் இவ்வாறு கூறுகிறது:

“உண்மையைப் பேச வேண்டும். அன்பாகப் பேச வேண்டும். தீங்கு விளைவிக்குமாயின் உண்மையையும், அன்பாக இருக்கும்போது பொய்யையும் பேசாதே. இதுவே சனாதன தர்மமாகும்.”

     -மனு ஸ்மிருதி: 4.138.

இப்படி மனு ஸ்மிருதி, மகாபாரதம், சிவபுராணம் போன்ற நூல்களில் சனாதன தர்மம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

‘தர்மம்’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில்  ‘அறம்’ என்பது பொருள். இதைத் தான் கண்ணன் காட்டும் வழியே சனாதன தர்மம் (அறம்) என்கிறது மகாபாரதம். மனு ஸ்மிருதி உண்மையை பேசுவதையே அறம் என்கிறது. இத்தகு தொன்மையான அறத்தை திருவள்ளுவர் மிகத் தெளிவாகக் கூறுகிறார். உதாரணமாக,

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”

    -திருக்குறள்- 34.

பொருள்: ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

“அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்.”

    -திருக்குறள்- 35.

பொருள்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.”

    -திருக்குறள்-38.

பொருள்: ஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

 “சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு”

-திருக்குறள்-31.

பொருள்: அறம் சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்.  ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

இவ்வாறாக திருவள்ளுவர் கூறும் அறமே சனாதன தர்மம்  என நாம் புரிந்துகொள்ள வேண்டும். சனாதன தர்மம் என்றாலே நிலையானது, தொன்மையான அழிவில்லாத அறம் என்றுதான் பொருள். இதை சில கும்பல்கள் ஒழிக்க வேண்டுமெனில், அதன் ஆதி எங்குள்ளது என்பதை அறிய வேண்டும். அதாவது குறைந்தபட்சம் அதன் தொடக்கம் எங்குள்ளது என்பதை அறிந்தால்தான், முடிவு எது என்பதை அறிந்து சனாதன தர்மத்தை ஒழிக்கவே முடியும். அதற்கு அவர்களுக்கு ஆயுள் போதாது.

  • திரு. பா.இந்துவன், இணைய எழுத்தாளர்.
  • இது இவரது முகநூல் பதிவு.

$$$

30. சனாதனமும் திராவிடமும்

-கோதை ஜோதிலட்சுமி 

சனாதன தர்மம் என்பது பாரத தேசத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஒரு வாழ்வியல் முறை. சனாதனம் என்பதற்கு எப்போதும் இருப்பது, நிலைத்திருப்பது, அழிவற்றது என்பதே பொருள். இந்த வாழ்வியல் முறை நிலையானது என்பது அதன் முழுமையான பொருள். அறிவியல் தொடங்கி தத்துவங்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் வரை அனைத்துத் துறைகளையும் தனக்குள் கொண்டு ஒற்றை ஒளியாய் உயர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் இங்கே நிலைத்திருக்கும் தத்துவம் அல்லது வாழ்வியல் அறம்.

சனாதனத்துக்கு எதிரான போர், தமிழ்ச் சமூக மரபிற்கு முற்றிலும் மாறான எதிரி நிலையில் இருப்பது சனாதன தர்மம் என்று தற்போது தமிழகத்தில் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த தேசத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்தவர்கள், அதனை திராவிட நாகரிகம் என்று நிறுவுகிறார்கள். கீழடி அகழாய்வும் இன்னும் பல தமிழகத் தொல்லியல் ஆய்வுகளும் நமது தொன்மையைப் பறைசாற்றி வருகின்றன. கலாசாரம், வழிபாடு, அறம் சார்ந்த நம்பிக்கைகள் என்று பாரதம் முழுவதும் இந்த மரபின் தொடர்ச்சி இருப்பதாகக் கருத முடியும். 

அதேபோல வேதத்தின் காலத்தைக் கணக்கிடுவதிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்ற முடிவை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள். இந்த தேசத்தில் இரு பெரும் முதுமொழிகள் பயின்று வந்திருக்கின்றன. அந்த மொழி பேசுவோர் தங்களுக்குள் பரிவர்த்தனைகள் செய்துகொண்டு மிகச் சிறப்பு மிக்க ஒரு கலாசாரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதன் நீட்சி இன்றளவும் சற்றும் தொய்வின்றி தேசத்தில் நிலைபெற்றிருக்கிறது.

திராவிடம் என்ற சொல் தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக அதிக அளவில் புழங்கி வருகிறது. தமிழ் என்பது மொழி, தமிழர் என்பது அம் மொழியைப் பேசுவோர்;  திராவிடம் என்ற கோட்பாடு எப்போது உயிர்பெற்றது?

திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் சொல் என்கிறார்கள். மனு ஸ்மிருதி தொடங்கி பல வடமொழி இலக்கியங்களும்  ‘திராவிடர்’ என்ற சொல்லை தேசத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களைக் குறிப்பதற்காகவே பயன்படுத்தியிருக்கின்றன. ஏழாம் நூற்றாண்டில் தென்னிந்திய மக்களை திராவிடர் என்று குமாரில பட்டர் குறித்தார். 

திராவிட சித்தாந்திகள் ஆரம்பத்தில் தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி பேசும் மக்களையும் பிரதேசத்தையும் குறித்தே திராவிட நாடு என்ற கொள்கையை முன்வைத்தனர். இந்தக்  கொள்கையை தமிழர் அல்லாத பிற மொழி பேசும் தென்னிந்திய மக்கள் ஏற்கவில்லை. அதனால் திராவிடம் என்பது தமிழரை மட்டும் குறிப்பதாக சுருங்கிப் போனது. அதிலும், சில பிரிவினரைப் புறந்தள்ளி இன்னும் சுருக்கப்பட்டது. வடமொழியில் வழங்கும் இந்தச் சொல் வடவரின் ஆதிக்கத்திலிருந்து நம்மவரைப் பாதுகாப்பது என்ற சித்தாந்தத்துக்கான சொல்லாக அமைந்திருப்பதே முரண். 

திராவிடர் என்று கூறிக் கொள்வோர் இறை நம்பிக்கை அற்றவர்களாகத் தங்களை முன்னிறுத்துகிறார்கள். இறை நம்பிக்கை என்பது தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு இருந்து வருவது; யாரோ புகுத்தியது அல்ல. தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்களில் பயின்று இறைச் சிந்தனை இங்கே வேரூன்றியிருக்கிறது.  

சனாதனத்துக்கு எதிராக நிற்போர் இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர். ஒன்று, சனாதனம்தான் இந்த நாட்டில் ஜாதியப் பாகுபாட்டை ஏற்படுத்தி அதனை ஊக்குவித்தும் வருகிறது. மற்றொன்று, மதத்தின் பெயரால் அரசியல், அதனோடு தொடர்புடையதே ஜாதியம் என்றும் சாதிக்கிறார்கள். தமிழர்களின் வாழ்வியல் முறையில் இந்த இரு கோட்பாடுகளும் எப்போது தொடங்கின?

இலக்கியங்கள் கூறும் சான்றுகளைப் பார்த்தால் ஜாதியம் என்பது அநாதி காலமாக இருந்து வந்திருக்கிறது. பிறப்பால் ஜாதியைக் கூறுவது, அதற்குள் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்தது ஆகியவை அனைத்தையும் நாம் தொல்காப்பியம் தொடங்கி இன்று வரை காண்கிறோம்.  “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…” என்ற கோட்பாட்டை திருக்குறள் லட்சியமாக வைக்கிறது. அந்த லட்சியம் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இன்னும் எட்டப்படவில்லை.

தொல்காப்பியத்தில் திருமணம் செய்து கொள்வதற்கான பொருத்தங்களைப் பற்றிக் கூறும்போது ஒத்த குடிப்பிறப்பும் என்றுதான் தொடங்குகிறது. அதேபோல் பிரிவு பற்றிக் குறிப்பிடும்போது  ‘ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன’ என்கிறது. உயர்ந்தோர் என்ற பாகுபாடு இருக்குமேயானால் அதன் எதிர்ப்பதமும் சமூகத்தில் இருந்துதானே தீரும்?

‘ஜாதி இரண்டொழிய வேறில்லை’ என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் பாடும்போது அக்காலத்தில் ஜாதி என்ற கட்டமைப்பு இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.  ‘இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்’ என்று அவர் குறிப்பிடும்போது, இந்த இரண்டுமே சமூகப் பாகுபாட்டில் இருந்தன என்பதை அறிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கியங்களிலும் புலவர் பெருமக்களின் பெயர் தொடங்கி ஜாதி மற்றும் அதற்கான சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றளவும் ஜாதியப் பாகுபாடு தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போன நிலையில் இருக்கிறது. இவை களையப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக நமக்குள் இருக்கும் பிணக்குகள் தீர வேண்டும். ஆனால், இதனை சனாதனம்தான் கற்றுத் தந்தது என்று சாதிப்பதும், ஜாதியம் தமிழரின் மரபு அல்ல என்று வாதிடுவதும் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழியாகாது. 

அடுத்து, சமயம் என்பது தமிழருக்கு இருந்ததில்லை என்பதாக ஒரு கருத்தைப் பரப்புகிறார்கள். இது முற்றிலும் தவறான வாதம். கடவுள் வாழ்த்து இல்லாமல் எந்த இலக்கியமும் காணப்படவில்லை. சனாதனம் கூறும் பல தெய்வ வழிபாட்டை தமிழர் மரபும் நிலப் பாகுபாட்டில் ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு தலைமை தெய்வத்தைக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். நிலத்துக்கான முதற்பொருள் கூறும்போது தெய்வம் எனத் தொடங்குகிறது. முதன்மையானதாக நிற்பது தெய்வம் என்பதை தொல்காப்பியம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழர் மரபை என்றைக்கும் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறும் தெய்வ நம்பிக்கையும், ஊழ் பற்றிய கருத்தும் எதன் பாற்பட்டவை? ஊழ் பற்றிய நம்பிக்கையை சங்க இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், பெருங்காப்பியங்கள் என எல்லாவற்றிலும் காண்கிறோம். மறுபிறப்பு நம்பிக்கை வானியல் சார்ந்த அறிவு, அது சார்ந்த நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் கடவுள் எனும் சொல் ஆகியவை அனைத்தையும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம். மறுபிறப்பு மேலுலகம் துறவு, ஊழ், நீத்தார் கடன் என்று சனாதன தர்மம் பேசும் பலவற்றையும் திருக்குறள் தெளிவாகப் பேசுகிறது. 

வேதநெறி என்பதும் தமிழர் நெறி என்பதும் வேறு வேறானவை என்று சாதிக்க முயற்சிக்கும்போது சங்க இலக்கியங்களில் பயின்று வரும் முனிவர்கள், தேவர்கள், வேதம் பற்றிய குறிப்புகள், யாகம், வேள்வி நடத்தும் விதம் போன்ற பல செய்திகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. சனாதனம் என்றும் தமிழர் நெறி என்றும் எதனையும் பகுத்துக் கூறுவதைக் காட்டிலும் இரண்டுக்குமான பொதுமைகளை ஏற்றுக்கொண்டு இரண்டும் நம்முடையதே என ஏற்பதே சரி.

‘வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார்’ என்று வைணவமும்,  ‘வேத நெறி தழைக்க சைவத் துறை விளங்க’ என்று சைவமும் கூறுவதையும் அதைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்று இன்றுவரை போற்றுவதும் மறுப்பதற்கில்லை. தமிழகத்தில் அமைந்திருக்கும் ஆலயங்களும் சமய இலக்கியங்களும் இந்த மண்ணின் மக்களின் சமயப் பற்றுக்கு எடுத்துக்காட்டு. மத நம்பிக்கைகளிலும் மரபுகளிலும் பொதுமைப் பண்புகள் நிறைந்திருக்கின்றன.

சனாதன தர்மம் நான்கு வகை ஜாதியப் பாகுபாடுகளை மட்டுமே சுட்டியிருக்கிறது. ஆனால், இன்றைக்கு ஆயிரக்கணக்கான ஜாதிப் பிரிவுகளும் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற புரையோடிய நிலையும் எங்கிருந்து தோன்றின? 

திராவிடர் என்போர் இந்தத் தர்மத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் என்ற கொள்கையை முன் வைத்தவர்கள் யார் என்று பார்த்தால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த, இந்தியாவைக் கண்கொண்டு பார்த்திராத ஐரோப்பியர்கள் அல்லது மதத்தைப் பரப்புவதற்காக தென்னகம் வந்த பாதிரியார்கள். ஏன் இத்தகைய வேறுபாடுகளை அவர்கள் கற்பித்தார்கள்?   இதற்கான விடையை நடுநிலையோடு நின்று சிந்தித்து, தரவுகளை ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டியது தமிழ்ச் சமுதாயத்தின் பொறுப்பு.  

நிலவுடைமைச் சமூகம் என்றைக்குத் தொடங்கியதோ அன்றைக்கே மனிதர்களிடையே இது என்னுடையது என்ற சுயநலம், உயர்வு- தாழ்வு கற்பித்துக் கொள்ளப்பட்டது. இதிலிருந்து மாறி சமத்துவ சமூகம் உருவாக வேண்டும் எனும் கருத்தை சனாதன தர்மம், தமிழர் நெறி ஆகிய இரண்டும் போதிக்கின்றன.

‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து சர்வே ஜனா சுகினோ பவந்து’ என்கிறது வடமொழி. ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன்  பராபரமே’ (தாயுமானவர்) என்கிறது தமிழ் நெறி. பாரதத்தில் இடத்திற்கேற்ப மொழி மாறுபடலாம்; அறம் மாறுபடுவதில்லை.

  • திருமதி கோதை ஜோதிலட்சுமி, ஊடகவியலாளர்.
  • நன்றி: ‘தினமணி’ நாளிதழில் (25.10. 2019) இவர் எழுதிய கட்டுரை இது.

(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)

$$$

Leave a comment