-அரவிந்தன் நீலகண்டன், பிரம்மரிஷியார், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், ஷோபனா ரவி, இளங்கோ பிச்சாண்டி
அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டதை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கிறது. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிக குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன...

2. எது தீராத தொற்றுநோய்?
-அரவிந்தன் நீலகண்டன்
‘பிறப்படிப்படையிலான ஏற்றத் தாழ்வு தான் சனாதனம்’ என்று சொன்னார் உதயநிதி ‘அது கொசு டெங்கு மலேரியா போல. அது ஒழிக்கப்பட வேண்டும்.’
அவர் எப்படி அமைச்சரானார்? அவரை விட அனுபவமும் களப்பணியும் செய்த கழக தொண்டர்கள் பலர் இருக்க அவர் எப்படி அமைச்சரானார்?
அவரை விட வயதில் முதிர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இதரர்களும் அவரிடம் வந்து முதுகு வளைய வணங்க அவர் எப்படி முக்கிய தலைவரானார்?
அவரை விட கல்வித் தகுதியில் மிகுந்த முன்னாள் நிதியமைச்சர் கால் கடுக்க நிற்க அவர் எப்படி அமர்ந்திருந்தார், அமைச்சரவை புகைப்படத்தில்?
ஒரே காரணம். அவர் தந்தையார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அவர் பாட்டனார் முத்துவேல் கருணாநிதி.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான சனாதன தர்மத்தில் வந்த ஒவ்வொரு ஆன்மிகத் தலைவரும் பிறப்படிப்படையில் அந்த இடத்துக்கு வரவில்லை. எல்லா சாதிகளிலிருந்தும் தோன்றினார்கள். ஆனால் இவர்கள் சாதியை ஒழிக்கிறேன் என்று கழகம் தோன்றி நூறு ஆண்டுகள் கூட ஆகவில்லை. நாஞ்சில் மனோகரன் ‘கருவின் குற்றம்’ என்று கவிதை எழுத வேண்டியிருந்தது.
எனவே, எது டெங்கு, எது காலரா, எது மலேரியா, எது ஒழிக்கப்பட வேண்டியது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
இது ஒருபுறமிருக்க. முத்துவேல் கருணாநிதி மகனார் உசுடாலினார் அவர்கள் ஆந்திராவில் உள்ள புட்டபர்த்திக்குச் செல்லுவார். எதற்கு? ஆசிர்வாதம் பெற. யாரிடம்? பகவான் சத்திய சாய்பாபாவிடம். பகவான் சத்ய சாய்பாபாவுக்கு அவர்கள் பக்தர்கள் வைத்த பெயர் ‘சனாதன சாரதி’. பாபாவுக்கும் அது மிகவும் பிடித்த பெயர். ஆம். சத்யசாய் அமைப்புகளின் அதிகாரபூர்வ பத்திரிகையின் பெயர் ‘சனாதன சாரதி’. சனாதன தர்மம் தேரில் இருக்க அல்லது சனாதன தர்மமே தேராக இருக்க, அதைச் செலுத்தும் சாரதி பகவான் சத்யசாய் பாபா என்பது பொருள்.
அந்த சனாதன சாரதியின் கால்களில் விழுந்து அவர் பாதம் பணிந்து ஆசிர்வாதம் வணங்கத்தான், நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மானமிகு சிங்கம் தன்மான தங்கம் முத்துவேல் கருணாநிதியார் திருமகனார் உசுடாலினார் ஆந்திரா செல்வார். புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தில் சனாதன சாரதியின் பாத கமலங்களில் சரணாகதி அடைகிறவரின் மகன்தான் ‘சனாதனத்தை ஒழிப்போம்’ என்கிறார்.
வாழ்க பகுத்தறிவும் கூடவே ஊசிப்போன மசால் வடையும்.
.
- திரு. அரவிந்தன் நீலகண்டன், தமிழகத்தின் முன்னணி இந்துத்துவ சிந்தனையாளர்.
- இது இவரது முகநூல் பதிவு.
$$$
3. வறட்டுப் பிடிவாதம் வீழ்த்தும்!
-பிரம்மரிஷியார்
“சனாதான தர்மம் பெண்கள் மேலாடை அணியவிடவில்லை, எல்லோரையும் கோயிலுக்குள் விடவில்லை, பெண்களைப் படிக்கவிடவில்லை” என்றெல்லாம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் அய்யா உதயநிதியார்.
சனாதான தர்மம் பெண்கள் மேலாடை அணிய தடை என எக்காலத்திலும் சொல்லவில்லை. இந்துஸ்தானில் பெண்களை, குழந்தைகளை, பசுக்களை, அறிவுடையோரைக் காக்க வேண்டும் என தனிக் கொள்கையே இருந்தது, போர்க்காலத்தில் கூட பெண்கள் மேல் கைவைப்பதில்லை சனாதான தர்ம மரபு.
பெண்ணை தெய்வமாகப் போற்றிய அந்த தர்மம், கோயிலின் அம்மன் சிலைக்கே சேலையிட்டுத்தான் மக்கள் தரிசனத்துக்குக் காட்டிற்று; அப்படி பெண்களைப் போற்றி பாதுகாத்த மதம்.
கோயில் சிலைக்கே சேலையிட்ட மதம் அது, அது மேலாடை அணிய தடை சொன்ன மதம் அல்ல.
மலைவாழ் மக்களின் உடை அலங்காரம் சற்று மாறுபட்டது. அது வடகிழக்கு மாகாணமென்றாலும் சரி, மலையாள தேசமென்றாலும் சரி, உடைகள் சற்று மாறி, சூழலுக்கு ஏற்றபடி வரும் அதற்கும் சனாதான தர்மத்துக்கும் தொடர்பில்லை.
பெண்களுக்கு கல்வி மறுத்த மதம் இது அல்ல. அன்றே ஒளவையார், ஆண்டாள் என பெண் கவிஞர்கள் இருந்தார்கள். இன்னும் பல பெண்கள் கவிஞர்களாக இருந்ததை காண முடிகிறது.
பின்னாளில் பௌத்தம் பெண்களை அடக்கியது; சமணம் பெண்ணுக்கு முக்தியில்லை என ஒதுக்கிவைத்தது. இவை எல்லாம் மீறி சனாதன தர்மம் தழைத்தபோது பெண் உரிமை தளிர்த்தது.
பின் ஆப்கானிய கொடும்காலங்களில் பெண்கள் பட்டபாடு கொஞ்சமல்ல, ஆப்கானியர் தங்க வேட்டை மட்டுமல்ல, அவர்கள் நடத்திய பெண்வேட்டை மிக அதிகம்.
கப்பம் கொடுக்கும்போதெல்லாம் சுல்தானுக்கும் அதிகாரிகளுக்கும் இந்து இளம்பெண்ணையும் கொடுக்கும் வழக்கம் இருந்தது. சிவாஜி போன்றோர் வாளேந்த இதுதான் காரணம்.
அக்காலத்தில்தான் பெண்களைப் பாதுகாக்கும் தனி கலாச்சாரம் உருவானது. பொது இடங்களில் பெண்களை அனுமதிக்காத காரணம் அதுதான்.
மொகலாயர் ஆட்சி முடிய 1857 ஆண்டு ஆயிற்று. அதுவரை தேசம் பெண்களை இப்படித்தான் காத்தது. பின் பிரிட்டிசார் ஆட்சியில் சனாதானம் தன்னை மீட்டெடுத்தபோது பெண்கள் தானே வெளிவந்தார்கள் அதை பாரதியார் போன்றோர், விவேகானாந்தர் போன்றோர் உற்சாகப்படுத்தினார்கள்.
ஆக பெண்களைக் கற்கக் கூடாது என்று இந்து மதம் சொல்லவில்லை; மேலாடை அணியாதே எனவும் சொல்லவில்லை.
நாயகி தேவி முதல் வேலு நாச்சியார் வரை தேசமெங்கும் எவ்வளவோ பெண் அரசிகளையே கொடுத்த தேசம் இது, மங்கம்ம்மா, ருத்த்ரம்மா என ஆதாரம் ஆயிரம்.
கல்வி கற்காமல் அதை சாதிக்க முடியுமா? ஆள முடியுமா?
இதோ சுதந்திர இந்தியாவில் இந்துப் பெண்கள் எவ்வளவோ சாதிக்கின்றார்கள், அதை எல்லாம் இந்து மதம் தடுத்ததா? மாறாக ஊக்குவித்தது.
இதையெல்லாம் திராவிடர் கழகமோ திமுகவோ செய்யவில்லை. தமிழகத்தில் அதைக் கிழித்தோம் இதைக் கிழித்தோம் என்பவர்களுக்கு ஒரு கேள்வி… இதோ ஜனாதிபதி முர்மு இருக்கின்றார், நிர்மலா அம்மையார் இன்னும் இஸ்ரோ விஞ்ஞானிகள் என யார் யாரோ இருக்கின்றார்கள், பெண்களாக , இந்துப் பெண்களாக பெரும் இடத்தில் இருக்கின்றார்கள். தேசம் முழுக்க இருக்கின்றார்கள், அவர்கள் இந்துக்கள் இல்லையா, அவர்களையெல்லாம் திராவிடக் கும்பல்தான் உருவாக்கிற்றா?
சரி தமிழகத்தில் திராவிடர் கழகமும் திமுகவும் உருவாக்கிய நல்ல பெண் சாதனையாளர் ஒருவரைக் காட்ட முடியுமா?
டாக்டர், விஞ்ஞானி, வழக்கறிஞர், பேரிடம் பெற்றவர் என ஒரு பெண்ணை திமுக உருவாக்கியதா? இல்லை, இப்போது வரை இல்லை, தமிழகத்தில் பேரிடம் பெற்ற பெண்கள் யாரும் சாதனைப் பெண்கள் யாரும் திமுக பக்கமே சென்றதில்லை.
சரி, திமுகவுக்கு ஒரு பெண் தலைமையினை நியமிக்க அக்கட்சி தயாரா? முதல்வராக ஒரு பெண்ணை அமர வைப்பார்களா?
ஆலய நுழைவு என்பதை சனாதன தர்மம் ஒருகாலமும் தடுக்கவில்லை, சிற்சில இடங்களில் சில நோய் பரப்பும் சாத்தியமுள்ள தொழிலைச் செய்தவர்களுக்கு மட்டும் தொழில் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதே அன்றி, சாதி ரீதியாக அல்ல.
அதையும் காலம் மாறியபின், இந்துக்களே போராடி மாற்றினார்கள் அய்யா வைகுண்டரோ முத்துராமலிங்க தேவரோ அல்லது வைத்தியநாத ஐயரோ எவராயினும் இந்துக்கள்தான் போராடினார்கள்.
இந்து மதம் தன்னைத் தானே காலத்துக்கு ஏற்றபடி மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. அது புலி தன் காயத்தைத் தானே குணப்படுத்துவது போல தன்னை சரிசெய்து கொள்ளும்.
உதயநிதி இன்னும் பிரிட்டிஷ் ஆட்சிக் கால நினைப்பில், காங்கிரஸ் கால அரசியலைச் செய்து கொண்டிருந்தால் நல்லதல்ல.
நாடு முழுக்க பெரும் சர்ச்சை கிளம்பும் நேரத்தில், ‘சனாதான தர்மம்’ ஒழிக்க நடந்த மாநாட்டில் காவி உடையுடன் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நின்றதும் சர்ச்சையாகின்றது.
அதாவது அஹிம்சாவாதி ஒன்று சைவ உணவுப் பக்கம் நிற்க வேண்டும் இல்லை நான் மாமிசப்பட்சி என கசாப்புக்கடை முன்பு நிற்க வேண்டும்.
‘நான் வள்ளலார் வழி’ என சொல்லிவிட்டு, ஆட்டுக்கறிக் கடை முன்பு நிற்பது சரியல்ல. சேகர்பாபு அதைத்தான் செய்கின்றார்.
ஒன்று சனாதன தர்மம் ஒழிக்கப்பட அரசு சட்டம் இயற்றலாம், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து சட்டமாக்கலாம், செய்வார்களா? செய்யத் துணிவு உண்டா? தைரியம் உண்டா?
அப்படியே சனாதன தர்மம் வேண்டாம் என்றால், அது இவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இந்து ஆலயங்களையும் அதன் காணிக்கைகளையும் அரசு தொடக் கூடாது.
இந்து மதம் வேண்டாம்; ஆனால் ஆலயங்களும் காணிக்கையும் வேண்டும் என்பதன் பெயர், கொள்ளை, பகிரங்கமான ஆக்கிரமிப்புக் கொள்ளை என்பதாகும்.
ஆப்கானியர் கஜினி, கோரி இதை செய்தார்கள், மாலிக்காபூரும் துக்ளக்கும் இதையே செய்தார்கள்; பிரிட்டிஷ்காரன் ரகசியமாகச் செய்தான். அதையே தமிழக அரசும் செய்யுமானால், சுதந்திரம் வாங்கியதன் அர்த்தம் இல்லாமலே போய்விடும். ஆயிரம் ஆண்டுகள் போராடி நாயக்கர் முதல் கட்டபொம்மன் வரை, பாரதி வரை போராடியதற்கு அர்த்தமே இல்லை.
இங்கு போராட்டமே இந்து மத ஆலயங்கள் அன்னியரால் அழிகின்றன என்பதில் தான் தொடங்கியது; பின் பிரிட்டன் வந்து அவர்களையும் விரட்டி சுதந்திரம் அடைந்ததில் முடிந்தது.
இன்றைய சுதந்திர இந்தியாவிலும் அந்த அவலமே தொடருமானால், அது ஏற்று,கொள்ள, கூடியது அல்ல.
தேசம் முழுக்க பெரும் எதிர்ப்பு எழும் நேரம், உதயநிதியார் இன்னும் வறட்டு சிந்தாந்தம் பேசுகின்றார்; இந்து அறநிலையத் துறை அமைச்சரிடம் சத்தமே இல்லை.
இவை மகா வன்மையாகக் கண்டிக்க வேண்டிய விஷயங்கள்; திமுகவினர் மனதால் உணர்ந்து திருந்த வேண்டிய விஷயங்கள்.
காலம் மாறுவதை உணராத யாரும் நிலைக்க முடியாது; வறட்டுப் பிடிவாதமும் வீண் கர்வமும் பெரும் வீழ்ச்சியினைத் தான் கொடுக்கும்.
- திரு. பிரம்மரிஷியார், முகநூலில் எழுதும் ஹிந்துத்துவ சிந்தனையாளர்.
- இது இவரது முகநூல் பதிவு.
$$$
4. உலகில் நலம் விளங்கட்டும்!
-கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
சனாதனம் என்பது சமஸ்கிருதச் சொல்;
அழிவில்லாதது…. நித்தம் நித்தம் உண்மையாக இருக்கக் கூடியது என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். மனிதர்களுக்குத் தேவையான உயர்ந்த தர்மங்களைச் சொல்வது தான் சனாதனம்.
“சனாதன தர்மம் என்பது கிணற்றுத் தவளையைப் போன்றதல்ல. அது கடலைப் போல மிகப் பெரியது! மிகவும் ஆழமானது! இதை எந்தப் பெயரில் அழைத்தாலும் சரி, அது மனித குலத்திற்கே சொந்தமானது” என 1947இல் ‘ஹரிஜன்’ இதழில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் மகாத்மா காந்தி.
“லோகா சமஸ்தா சுகினோ பவந்து” என்ற வாக்கியத்தை ஒவ்வொரு வேள்வி முடியும் போதும், ஒவ்வொரு சுபகாரியங்கள் நடந்த பின்னரும் சொல்வார்கள். ஒரு தூய ஹிந்து உச்சரிக்கும் இந்த வார்த்தையில் இருந்தே சனாதனம் என்றால் என்ன என்பது புரியும்!
உலகங்கள் அனைத்தும் நலமாக விளங்க வேண்டும். இந்த விருப்பம் பூலோகத்திற்கு மட்டும் அல்ல. பரந்து விரிந்த பதினான்கு உலகங்களும் நலமாக விளங்க வேண்டும் என்று விரும்புகிறது ஹிந்து மதம்!
உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? உலகத்தில் உள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தானே பொருள் கொள்ள முடியும்! உலகத்தில் உள்ள மக்கள் மட்டும் அல்ல, சகல ஜீவராசிகளையும் வாழ்த்தும் ஓர் உன்னதமான மந்திரம் தான் இது.
- திரு. கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், ‘கலைமகள்’ மாத இதழின் ஆசிரியர்.
- இது இவரது முகநூல் பதிவு.
$$$
5. நானும் ஒரு சனாதனி
-ஷோபனா ரவி
சனாதன தர்மம் என்பதற்கு எப்போதுமே அழியாமல் இருக்கும் தர்மம் என்று பொருள். ஜாதிகளுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாடு அரசு இப்போதே ஜாதிகளை ஒழித்துவிடலாம். இன்றுமுதல் ஜாதி கிடையாது என்று சொல்லட்டுமே. ஜாதி, அரசியலுக்கு அவசியம். சத்தியம், தர்மம் இவை இரண்டும் ஆதி அந்தமற்றவை.
யார் வேண்டுமானாலும் சனாதனி ஆகலாம். ஒருவர் வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் அவர் சனாதனி.
“சாதிகள் இல்லையடி பாப்பா… குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” எனப் பாடிய பாரதி ஒரு சனாதனி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் ஒரு சனாதனி. உண்மை என்னவென்று உள்ளே போய்ப் பார்ப்பவர் சனாதனர். சுருக்கமாகச் சொன்னால், தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நேர்மைக்குத் தன்னை ஒப்புவித்தவர் எல்லாரும் சனாதனர். பிறப்பால் நான் ஒரு ஹிந்து. ஓர்ந்து ஓர்ந்து என்னை நானே தெளிவுபடுத்திக் கொண்ட விதத்தால் நான் ஒரு சனாதனி. இயற்கை தர்மம் சனாதனம். இறைவனே இந்த பூமிக்கு இறங்கி வந்தாலும் அவனும் இந்த தர்மத்துக்குத் தலை வணங்கித் தான் ஆகவேண்டும். சமூகச் சீர்கேடுகளுக்கும் சனாதனத்துக்கும் சம்பந்தமில்லை.
சத்திய தர்மத்தைக் கடைபிடித்து அதனால் இறைவனை உணரத் தலைப்படுவோர் எல்லாரும் சனாதனர். சத்திய தர்மத்தைக் கடைபிடிக்கிறேன், ஆனால் இறைவனை உணரவில்லை என்று சொல்வோரும் சனாதனர் தாம்.
மொழிகளில் இல்லை சனாதனம். ஜாதியில் இல்லை சனாதனம். பிரிவினையில் இல்லை சனாதனம். தனக்குத் தானே உண்மையாக இருப்பவரெல்லாரும் சனாதனர்.
எனக்கும் இரண்டு கை, இரண்டு கால்கள். உங்களுக்கும் அப்படித்தான். எங்கோ இருக்கும் ஆஃப்ரிக்கருக்கும் அமெரிக்கருக்கும் கூட அப்படித்தான். இயற்கை தர்மத்தில் பாகுபாடு இல்லை. புயல் வந்தால் ஜாதி பார்த்து அடிப்பதில்லை. சத்தியமும் தர்மமும் கூட அப்படித்தான்; எல்லாருக்கும் பொதுவானவை; எல்லாரும் பிறவிப்பயனை அடைவதற்கான இரு கண்கள் போன்றவை.
அரசியல்வாதிகளைப் போல எழுத்திலும் பேச்சிலும் ஒன்று, குறிக்கோள் என்னவோ பணமும் பதவியும் என்றிருப்போரால் சத்திய தர்மமே பொய்யென்று ஆகிவிடுமா என்ன?
சாதியை விட்டு, ஏற்றத் தாழ்வை விட்டு, வெறுப்பை விட்டு மனதளவில் வெளியே வந்தால் எல்லாரையும் உள்ளடக்கிய பரிபூரணமான சனாதன தர்மம் தரிசனம் தரும். சத்திய தர்மத்தை யார் பின்பற்றினாலும் தாங்கள் சனாதனியென்பது அவர்களுக்குத் தெரியும். அப்படிப்பட்டோருக்கு எல்லாருமே நம் உறவு என்ற இனிமையான மனநிலை கிட்டும். அந்த இனிமைக்கு ஈடேதும் இவ்வுலகில் இல்லை.
- திருமதி ஷோபனா ரவி, தூர்தர்ஷன் முன்னாள் செய்தி வாசிப்பாளர்.
- இது இவரது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவு.
$$$
6. சனாதனமும் சனாதன எதிர்ப்பும்!
-இளங்கோ பிச்சாண்டி
1) ‘சனாதனம்’ என்ற சொல்லுக்கு தமிழ்நாட்டில் ஒரு பொருள். தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்களில் ஒரு பொருள்.
2) சனாதனம் என்றால் ‘பார்ப்பனீயம்’ என்று தமிழ்நாட்டில் பொருள். சாதிக்கொரு நீதியைச் சொல்லும் மனு தர்மம் என்று பொருள்.
3) வட இந்தியாவிலும், தமிழ்நாடு தவிர்த்த பிற தென்னிந்திய மாநிலங்களிலும் சனாதனம் என்றால் ‘இந்து மதம்’ என்று பொருள். இந்து மதத்தின் தொன்மையான பெயர் ‘சனாதன தர்மம்’ ஆகும்.
4) சனாதன ஒழிப்பு மாநாடு என்றால் ‘மனுதர்ம ஒழிப்பு மாநாடு’ என்று தமிழ்நாட்டில் பொருள்.
5) தமிழ்நாடு தவிர்த்த பிற இந்திய மாநிலங்கள் அனைத்திலும், சனாதன ஒழிப்பு மாநாடு என்றால் ‘இந்துமத ஒழிப்பு மாநாடு’ என்று பொருள்.
6) இந்துமத ஒழிப்பு என்பதையும், அதற்கு ஒரு மாநாடு தமிழ்நாட்டில் நடைபெற்றது என்பதையும், அதில் திமுக அமைச்சரும் முதல்வர் ஸ்டாலினின் மகனும் ஆகிய உதயநிதி கலந்துகொண்டு இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதையும், தமிழகம் தவிர்த்த பிற இந்திய மாநிலங்களில் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. உதயநிதியின் பேச்சு மக்கள் அனைவரையும் காயப்படுத்தி உள்ளது.
7) கிறிஸ்துவ மத ஒழிப்பு மாநாடு என்றோ அல்லது இஸ்லாம் மத ஒழிப்பு மாநாடு என்றோ ஒரு மாநாட்டை உதயநிதியாலோ அல்லது CPM எனப்படும் போலி மார்க்சிஸ்ட் கட்சியாலோ கற்பனையில் கூட நடத்த இயலாதபோது, இந்துமத ஒழிப்பு மாநாடு ஏன் என்று இந்திய மக்கள் கேட்கிறார்கள்.
8. உதயநிதியின் பேச்சு இந்து மதத்தின் மீதான வன்மம் நிறைந்த தாக்குதல் என்று தமிழகம் தவிர்த்த பிற மாநில மக்கள் அனைவரும் கருதுவதால் அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
9) தீவிர பாஜக எதிர்ப்பாளரான மமதா பானர்ஜி, உதயநிதியின் பேச்சை வன்மையாகக் கண்டித்து உள்ளார்.
10) காங்கிரசின் கமல்நாத், காஷ்மீரின் கரண்சிங் உள்ளிட்டோரும் உதயநிதியின் பேச்சை ஏற்கவில்லை.
11) உதயநிதியின் பேச்சு தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் திமுகவுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டிற்கு அப்பால் எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்கு வேரில் வெந்நீர் ஊற்றி விட்டார் உதயநிதி.
12) தனது பொலிட்பீரோவில் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை ஒரே ஒரு தலித்துக்குக் கூட இடம் கொடுக்காத மார்க்சிஸ்ட் கட்சிக்கு சனாதன ஒழிப்பு பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
13) தலித் எதிர்ப்புக் கட்சியான திமுக, வேங்கைவயல் குற்றவாளிகளைப் பாதுகாத்து நிற்கிறது. உதயநிதிக்கு சனாதன ஒழிப்பு பற்றிப்பேச என்ன அருகதை இருக்கிறது?
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
.
- திரு. இளங்கோ பிச்சாண்டி பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி; நியூட்டன் அறிவியல் மன்றத்தை நடத்தி வருபவர்.
- இது இவரது முகநூல் பதிவு.
(தொடர்ந்து ஒலிக்கும் தார்மிகக் குரல்கள்!)
$$$
One thought on “வாழும் சனாதனம்!- 2”