-ச.சண்முகநாதன்

31. அயோத்தியில் ஒரு பாசப்போராட்டம்
“14 ஆண்டுகள் நிறைவுற்றது. 14 ஆண்டுகள் முடிந்து திரும்பி வருவேன் என்று சொன்ன ராமன் இன்னும் வரவில்லை. ராமன் வரவில்லை எனில் நான் தீயில் விழுவேன், முன்னரே சொன்னபடி” என்ற மனநிலையில் பரதன் இருக்க, அங்கேயும் அனுமன், ராமன் வந்துகொண்டிருக்கிறான் என்கிற நல்ல செய்தி கொண்டு வருகிறான். ராமன் கொடுத்த மோதிரத்தையும் காட்ட பரதன் பெருமகிழ்ச்சி கொள்கிறான். நகரத்தவர் எல்லோரும் அனுமன் தாள் வணங்குகின்றனர்.
அனுமன், சமயத்தில் தோன்றி சீதையின் உயிரைக் காப்பற்றியது போல இப்பொழுது பரதன் உயிரையும் காக்கிறான்.
ராமனும் சீதையும் புஷ்பக விமானத்தில் அயோத்தி வருவது கண்டு எழுந்த ஆரவாரம் தெற்கே இலங்கை வரை கேட்டதாம். பரதனைக் கண்டு ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான் ராமன்.
பின்னர் தாயரை வணங்குகின்றனர். முதன்முதலில் கைகேயி கால்களில் விழுந்து வணங்கிய பின்னரே, மற்ற தாயரின் கால்களில் விழுந்து வணங்குகிறான் ராமன். கைகேயி தவறு செய்திருந்தாலும், அதை மறந்து, அவளுக்கு முதல் மரியாதை செலுத்துகிறான் ராமன். பண்பின் சிகரம்!
ஈரேழு ஆண்டுகள் பிரிந்த அனைவரும் ஒருவரையொருவர் ஆரத் தழுவி ஒருவர் உடல் ஒருவர் கண்ணீரால் நனைக்கின்றனர்.
வசிஷ்டர் வந்து “நாளை நீ மவுலி சூட நன்மை சால் பெருமை நல்நாள்” என்று மறுதினமே நல்ல நாள் என்று நாள் குறிக்க, அடுத்த நாளே பட்டாபிஷேகம் நடக்கிறது.
“மங்கல கீதம் பாட, மறை ஒலி முழங்க, வல் வாய்ச் சங்கு இனம் குமுற, பாண்டில் தண்ணுமை ஒலிக்க”
-அபிஷேகம் நடக்கிறது. அதன் பின்,
“அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடை வாள் ஏந்த, பரதன் வெண் குடை கவிக்க, இருவரும் கவரி பற்ற, விரி கடல் உலகம் ஏத்தும் வெண்ணெய் மன் சடையன் வண்மை மரபுளோன் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான், மௌலி”
வசிட்டனே புனைந்தான் மௌலி! வசிஷ்டன் ராமச்சந்திரமூர்த்திக்கு மகுடம் சூட்டி, அயோத்தியின், இந்த அகிலத்தின் அரசன் என பட்டாபிஷேகம் செய்து வைக்கிறான்.
ராமன் அகில உலகத்தையும், நம் மனதையும் இன்றும் ஆண்டுகொண்டிருக்கிறான்.
அந்த-
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்! மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு, ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு, தசரத பாலனுக்கு சக்ரவர்த்தி ராமனுக்கு, தசாவதாரனுக்கு, சங்கு சக்ர பூஷனுக்கு, ஜெய மங்களம்! நித்ய சுப மங்களம்! ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்!
ஸ்ரீ ராம ஜெயம்!
(தொடர்கிறது)
$$$