ராமாயண சாரம் – 30

-ச.சண்முகநாதன்

30.  ஏழை, சோபனம்! ஏந்திழை, சோபனம்!

கோசலை குமாரன், மாவீரன், ராமன் அப்பொழுதே சொன்னது போல எதிரியின் ஆயுதமெல்லாம் பூளைப் பூப்போல ஊதித் தள்ளி வெற்றி கொண்டான்.

“வீராதி வீரமுள்ள ராஜாதி ராஜனுக்கு பூமாலை போடும் ஒரு திருநாளு” என்று அனைவரும் மகிழ வெற்றி வாகை சூடியவன், ராவணனின் முதுகுவழி தனது பாணம் சென்றது கண்டு  “இவன் முதுகில் காயம் இருக்கிறது. இதைப் பார்ப்பவர்கள், ராமன் முதுகில் அம்பு விட்டான் என்று என் போர் அறம் மீது சந்தேகம் வருமோ?” என்று வருத்தப்பட, விபீஷணன் “அப்டிலாம் இல்லை ராமா. கவலைப்பட வேண்டாம். நல்ல விஷயம் நடந்திருக்கிறது. வெற்றி உனதே!” என்று ராமனைத் தேற்றுகிறான்.

ராமன் மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பிக்கிறான். லக்ஷ்மணனை நோக்கி  “விபீஷணனுக்கு முடி சூட்டும் வைபவம் நடைபெற வேண்டும். ஆக வேண்டியதைச் செய்வாயாக” என்றான்.

“ஆதி நாயகன் ஆக்கிய நூல் முறை
நீதியானை நெடு முடி சூட்டுவாய்”

அதன்பின் முக்கியமான வேலை ஒன்று இருக்கிறதே! பலவந்தமாகத் தூக்கி வரப்பட்டு, ராமன் வந்து எனைக் காப்பான் என்று நம்பிக்கையுடன் சிறையில் காத்திருக்கும் சீதையிடம் வெற்றிச் செய்தியைச் சொல்ல வேண்டுமே. எவ்வளவு மகிழ்ச்சி கொள்வாள் சீதை!

அப்பொழுதே ராவணனிடம்,  “ராமனின் ஆற்றல் முன் நீ தோற்றுப் போவாய்” என்று சொன்னவள், வெற்றிச்செய்தியை செவியில் வாங்கித் தன் சிந்தையில் தேன் சேர்ப்பாளே! அந்தச் செய்தியை சீதையிடம் சொல்வதற்கு அனுமனை விடப் பொருத்தமானவர் யார்?

அனுமனை  “சீதையிடம் போய் இந்த நல்ல செய்தியைச் சொல்” என்று கேட்டுக்கொள்கிறான்.

...அனுமனை,
 ‘துப்பு உறச் செய்ய வாய் மணித் தோகைபால்
செப்புறு, இப்படிப் போய்’ எனச் செப்பினான்.

அனுமன் பெருமகிழ்ச்சியோடு அசோகவனத்துக்குச் செல்கிறான். என்னவென்று சொல்வது! சொல்ல வார்த்தை கிடைக்குமா?  “அம்மா, நல்ல செய்தி” என்று சொல்வதா?  “உனக்கு விடுதலை” என்று சொல்வதா? இவையெல்லாம் மிகவும் சாதாரணமான வார்த்தைகளாகத் தோன்றுகிறது அனுமனுக்கு.

வாயுபுத்திரனுக்கு வார்த்தை கிடைக்கவில்லை. எனவே அவன் ராமனிடம், தெற்கு திசை நோக்கி கும்பிட்டு சீதையின் இருப்பிடம் சொன்னது போல, வார்த்தைகளின் உதவியை நாடவில்லை. உணர்ச்சிகளின் மூலம் காட்டலாம் என்று முடிவெடுத்து சீதையின் முன்பு சென்று ஆடிப் பாடுகிறான். ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான்.

அனுமன் ஆடிப்படுவதைக் கண்ட சீதை, விழிகள் விரிய, என்ன என்று பார்வையால் கேட்கிறாள். அனுமன் எதுவும் சொல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறான், ஆனந்தத்தில்.  “பாடினான் திரு நாமங்கள் கூத்து நின்று ஆடி, கை இரண்டும் தலைமேல் குவித்து ஆடுகிறான்.”

இன்னும் ராமன் வென்ற செய்தியைச் சொல்லவில்லை அனுமன்.

மாறாக,

“ஏழை, சோபனம்! ஏந்திழை, சோபனம்!
வாழி, சோபனம்! மங்கல சோபனம்!
ஆழி ஆன அரக்கனை ஆரியச்
சூழி யானை துகைத்தது, சோபனம்”

-என்று பாடுகிறான். (சோபனம் = மங்களம் உண்டாயிற்று)

ஓரளவு யூகித்தாலும்,  “என்ன விஷயம்? சொல்” என்று, வாயெல்லாம் முத்து முத்துப் பல்லாக, சீதையும் கேட்க, ” “தாயே, உனக்கு இடர் செய்தவன், ராமனுக்குத் துயர் செய்தவன், தலை பத்தும் உதிர்ந்தது. உதிரத்தை எடுத்து அவன் தலை உதிர்த்தவன் நம் நாயகன் ராமன் தாயே. நம் ராமன்!” என்று கண்களில் நீர் பெருக்கி ஆனந்தக் கூத்தாடுகிறான்.

“தலை கிடந்தன, தாரணி தாங்கிய
மலை கிடந்தனபோல்; மணித் தோள் நிரை
அலை கிடந்தென ஆழி கிடந்தன;
நிலை கிடந்தது, உடல் நிலத்தே”

அதைக்கேட்ட சீதை பூரிப்படைகிறாள். வார்த்தை வரவில்லை அவளுக்கும்.  “என் சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன் வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்”என்று ராமன் மீது நம்பிக்கை கொண்டவள், இன்று தன் எண்ணம் போலவே நடந்தது. இனி நான் என் ராமனுடன் சேரலாம் என்ற எண்ணம் வந்து வார்த்தை கிடைக்காமல் விக்கித்து நிற்கிறாள்.

பின்னர்  “அனுமனே, நீ செய்த உதவிக்கு நின்னை என் தலையினால் தொழவும் தகும்” என்று உணர்ச்சிவசப்பட்டு தன் மனதில் தோன்றியதை, நன்றிப் பெருக்கை, அனுமனிடம் தெரிவிக்கிறாள்.

விபீஷணன் சீதையை அழைத்து வந்து ராமனுடன், ஒரு தவறான புரிதலால், “நாயகியைச் சீறி பின் தென் முகம் மலர்ந்தும்”, எல்லோரும் அயோத்திக்குத் திரும்ப வேண்டும் என்று தீர்மானித்து அனுமனை முதலில் வருகையைத் தெரியப்படுத்த, அயோத்திக்கு, அனுப்பி வைக்கிறான்.

(தொடர்கிறது)

$$$

Leave a comment