-ச.சண்முகநாதன்

28. இவன் கடவுளின் அம்சம் தானோ?
(முன் குறிப்பு: ராம ராவணப் போர்பற்றி மட்டும் 5 பதிவுகள் வருவது, ராமனின் பராக்கிரமத்தை அவ்வளவு அழகாக வெளிக்காட்டும் காட்சிகள் நிறைய என்பதால் மட்டுமே.) இனி…
“விழுக, போர் அரக்கன்; வெல்க, வேந்தர்க்கு வேந்தன்” என்று தேவர்களும் நல்லோர்களும் வாழ்த்த ராமன் தேர் ஏறினான்.
“மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர்தம் இடர்க் கடலினுக்கும், முடிவு இன்று”
என்று ராமன் மனதில் உறுதியுடன் கிளம்புகிறான். மாதலி ராமனின் தேர் ஓட்டி.
ராவணன், எதிர்ப்பக்கத்தில் இருந்து போருக்குத் தயாராகிறான். மனதுக்குள் அவன் செய்த சபதம்
“மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறு கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்”
“ஜானகி, இந்தப் போரின் இறுதியில் வருத்தப்பட்டு தன் வயிற்றில் அடித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மண்டோதரி அதைச் செய்வாள். இரண்டில் ஒன்று இன்று நடக்கும்” என்று தன் அழிவை நோக்கி தேரில் செல்கிறான்.
ராவணன் உணர்ச்சி மிகுந்து, “ராமன் மீது தேரை விடு” (பெருந் திண் தேரை,மின் நகு வரி வில் செங் கை இராமன் மேல் விடுதி) என்றான். ராமனோ நிதானமாக, தன் சாரதி மாதலியிடம் “அவசரப்பட்டோ, உணர்ச்சிவசப்பட்டோ தேரை ஓட்ட வேண்டாம். என் சொல் கேட்டு செய்தால் போதும்” (என் தன் சோதனை நோக்கிச் செய்தி; துடிப்பு இலை).
ராவணனைத் தனிமைப்படுத்த வேண்டும்; அதற்கு அவன் சேனைகளை முடிக்க வேண்டும் என்ற போர் தந்திரம் கொண்டவனாய் ராமன் ராவண சேனைகளை முதலில் தாக்குகிறான்.
ராவணனுக்கு சில அப சகுனம் தென்பட, அதைப் பொருட்படுத்தாமல், என்னை ஒரு மனிதன் வெல்ல முடியுமா? (ஆற்றுமோ, என்னை வெல்ல, மனித்தன்?) என்ற இறுமாப்புடன் வெறி கொண்டு திரிந்தான்.ராமன் முன்பு தோன்றினான்.
ராமனும் ராவணனும் இப்பொழுது ஒருவருக்கொருவர் எதிர் எதிரே. பகலும் இரவும் போல, ஞானமும் அறியாமையும் போல ராமனும் ராவணனும், முற்றிலும் எதிர்ப்பதமான குணம் கொண்டவர்கள், ஒருவருக்கொருவர் எதிரே இப்பொழுது. எத்தனை முறை மன்னித்து விட்டும், சமாதானம் வேண்டி தூது விடுத்தும், அவை அனைத்தையும் அலட்சியப்படுத்தி திமிருடன் திரிந்த ராவணன் இப்பொழுது ராமன் முன்னே நிற்கிறான்.
தன்னுடைய அத்தனை துயரத்திற்கும் காரணமான, தீய கருவை, கடைசிமுறையாகக் கண் கொண்டு பார்க்கிறான் ராமன். ராமன் கண்களில் அனல் பறக்கிறது. அவர்கள் இருவரும் நின்றது (நரசிங்கமும் ஆடகக் குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார்) நரசிம்மமும் ஹிரணியனும் எதிர் எதிரே நின்றது போல இருந்தது.
ராவணன் சங்கை ஊதுகிறான், முதலில்.
“அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம் உண்ட சங்கம் இராவணன் ஊதினான்”
ராமன் பக்கத்திலிருந்து மாதலி சங்கை ஊதுகிறான், அண்டம் நடுங்க.
“அண்டம் குலுங்க, குலம் கொள் தார் வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான்.”
ராவணன் கண்களில் கோபம் கொப்பளிக்கிறது. அதைக் கண்ட ராமன் ஒரு அலட்சியச் சிரிப்பு சிரிக்கிறான். கோபம் vs நிதானம். பதட்டம் vs பண்பு.
“என் பெருமை மிக்க வில்லை ஒரு மானிடன் மீது ஏவினால் என் வில்லுக்கு இழுக்கு. உன் தேரை உதிர்த்து உன்னை உன் வில்லோடு சிறைப் பிடித்துப் போவேன்” என்று வீர வசனம் பேசுகிறான்.
“தடித்து வைத்தன்ன வெங் கணை தாக்கு அற, வடித்து வைத்தது மானுடற்கே?”
ராமன், ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு ‘முடிந்தால் செய்’ என்று கண்களாலேயே சொல்கிறான். வில்லோ சொல்லோ, ராமன் வீணடிப்பதில்லை.
இவ்வளவும் பேசிவிட்டு, மனம் பதைத்தவனான இராவணன் ராமன் மீதும் வானரர்கள் மீதும் அம்பைப் பொழிகிறான். ராவணன் விடுத்த கணைகளையெல்லாம் ராமன் தடுத்து விடுகிறான்.
“நூறாயிரம் வடி வெங் கணை நொடி ஒன்றினின் விடுவான், ஆறா விறல் மறவோன்; அவை தனி நாயகன் அறுப்பான்”
போர், உக்கிரமாக நடக்கிறது. மாதலியின் மார்பில் 12 அம்புகளை விடுக்கிறான் ராவணன். அடுத்து ராமன் மீதும் அம்புகள் தொடுக்க ராமனின் உடல் முழுவதும் ராவணன் அம்புகள். அடிபட்டுப் போகிறான் ராமன்.
ராவணசேனை ஆர்ப்பரிக்க. தேவர்கள் “போச்சு. ராமன் தோற்றான்” என்று அச்சம் கொண்டனர்.
“தோற்றனனே இனி' என்னும் தோற்றத்தால் ஆற்றல் சால் அமரரும் அச்சம் எய்தினார்”
நொடிப்பொழுதில் எழுந்து அம்புகளை அறுத்து எறிகிறான் ராமன். அடுத்து ராவணன் வீசும் கணைகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
ராமனின் ஆற்றலைக் கண்டு “இவன் கடவுளின் அம்சம் தானோ?” என்று ராவணன் திகைக்கிறான்.
“சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம் அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்”
“என் ராமன், எனை மீட்க, வரும் நாள் இலங்கை அழியும் உன் உயிருடன் சேர்த்து” என்று சீதை எச்சரித்தது அவன் காதில், தாமதமாக, ஒலிக்கிறது.
$$$
29. தென்னிலங்கை கோண்முடிகள் சிந்துவித்தாய்!
ராமனின் ஆற்றலைக் கண்டு “இவன் கடவுளின் அம்சம் தானோ?” என்று திகைத்த ராவணன் “யாரேனும் தான் ஆகுக!” இன்று இவனை முடிப்பேன் என்று மீண்டும் தனக்கு குழி தோண்டும் வேலையைப் பார்க்கிறான்.
ராமன் ups the ante. ராவணனின் தலையை கணைகொண்டு அறுக்கிறான். அது மீண்டும் முளைக்க ராமன் “மஞ்சு அரங்கிய மார்பினும், தோளினும், நஞ்சு அரங்கிய கண்ணினும், நாவினும்” அம்புகளால் தைக்கிறான்.
தாக்குப் பிடிக்க முடியாமல் நிலை சாய்ந்து விழுகிறான் ராவணன். “உணர்வு துளங்கினான்; தேரின் மேல் இருந்தான்”. ராவணனின் சாரதியும், நிலைமையை உணர்ந்து தேரை விலக்கி நிறுத்துகிறான்.
ராவணன் உணர்வில்லாமல் விழுந்ததால் ராமன், போர் அறத்தின் படி, அம்பு விடாமல் நிற்கிறான். எப்பேர்ப்பட்ட அறம் இது! சண்டையிடும் போதும்கூட, எதிரி மயங்கிவிட்டால் சண்டை போடாமல் அவன் நினைவு திரும்பட்டும் என்று காத்திருக்கும் அறம் இந்த மண்ணுக்குரியது!
“மெய் துறந்த உணர்வினன், வீழ்தலும், எய் திறம் தவிர்ந்தான்”
ராமனின் சாரதி மாதலியோ “ராமா! அவன் எழுந்து விட்டால் நமது வேலை கடினம். இப்பொழுதே முடித்து விடு. கருணை காட்டாதே. இவன் கொடியவன். இப்பொழுதே கொன்று விடு” என்று வலியுறுத்துகிறான்.
“தேறினால், பின்னை யாதும் செயற்கு அரிது; ஊறுதான் உற்றபோதே உயிர்தனை நூறுவாய்”
ராமன் “அது அறமன்று. அது நல்ல செயலும் அன்று” என்கிறான்.
“படை துறந்து, மயங்கிய பண்பினான் இடை பெறும் துயர் பார்த்து, இகல் நீதியின் நடை துறந்து, உயிர் கோடலும் நன்மையோ?”
-என்று சொல்லி மறுத்து விட்டான்.
“ஒருவன் மயங்கி இருக்கும் போது அவனைக் கொல்வது அறமல்ல. அவன் எழுந்து வரட்டும். அவனை சண்டையிட்டு வெல்ல வேண்டும்” என்கிறான் ராமன்.
இத்தனைக்கும் ராவணன், யாருமில்லாத போது தான் சீதையைக் கடத்திக் கொண்டு போனவன். எதிரி அறம் பிறழ்ந்தாலும் அவனுடன் போரிடும் போழ்து அறத்தைக் கடைபிடிப்பவன் ராமன்.
சிறிது நேரம் கழித்து இராவணன் உணர்வு பெற்று, “ராமனை நோக்கி தேரை விடு” என்று சாரதிக்குக் கட்டளையிட, ராமன் “இனி விட்டு வைக்கக் கூடாது. நேரம் வந்து விட்டது” என்று எண்ணி பிரம்மாஸ்திரத்தை விடுகிறான்.
“அது திக்கோடும் உலகு அனைத்தும் செருக் கடந்த புய வலியும், தின்று, மார்பில் புக்கு ஓடி உயிர் பருகி, புறம் போயிற்று, இராகவன் தன் புனித வாளி”
இராகவன் தன் புனித வாளி ராவணனின் மார்பைத் துளைத்து முதுகு வழி சென்றது. அவன் செருக்கையும், வலிமையையும் பறித்துக்கொண்டு போனது ‘ஒருவன்’ வாளி. ராவணன் மனதில் சீதை மேல் இருந்த ஆசையையும் துழாவி பறித்துக்கொண்டு வெளியே போனது ராமனுடைய வில்.
ராவணன் எவ்வளவு பெரிய வீரன்!
ராவணன் எவ்வளவு வலிமை படைத்தவன்!
தேவர்களாலும் வெல்லப்பட முடியாத வரம் கொண்டவன்.
என்ன செய்ய! ராமனிடம் எதிர்த்து நின்று, அறம் தவறி, சீதையைக் கவர்ந்து, ராமனுக்கு எல்லையில்லா துயர் கொடுத்து, சீதையைக் கொல்லத்துணிந்து, இப்பொழுது ராமன் கையால் தண்டனை பெற்று மண்ணில் விழுகிறான்.
“போர் நின்ற விழிநின்றும் பொறிநின்று புகையோடும் குருதி பொங்க, தேர் நின்று நெடு நிலத்துச் சிரமுகம் கீழ்ப் பட விழுந்தான், சிகரம் போல்வான்”
ராமன் வென்றான்! அதர்மம் தோற்றது!
அற வழியில் நின்று, வானரர்கள் துணை கொண்டு, திட்டம் வகுத்து, கடல் கடந்து வந்து அரக்கர் சேனையை, தன் வில் வலிமையாலும் அறத்தின் துணையாலும் வென்ற பேராண்மை கொண்டவன் ராமன். எதிரியின் இடத்துக்கே வந்து அவனுடன் ‘சமாதானம் செய்’ என்றும் ‘தேவியை விடு, இல்லையேல் ஆவியை விட வேண்டி வரும்’ என்றும் எச்சரித்த பிறகு, வேறு வழியில்லாமல், தர்மத்தின் மீது நம்பிக்கை வைத்து போரிட்டு வென்றவன், ராமன்.
தனது போர் வியூகத்தின் படி, முதலில் அரக்கர் சேனையை அழித்து, ராவணனின் வில்லை உடைத்து மார்பில் குறி வைத்து வீழ்த்தி வென்றான் ராமன்.
“முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடையவில்? எங்கள்
அன்னை பயங்கரி பாரததேவி நல்
ஆரியராணியின் வில்!”
-மகாகவி பாரதி
இராகவன்தன் புனித வாளி, இன்றும் நம்மைக் காக்கட்டும்!
இப்பேர்ப்பட்ட தர்மம் நிறைந்தது இந்த பாரத தேசம். ஒரு 700 வருடங்கள் மிலேச்சர்களின் சூழ்ச்சியாலும் அரக்கத்தனத்தாலும் நலிவுற்று இப்பொழுது விஸ்வகுருவாகத் தலையெடுக்கிறது.
(பி.கு: இந்த வருடம் ஆடி மாதத்தில் 32 நாட்கள். எனவே இன்னும் 3 பதிவுகள் இருக்கின்றன.)
(தொடர்கிறது)
$$$