-சேக்கிழான்

6. சொந்தக்காலில் நிற்போம்!
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வியைத் தவிர மற்ற பொருட்கள் செல்வங்கள் அல்ல என்று கல்வியின் பெருமையை எடுத்துக் கூறுகிறார் திருவள்ளுவர்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்ற யவை (திருக்குறள் – 400)
எனில் அக்கல்வி, பயில்பவனை பொருளாதார ரீதியாகவும் உயர்த்தி வாழ்க்கைக்கு உதவக் கூடியதாக இருக்க வேண்டும். எனவேதான், பண்பாட்டுக் கல்வி போலவே தொழிற்கல்வியும் அவசியம் என்கிறார் மகாகவி பாரதி.
சுவாமி விவேகானந்தர் கல்வியின் தேவையைக் குறிப்பிடுகையில்,
“சிறந்த குணத்தை உருவாக்குகின்ற, மன வலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, ஒருவனை சொந்தக் காலில் நிற்கச் செய்கின்ற கல்வியே தேவை.” (ஞான தீபம் 6.236) “சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்கு தயார் செய்யாத கல்வி, ஒழுக்க வலிமையைத் தராத கல்வி, பிறர் நலம் நாடுகின்ற உணர்வைத் தராத கல்வி, சிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி, அதைக் கல்வி என்று சொல்ல முடியுமா? ஒருவனைத் தன் சொந்தக் காலிலேயே நிற்கும்படிச் செய்வதே உண்மையான கல்வி.” (ஞான தீபம் 6.125)
-என்று கூறுவார். மனிதனுக்கு தன்னம்பிக்கையைக் கற்றுத் தருவதே கல்வியின் அடிநாதமாக இருக்க வேண்டும். இதனையே பாரதியின் வரிகளில் காண்போம்:
தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் சக்தியுண்டாகும். தெளிந்த அறிவென்பது இரண்டு வகைப்படும் – ஆத்ம ஞானம், லெளகிக ஞானம் என. ஆத்ம ஞானத்தில் நமது ஜாதி சிறந்தது. லெளகிக ஞானத்தில் நம்மைக்காட்டிலும் வேறு பல தேசத்தார் மேன்மை யடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தேசங்களில் ஜப்பான் ஒன்று. புத்தகங்களாலும், பத்திரிகைகளாலும், யாத்திரைகளாலும் நாம் ஜப்பான் விஷயங்களை நன்றாகத் தெரிந்து கொள்ளுதல் பயன்படும். கூடியவரை பிள்ளைகளை ஜப்பானுக்கு அனுப்பிப் பலவிதமான தொழில்களும் சாஸ்திரங்களும் கற்றுக் கொண்டு வரும்படி செய்வதே பிரதான உபாயமாகும். தொழிற் கல்வியிலும் லெளகிக சாஸ்திரப் பயிற்சியிலும் நாம் மற்ற ஜாதியாருக்கு ஸமானமாக முயலுதல் அவசரத்திலும் அவசரம்.
(ஜப்பான் தொழிற்கல்வி- சுதேசமித்திரன் - 12.2.1916)
என்று ஜப்பானைப் பாருங்கள் என்று அறைகூவுகிறார் பாரதி. 1920களிலேயே ஜப்பான் எடியிருந்த அந்த உயரம் தொழிற்கல்வியால் விளைந்ததாகும். இதே கருத்தை வேறுவகையிலும் பாரதிகூறுவதை கிழே காணலாம்…
“…மிஸ்டர் ஆர்ச்செர் என்ற ஒரு ஆங்கிலேயர் சில தினங்களின் முன்பு லண்டன் பத்திரிகை யொன்றில் கல்வியைப் பற்றி எழுதிக்கொண்டு வரும்போது, “இங்கிலாந்திலே இப்போது கல்விக்கு மூலாதாரமாக வசன காவியங்களையும், செய்யுட் காவியங்களையும், வைத்திருப்பது சரியில்லை. ஸயன்ஸ் (இயற்கை நூல்) படிப்புதான் மூலாதாரமாக நிற்க வேண்டும்” என்கிறார்.
இவருடைய கொள்கை பலவித ஆக்ஷேபங்களுக்கிடமானது. ஆனால், தனிப் பள்ளிக்கூடங்கள் எந்த முறைமையை அனுசரித்த போதிலும், ராஜாங்கப் பள்ளிக்கூடத்தார் இவருடைய கொள்கையைத் தழுவியே படிப்பு நடத்த வேண்டுமென்று நான் நினைக்கிறேன். கற்பனையும் அலங்காரமும் எனக்குக்கூட மிகவும் பிரியந்தான். ஆனால், “நெல் எப்படி விளைகிறது?” என்பதைக் கற்றுக் கொடுக்காமல், “அன்மொழித்தொகையாவது யாது?” என்று படிப்புச் சொல்லிக் கொடுப்பதை நினைக்கும் போது கொஞ்சம் சிரிப்புண்டாகிறது. அன்மொழித்தொகை சிலரைக் காப்பாற்றும், ஊர் முழுதையும் காப்பாற்றாது. நெல்லுத்தான் ஊர் முழுதையும் காப்பாற்றும். அன்மொழித்தொகையைத் தள்ளிவிட வேண்டுமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அன்மொழித்தொகையைப் பயிர் செய்து நெல்லை மறந்துவிடுவது சரியான படிப்பில்லை யென்று சொல்லுகிறேன். அவ்வளவு தான்.”
(கிச்சடி- சுதேசமித்திரன் – 19.1.1916)
இலக்கியம் மட்டுமல்லாது, நமது மாணவர்கள் பொருள்நூல், அறிவியல், தொழிற்கல்வியையும் பயில வேண்டும் என்ற பாரதியின் தாபம், நாடு வெகு விரைவில் முன்னேற வேண்டும் என்பதற்கானதாகும்.
கல்வி மட்டுமல்லாது மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துதல் அவசியம் என்கிறார் மகாகவி பாரதி. அவரது ‘தேசியக் கல்வி’ திட்டத்தில் ‘சரீரப் பயிற்சி’க்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
படிப்பைக் காட்டிலும் விளையாட்டுக்களில் பிள்ளைகள் அதிக சிரத்தை எடுக்கும்படி செய்ய வேண்டும். ‘சுவர் இல்லாமல் சித்திரம் எழுத முடியாது’. பிள்ளைகளுக்கு சரீர பலம் ஏற்படுத்தாமல் வெறுமே படிப்பு மாத்திரம் கொடுப்பதால், அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆரோக்கியம் குறைந்து, அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி, அவர்கள் தீராத துக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரிடும்.
(தேசியக் கல்வி)
-என்று எச்சரிக்கும் பாரதி, தனது புதிய ஆத்திசூடியிலும், முனைமுகத்து நிற்க வேண்டிய இளைஞர்களுக்கு இனிய போதனைகளை அளிக்கிறார்:
ஆண்மை தவறேல் (2)
இளைத்தல் இகழ்ச்சி (3)
உடலினை உறுதி செய் (5)
ஊண்மிக விரும்பு (6)
ஏறுபோல் நட (8)
போர்த்தொழில் பழகு (74)
யௌவனம் காத்தல் செய் (88)
வீரியம் பெருக்கு (106)
(புதிய ஆத்திச்சூடி)
-என்று கூறுவன பின்பற்ற வேண்டிய மகத்தான அறிவுரைகளாகும். மேலும் உடற்பயிற்சியால் ஆரோக்கியம் பேணலாம் என்பது அவர் கூறும் அறிவுரையாகும்:
எவனும் உடம்பை உழைப்பினாலும், அசைவினாலும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மனதை உத்ஸாக நிலையில் வைத்துக்கொண்டால் உடம்பிலே தீவிரமுண்டாகும். உடம்பைத் தீவிரமாகச் செய்துகொண்டால் மனது உத்ஸாகத்துடனிருக்கும். மனத் தளர்ச்சிக்கு இடம் கொடுக்கலாகாது. கவலை மனிதனை அரித்துக் கொன்றுவிடும். பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.
(உடம்பு - சுதேசமித்திரன் – 22.6.1916)
(தொடர்கிறது)
$$$