-சேக்கிழான்

4. பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்!
மக்களிடையே அறியாமை இருள் அகல, கல்வியே சிறந்த ஒளிவிளக்கு. அதற்கு அரசு முன்வாராத நிலையில் நமக்கு நாமே பள்ளிகள் தொடங்க வேண்டும் என்ற மகாகவி பாரதியின் ஆசை புரிகிறது. அந்தப் பள்ளியில் என்ன பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்ற அவரது ஆணையிலும், அவரது திட்டம் புலப்படுகிறது. அதாவது வெறுமனே அறிவு வளர்ச்சி மட்டுமல்ல, மகாகவி பாரதியின் நோக்கம்.
அவரது காலத்தில் ஆங்கிலக் கல்வி முறை (மெக்காலே கல்வி முறை) இந்தியாவில் ஊடுருவத் தொடங்கி இருந்தது. பாரம்பரியமான திண்ணைப் பள்ளிக்கூடங்களும், குருகுலங்களும் ஆதரவுக் குறைவாலும், அரசின் கட்டுப்பாடுகளாலும் நலியத் தொடங்கி இருந்தன. மக்களிலும் வசதி படைத்தோர் மட்டுமே ஆங்கிலவழிப் பள்ளிகளில் பயிலும் வாய்ப்பு இருந்தது. அங்கு பயிற்றுவிக்கப்பட்ட பாடங்களோ தேசம் குறித்த பெருமிதத்தை ஊட்டுவனவாக இல்லை.
இதன் ஆபத்தை மிக விரைவில் கண்டுகொண்டார் மகாகவி பாரதி. தனது சுயசரிதையான ‘கனவு’ கவிதையில் ஆங்கில பள்ளியில் தன்னைச் சேர்த்த தனது தந்தையை எண்ணி நொந்து கொள்கிறார் பாரதி. இதோ அப்பாடலின் வரிகள்:
நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
நேரு மாறெனை எந்தை பணித்தனன்;
புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும், ஊன்விலை வாணிகம்
நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
நாடு விப்பது போலவும், எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை,
நரியு யிர்ச்சிறு சேவகர், தாதர்கள்,
நாயெ னத்திரி யொற்றர், உணவினைப்
பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும்
பேடியர், பிறர்க் கிச்சகம் பேசுவோர்,
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்
கலைப யில்கென என்னை விடுத்தனன்,
அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ்
அற்பர் கல்வியின் நெஞ்சுபொ ருந்துமோ?
(கனவு: 21-22)
ஆங்கிலேயர் ஆதரவு பெற்றோர் நடத்திய பள்ளிகள் இயந்திரத்தனமாக கல்வி பயிற்றுவித்ததாகக் குறைகூறும் பாரதி, இப்படிப்பால் தனக்கு எப்பயனும் விளையவில்லை என்கிறார்:
செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது;
தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன;
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்!
சிலமுன் செய்நல் வினைப்பய னாலும்நந்
தேவி பாரதத் தன்னை யருளினும்
அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்துநான்
அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே!
(கனவு: 29).
அந்தப் பள்ளியில் வணிகமும் பொருளாதாரமும் கற்பிக்கின்றனர். ஆனால் தாய்நாடு அடிமைப்பட்ட நிலையில் பொருளாதாரம் சீரழிவதைப் பற்றி சிறிதும் கூற மாட்டார்கள். கணிதம் கற்பிப்பார்கள்; ஆனால் வானியல் அறிவை விளக்க மாட்டார்கள். பலவகை சாத்திரங்களை அங்கு போதிப்பதால் பயனென்ன என்று கேட்கிறார் பாரதி.
அதுமட்டுமல்ல, நமது நாட்டின் சிறப்புகளே ஆங்கிலப் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை என்று பொருமுகிறார் பாரதி. இதோ சுயசரிதையின் சிறப்பான அந்த பத்திகள்:
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதை புனைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்,
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்துத் தர்மம் வளர்த்ததும்,
பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழை படாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்,
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்,
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே!
(கனவு: 24-26)
தமிழில் ராமாயணக் காப்பியம் இயற்றிய கம்பன், சமஸ்கிருதத்தில் அரிய நூல்தொகையைப் படைத்த காளிதாசன், வானியலில் சாதனை புரிந்த பாஸ்கரன், சமஸ்கிருத மொழிக்கு உலகம் வியக்கும் இலக்கணம் கண்ட பாணினி, அத்வைத சித்தாந்தம் படைத்த ஆதிசங்கரன், சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகள், திருக்குறள் இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர், தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள், பாரதம் முழுவதும் ஆண்ட பேரரசர் அசோகர், அந்நிய அரசின் மதவெறி ஆட்சியிலிருந்து நாட்டை மீட்ட வீரசிவாஜி – போன்ற எவரையும் இந்த ஆங்கிலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அறிவதில்லை; அவர்களுக்கு அவை கற்பிக்கப்படுவதில்லை என்று வருந்தும் மகாகவி பாரதி,
முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்…
-என்று வெதும்புகிறார். நமது நாடு முற்காலத்தில் சிறந்து விளங்கிய வரலாற்றையும், தற்போதைய நாட்டின் இழிநிலையையும், எதிர்காலத்தில் நாடு அடைய வேண்டிய உயர்வையும் மாணவர்களுக்கு கற்றுத் தராத கல்வி ‘பேடிக்கல்வி’ என்று வசை பாடுகிறார் பாரதி.
இதே கருத்தை மகரிஷி அரவிந்தரும் கூறியிருப்பது இங்கு நோக்குதற்குரியது.
எந்த நாட்டின் இளைஞர்கள் மனதில், இறந்தகாலம் குறித்த பெருமிதம், நிகழ்காலம் குறித்த வேதனை, எதிர்காலம் குறித்த பொற்கனவுகள் மிகுந்திருக்கின்றனவோ, அந்த தேசமே உயர்வடையும்.
-மகரிஷி அரவிந்தர்.
மகாகவி பாரதி விரும்பிய கல்வி என்பது தேசியக் கல்வி ஆகும். அக்கல்வி ஆன்மிக அடிப்படையில் அமைந்திருக்கும். தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதாகவும், மாணவர்களை சொந்தக்காலில் நிற்கச் செய்வதாகவும், தேசியச் செயல்வீரர்களை உருவாக்குவதாகவும் அக்கல்வி அமைந்திருக்கும்.
இந்தக் கண்ணோட்டத்துடன், ‘நமது கல்வி முறையின் பெருங்குறை’ என்ற கட்டுரையில் மகாகவி பாரதி கூறி இருப்பவை மிகுந்த கவனத்திற்குரியவை. அக்கட்டுரையின் சில பகுதிகள் இதோ…
“நமது கல்வி முறையிலே எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. இவற்றுள்ளே ஒரு முக்கியமான குறையைப் பற்றி இங்கே பிரஸ்தாபிக்க விரும்புகின்றோம். நம் பாடசாலைகளிலே இந்நாட்டுப் புராதன மஹான்களையும், வீரர்களையும் பற்றிச் சரியான பயிற்சி அளிக்கப் படுவதில்லை. இந்த விஷயத்தைப் பற்றி எத்தனை பக்கங்கள் எழுதினாலும் போதாது. எனினும் இங்கு அதை மிகவும் சுருக்கமாக விவரிப்பது பயனில்லாத விஷயமாக மாட்டாது.
நம் வாலிபர்கள் பாடசாலைகளிலே சுதேச மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங் கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாக, கிறிஸ்தவப் பாடசாலைகளில் இவ் விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான அவதார புருஷர்களையும், அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹா வீரர்களையும் பற்றி இவர்கள் கேள்விப் படுகிறதே இல்லை. கேள்விப் பட்டாலும், அவர்களெல்லாம் நவீன நாகரிகம் தெரியாத பயித்தியக்காரர்களென்ற விஷயத்தையே கேள்வி யுறுகின்றார்கள்.
அவர்கள் நவீன காலத்துப் புதுமைகள் சிலவற்றை அறியாவிடினும் ஒவ்வொரு விஷயத்தில் மிகவும் அருமையான உயர்வு பெற்றவர்களாயிருக்கக் கூடுமென்று நம் இளைஞர்களுக்கு அறிவுறுத்துவதில்லை. ரெயில்வே, தந்தி, மோட்டார் வண்டி முதலிய விஷயங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிராததனால் கம்பன் தெய்விகமான கவியென்பது பொய்யாய் விடுமா?
பூமி சூரியனைச் சுற்றி வட்டமிடுகிற தென்ற உண்மையை ஒப்புக் கொள்ளாததனால் ஆதிசங்கரர் மஹா வேதாந்த ஞானி யென்பது தவறாகப் போய்விடுமா? நம் காலேஜ் மாணாக்கர்களுக்குள்ளே தாயுமானவர், சங்கரர் முதலியவர்களின் சரித்திரத்தை உணராதவர்கள் எத்தனை ஆயிரம் பேரோ இருக்கிறார்களல்லவா?
இதே விஷயத்தில் இங்கிலாந்தின் தலைமை எவ்வாறு இருக்கிற தென்பதைச் சிறிது ஆலோசிப்போம். கிறிஸ்துநாதர் மோட்டார் வண்டியையும், தந்தி விநோதங்களையும் அறியாதிருந்த போதிலும், அவர் நல்லொழுக்கம், தெய்விக ஞானம் என்பவற்றில் நிகரற்று விளங்கினா ரென்பது பாடசாலை மாணாக்கர்களுக்கு ஓயாமல் எடுத்து ஓதப்பட்டு வருகின்றது.
எல்லாக் காலங்களிலும் ஏதேனும் ஒரு விஷயத்தில் உயர்ச்சி பெற்று விளங்கினவர்களின் சரித்திரங்களெல்லாம் எளிய, தெளிவான நடையிலே எழுதப்பட்டு மாணாக்கர்களுக்குக் காண்பித்து வரப்படுகின்றன. அவர்கள் சிற்சில விஷயங்களிலே அநாகரிகமும் அறிவுக் குறைவும் கொண்டிருந்த போதிலும், அவற்றையெல்லாம் பிரஸ்தாபிப்பதே இல்லை. அவர்கள் இருந்த காலத்தின் மாதிரியென்பதாகக் கருதி அதை இலேசாக விட்டு விடுவதே மரபாகும்.
தாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள்.”
(நமது கல்விமுறையில் ஒரு பெருங்குறை)
இனி வரும் பகுதிகளில், மகாகவி பாரதி விரும்பிய கல்வியின் பல கூறுகளைக் காண்போம்…
(தொடர்கிறது)
$$$