ராமாயண சாரம் (19-20)

-ச.சண்முகநாதன்

19.  சீதை சிறை இருக்குமிடம் இலங்கை

சுக்ரீவனுடன் வானர சேனை தயாராகிவிட்டது. இனி பிராட்டியைத் தேட வேண்டிய முயற்சியைத் தொடங்க வேண்டியதுதான்.

சுக்ரீவன் எல்லோரையும் திரட்டி, சிறு சிறு குழுக்களாக அமைத்து ஒவ்வொரு திசைக்கும் அனுப்புகிறான்.  ‘ஒரு மாதத்திற்குள் வந்து சேருங்கள்’ என்று தேடுதலுக்கு ஒரு இலக்கையும் வைக்கிறான்.

ராவணன் சென்ற திசை தெற்குத் திசையாகத்தான் இருக்கவேண்டும் என்று யூகித்து (தென் திசைக்கண், இராவணன் சேண் நகர் என்று இசைக்கின்றது என் அறிவு) தெற்கு திசைக்கு அனுமனை நியமிக்கிறான். (அத் திசைக்கு, இனி, மாருதி நீ அலால், வென்று, இசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ). அனுமனுடன் சாம்பவானும் அங்கதனும் சேர்ந்து கொள்கிறார்கள்.

மேற்கு திசைக்கு சுடேணன்; வட திசைக்கு சதவலி; கிழக்கு திசைக்கு வினதன் என்று மேலும் மூன்று திசைக்கு வீரர்களை நியமித்து தேடச் செய்கிறான்.

ராமன், அனுமன் கண்டுபிடித்து விடுவான் என்று நினைத்து அனுமனை அழைத்து, சீதையின் அங்க அடையாளம் சொல்லி எப்படி சீதையை அடையாளம் காண்பது என்று சொல்லிக் கொடுக்கிறான். (இந்த வர்ணனை வான்மீகத்தில் இல்லை என்று அறிகிறோம்.).

சீதையை கண்டுபிடித்துவிட்டால் அவளுக்கு எப்படி  “உன் ராமன் வந்துவிட்டான் உனை சிறை மீட்க” என்ற செய்தி சொல்லுவது என்று யோசித்து தனக்கும் சீதைக்கும் நடந்த சில உரையாடல்களைச் சொல்லி “இதை சாட்சியாகச் சொல்” என்றும் அதன் பின்னர் கணையாழி ஒன்றையும் அடையாளமாகக் கொடுத்து  “இதைக் காண்பித்தால் சீதை நிச்சயம் உன்னை நம்புவாள்” என்று கண்ணீர் மல்க வாழ்த்தி விடை கொடுக்கிறான். எல்லோரும் நெகிழ்சி அடைகின்றனர்.

 “.......இனிதின் ஏகுதி' எனா,
வனையும் மா மணி நல் மோதிரம்
   அளித்து, ’அறிஞ! நின்
வினை எலாம் முடிக!’எனா,
   விடை கொடுத்து”

அனுப்பி வைத்தான் ராமன்.

எல்லோரும் அங்கிருந்து கிளம்பி தங்கள் இலக்குக்களை நோக்கி விரைகின்றனர். ஆனால் எங்கு தேடியும் எவராலும் சீதையைக் காண முடியவில்லை. சுக்ரீவன் குறித்த தேதியும் நெருங்குகிறது. மெல்ல நிலைமையின் தீவிரம் புரிகிறது. கண்டுபிடிக்காமல் போய் விடுவோமோ என்ற ஐயம் அச்சமாக மாறுகிறது.

அங்கதன்  “என் தந்தை கோபிப்பான், ராமன் வருந்துவான். என்னால் அதைக் காண முடியாது” என்று வெதும்புகிறான்.

“எந்தையும் முனியும்; எம் இறை இராமனும்
சிந்தனை வருந்தும்; அச் செய்கை காண்குறேன்”

அதனால் நம்மை மாய்த்துக்கொள்வதே சிறந்தது என்று எண்ணி கண்ணீர் வடிக்கிறான்.

அனுமன், நம்பிக்கை இழந்து வரும் வீரர்களுக்கு, ஒரு pep talk கொடுக்கிறான்.

“வீரர்களே, தொடர்ந்து தேடுவதே நல்லது. நாம் நம்பிக்கை இழக்கலாகாது. நம்மை நம்பிய ராமனை நாம் எப்படி கைவிடமுடியும்? சீதை துயரத்தில் இருக்கிறாள். அவளைத் தேடிக் கண்டுபிடித்து ராமனுடன் சேர்ப்பது நம் கடமையல்லவா? வீழ்ந்தால் ஜடாயுவைப்போல போரிட்டு வீழ்வோம். அதுவிடுத்தால் நமக்கு பழி வந்து சேரும்”.

“நாடுதலே நலம் இன்னும்; நாடி, அத்
தோடு அலர் குழலிதன் துயரின் சென்று, அமர்
வீடிய சடாயுவைப் போல வீடுதல்
பாடவம்; அல்லது பழியிற்று ஆம்”

ஜடாயுவின் பெயரைக் கேட்டதும் ஜடாயுவின் சகோதரன் சம்பாதி எங்கிருந்தோ வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஜடாயு இறந்த விஷயம் பற்றிக் கேள்விப்பட்டு வருத்தமுறுகிறான். பின்னர் எல்லோரும் நண்பர்களாகின்றனர். தாங்கள் சீதையைத் தேடி வந்த செய்தியை  “புன் தொழில் அரக்கன் மற்று அத் தேவியைக் கொண்டு போந்தான், தென் திசை, என்ன உன்னித் தேடியே வந்தும்” என்றனர்.

எந்தச் செய்தி அவர்களுக்கெல்லாம் புத்துணர்ச்சியைத் தருமோ அந்தச் செய்தி, அப்பொழுது, சம்பாதியின் வாயில் இருந்து வரக் கேட்டனர். சம்பாதி  “நன்று நீர் வருந்தல் வேண்டா; நான் இது நவில்வென்”.

இனிய குரலைக் கொண்ட சீதையை அரக்கன் இராவணன் கடத்திக் கொண்டு போனதை நான் பார்த்தேன்,

“பாகு ஒன்று குதலையாளைப்
 பாதக அரக்கன் பற்றிப்
போகின்ற பொழுது கண்டேன்;
 புக்கனன் இலங்கை; புக்கு”

அவன் சீதையை இலங்கையில் சிறை வைத்திருக்கிறான்.

 “வேகின்ற உள்ளத்தாளை
 வெஞ் சிறையகத்து வைத்தான்;
ஏகுமின் காண்டிர்;
 ஆங்கே இருந்தனள் இறைவி”.

“அந்த இலங்கை இங்கிருந்து தெற்கில் ஒரு 100 யோசனை தூரம் கடலின் நடுவில் இருக்கும். யமனும் செல்வதற்கு அச்சம் கொள்ளும் நகரம். கூட்டமாகப் போனால் நிச்சயம் மாட்டிக் கொள்வீர்கள். எனவே ஆற்றல் படைத்த ஒருவர் மட்டும் சென்று தேடுதல் நலம். Goodluck”  என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

எதுவும் செய்ய முடியாமல் கையறு நிலையில் இருந்தவர்களுக்கு சீதையை சிறை வைத்திருக்கும் இடம் இலங்கை என்று தெரிந்ததில் அனைவருக்கும் புத்துணர்ச்சி வந்தது போல இருந்தது. யார் சென்று கண்டு வருவது என்று ஆலோசித்ததில் “அனுமனே இந்த செயலை நிறைவேற்றச் சிறந்தவன்” என்று சாம்பன் முடிவு செய்ய, அனுமனே ஒற்றை ஆளாக இலங்கை செல்வது என்று முடிவானது.

“ஈண்டு இனிது உறைமின்,
 யானே எறி கடல் இலங்கை எய்தி,
மீண்டு இவண் வருதல்காறும்;
 விடை தம்மின், விரைவின்”.

சரி எல்லோரும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நான் போய் சீதையைக் கண்டு வருகிறேன் என்று அனுமன் புறப்படுகிறான்.

$$$

20.  அண்டர் நாயகன் அருள் தூதன் யான்

இலங்கையை அடைந்த அனுமன் இலங்கையின் வளமையையும் அரண்மனையின் பிரம்மாண்டத்தையும் நோக்கி வியந்து போகின்றான். செல்வச்செழிப்பு மிக்க நகரின் மாண்பை ஒரு செருக்கு மிகுந்த அரசன் ஆள்வதா என்ற வியப்பு.

இவ்வளவு பெரிய அரண்மனையில் சீதை எங்கு இருக்கிறாள் என்று தேட வேண்டும், யாருக்கும் தெரியாமல். கடல் கடக்கும் வலிமை கொண்ட அனுமன் வீதிதோறும் நுனிக்காலால் நடந்து சென்று, பூவிட்டு பூ தாவும் வண்டு போல, ஓசை எழுப்பாமல் சென்று தேடுகிறான்.

“ஆத் துறு சாலைதோறும், ஆனையின் கூடம்தோறும்,
மாத் துறு மாடம்தோறும், வாசியின் பந்திதோறும்,
காத்து உறு சோலைதோறும், கருங் கடல் கடந்த தாளான்,
பூந்தொறும் வாவிச் செல்லும் பொறி வரி வண்டின், போனான்.”

ஒவ்வொரு மாளிகையாக தேடிக்கொண்டு எங்கும் காணாமல் அசோகவனத்திற்கு வந்து சேர்கிறான்.

அங்கே, அசோகவனத்தில்  “வெயிலிடைத் தந்த விளக்கு என ஒளி இலா மெய்யாள்”,  “அழுதல், அன்றி, மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாளாகிய” சீதை, தன் நாயகன் காப்பாற்ற வருவான் என்ற எண்ணத்துடன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறாள்.

ராவணனின் பல மிரட்டல்களுக்கும் அஞ்சாமல் தன் கற்பைக் காப்பாற்றி, நாயகனை மட்டுமே நெஞ்சில் வைத்து அவன் வந்து எனைக் காப்பான் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் ஜானகியை அனுமன் கண்டுகொள்கிறான்.

சீதை புகை உண்ட ஓவியம் போல கண்ணீருடன்  “இந்த நிலைமைக்கு எல்லோரும் என்னையே குற்றம் சொல்கிறீர்கள். ராமன் இன்னும் வந்து என்னை மீட்கவில்லை என்று அவனை யாராவது கேட்டீர்களா?” என்று புலம்புகிறாள்.

“கல்லா மதியே! கதிர் வாள் நிலவே!
செல்லா இரவே! சிறுகா இருளே!
எல்லாம் எனையே முனிவீர்; நினையா
வில்லாளனை, யாதும் விளித்திலிரோ?”

கல்நெஞ்சும் கரையும் அவள் நிலை கண்டு, ஆனால் ராவணனின்  ‘கள்’நெஞ்சம் கரையவில்லை.

இவள் தான் நான் தேடிவந்த என் நாயகனின் நாயகியா என்று யோசித்துக்கொண்டு, தயங்கியபடியே, நிற்கிறான் அனுமன்.

சீதையோ அந்த நேரத்தில் “சரி. என் ராமன் இன்னும் வரவில்லை. எனவே நான் இறந்து போவதே சிறந்தது” என்று எண்ணி உயிர் விடத் துணியும் போது,  “இனியும் தாமதிக்கலாகாது” என்று அனுமன் எண்ணி, சீதையின் முன் தோன்றி  “அம்மா நில்லுங்கள். பேரருள் கொண்ட ராமனின் தூதன் யான். ராமன் என்னை அனுப்பினான்” என்று பணிந்து நிற்கிறான்.

 ‘அண்டர் நாயகன் அருள் தூதன் யான்’ எனா,
தொண்டை வாய் மயிலினைத் தொழுது, தோன்றினான்.

சீதைக்கு முதலில் நம்ப முடியவில்லை. இதுவும் ராவணனின் சூழ்ச்சிகளில் ஒன்றா என்று எண்ணுகிறாள். அனுமன்  “என்னைச் சந்தேகிக்க வேண்டாம். ராமன் உங்கள் ஐயத்தை நீக்க வேண்டி சில விஷயங்கள் சொல்ல சொன்னது சொல்கிறேன்”.

“ஐயுறல்; உளது அடையாளம்; ஆரியன்
மெய் உற உணர்த்திய உரையும் வேறு உள;”

“அதைவைத்து நான் ராமதூதன் என்று நம்புவீர்களாக!” என்று ராமன் சொல்லிய விஷயங்களை சொல்கிறான்.

அது கேட்ட சீதையும், அனுமன் ராமனிடம் இருந்து தான் வந்திருக்கிறான் என்று ஐயம் தெளிகிறாள்.

இத்தனை நாள், ராமன் வருவான் என்று நம்பி உயிர் வாழ்ந்தவளுக்கு நம்பிக்கையின் விளிம்பில் இருந்து உயிர் விடத் துணிந்தவளுக்கு,  “இதோ உன் ராமன் வரப் போகிறான். நான் வந்தது அதற்கு ஒரு முன்னறிவிப்பு” என்று ஒருவன் சொன்னால் சீதையின் சந்தோசம் எத்தனை பெரியதாக இருக்கும்.

நாள்தோறும் அரக்கன் அரண்மனையில், அவன் பார்வையில் இருப்பவளுக்கு, தன் நாயகன் வந்து இந்த அரக்கனை வென்று தன்னை இந்தத் துயரக்கடலில் இருந்து மீட்கப் போகிறான் என்ற நினைப்பு எவ்வளவு நிம்மதியைத் தரும்! நினைத்துப் பார்க்கையில் நாமும் அந்த சந்தோஷத்தில் மிதக்கிறோம்”  “ராமனுக்கு நீ இருக்குமிடம் தெரியாததால் தான் இவ்வளவு காலம் தாமதமாயிற்று.”

“ஈண்டு நீ இருந்ததை, இடரின் வைகுறும்
ஆண்தகை அறிந்திலன்”

-என்று சொல்லி ராமன் கொடுத்த மோதிரத்தையும் காண்பித்து சீதைக்கு மீண்டும் உயிர் வரச் செய்கிறான் அனுமன். Comaவில் இருந்தவர் உணர்வு வரப் பெற்றவராய் இருந்தது போல, உயிர் பிரிந்த உடம்புக்குள் மீன்டும் உயிர் வந்தது போல, சீதை மறு பிறப்பு கொண்டதைப்போல மகிழ்ச்சி அடைகிறாள்.

மோதிரத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, கண்களில் நீர் வழிய, வார்த்தைகளுக்கு தடுமாறி, மழலைச் சொல் பேசுகிறாள்.

“முத்த நகையாள், விழியில் ஆலி முலை முன்றில்
தத்தி உக, மென் குதலை தள்ள,  உயிர் தந்தாய்!
உத்தம!”

மேலும் அனுமனை “அம்மை ஆய், அப்பன் ஆய அத்தனே, அருளின் வாழ்வே,  இவ்வளவு பெரிய மகிழ்ச்சியைத் தந்தவனே! உனக்கே என்ன கைம்மாறு செய்வேன்” என்று அனுமனுக்கு நன்றி சொல்கிறாள்.

அனுமனுக்கு ஏன் இத்தனை கோவில்கள் என்று புரிகிறது. சீதைக்கும் ராமனுக்கும் அனுமன் செய்த உதவிக்கு இணையாக பிறிதொன்று இல்லை இதுவரை.

தன் உயிரைத் துச்சமென மதித்து கடல் கடந்து தனியனாக வந்து அரக்கர் மாளிகையின் உட்புகுந்து சீதையைத் தேடி தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிய அனுமனுக்கு கோவில் வைத்து கும்பிட்டு நன்றி சொல்வது நம் கடமை.

(தொடர்கிறது)

$$$

Leave a comment