நிறைசேர்க்கும் நன்முயற்சி

-பத்மன்

‘பொருள் புதிது’ தளத்தில் வெளியான மகாகவி பாரதியின் தராசு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு விஜயபாரதம் பிரசுரத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. இந்நூலுக்கு மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் அளித்துள்ள அணிந்துரை இது...

சூரியனின் கிரணங்கள் தன்னியல்பால் யாவற்றுள்ளும் ஊடுருவி ஒளிசேர்ப்பதுபோல், மகாகவி பாரதியின் எழுத்தாளுமை, படிக்கும் எவரது மனத்திலும் ஊடுருவி ஒளியூட்டுகிறது. பாரதியின் எழுத்தென்னும் அக்கினிக் குஞ்சு, வாசகனின் மனத்துக்குள் வியாபித்திருக்கும் அறியாமை என்ற காட்டைப் பொசுக்கி விடுகிறது. அத்தகைய ஞானசூரியனாம் மகாகவி பாரதியிடம் தோன்றிய ஒளிப்பிழம்புகளில் ஒன்றுதான் ‘தராசு’ கட்டுரைத் தொடர்.  நூறாண்டுகளுக்கு முந்தைய இந்தப் பொக்கிஷத்தைத் தேடிப் பிடித்துச் சேகரித்துத் தொகுப்பது என்பது சூரிய மண்டலத்துக்குச் சென்று ஆய்வு செய்துவிட்டு, வெற்றிகரமாகத் திரும்புவதற்கு ஒப்பானது. அத்தகைய சிறப்பான பணியை தராசு கட்டுரைகளைத் தொகுத்துள்ள சேக்கிழான் செய்து முடித்துள்ளார். பாராட்டுகள்.

மகாகவி பாரதியின் எழுத்துகள் பேசும். பத்திரிகையாளன் பாரதிக்கு அது போதவில்லை. ஆகையால் வாசகரோடு நேரடியாகப் பேசும் அனுபவத்தைக் கொணர, தான் துணையாசிரியராகப் பணியாற்றிய சுதேசமித்திரன் பத்திரிகையில் ‘தராசு’ என்ற தலைப்பிலான பத்தியை உருவாக்கினார். இந்தத் தலைப்பு என்பதற்குப் பாரதி பயன்படுத்தியுள்ள ‘மகுடம்’ என்ற சொல், உண்மையில் அவரது எழுத்துகளுக்கு மட்டுமே பொருந்தும். பாரதி எவ்விதம் தூண்டுதல் பெற்று ‘தராசு’ பத்தியை எழுதத் தொடங்கினார், அவற்றுள் என்னென்ன விஷயங்கள் இடம்பெற்றுள்ளன என்பதைத் தொகுப்பாளர் சேக்கிழான் மிக அருமையாக எடுத்துரைத்துள்ளார். அத்துடன் பத்திக்கு ‘தராசு’ என்ற தலைப்பிருந்தாலும் ஒவ்வொரு கட்டுரைக்கும் பாரதி தலைப்பிடவில்லை. அந்தத் ‘தலையாய’ பணியைத் தொகுப்பாளர் சிறப்பாகச் செய்திருக்கிறார், சபாஷ்!

“துரதிர்ஷ்டவசமாக, மகாகவி பாரதி எழுதிய தராசு கட்டுரைகளின் அனைத்துப் பகுதிகளும் நமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை கிடைத்துள்ள 14 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கிடைத்துள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது, நமது கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது” என்கிறார் தனது அறிமுக உரையில் சேக்கிழான். நமக்கும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது, இத்தகைய அரும் பணியைச் சிரமேற்கொண்ட சேக்கிழானின் முயற்சியை நினைத்து.

“அரசியல் குறித்து எழுத முடியாத சூழலில் பாரதி என்னதான் எழுதினார் என்பதற்கான ஆவணம் இந்தத் தராசு கட்டுரைகள்” என்ற மூத்த பத்திரிகையாளர் திரு. மாலன் அவர்களின்கருத்தை, அறிமுக உரையில் சுட்டிக்காட்டியிருப்பது இத் தொகுப்பைப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

கட்டுரையைச் சுவாரஸ்யமான கதை சொல்வதுபோல் எழுதிச் செல்வது பாரதிக்கே கைவந்த கலை. அதேநேரத்தில் நாட்டு நடப்புகளே இதன் மையக்கரு என்பதால் அதில் உள்ள நிஜம் நம்மைச் சுடும். அன்றைய தலைமுறையைப் பற்றிய மகாகவி பாரதியின் ‘தராசு கட்டுரைகள்’, இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, இனிவரும் தலைமுறைகளுக்கும் சிறந்ததோர் வழிகாட்டி.

‘தராசு’ நிறை பார்க்க உதவும் சாதனம், மகாகவி பாரதியின் ‘தராசு’ நமக்கு நிறை சேர்க்கும் சாதனம். தமிழர்கள் படித்துப் பயன்பெறுவதற்கு ஓர் நன்முயற்சியை மேற்கொண்டுள்ள சேக்கிழானுக்கும், விஜயபாரதம் பிரசுரத்துக்கும் வாசகன் என்ற முறையிலும், பத்திரிகையாளன்- எழுத்தாளன் என்ற வகையிலும் எனது நன்றி கலந்த பாராட்டுகள். 

***

நூல் குறித்த விவரங்கள்:

பாரதியின் 'தராசு' கட்டுரைகள்
-மகாகவி பாரதி
தொகுப்பாசிரியர்: சேக்கிழான்
64 பக்கங்கள்; விலை: ரூ 60-

வெளியீடு:
விஜயபாரதம் பிரசுரம்,
12, எம்.வி.நாயுடு தெரு,
பஞ்சவடி, சேத்துப்பட்டு
சென்னை- 600 031
வாட்ஸ் ஆப் தொடர்புக்கு: +91 89391 49466.

$$$

                                                                                                                                   

One thought on “நிறைசேர்க்கும் நன்முயற்சி

Leave a comment