ராமாயண சாரம் (11-12)

-ச.சண்முகநாதன்

11. காமவல்லி எனும் சூர்ப்பணகை

முன் குறிப்பு: சூர்ப்பணகை படலதைக் கடக்கும் பொழுது கொஞ்சம் விரிவாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. “ன் மூக்கறுத்தார்கள்?” என்ற கேள்வி இன்றும் கேட்கப்படுகிறது. இதை இன்னும் விரிவாக எழுத வேண்டும், என்றாலும் இந்தத் தொடருக்கு ஏற்றபடி இதை மட்டுமே, சுருக்கமாக (!), இரண்டு பதிவாக எழுத வேண்டிய அவசியம் இருக்கிறது.

சூர்ப்பணகை என்றால் “முறம் போன்ற நகங்களை கொண்டவள்” என்ற அர்த்தமாம். (குருதி நிறைந்த பாத்திரத்தை ஏந்தி வந்து முனிவர்கள் வேள்விகளை அழிக்கச் செய்பவள் என்றும் பொருள் கொள்ளலாம்).

ராமனைக் கண்ட மாத்திரத்தில் அவன் அழகில் மயங்கி மதியிழக்கிறாள் சூர்ப்பணகை. “இவன் மார்பில் சேருவேன். இல்லையென்றால், சாகாவரம் தரும் அமுதமும் எனக்கு விஷம்” என்று தாபம் கொள்கிறாள்.

அவன் வன் நெடிய மார்பகம்
ஒன்றுவென்; அன்றுஎனின், அமுதம் உண்ணினும்
பொன்றுவென்; போக்கு இனி அரிது போன்ம்

அந்த மாத்திரத்தில் சூர்ப்பணகை அழகி உருவம் கொண்டு “காமம் நிறை வாசத் தேனின் மொழி உற்று, இனிய செவ்வி நனி பெற்று, ஓர் மானின் விழி பெற்று, மயில் வந்தது” என ராமன் எதிரில் நின்றாள்.

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்."

கம்பனின் வரிகளில் வைரமாய் மின்னும் பாடல் இது. எல்லாம் புகழ்ந்துவிட்டு கடைசியில் “மின்னும் வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்” என்று சொல்வதில் இருக்கிறது கம்பத்தனம்.

ராமன் “நீ யாரம்மா?” என்று கேட்க, தன்னை ” “ராவணினன் தங்கை” என்று நேரிடையாக சொல்லாமல், ” “முப்புரங்கள் செற்ற சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை. என் பெயர் காமவல்லி” என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். “எனக்கு அவர்கள் நடவடிக்கையில் உடன்பாடில்லை. அதனால் நான் என் சொந்தமான அவர்களை நீங்கி விட்டேன்” என்று நல்லவள் போல் நடிக்கிறாள்.

“சரி. என்ன விஷயம்?” என்று கேட்ட ராமனுக்கு “காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி” என்று தன் காமத்தைத் தணிக்கும் படி ராமனிடம் கேட்கிறாள். தைரியம் தான் அவளுக்கு,

ராமன், “இது என்னடா வம்பா போச்சு” என்று மனதுக்குள் நகைத்து, “நீ அந்தணர் குலம், நான் அரச வழி வந்தவன். உன்னை மணம் செய்யலாகாது” என்று கொஞ்சம் நையாண்டியாகச் சொல்கிறான்.

அந்நேரம் சீதை அங்கு வர, சீதா தேவியின் அழகைக் கண்ட சூர்ப்பணகை பொறாமை கொண்டு “இவளை விலக்கி விட்டு என்னை மணம் செய்து கொள்” என்று சொல்லிவிட்டு சீதை மேல் பாய்கிறாள். ராமன் வெகுண்டு “ஓடி விடு இங்கிருந்து” என்று எச்சரித்துத் துரத்தி விடுகிறான்.

இரவெல்லாம் காம நோய் கொண்ட சூர்ப்பணகை, “சீதை இருக்கும் வரை ராமன் தன்னை விரும்ப மாட்டான்” என்று நினைத்து சீதையை எடுத்துக்கொண்டு போகத் துணிகிறாள். மறுநாள் காலை ராமன் நித்ய கர்மம் செய்ய கோதாவரி ஆற்றுக்குச் சென்றிருந்த நேரம். லக்ஷ்மணன் சோலையில் ஏதோ வேலையாய் இருந்தான். யாரும் இல்லையென்று நினைத்து சீதையைக் கவர முயன்றாள்.

லக்ஷ்மணனுக்கு முன்னர் நடந்த சம்பவம் எதுவும் தெரியாது. சீதையை யாரோ கடத்திப்போக வந்திருக்கின்றனர் என்று வாளுடன் வந்தவன் அங்கு நிற்பது ஒரு பெண் என்பதை உணர்ந்து தண்டிக்க வேண்டி “நில் அடீஇ“ என்று சத்தமிட்டு அவள் மூக்கு, காது, முலைக்கண்கள் என்ற மூன்றையும் அரிந்து விடுகிறான்.

“உன்னையும் சீதையும் காத்து நிற்பதே என் தலையாய கடன்” என்று 14 வருடங்கள் எல்லாவற்றையும் துறந்து ராமனுடன் கானகம் வந்தவன் லக்ஷ்மணன், சீதைக்கு ஒரு ஆபத்து என்றால் சும்மா இருப்பானா? ”ராமன் வெற்றிகரமாகத் திரும்பி வந்தால் அவனுடன் வா. இல்லையேல் அவனுக்காக உன் உயிரையும் கொடு” என்று அவன் அன்னை வனவாசம் துவங்கும் முன் சொன்னாளே! அதன்படி சீதையின் உயிரைக் காப்பது அவன் கடமையும் அவனுக்கு இட்ட கட்டளையும் அல்லவா? அதன்படியே சீதையை தூக்கிச்செல்ல வந்த சூர்ப்பனகையின் மூக்கைஅரிந்து விடுகிறான் லக்ஷ்மணன். அதுவும் பெண் என்பதால் தான். ஆண் என்றிருந்தால் அவன் வாள் எதிரியின் தலையைக் கொய்திருக்கும்.

மூக்கும், காதும், வெம் முரண் முலைக் கண்களும், முறையால்
போக்கி, போக்கிய சினத்தொடும், புரி குழல் விட்டான்

சூர்ப்பணகை, ராவணன் பேரைச் சொல்லி அழுகிறாள். “நசையாலே, மூக்கு இழந்து, நாணம் இலா நான் பட்ட வசையாலே, நினது புகழ் மாசுண்டது ஆகாதோ? ராவணா”. இந்த சத்தம் கேட்டு ராமன் என்னமோ ஏதோ என்று திரும்பி வருகிறான்.

சூர்ப்பணகை ராமனிடம் சென்று “உன் மேல் அன்பு வைத்ததற்கு எனக்கு ஏற்பட்ட கதியைப் பார்” என்று கண்ணீர் விடுகிறாள்.

அந்தோ! உன் திருமேனிக்கு
   அன்பு இழைத்த வன் பிழையால்
எந்தாய்! யான் பட்டபடி இது காண்

ராமன் என்ன நடந்தது என்ற ஆராய முற்படுகிறான். லக்ஷ்மணனிடம் “இவள் என்ன பிழை செய்தாள்?” என்று வினவுகிறான்.

சூர்ப்பணகைப் படலம் தொடர்கிறது…

$$$

12. சூர்ப்பணகையின் ஆடி offer

அந்நேரத்தில் அங்கு வந்த ராமன் லக்ஷ்மணனிடம் “இவள் என்ன பிழை செய்தாள்?” என்று வினவுகிறான். He didn’t want to jump to conclusions.

வீர! விரைந்தனை, இவள் தன்
    விடு காதும், கொடி மூக்கும்,
ஈர, நினைந்து இவள்
    இழைத்த பிழை என்?' என்று இறை வினவ"

நடந்ததை ஒன்றுவிடாமல் கூறுகிறான் லக்ஷ்மணன்.

சூர்ப்பணகை குறுக்கிட்டு “மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனம்?“ (எனக்குப் போட்டியாக (சக்களத்தியாக) சீதை இருப்பதைக் கண்டால் எனக்கு கோபம் வராதா? அதனால் தான் அவளை தூக்கிச்செல்லத் திட்டமிட்டேன்”) என்று பிரச்சினைக்கு பெட்ரோல் ஊற்றுகிறாள்.

இரண்டு பக்க வாதத்தையும் கேட்ட ராமன் கோபம் கொண்டு “ஓடிப்போ” என்று எச்சரிக்கை செய்ய, சூர்ப்பணகை அந்த நேரத்திலும் ராமனிடம் தன்னை மணஞ்செய்ய வேண்டி மன்றாடுகிறாள். அதற்கு ஒரு offer கொடுக்கிறாள்.

“நீ என்னை மணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டால் நான் உனக்கு என்னுடைய உறவினர்களான ராவணாதியரை கொன்றழிப்பதர்க்கு நல்ல ஆலோசனை தருகிறேன். எனக்கு அவர்களுடைய தந்திரம் எல்லாம் தெரியும்.”

தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள்
     அறிந்து, அவற்றைத் தடுப்பென் அன்றே?
பாம்பு அறியும் பாம்பின கால்" என மொழியும்
     பழமொழியும் பார்க்கிலீரோ?"

என்னவொரு பாசம் மிக்க தங்கை சூர்ப்பணகை! தன் சுகத்துக்காக, சுயநலத்துடன், தன் இனத்தையே விலை கொடுக்கத் துணிகிறாள்.

மேலும் விளையாட்டாக சூர்ப்பணகை ‘எனக்கு மூக்கு இல்லையே இப்பொழுது. மூக்கில்லாத இவளுடன் எப்படி குடும்பம் நடத்துகிறான் என்று ஊர் பழிக்கும் என்று அஞ்சுகிறாயா, ராமா? யாரவது கேட்டால் சொல். இடையே இல்லாத சீதையுடன் இத்தனை நாள் குடும்பம் நடத்தினேனே. அப்படித்தானே இதுவும் என்று சொல் ராமா” என்று கொஞ்சி விளையாடப் பார்க்கிறாள். ரணகளத்திலும் அவளுக்கு கிளுகிளுப்பு.

மருங்கிலா தவளோடும் அன்றோ
  நீ நெடுங்காலம் வாழ்ந்த தென்பாய்!

லக்ஷ்மணன் மறுபடியும் கோபம் கொள்ள, சூர்ப்பணகை பித்தம் தலைக்கேறி ராமலக்ஷ்மணரைக் கொல்வேன் என்று சபதம் செய்து அங்கிருந்து விலகுகிறாள், தன் சகோதரர்களிடம் சென்று ‘நியாயம்’ கேட்க.

அரக்கர்களை அழிப்பது தன் கடமையென்றாலும், அதற்கு ஒரு பெண், தன்னை மணந்தால் எல்லா ரகசியமும் சொல்வேன் என்று சொன்ன போதிலும், அறத்தின் வழியில் நின்று வெல்வேனே தவிர ஒரு பொழுதும் தர்மத்தின் வழியிலிருந்து விலக மாட்டேன் என்று வாழ்ந்தவன் ராமன்.

இங்கிருந்து 18வது மாதத்தில் ராம-ராவண யுத்தம் முடிவடைகிறது என்று ஒரு கணக்கு இருக்கிறது.

இராவணன் குடியை நாசம் செய்யும்
   வகை வந்தாள் எனச் சூர்ப்பணகை வந்தாளே!

ராமனுக்கும் ராவணனுக்கும் ஒரு போர்ப்பாலம் ஏற்படுத்த சூர்ப்பணகை வந்தாளே!

(தொடர்கிறது)

$$$

Leave a comment