ராமாயண சாரம் (9-10)

-ச.சண்முகநாதன்

அயோத்தி நீங்கிய ராமனை இளவல் பரதன் சந்திக்கும் காட்சி மிகவும் உணர்ச்சிகரமானது.  அப்போது பரதனுக்கும் ராமனுக்கும் ஒரு அழகான உரையாடல் நடக்கிறது. கம்பனின், மிகச் சிறந்த, உரையாடல்களில் இதுவும் ஒன்று.

9. திருவடி நிலைக்கு முடிதரித்தான் பரதன்

பரதன், தாங்கள் வசிக்கும் இடம் தேடி வருவதைப் பார்த்த லக்ஷ்மணன் “ராமா! ராஜ்ஜியம் கிடைத்தது போதாது என்று உன்னுடன் போருக்கு வருகிறான் பரதன். எவ்வளவு பேராசை அவனுக்கு” என்று கோபம் கொள்கிறான்.

ராமனோ, சாந்தமாகச் சொல்கிறான் “லக்ஷ்மணா. அவன், தந்தையின் கட்டளையினாலும், அன்பினால் மிகுதியாலும், ராஜ்ஜியத்தை என்னிடம் கொடுக்க வருகிறான் என்று நீ ஏன் நினைக்கக் கூடாது?” தம்பியை நன்றாக அறிந்தவன் + positive thinking.

பெருமகன் என்வயின் பிறந்த காதலின்
வரும் என நினைகையும், மண்ணை என்வயின்
தரும்" என்று நினைக்க மாட்டாயா?

“தம்பி பரதன் என்னை விரோதிப்பானோ? அந்த மதி விடு” என்று அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் போதே பரதன் ராமன் அருகில் வந்துவிட்டான். ராமன் மரவுரி தரித்து காட்டில் இருப்பதைப்பார்த்த பரதன் “அவலம் இது” என்று உணர்ச்சிப் பெருக்கில் விக்கித்து நிற்கிறான். கைகளைக் கூப்பி, கண்களில் நீர் வர.

தொழுது உயர் கையினன்; துவண்ட மேனியன்
அழுது அழி கண்ணினன்; ‘அவலம் ஈது’ என்றான்

ராமனும் கண்ணில் நீர் வர பரதனைத் தழுவி “அப்பா எப்படி இருக்கிறார்?” என்று வினவ, பரதன் தசரதன் இறந்த செய்தியை சொல்லக் கேட்ட ராமன் துடித்து விழுகிறான்.
(கம்பன் நமக்கு ஒரு உணர்ச்சிவயமான பாடலைத் தருகிறான்)

நந்தா விளக்கு அனைய நாயகனே! நானிலத்தோர்
தந்தாய்! தனி அறத்தின் தாயே! தயா நிலையே!
எந்தாய்! இகல் வேந்தர் ஏறே! இறந்தனையே!
அந்தோ! இனி, வாய்மைக்கு ஆர் உளரே மற்று?

-என்று கண்ணீர் விடுகிறான்.

உணர்ச்சி எனும் அலையை அனைவரும் கடந்தபின், பரதனுக்கும் ராமனுக்கும் ஒரு அழகான உரையாடல் நடக்கிறது. கம்பனின், மிகச் சிறந்த, உரையாடல்களில் இதுவும் ஒன்று.

பரதன் ராமனிடம் “மீண்டு அரசு செய்க” என்று விண்ணப்பம் செய்கிறான்.

மலைதாங்கும் பாரத்தை மலையே தாங்க வேணும்
மண்ணாங்கட்டி என்ன தாங்குமோ?
உன் இனம் நீயே வந்து காத்தருள் என்னால்
ஒன்றும் ஆகாது" 

– இது பரதன்

“அரசு நின்னதே; ஆள்க”- இது ராமன்.

பரதன் – நான் அரசனென்றால், என் ஆணை இது, நீ மகுடம் சூட்டிக்கொள்.

“…பார்
என்னது ஆகில், யான் இன்று தந்தனென்;
மன்ன! போந்து நீ மகுடம் சூடு”

நான் 14 வருடங்கள் வனவாசம் இருக்க வேண்டும். “அந்த நாள் எலாம் ஆள், என் ஆணையால்.” – ராமன்.

“ஆள்பவர் ஆள்க நாடு; நான் பனி படர் காடு உடன் படர்தல் மெய்” – நாட்டை ஆள்பவர்கள் ஆளட்டும். நானும் காட்டிலேயே தங்கப்போகிறேன் – பரதன்

இறுதியில் அனைவரும் பரதனை சம்மதிக்க வைக்க, பரதன் “சரி. நீ சரியாக 14 வருடம் கழித்து வரவில்லையென்றால் நான் தீயுள் புகுவேன்” என்று சொல்ல ராமன் “அன்னது ஆக”என்று சம்மதிக்கிறான்.

பரதன் அப்பொழுதும் மனம் கேட்காமல், “உன் திருவடி நிலையை எனக்குத் தர வேண்டும்” (செம்மையின் திருவடித்தலம் தந்தீக) என்று கேட்க ராமனும் அப்படியே செய்தான்.

அண்ணனின் மிதியடிக்கு முடிதரித்தான் பரதன்.

பரதனின் பாசம் / பக்தி நமக்கும் வேண்டுமென ராமனைப் பிரார்த்திப்போம்.

ராமன், சீதையுடனும் லக்ஷ்மனுடனும், இனி சித்திரகூட மலையில் இருப்பது தெரிந்தால் அனைவரும் அடிக்கடி வரக்கூடும் என்று தெரிந்து தெற்கு நோக்கி பயணமானான்.

$$$

10. ராம – ராவணப் போரின் விதை

உண்மையான வனவாசம் தொடங்குகிறது. மூவரும் “மலைகளும், மரங்களும், மணிக் கற்பாறையும், அலை புனல் நதிகளும், அருவிச் சாரலும், இலை செறி பழுவமும், இனிய சூழலும்,நிலை மிகு தடங்களும், இனிது நீங்கினர்”.

அங்கே வழியில் சில முனிவர்கள் ராமனைச் சந்தித்து, மனதில் வேதனையுடன், “சில அரக்கர்கள் நெஞ்சில் கொள்கை இல்லாதவர்கள், இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர், அறத்தின் வழியிலிருந்து நீங்கினவர்கள் இந்த வனத்தில் வசிக்கின்றனர். அவர்களால் எங்கள் தவ வாழ்க்கைக்கு இன்னல் ஏற்படுகிறது, நீ தான் எங்களைக் காக்க வேண்டும்” என்று வேண்டுகின்றனர்.

ராமனும் “சரி. உங்களுடனேயே இங்கேயே இருக்கிறேன். யார் வருகிறார் என்று பார்க்கலாம்” என்று தங்கி விடுகிறான்.

10 ஆண்டுகள் அங்கேயே தங்கி விடுகிறான். நிலைமை கட்டுக்குள் வந்ததும், முனிவர்கள், ராமனுக்கு நன்றி தெரிவித்து “நீ அகத்தியரைச் சென்று பார்க்க வேண்டும்” என்று அகத்தியரிடம் அனுப்பி வைக்கின்றனர்.

கம்பன் அகத்தியரை “நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்” என்று புகழ்கிறான். “ஆள் உயரம் கம்மிதான். ஆனால் தன் தமிழால், வாமனனைப் போல உலகம் அளந்தவன்.”

ராமன், அகத்தியர் இருப்பிடம் சென்று அங்கேயே தங்கி இருக்கிறான். பின்பு “நான். அரக்கரை அழிக்கும் பொருட்டு வந்தவன். இங்கேயே நெடுங்காலம் தங்கி இருந்துவிட்டேன். Let me get going” என்று கிளம்ப அகத்தியரும் சிவபெருமான் அளித்த வாளும் வில்லும் பரிசாக கொடுத்து “பஞ்சவடி என்ற ஒரு இடம் இருக்கிறது” என்கிறார்.

அங்கே:

கன்னி இள வாழை கனி ஈவ; கதிர் வாலின்
செந்நெல் உள; தேன் ஒழுகு போதும் உள; தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள.

நீ அங்கே தங்கி உன் வேலையை நடத்து என்று ஆசி கூறி விடை தருகிறார். ஆனால் சூர்பணகையும் வருவாள் என்று சொல்ல மறந்துவிட்டார், பாவம்.

அங்கிருந்து செல்லும்போது ஜடாயுவைச் சந்திக்கின்றனர். ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திய பின் “தன் நண்பன் தசரதனின் மைந்தர் இவர்கள்”என்றறிந்த ஜடாயு மகிழ்ச்சி அடைகிறான் . பின்னர் தசரதன் இறந்த செய்தி கேட்டு மிகவும் துயர் கொள்கிறான்.

அங்கிருந்து பஞ்சவடி சென்று பர்ணசாலை அமைத்துத் தங்குகின்றனர். சூர்ப்பணகையின் காமக்கண்கள் ராமனின் ஆண்மை மீது விழுகிறது.

ராம – ராவணப் போரின் விதை, சூர்ப்பணகையின் காமத்தின் மூலம் விதைக்கப் படுகிறது.

(தொடர்கிறது)

$$$

Leave a comment