ராமாயண சாரம் (6-8)

-ச.சண்முகநாதன்

ராமன்  “அது அரக்கர் வாழும் காடு; மலைகளைக் கடக்க வேண்டி வரும். உன் மலர்ப்பாதங்கள் அதைத் தாங்காது. உன் பாதங்கள் குளிர்ந்த அரக்குண்ட செம்பஞ்சு போன்றது. வனத்தில் நடப்பது உனக்கு கடினம்” என்கிறான். சீதையோ மனம் வெதும்பி  “நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?” என்று குமுறுகிறாள்.

6. ராமனின் பற்றற்ற நிலை

ராமனின் சிறந்த குணங்களில் ஒன்றாய் கம்பன் பாடியது ராமனின் பற்றற்ற நிலை.

 “இனி நீதான் அரசன். முடி சூட்டிக்கொள்” என்று தசரதன் சொன்னபோது  “அரசே! நீ என்ன சொன்னாலும் செய்வது என் கடன்” என்று பணிவோடு ஏற்றுக்கொள்கிறான்.

“யாது கொற்றவன் ஏவியது
   அது செயல் அன்றோ,
நீதி எற்கு? என நினைந்தும்,
   அப் பணி தலைநின்றான்”

அதன் பின்னர் கைகேயி, கெட்ட அறிவுரையால்,  “அரசன், பரதன் நாடாள வேண்டும். நீ 14 வருடங்கள் வனவாசம் போக வேண்டும் என்ற செய்தியை உன்னிடம் சொல்லச் சொன்னான்” என்ற செய்தியைச் சொல்லும்போது சிறிதும் வருத்தமில்லாமல் ஏற்றுக்கொள்கிறான்.

 “இதை மன்னவன் சொன்னால்தான் கேட்பேன் என்றில்லை. என் தாயாகிய உன் கட்டளை என்றிருந்தாலும் அதை மறுப்பேனா? என் தம்பி அரசாள்வது எனக்கு மிக்க மகிழ்ச்சியையே தரும்”

“மன்னவன் பணியன்று ஆகின்,
   நும் பணி மறுப்பனோ?
என் பின்னவன் பெற்ற செல்வம்
   அடியனேன் பெற்றது அன்றோ?”

கட்டளையிட்ட பணியை சிரமேற்கொண்டு இன்றே கானகம் போகிறேன். விடை கொடு – என்கிறான்.

“என் இனி உறுதி அப்பால்?
   இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்;
   விடையும் கொண்டேன்.”

அரசனாவதோ, மரவுரி தரித்து வனம் போவதோ ராமனை மனத்தளவில் பாதிக்கவில்லை. தன்னலமற்றவன் ராமன். அவனுடைய ஒவ்வொரு செயலும் நமக்கு நன்னெறி சொல்லும் பாடம்.

அருணாச்சலக் கவிராயர் அழகாக பாடுகிறார் இந்தக் காட்சியை:

“உளம்மகிழ்ந் தொருகை கேசி
   உரைத்தவாய் மொழியைக் கேட்டுக்
களங்கம் இல் லாத ராமன்
   கானகம் செல்ல நானே
தெளிந்தபார் பரதன் ஆளச்
   செய்ததே மேன்மை”

மேலும் ராமன் கதை கேட்போம்.

$$$

7. எப்படி மனம் துணிந்ததோ, ஸ்வாமி?  

ராமன் வனம் புக வேண்டும் என்ற செய்தி மற்றவர்களின் காதுகளை எட்டுகிறது.

லக்ஷ்மணன் துடித்துப் போகிறான். வெகுண்டு எழுகிறான். கோபம் அக்கினியாய் எரிகிறது அவன் மனதில். போர்க்கோலம் கொள்கிறான். “ராமன் காட்டுக்குப் போக வேண்டும் என்று யார் சொன்னாலும், அதற்கு யார் துணை நின்றாலும் அனைவரையும் பலியிடுவேன். இந்த அக்கிரமம் நடக்கக் கூடாது” என்று வில்லெடுத்து நாணொலி செய்கிறான்.

“சேனைபேர் என்னோ டெதிர்க்கட்டும் குதிக்கட்டும்
சித்திரக்கனை யால்வென்று அத்தனை பேரையும் கொல்வேன்.”

ராமன் செவியில் இது விழவே, ராமன், லக்ஷ்மண் இருக்கும் இடம் வந்து சமாதானம் செய்கிறான். “லக்ஷ்மணா, நதியில் நீர் இல்லையென்றால் நதியின் பிழை அல்ல அது, விதியின் பிழை. அதுபோலத்தான் இதுவும். இது விதியின் பிழை. இதற்கு நீ ஏன் இவ்வளவு கோபப்படுகிறாய்?” என்று ஆறுதல் சொல்கிறான் ராமன்.

“நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது? என்றான்”

ஒருவழியாக சமாதானப்படுத்திய பின் அடுத்த சுடு செய்தி லக்ஷ்மணனை சேர்கிறது.

 “கேள் லக்ஷ்மணா. நீ இங்கேயே இரு. நான் மட்டும் சென்று வருகிறேன்” என்று ராமன் சொல்ல, லக்ஷ்மணன் துடித்துப் போகிறான். “ராமா! எனக்கும் சீதைக்கும் உன்னை விட்டால் வேறு கதி இல்லை. என்னையும் உன்னுடன் அழைத்துச்செல்” என்று மன்றாடுகிறான்.

“நார் உள தனு உளாய்! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளம்? அருளுவாய்! என்றான்”

நீண்ட விவாதத்திற்குப் பின்னர் ராமன் இசைகிறான். பார்வை ஒப்பந்தம் நடக்கிறது அண்ணன், தம்பி இருவருக்கும். மௌனமாகத் தலையசைத்து ஒத்துக்கொள்கிறான் ராமன், லக்ஷ்மணனும் உடன் வர.

பின்பு மரவுரி தரித்த ராமன் சீதை இருப்பிடம் செல்ல, ராமனின் புது உரு கண்ட சீதை மிக்க வருத்தமடைந்து  “என்ன ஆயிற்று?” என்று வினவ, நடந்ததை சீதையிடம் சொல்லி  “நீ இங்கேயே இரு. நான் சென்று வருகிறேன்” என்று சொல்லி  “நீ வருந்தலை; நீங்குவென் யான்” என்று விடை கேட்கிறான்.

“ஸ்வாமி, இன்பத்தில் எனக்கு பங்கு, ஆனால் துன்பம் உனக்கு மட்டும் தானா?” என்று வருத்தம் கொள்கிறாள் சீதை.

ராமன்  “அது அரக்கர் வாழும் காடு; மலைகளைக் கடக்க வேண்டி வரும். உன் மலர்ப்பாதங்கள் அதைத் தாங்காது. உன் பாதங்கள் குளிர்ந்த அரக்குண்ட செம்பஞ்சு போன்றது. வனத்தில் நடப்பது உனக்கு கடினம்” என்கிறான்.

“நின் சில் அரக்குண்ட சேவடிப் போதென்றான்”. எனவே நீ இங்கேயே இரு என்று கேட்டுக்கொள்கிறான்.

சீதை மனம் வெதும்பி  “நின் பிரிவினும் சுடுமோ, பெருங் காடு?” உன் பிரிவை விடவா கொடியது அந்தக் காட்டில் நடப்பது! இப்படியெல்லாம் நினைக்க எப்படி மனம் வந்தது ஸ்வாமி உங்களுக்கு?” என்று குமுறுகிறாள்.

“எப்படி மனம் துணிந்ததோ, ஸ்வாமி?
  வனம் போய் வருகிறேன் என்றால்,
இதை ஏற்குமோ பூமி?
  இரும்புமன துண்டாச்சு தல்லோ
என்னைவிட்டுப் போகிறேனென்று சொல்ல” 

என்று, ஹுசைனி ராகத்தில் (அருணாச்சலக் கவிராயர்), கெஞ்சிக் கேட்கிறாள் சீதை.

 “உணச்சிவசப்பட வேண்டாம். நீ என்னுடன் வந்தால் எனக்கு எல்லையற்ற இடர் தருவாய்” என்று எச்சரித்த ராமனிடம் “ஓ! என்னை பிரிந்து போன பின் உனக்கு இன்பமே தான் போல” என்று உரிமைக் கோபப்படுகிறாள்.

இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் ராமனால்?

மூவரும் அயோத்தியை விட்டு நீங்குகின்றனர்.

$$$

8. ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ?

கருப்பு மலை போன்ற அழகன் ராமனும், இளவலும், ராமனின் அழகுக்கேற்ற துணையான சீதையும் தென்திசை நோக்கிப் பயணிக்கிறார்கள்.

இதை அறிந்த தசரதன் மனம் வெதும்பிப் புலம்புகிறான்.

“முடிக்கு மகுடஞ்சூட்டி முகம் பார்க்க இருந்தேனே
மோசம் கைகேசிசெய்தாள் ரகுராமா - ராமா
உடுத்த புடைவைதானே பாம்பாய்க் கடிக்குமென்னும்
உளவறியாமற் போனேன் ரகுராமா ராமா”

    (அருணாச்சலக் கவிராயர்)

என்று புலம்பியபின் ஆவி நீத்தான், தசரதச் சக்கரவர்த்தி.

கேகய நாட்டில் இருந்து திரும்பி வந்த பரதன் நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டு மிகவும் துயருறுகிறான். இறுதிக் காரியம் செய்ய பரதன் முற்படுகையில் வஷிஷ்டன் “உன் அன்னை செய்த தீய காரியத்தால் தசரதன் உனக்கு இறுதிக்காரியம் செய்ய உரிமையில்லை என்று சொல்லிவிட்டான். எனவே நீ செய்யலாகாது” என்று தடுத்து நிறுத்துகிறான்.

“அன்னை தீமையால் அரசன் நின்னையும்,
துன்னு துன்பத்தால், துறந்து போயினான்,
முன்னரே”

மேற்கொண்டு காரியங்களை சத்ருக்கனன் செய்கிறான். பின்னர் வஷிஷ்டன் முதலானோர் பரதனிடம்  “நீ முடி சூட்டிக்கொண்டு இந்நாட்டை ஆளும் அரசனாக வேண்டும்” என்று அறிவுரை செய்கின்றனர். பரதன் அந்தச்செய்தி கேட்டதும் துடித்துப் போகிறான்.  “இது தர்மமன்று. மூத்தவன் இருக்க இளையவன் முடிசூட்டிக் கொண்டது இதுவரை நடந்து இருக்கிறதா?” என்று நியாயம் கேட்கிறான்.

“மூத்தவர் இருக்கவே, முறைமையால் நிலம்
காத்தவர் உளர் எனின், காட்டிக் காண்டிரால்”  

‘அண்ணன் எப்ப போவான், தின்னை எப்ப காலியாகும்?’ என்ற அதர்ம சிந்தனை இல்லாத பூமியாய் இருந்தது அப்பொழுது.

“எனவே நான் வனத்தில் இருக்கும் ராமனிடம் சென்று அவனை திரும்பி வருமாறு அழைக்கப் போகிறேன். என்னைத் தடுக்க வேண்டாம்” என்று சொல்லி தாயரோடும், தம்பியோடும் ராமன் இருப்பிடம் செல்கிறான்.

அங்கே ராமன் வனத்தில் ஒரு அன்பு சாம்ராஜ்யம் உருவாக்கி வைத்திருந்தான். குகன் அந்த அன்பு சாம்ராஜ்யத்தின் தளபதி.

பரதன் சேனையுடன் வருவது கண்டு,  “இவன், ராமனுக்குத் தீங்கு செய்ய வருகிறானோ? ராமன் அரசாட்சியை விட்டுக்கொடுத்து இருக்கிறான், அதுவும் போறாது என்று அவனைக் கொல்ல வருகிறானோ?” என்ற ஐயம் கொள்கிறான் குகன்

“நாடு கொடுத்த என் நாயகனுக்கு இவர், நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி, எடுத்தது காணீரோ?”

அருகில் சென்று பார்த்தால் பரதனின் உண்மை நிலையைக் கண்டு, கேட்டு “தாய் உதவியால் ராஜ்ஜியம் ஆள வாய்ப்புக் கிடைத்தும் அதைத் துறந்து இங்கு வந்திருக்கிறாய். நீ ராமனை விட ஆயிரம் மடங்கு மேளானவன்” என்று மனம் நிறைகிறான்.

“...புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ?”

பின்னர், “வா. நானே உனக்கு ராமன் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுகிறேன்” என்று பரதனை அழைத்துக்கொண்டு செல்கிறான்.

(தொடர்கிறது)

$$$

Leave a comment